Wednesday, 3 July 2013

Catholic News in Tamil - 03/07/13


1. ராய்ப்பூர் உயர்மறைமாவட்டத்துக்குப் புதிய பேராயர்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் காயங்கள் வழியாக அவரை நாம் சந்திக்கிறோம்

3. பேராயர் Montenegro : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனித இதயங்களின்மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்

4. நம்பிக்கை ஆண்டில் கர்தினால் Zen அவர்கள் வழங்கிவரும் மறைகல்வி வகுப்புக்கள்

5. கர்தினால் Tagle : கத்தோலிக்கப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இயேசுவை அறிவிக்க வேண்டும்

6. அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பல்சமயத் தலைவர்கள் சமய சுதந்திரத்துக்கு வேண்டுகோள்

7. இந்திய கத்தோலிக்கத் தொழில் அதிபருக்கு சமுதாய மாற்றத்தை உருவாக்கியவர் என்ற விருது

8. நகர்ப்புறமயமாதலின் அதீத வளர்ச்சி, நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தல், ஐ.நா. அறிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. ராய்ப்பூர் உயர்மறைமாவட்டத்துக்குப் புதிய பேராயர்

ஜூலை,03,2013. இந்தியாவின் ராய்ப்பூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, ஆயர் விக்டர் ஹென்றி தாக்கூர் அவர்களை இப்புதன்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ராய்ப்பூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிவந்த பேராயர் Joseph Augustine Charanakunnel அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், Bettiah மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் விக்டர் ஹென்றி தாக்கூர் அவர்களை ராய்ப்பூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக நியமித்துள்ளார்.
1954ம் ஆண்டு ஜூலை முதல் தேதி Bettiah மறைமாவட்டத்தின் Chakhni என்ற ஊரில் பிறந்த ஆயர் விக்டர் ஹென்றி தாக்கூர், 1984ம் ஆண்டு  மே 3ம் தேதி அருள்பணியாளராகவும், 1998ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி Bettiah மறைமாவட்டத்துக்கு ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டார்.
மேலும், பாகிஸ்தானின் ஃபாய்சலாபாத் மறைமாவட்டத்துக்கு அருள்பணி Joseph Arshad அவர்களை புதிய ஆயராக இப்புதன்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். லாகூரில் 1964ம் ஆண்டு பிறந்த இவர், போஸ்னிய-எர்செகொவினா திருப்பீடத் தூதரகத்தில் பணியாற்றி வந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் காயங்கள் வழியாக அவரை நாம் சந்திக்கிறோம்

ஜூலை,03,2013. வாழும் கடவுளை நாம் சந்திப்பதற்கு, பசியாய் இருப்பவர், ஏழைகள், நோயாளிகள் மற்றும் சிறையிலுள்ள சகோதர சகோதரிகளில் இயேசுவின் காயங்களை நாம் கனிவுடன் முத்தி செய்ய வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருத்தூதர் புனித தோமா விழாவான இப்புதன்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், படிப்பு, தியானம், உடலை ஒறுத்தல் ஆகியவை, வாழும் கிறிஸ்துவை சந்திப்பதற்குப் போதுமானவை அல்ல, மாறாக, ஏழைகள், நோயாளிகள் மற்றும் தேவையில் இருப்போரில் பிரசன்னமாக இருக்கும் கிறிஸ்துவின் தழும்புகளை நாம் தொடும்போது புனித தோமா போன்று நமது வாழ்வு மாறும் என்றும் கூறினார்.
இயேசு தான் உயிர்த்த பின்னர் திருத்தூதர்களுக்குத் தோன்றியபோது தோமா அங்கு இல்லை, ஆனால் தோமா தன்னைப் பார்ப்பதற்கு ஒரு வாரம் காத்திருக்க வைத்தார் இயேசு என்றுரைத்த திருத்தந்தை, இயேசு இவ்வாறு நேரம் கொடுக்கும்போது அது நம் ஒவ்வொருவருக்கும் நல்லது என்பதை அவர் நம்புகிறார் என்றும் கூறினார்.
இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை நம்புவதற்கு அவரின் காயங்களில் தனது கைகளை இட்டுப் பார்க்க வேண்டுமென்பதில் தோமையார் பிடிவாதமாய் இருந்தார், பிடிவாதமுள்ள இம்மனிதர் மாபெரும் செயல் ஒன்றை நாம் புரிந்துகொள்ளச் செய்கிறார் என்று கூறிய திருத்தந்தை, ஆண்டவர் உண்மையிலேயே உயிர்த்துவிட்டார் என்பதையும் தாண்டி கிறிஸ்துவின் இறைமை குறித்த விசுவாச அறிக்கையைச் செய்த முதல் திருத்தூதராகவும் தோமா விளங்குகிறார் என்று விளக்கினார்   .
திருஅவையின் வரலாற்றில் கடவுளை நோக்கிய பாதையில் சில தவறுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், தியானம், தபம், நோன்பு போன்ற உடலை ஒறுக்கும் செயல்களால் வாழும் இயேசு கிறிஸ்துவை அடைய முடியும் என்று நம்புகின்றனர், ஆனால், இயேசு தம்மைச் சந்திக்கும் பாதையைத் தமது காயங்களில் காண வேண்டுமெனச் சொல்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித பிரான்சிஸ் தொழுநோயாளியைத் தழுவியபோது அவருக்கு என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்குமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. பேராயர் Montenegro : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனித இதயங்களின்மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்

