Tuesday, 9 July 2013

Catholic News in Tamil - 08/07/2013

1. உலகளாவிய பொருளாதாரக் கொள்கையின் பாராமுகம் குறித்து திருத்தந்தை கண்டனம்

2. திருத்த‌ந்தை :  குடியேற்றதாரரை அரவணைக்கும் இதயத்தைக் கொடுக்குமாறு இறைவனிடம் செபிப்போம்

3. திருத்த‌ந்தை :  ந‌ற்செய்தி அறிவிப்புப்ப‌ணிபுரிவோர்க்கு செப‌ம் முக்கியத்துவ‌ம் வாய்ந்த‌து

4. தூய ஆவியால் நாம் வழிநடத்தப்பட அனுமதிப்பதைச் சார்ந்தே நற்செய்தி அறிவிப்பின் வெற்றி உள்ளது

5. எகிப்தின் காப்டிக் குரு ஒருவர் சுட்டுக்கொலை

6. Sahel ப‌குதியில் ஏற‌த்தாழ‌ 1 கோடியே 10 இல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் ப‌சியால் உயிரிழ‌க்கும் அபாய‌ம்

------------------------------------------------------------------------------------------------------

1. உலகளாவிய பொருளாதாரக் கொள்கையின் பாராமுகம் குறித்து திருத்தந்தை கண்டனம்

ஜூலை,08,2013. நல்லதோர் வாழ்வைத் தேடிவரும் குடியேற்றதாரர்களுள் பலரின் உயிரிழப்புகள் போன்ற பெருவிபத்துகளுக்கு இட்டுச்செல்லும் உலகளாவிய பொருளாதாரக் கொள்கையின் பாராமுகம் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐரோப்பாவின் தென்முனையிலுள்ள, இத்தாலியின் லாம்பெதூசா தீவில் அடைக்கலம் தேடியுள்ள குடியேற்றதாரரையும், இவர்களுக்கு உதவி செய்யும் அத்தீவின் மக்களையும் சந்தித்து அவர்களுக்குத் திருப்ப‌லி நிறைவேற்றி, ம‌றையுரை வ‌ழ‌ங்கிய‌போது இவ்வாறு கூறினார் திருத்த‌ந்தை.
படகிலிருந்து கடலில் இறந்த குடியேற்றதாரர்கள் நம்பிக்கையின் பாதையாக இல்லாமல், இறப்பின் பாதையாக இருந்துவிட்டனர் எனற திருத்தந்தை, சில வாரங்களுக்கு முன்னர் இத்தகைய செய்தி ஒன்றைக் கேட்ட போது, இவ்விடம் வந்து செபித்து எனது ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டுவதற்கு எண்ணினேன் என்றார்.
அங்கு பணிசெய்யும் தன்னார்வப் பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, ரம்ஜான் நோன்பைத் தொடங்கும் அன்பு முஸ்லீம் குடியேற்றதாரர்க்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
குடியேற்றதாரரின் நெருக்கடி நிலைகள் களையப்பட்டு, மாண்பு நிறைந்த வாழ்வு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், பல சகோதர சகோதரிகள்மீது நாம் பாராமுகமாய் இருப்பதற்கு ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்போம் என்றும் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்த‌ந்தை :  குடியேற்றதாரரை அரவணைக்கும் இதயத்தைக் கொடுக்குமாறு இறைவனிடம் செபிப்போம்

ஜூலை,08,2013.  குடியேற்றதாரரை அரவணைக்கும் ஓர் இதயத்தைக் கொடுக்குமாறு நாம் இறைவனிடம் செபிப்போம். அதிகம் உதவி தேவைப்படும் மக்களை நாம்  எப்படி நடத்துகிறோம் என்பதை இறைவன் தீர்ப்பிடுவார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் லாம்பெதூசா தீவில் அடைக்கலம் தேடியுள்ள ஆப்ரிக்கக் குடியேற்றதாரரையும், இவர்களுக்கு உதவி செய்யும் அத்தீவின் மக்களையும் பார்வையிட்டு, குடியேற்றதாரருக்கு மனிதாபிமான உதவிகளுக்கு அழைப்புவிடுப்பதற்காக இத்திங்களன்று அரைநாள் திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ்தனது டுவிட்டர் பக்கத்தில் இதையொட்டியே அழைப்பும் விடுத்துள்ளார்.
தென் இத்தாலியின் லாம்பதூசா தீவிற்கு தன் முதல் திருப்பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தைக்காக நாம் அனைவரும் இணைந்து செபிப்போம் என, திருப்பீடச் செயலகமும் தன் டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்த‌ந்தை :  ந‌ற்செய்தி அறிவிப்புப்ப‌ணிபுரிவோர்க்கு செப‌ம் முக்கியத்துவ‌ம் வாய்ந்த‌து

ஜூலை,08,2013. க‌ட‌ந்த‌ வாரம் வியாழன் முதல் நான்கு நாள் ஆன்மீகத் தயாரிப்பு நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற இளங்குருத்துவ மற்றும் நவத்துறவியர்களுக்கு இஞ்ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
66 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ ஆறாயிரம் குருத்துவ மாணவர்கள், நவ துறவியர் மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவோருக்கு இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், ஆறுதல்வழி கிட்டும் மகிழ்வு,  இயேசுவின் சிலுவை, செபம் ஆகிய மூன்று தலைப்புகளில் தன் கருத்துக்களை முன்வைத்தார்.
மகிழ்ச்சியை நமக்குத் தரவல்ல இறைவனின் ஆறுதல் குறித்த வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றார் திருத்தந்தை.
ஒருதாய் தன் மகவைக்கு ஆறுதல் அளிப்பதுபோல் நம் இறைவன் நமக்கு ஆறுதல் அளிப்பார் என்பதை அறிந்துள்ள நாம், அந்த ஆறுதலையும் அதன்வழி கிட்டும் மகிழ்வையும் முதலில் அனுபவிக்கும்போதுதான் அதனைப் பிறருக்கும் அறிவிக்க முடியும் என்றார்.
இயேசுவின் சிலுவைத் துன்ப‌ங்க‌ளில் நாம் ப‌ங்குகொண்டால்தான், அவ‌ரின் உயிர்ப்பிலும் நாம் ப‌ங்குகொள்ள‌ முடியும் என்ப‌தையும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
அறுவ‌டைக்குத் தேவையான‌ ஆட்க‌ளை அனுப்புமாறு அறுவ‌டையின் ஆண்ட‌வ‌ரை நோக்கிச் செபிப்போம் என‌ நாம் ந‌ற்செய்தியில் வாசிப்ப‌தை த‌ன் ம‌றையுரையில் நினைவூட்டிய‌ திருத்த‌ந்தை, ந‌ற்செய்தி அறிவிப்புப்ப‌ணிபுரிவோருக்கு செப‌ம் எத்த‌னை முக்கியத்துவ‌ம் வாய்ந்த‌து என்ப‌தையும் வ‌லியுறுத்தினார்.
நம்பிக்கை ஆண்டின் ஒரு பகுதியாக, குருத்துவ மாணவர்கள், நவ துறவியர் மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவோருக்கு உரோமையில் கடந்த வியாழன் முதல் ஞாயிறு வரை, கூட்டங்கள், திருநற்கருணை ஆராதனை, ஒப்புரவு திருவருட்சாதனங்கள் மற்றும் பிற நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. தூய ஆவியால் நாம் வழிநடத்தப்பட அனுமதிப்பதைச் சார்ந்தே நற்செய்தி அறிவிப்பின் வெற்றி உள்ளது.

ஜூலை,08,2013. நற்செய்தியை பரப்புவது என்பது அதில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தல்ல, மாறாக இயேசுவின் அன்பு மற்றும் தூய ஆவியால் வழிநடத்தப்பட நம்மை அனுமதித்தலையும், இயேசுவின் சிலுவையை நோக்கி நம்மை வடிவமைப்பதையும் சார்ந்து உள்ளது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்தி அறிவிப்புக்குப் பெரும் நிறுவனங்களோ, வளங்களோ தேவையில்லை, சிலுவையை அன்பு கூர்வதும் தூய ஆவியால் வழிநடத்தப்பட அனுமதிப்பதும் போதும் என இஞ்ஞாயிறு மூவேளை செபவேளையின்போது உரை வழங்கிய திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்பில் மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை, மாறாக, நம் கடமையை உணர்ந்து தொடர்ந்து செயலாற்ற வேண்டியதே அவசியம் என்றார் .
நற்செய்தி அறிவிப்பில் நாம்தான் முக்கிய காரணி என மார்தட்டிக்கொள்ளமுடியாது,  ஏனெனில் இறைவனும் அவர் தரும் அருளுமே இங்கு முக்கியப் பங்காற்றுபவை எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நற்செய்தி அறிவிப்பில் நம் மகிழ்ச்சியெல்லாம், நாம் அவரின் நண்பர்களாக, சீடர்களாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளோம் என்பதேயாகும் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. எகிப்தின் காப்டிக் குரு ஒருவர் சுட்டுக்கொலை

ஜூலை,08,2013. இஸ்லாமியத் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுதம் தாங்கிய ஒரு குழுவால் எகிப்தின் ஆர்த்தடாக்ஸ் காப்டிக் குரு ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சாலையில் நடந்துகொண்டிருந்த 39 வயது Mina Haroan Abboud என்ற காப்டிக் கிறிஸ்தவ சபை குருவை வழிமறித்த இஸ்லாமிய கும்பல் ஒன்று, அவரைச் சுட்டுவிட்டு தாங்கள் வந்த வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளது. படுகாயமுற்ற குரு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட சில மணி நேரங்களில் மரணமடைந்தார்.
கடந்த சில நாட்களாக, தீவிர அரசியல் பதட்டநிலைகள் இடம்பெற்றுவரும் சூழலில், குரு Abboudன் கொலைக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.

ஆதாரம் : Asianews

6. Sahel ப‌குதியில் ஏற‌த்தாழ‌ 1 கோடியே 10 இல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் ப‌சியால் உயிரிழ‌க்கும் அபாய‌ம்

ஜூலை,08,2013. ஆப்ரிக்காவின் Sahel ப‌குதியில் ஏற‌த்தாழ‌ 1 கோடியே 10 இல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் ப‌சியால் உயிரிழ‌க்கும் அபாய‌த்தில் இருப்ப‌தாக‌ ஐ.நா. நிறுவ‌ன‌ம் அறிவித்துள்ளது.
இன்றைய‌ உல‌க‌ ச‌முதாய‌த்தின் பார்வை சிரியா அக‌திக‌ளை நோக்கித் திரும்பியுள்ள‌தால் Sahel ப‌குதியில் உண‌வின்றி துன்புறும் ம‌க்க‌ளுக்கு போதிய‌ உத‌விக‌ள் கிட்டுவ‌தில்லை என‌க் கூறும் ஐ.நா. அமைப்பு, 172 கோடி டால‌ர்க‌ள் Sahel ப‌குதி ம‌க்க‌ளுக்கென‌ தேவைப்ப‌டும் நிலையில், உத‌விபுரியும் நாடுக‌ளிட‌மிருந்து இதுவ‌ரை 60 கோடியே 70 இல‌ட்ச‌ம் டால‌ர்க‌ளே கிட்டியுள்ள‌தாக‌ அறிவித்துள்ள‌து.
ஆப்ரிக்க‌க் க‌ண்ட‌த்தின் வ‌ட‌க்கில் உள்ள‌ Sahel ப‌குதியில் காம்பியா, செனகல், மௌரித்தானியா, மாலி, புர்கினா ஃபாசோ, அல்ஜீரியா, நைஜர், நைஜீரியா, கேம்ரூன், சாடு, சூடான், எரிட்ரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகள் வருகின்றன.

ஆதாரம் : catholic online

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...