1. அமைதி தேர்தல் குறித்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் ஜிம்பாப்வே பேராயர்
2. கருக்கலைத்தலை ஆதரிக்கும் குழுவால் சிலே பேராலயம் சேதம்
3. நீதி மற்றும் அமதிக்கானப் போராட்டத்தில் ஒன்றிணைய ஹாங்காங் தலத்திருஅவை அழைப்பு
4. உலகில் கடவுள் நம்பிக்கையற்றறோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது
5. மதமாற்றம் தொடர்பில் மலேசியாவில் முக்கிய தீர்ப்பு
6. ருவாண்டாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஐ.நா. 40 கோடி டாலர் உதவி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அமைதி தேர்தல் குறித்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் ஜிம்பாப்வே பேராயர்
ஜூலை,27,2013. ஜிம்பாப்வே நாட்டில் புதனன்று இடம்பெற உள்ள தேர்தல் குறித்த விவாதங்களும், ஊர்வலங்களும், பிரச்சாரங்களும் நன்முறையில் இடம்பெற்றுவருவது நம்பிக்கைகளை தருவதாக உள்ளது என அறிவித்தார் அந்நாட்டு பேராயர் Alexander Thomas Kaliyanil.
2008ம்
ஆண்டில் தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகள் போல் அல்லாமல்
தற்போது எல்லாம் அமைதியான முறையில் இடம்பெற்று வருவது குறித்து
மகிழ்ச்சியை வெளியிட்ட Bulawayo பேராயர், யார் தேர்தலில் வெல்வார் என்பது கணிக்க முடியாததாக இருக்கின்ற போதிலும், எக்கட்சிக்கும் பெரும்பானன்மை இல்லாத நிலை ஏற்படும்போது, வன்முறைகள் உருவாகும் ஆபத்து உள்ளது என்ற அச்சத்தை வெளியிட்டார்.
ஆதாரம் : MISNA
2. கருக்கலைத்தலை ஆதரிக்கும் குழுவால் சிலே பேராலயம் சேதம்
ஜூலை,27,2013. கருக்கலைத்தலை ஆதரிக்கும் குழு ஒன்று சிலே நாட்டின் சந்தியாகோ தெ சிலேயின் பேராலயத்தில் நுழைந்துச் சேதப்படுத்தியதோடு, தேவநிந்தனை வாசகங்களையும் எழுதிவைத்துச் சென்றுள்ளது.
வியாழன் மாலை திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது பேராலயத்தின் உள்ளே நுழைந்த கும்பல் ஒன்று, கருக்கலைத்தலுக்கு எதிரான திருஅவையின் கொள்ககளை விமர்சித்ததோடு, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியும் சென்றுள்ளது.
இச்செயல் குறித்து தன் கவலையை வெளியிட்ட சந்தியாகோ தெ சிலே உயர்மறைமாவட்ட துணை ஆயர் Pedro Ossandón Buljevic, பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருக்கும் தலத்திருஅவையை இந்த போராட்டக்காரகள் எப்போதும் அணுகலாம் என்றார்.
கருக்கலைத்தலுக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்துவது அவர்களின் விருப்பம் என்ற ஆயர், ஆனால், சட்டம், மக்களாட்சி மற்றும் மக்களின் மாண்பு ஆகியவைகளுக்கு மதிப்பளிப்பதாக எந்த ஒரு போராட்டமும் இருக்க வேண்டும் என்றார்.
85
விழுக்காட்டு மக்களை கிறிஸ்தவர்களாகக் கொண்டுள்ள சிலே நாட்டில்
கருக்கலைத்தல் சட்டரீதியாக தடைச்செய்யப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : CNA
3. நீதி மற்றும் அமதிக்கானப் போராட்டத்தில் ஒன்றிணைய ஹாங்காங் தலத்திருஅவை அழைப்பு
ஜூலை,27,2013. ஹாங்காங்கில் சீன அரசு மேற்கொண்டுவரும் பிரித்தாளும் முயற்சியை புரிந்துகொண்டு, நீதி
மற்றும் அமைதிக்கான தேடுதலில் அப்பகுதியின் அனைத்து மதநம்பிக்கையாளர்களும்
ஒன்றிணைந்துச் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது ஹாங்காங்
தலத்திரு அவை.
உண்மையான மக்களாட்சி குறித்து பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தாமல் எடுக்கப்படும் முடிவுகளால், மக்களின் கோபம் அரசுக்கு எதிராகத் திரும்பி, போராட்டங்கள் இடம்பெறக்கூடும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளது ஹாங்காங் மறைமாவட்டம்.