ஜூலை,03,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Lampedusa தீவுக்குத் திருப்பயணம் மேற்கொள்வது அங்கு வாழும் புலம்பெயர்ந்த மக்களை மட்டுமல்ல, அம்மக்களுக்கு உதவும் குடிமக்களையும் ஊக்கப்படுத்த வருகிறார் என்று Agrigento பேராயர் Francesco Montenegro கூறினார்.
ஜூலை8, வருகிற திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Lampedusa தீவுக்குத் திருப்பயணம் மேற்கொள்வது குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் Montenegro, அண்மையில் அட் லிமினா சந்திப்பின்போது Lampedusa தீவுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்ளுமாறு தான் அழைப்புவிடுத்ததாகக் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனித இதயங்களின்மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்பதை அவரின் இத்திருப்பயணம் உணர்த்துவதாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார் பேராயர் Montenegro.
இத்தாலியின் சிசிலித் தீவைச் சேர்ந்த Lampedusa தீவு, வட ஆப்ரிக்காவின் டுனிசியா நாட்டுக்கு ஏறக்குறைய 115 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. ஈராண்டுகளுக்கு முன்னர், வட ஆப்ரிக்காவில் சனநாயக ஆதரவுக்கான அரபு வசந்தம் என்ற கிளர்ச்சி தொடங்கிய பின்னர் பல்லாயிரக்கணக்கான குடியேற்றதாரர்கள் கடல்வழியாக Lampedusa தீவுக்கு வந்துள்ளனர். இப்படி வரும் வழியில் படகுகள் கவிழ்ந்து பலர் உயிரிழந்துள்ளனர்.
இத்தீவுக்கு வந்துள்ள இந்த ஆப்ரிக்கக் குடியேற்றதாரருக்கு அத்தீவு மக்கள் தங்களிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்து உதவி வருகின்றனர் என்று பேராயர் Montenegro தனது பேட்டியில் தெரிவித்தார்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. நம்பிக்கை ஆண்டில் கர்தினால் Zen அவர்கள் வழங்கிவரும் மறைகல்வி வகுப்புக்கள்

ஜூலை,03,2013. நம்பிக்கை ஆண்டில் தான் வழங்கிவரும் மறைகல்வி வகுப்புக்களைக் குறித்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும், தற்போதையத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் சொன்னபோது, அவ்விருவரும் மகிழ்ந்தனர் என்று ஹாங்காங் முன்னாள் பேராயர் கர்தினால் Joseph Zen Ze-kiun கூறினார்.

அண்மையில் தான் வத்திக்கான் சென்றிருந்தபோது, ஓய்வில் இருக்கும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களையும், இந்நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்தித்தது குறித்து, கர்தினால் Zen அவர்கள் ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
நம்பிக்கை ஆண்டின் துவக்கத்திலிருந்து, ஒவ்வொரு புதன் கிழமையன்றும் கர்தினால் Zen அவர்கள் 90 நிமிடங்கள் நீடிக்கும் மறைகல்விப் பாடங்களை நடத்தி வருகிறார். இந்த வகுப்புக்கள் நடைபெறும் அரங்கத்தில் 100 பேர் மட்டுமே அமரமுடியும் என்பதால், இவ்வகுப்புக்கள் இணையத்தளத்தின் வழியாக, பல பங்குமக்களையும் தற்போது அடைந்து வருவதாக கர்தினால் Zen கூறினார்.
கர்தினால் Zen அவர்கள் இதுவரை வழங்கியுள்ள 40க்கும் அதிகமான மறைக் கல்விப் பாடங்கள், DVD ஒளித்தகடுகளில் பதியப்பட்டு, சீனாவில் உள்ள மக்களையும் அடையும் திட்டம் ஒன்று உள்ளது என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews

5. கர்தினால் Tagle : கத்தோலிக்கப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இயேசுவை அறிவிக்க வேண்டும்

ஜூலை,03,2013. கத்தோலிக்கப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களது விசுவாசத்தை வெளிப்படையாக அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார் மனிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle.
மனிலாவிலுள்ள கத்தோலிக்கப் பள்ளிகளுக்கென புனித Fernando de Dilao பங்கில் திருப்பலி நிகழ்த்திய கர்தினால் Tagle, விசுவாசிகள் கிறிஸ்துவோடு உறவில் வாழ்வதற்கு உதவுவதற்காகவே கத்தோலிக்கப் பள்ளிகள் இயங்குகின்றன என்றும் கூறினார்.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவம் பிலிப்பீன்ஸ் கடற்பகுதியில் மிகுந்த அளவில் செயல்படுவது தடை செய்யப்படுமாறு பிலிப்பீன்ஸ் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைவீரர்களும், ஆயுதங்களும், இராணுவ வண்டிகளும், பாதுகாக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் கடற்பகுதிக்குச் சுற்றுச்சூழல்  சீர்கேட்டையும் அழிவையும் முன்வைக்கின்றன என்று அம்மனுவில் குறை சொல்லப்பட்டுள்ளது.
கடந்த சனவரியில் அமெரிக்க கடற்படையினரால் குறைந்தது 2,346 சதுர மைல் பரப்பளவில் பவளப்பாறை அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : CBCP                      

6. அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பல்சமயத் தலைவர்கள் சமய சுதந்திரத்துக்கு வேண்டுகோள்
ஜூலை,03,2013. கருத்தடை தொடர்புடையவைகளிலும், அனைத்து நலவாழ்வுக் கொள்கைகளிலும் மத நம்பிக்கையாளர் தங்களின் மனச்சான்றுகளின்படி செயல்படுவதை அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு மதிக்குமாறு, அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட பல்வேறு மதங்களின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கத்தோலிக்கம், பிரிந்த கிறிஸ்தவ சபைகள், அனைத்துலக ஹரே கிருஷ்ணா கழகம் என அந்நாட்டின் பல்வேறு மதங்களின் தலைவர்கள் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள திறந்த கடிதத்தில், மனச்சான்றின்படி சமய சுதந்திரம் கடைப்பிடிக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் மனச்சான்றின் சுதந்திரம் அச்சுறுத்தலில் இருக்கின்றது என்றுரைத்துள்ள அத்தலைவர்கள், அந்நாட்டின் நலவாழ்வு மற்றும் மனிதநலப் பணிகள் குறித்த கொள்கைகள், எந்த ஒரு நிறுவனமும் தனிமனிதரும் தங்களின் மனச்சான்றின்படி நடப்பதற்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
இந்தத் திறந்த கடிதத்தில் பல்வேறு சமயங்களின் 58 பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : CNS                         

7. இந்திய கத்தோலிக்கத் தொழில் அதிபருக்கு சமுதாய மாற்றத்தை உருவாக்கியவர் என்ற விருது

ஜூலை,03,2013. தொழில்மயமான உலகைத் துணிவுடன் சந்திப்பதற்கு, ஏழைக் குழந்தைகளைத் தயார் செய்வது, அவர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் என்று இந்திய கத்தோலிக்கத் தொழில் அதிபரான, Agnelo Rajesh Athaide கூறினார்.
மும்பையைச் சேர்ந்த திருவாளர் Athaide அவர்கள், ஏழைக் குழந்தைகளுக்குத் தரமான கணணிக் கல்வியை வழங்குவதற்கு, 1993ம் ஆண்டு முதல், கணணிக் கல்வி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளில், 3 இலட்சத்திற்கும் அதிகமான ஏழைச் சிறார் இந்த மையத்தில் கணணிப் பயிற்சி பெற்று, பல துறைகளில் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
திருவாளர் Athaide அவர்களின் பணியைப் பாராட்டி, India Leadership Conclave என்ற அமைப்பினர், அவருக்கு, சமுதாய மாற்றத்தை உருவாக்கியவர் என்ற விருதை அண்மையில் வழங்கியுள்ளனர்.
சமுதாய முன்னேற்றமும், தொழில் மற்றும் வர்த்தக உலகமும் இணைந்து செல்லவேண்டும் என்று தான் கண்டுவந்த கனவு நனவானது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பதாக, திருவாளர் Athaide அவர்கள், இவ்விருது வழங்கும் விழாவில் கூறினார்.

ஆதாரம் : AsiaNews              

8. நகர்ப்புறமயமாதலின் அதீத வளர்ச்சி, நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தல், ஐ.நா. அறிக்கை

ஜூலை,03,2013. நகரங்களில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும்வேளை, சேரிகளில் வாழும் மக்களுக்குக் குறைவுபடும் உள்கட்டமைப்புக்களையும், அடிப்படை வசதிகளையும் நிவர்த்தி செய்யாவிட்டால் ஒட்டுமொத்த முன்னேற்றம் பாதிக்கப்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
தற்போது நகரங்களில் 100 கோடியாகவுள்ள மக்களின் எண்ணிக்கை 2050ம் ஆண்டில் 300 கோடியாக உயரும் என்ற விபரங்களை வெளியிட்டுள்ள ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக நிறுவனத்தின் 2013ம் ஆண்டின் ஆய்வறிக்கை, வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறமயமாதல் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களைவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளது.
தற்போது உலக அளவில் 32 விழுக்காட்டு உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவ்வறிக்கை, 2050ம் ஆண்டுக்குள் மேலும் 230 கோடிப் பேருக்கு உணவளிக்கும் வகையில் உணவு உற்பத்திகள் அதிகரிக்கப்படுமாறும் கேட்டுள்ளது. 
நலவாழ்வு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறைவுபடும் சேரிவாழ் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுமாறும் ஐ.நா. அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...