மக்களாட்சி
குறித்த நேர்மையான கலந்துரையாடலுக்கு தலத்திருஅவை அழைப்பு விடுத்ததை
பெரும்பாலான சமூகத்தொடர்பு சாதனங்கள் வரவேற்றுள்ளபோதிலும், அரசு அது குறித்து அக்கறையின்றி செயல்படுவதாக ஹாங்காங் மறைமாவட்டம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆதாரம் : AsiaNews
4. உலகில் கடவுள் நம்பிக்கையற்றறோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது
ஜூலை,27,2013. உலகில் கடவுள் நம்பிக்கையற்ற மக்களின் எண்ணிக்கை குறைந்து, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மேற்கத்திய நாடுகளில் பல்வேறு முன்னேற்றங்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும், மதநம்பிக்கையற்றோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தகும் வகையில் குறைந்து வருவதாகக் கூறும் இந்த ஆய்வறிக்கை, கிறிஸ்தவமும் இஸ்லாமும் இன்று அதிவேகமாக பரவிவரும் மதங்களாக உள்ளன எனவும் தெரிவிக்கிறது.
உலகின் பல பாகங்களில் மதநம்பிக்கையற்றோர் பலர், கிறிஸ்தவத்தைத் தழுவி வருவதாகாவும் கூறுகிறது, இந்த ஆய்வை மேற்கொண்ட Massachusettsன் Gordon-Conwell இறையியல் கல்லூரி.
கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைபிடித்து வந்த சில நாடுகள் தற்போது ஓரளவு சுதந்திரத்தை வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, மக்கள் கிறிஸ்தவத்தை நாடி வருவதாக தெரிய வந்துள்ளது.
1970ம் ஆண்டு உலகின் மக்கள் தொகையில் 4 விழுக்காடாக இருந்த கடவுள் நம்பிக்கையற்றோர், 2010ம் ஆண்டில் 2 விழுக்காடாக குறைந்துள்ளனர். இது 2020ம் ஆண்டில் 1.8 விழுக்காடாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : Cath Online
5. மதமாற்றம் தொடர்பில் மலேசியாவில் முக்கிய தீர்ப்பு
ஜூலை,27,2013. பெற்றோர் இருவரின் சம்மதமின்றி இனி பிள்ளைகளை மதமாற்றம் செய்ய முடியாது என்று, மலேசியாவில் மதமாற்றம் தொடர்பான மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை அந்நாட்டு உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
ஐந்து
ஆண்டுகளுக்கு முன்னர் இந்திரா காந்தி என்கிற பெண்மணியின் கணவர் அவர்களது
மூன்று ஆண் பிள்ளைகளை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியதை எதிர்த்துத் தாக்கல்
செய்யப்பட்ட மனு மீது இப்போது அந்நாட்டின் இபோஃஹ்விலுள்ள உயர்நீதிமன்றம்
இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
தாயின் அனுமதி பெறாமல் இந்த மதமாற்றம் இடம்பெற்றுள்ளது என்றும், அவ்வாறு நடைபெற்றபோது பிள்ளைகள் 18 வயதுக்கு கீழே இருந்தார்கள் என்றும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி லீ ஸ்வீ செங், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, பெற்றோர் என்றால் இருவரும் சேர்ந்ததே என்றும், எனவே தாயின் அனுமதியின்றி தந்தை மட்டுமே தனது பிள்ளைகளை இஸ்லாம் மதத்துக்கு மாற்றியது செல்லாது என்றும் எடுத்துரைத்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு, மலேசிய வரலாற்றில் முக்கியமான ஒன்று என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் : BBC
6. ருவாண்டாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஐ.நா. 40 கோடி டாலர் உதவி
ஜூலை,27,2013. ருவாண்டா நாட்டில் ஏழ்மை, பசி மற்றும் நோயைக் குறைக்கும் திட்டங்களுக்கென ஐந்தாண்டு கால அளவில் 40 கோடி டாலர்களை அந்நாட்டிற்கு வழங்க முன்வந்துள்ளது ஐ.நா. அமைப்பு.
ஐ.நா. நிறுவனம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ள இந்த 40 கோடி டாலர்களில், 27 கோடியே 60 இலட்சம் டாலர்கள், நலஅதரவு, சத்துணவு, கல்வி, சுற்றுச்சூழல் தொடர்புடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடப்படும் எனவும், மீதித்தொகை பொருளாதார மற்றும் நிர்வாகத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment