Monday, 22 July 2013

Catholic News in Tamil - 20/07/13

1. திருத்தந்தை பிரான்சிஸ் : மும்பையின் முன்னாள் பேராயர் கர்தினால் பிமென்டா அவர்களின் இறப்புக்கு இரங்கல்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : அன்பு இளையோரே, உங்கள் பயணத்தில் ஆண்டவர் உடன் இருப்பாராக

3. திருத்தந்தை பிரான்சிஸ் : உலக இளையோர் தின நிகழ்வுகளில் செபத்தால் தன்னோடு இணைந்திருக்குமாறு முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களிடம் வேண்டுகோள்

4. திருத்தந்தை பிரான்சிஸ் : போரில் எல்லாமே இழக்கப்படுகின்றன

5. இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கக் கிறிஸ்தவ சபைகள் வரவேற்பு  

6. லூர்து நகரில் 69வது புதுமை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பு

7. 2015ம் ஆண்டின் உலக புத்தகத் தலைநகரம் Incheon

8. மனிதர் நிலவில் காலடி வைத்த தினம் ஜூலை 20

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : மும்பையின் முன்னாள் பேராயர் கர்தினால் பிமென்டா அவர்களின் இறப்புக்கு இரங்கல்

ஜூலை,20,2013. இந்தியாவின் மும்பை உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Simon Ignatius Pimenta அவர்கள் இறைபதம் அடைந்ததையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களுக்கு இச்சனிக்கிழமையன்று அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், இறந்த கர்தினால் Pimenta அவர்கள் மும்பைக் கத்தோலிக்கச் சமூகத்துக்கும், உலகளாவியத் திருஅவைக்கும் ஆற்றியுள்ள அருஞ்சேவைகளைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மும்பையின் Marol புறநகர்ப் பகுதியில் 1920ம் ஆண்டு மார்ச் முதல் தேதி பிறந்த கர்தினால் Simon Ignatius Pimenta, மெய்யியல் மற்றும் இறையியலை புனித 10ம் பத்திநாதர் குருத்துவக் கல்லூரியில் முடித்து 1949ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி குருவானார். கணிதவியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ள இவர், 1954ம் ஆண்டில் உரோம் உர்பான் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் திருச்சபை சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
1971ம் ஆண்டு மும்பை உயர்மறைமாவட்டத் துணை ஆயராகவும், 1978ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பம்பாய் உயர்மறைமாவட்டப் பேராயராகவும் நியமிக்கப்பட்ட இவர் 1988ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். 
93 வயதாகும் கர்தினால் Simon Ignatius Pimenta இவ்வெள்ளி இரவு இறந்தார். இந்திய ஆயர் பேரவையின் தலைவராக மூன்று முறை பணியாற்றியுள்ள கர்தினால் Pimenta, மும்பைத் திருஅவைக்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதற்குமே மாபெரும் தலைவராக இருந்தவர். இவர் பம்பாய் உயர்மறைமாவட்டப் பேரவையை நடத்தி மேய்ப்புப்பணிகளுக்கும் பிறரன்புப்பணிகளுக்குமெனத் தன்னை அர்ப்பணித்திருந்தார். இவர் காலத்தில் 12 மருத்துவமனைகளும் 44 சிறிய மருத்துவமனைகளும் திறக்கப்பட்டன. 1996ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மேய்ப்புப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார் கர்தினால் Simon Ignatius Pimenta.
இவரின் இறப்போடு திருஅவையில் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை 204 ஆனது. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 112 ஆக உள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : அன்பு இளையோரே, உங்கள் பயணத்தில் ஆண்டவர் உடன் இருப்பாராக

ஜூலை,20,2013. அன்பு இளையோர் நண்பர்களே, உங்களில் பலர் இன்னும் ரியோவுக்குப் பயணம் செய்துகொண்டிருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் பயணத்தில் ஆண்டவர் உங்களுடன் இருப்பாராக என்று திருத்தந்தை பிரான்சிஸ் இச்சனிக்கிழமையன்று Twitter செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலியம், அரேபியம், இலத்தீன் ஆகிய மொழிகள் உட்பட ஒன்பது மொழிகளில் இந்த Twitter செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இடம்பெறும் 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக ஜூலை 22, வருகிற திங்களன்று தனது முதல் வெளிநாட்டுத் திருப்பயணத்தைத் தொடங்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் 71 விழுக்காட்டு இளையோர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக G. Toniolo இளையோர் நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


3. திருத்தந்தை பிரான்சிஸ் : உலக இளையோர் தின நிகழ்வுகளில் செபத்தால் தன்னோடு இணைந்திருக்குமாறு முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களிடம் வேண்டுகோள்

ஜூலை,20,2013. ஜூலை 22, வருகிற திங்களன்று தான் தொடங்கவிருக்கும் பிரேசில் நாட்டுக்கானத் திருப்பயணத்துக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இவ்வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களை நேரில் சென்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், பிரேசில் நாட்டுக்கானத் திருப்பயண விபரங்கள் அடங்கிய கையேட்டை கொடுத்ததோடு, அந்நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத்துக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார் எனத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
ஏறக்குறைய அரைமணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் கொலோன், சிட்னி, மத்ரித் ஆகிய நகரங்களில் தான் முன்னர் கலந்துகொண்ட உலக இளையோர் தின அனுபவங்கள் குறித்து திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் பகிர்ந்து கொண்டார் எனவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
வத்திக்கானில் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் வாழ்ந்துவரும் Mater Ecclesiae இல்லத்தின் சிற்றாலயத்தில் முதலில் இவ்விரு திருத்தந்தையரும் செபித்த பின்னர், இவ்விருவரும் நட்புணர்வுடன் பேசிக் கொண்டிருந்தனர் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
ரியோ டி ஜெனீரோவில் இம்மாதம் 23 முதல் 28 வரை நடைபெறவிருக்கும் 28வது உலக இளையோர் தினம் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களால் அறிவிக்கப்பட்டதாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : போரில் எல்லாமே இழக்கப்படுகின்றன

ஜூலை,20,2013. அமைதியில் எதுவும் இழக்கப்படுவதில்லை, ஆனால் போரில் எல்லாமே இழக்கப்படுகின்றன என்று இரண்டாம் உலகப் போரின்போது திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள் கூறியதை மீண்டும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டாம் உலகப் போரின்போது உரோமின் புனித இலாரன்ஸ் பசிலிக்காவில் குண்டுகள் வீசப்பட்டதன் 70ம் ஆண்டு இவ்வெள்ளிக்கிழமையன்று நினைவுகூரப்பட்டதையடுத்து, உரோம் மறைமாவட்டப் பிரதிநிதி கர்தினால் அகுஸ்தீனோ வல்லினி அவர்களுக்கு அனுப்பிய செய்தியில், குண்டுகள் வீசப்பட்ட அந்தத் துன்பமான நாளின் நினைவு, திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள் அன்று கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைதி கடவுளின் கொடை என்றும், திறந்த இதயங்கள் அதனைப் பெற்றுக்கொள்ளும் என்றும், அமைதி மற்றும் ஒப்புரவைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் உழைக்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குண்டுகள் வீசப்பட்ட அந்நேரத்தில் உரோமிலும், இத்தாலியிலும் வாழ்ந்த பல ஆயர்களும், அருள்பணியாளரும், அருள்சகோதரிகளும் நல்ல சமாரியர்களாக, குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ததையும் திருத்தந்தை பிரான்சிஸ் நினைவுகூர்ந்துள்ளார்.
1943ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி உரோம் புனித இலாரன்ஸ் பசிலிக்காவில் குண்டுகள் வீசப்பட்டன. இந்நினைவு நாளான இவ்வெள்ளி மாலையில், கர்தினால் வல்லினி இப்பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கக் கிறிஸ்தவ சபைகள் வரவேற்பு  

ஜூலை,20,2013. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர் ஜான் கெரி எடுத்துவரும் முயற்சிகளை வரவேற்றுள்ளன அமெரிக்க ஐக்கிய நாட்டு கிறிஸ்தவ சபைகள்.  
கடந்த நான்கு மாதங்களில் ஆறாவது தடவையாக மத்திய கிழக்குப் பகுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கெரி இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் பேசியபோது, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே அமைதிக்கான நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது, ஆயினும் இது குறித்த இறுதி உடன்பாட்டுக்காகத் தான் முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார்.
இஸ்ரேல் நீதித்துறை அமைச்சர் Tzipi Livni, பாலஸ்தீனாவில் பேச்சுவார்த்தைக்குப் பொறுப்பான Saeb Erekat ஆகிய இருவரும் வரும் வாரத்தில் வாஷிங்டன் சென்று இப்பேச்சுவார்த்தைகள் சம்பந்தப்பட்ட விவரங்களைத் தயாரிப்பர் என்றும் கெரி கூறினார்.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர் ஜான் கெரி எடுத்துவரும் இம்முயற்சிகளை வரவேற்றுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.

ஆதாரம் : ICN

6. லூர்து நகரில் 69வது புதுமை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பு

ஜூலை,20,2013. பிரான்சின் லூர்து நகர் அனைனைமரியின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை ஒன்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
69வது அற்புதமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இப்புதுமை, இத்தாலியப் பெண் Danila Castelli என்பவர் லூர்து திருத்தலக் குளியல் தொட்டியில் மூழ்கி எழுந்த பின்னர் நடைபெற்றுள்ளது.
1946ம் ஆண்டு சனவரி 16ம் தேதி பிறந்த Danila Castelli, 34வது வயதுவரை சாதாரண நலமான வாழ்வை வாழ்ந்து வந்தார். பின்னர் கடுமையான உயர் இரத்த அழுத்தம், கருப்பை அறுவை சிகிச்சை, கணைய அறுவை சிகிச்சை என, பல உடல் பிரச்சனைகளை எதிர்நோக்கினார். மருத்துவரான Danilaவின் கணவர் சிகிச்சைக்காக அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரை அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் Danila லூர்து நகர் செல்ல விரும்பி அங்குச் சென்றனர். 1989ம் ஆண்டில் லூர்து திருத்தலக் குளியல் தொட்டியில் மூழ்கி எழுந்ததிலிருந்து அவருக்கு நற்சுகம் கிடைக்கத் தொடங்கியது.
Danilaவுக்கு நடைபெற்ற இப்புதுமையை, அவர் சார்ந்துள்ள இத்தாலியின் பவியா மறைமாவட்ட ஆயர் ஜொவான்னி ஜூதிச்சி, 2013ம் ஆண்டு ஜூன் 20ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பாரிஸ் மருத்துவக்குழு 2011ம் ஆண்டிலே இப்புதுமை குறித்து அறிவித்துவிட்டது.

ஆதாரம் : ICN

7. 2015ம் ஆண்டின் உலக புத்தகத் தலைநகரம் Incheon

ஜூலை,20,2013. கொரியக் குடியரசின் Incheon நகரம், 2015ம் ஆண்டின் உலக புத்தகத் தலைநகரம் என பன்னாட்டுப் புத்தக அச்சக வல்லுனர்கள் குழுவும், யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமும் அறிவித்துள்ளன.
நிறைய நல்ல தரமான புத்தகங்களைக் கொண்டிருத்தல், புத்தக வாசிப்பாளர்களை ஊக்குவித்தல், புத்தகங்கள் எளிதில் கிடைப்பதற்கு வழி அமைத்தல், Incheon குடிமக்களுக்கும் கொரியத் தீபகற்பத்தில் வாழும் அனைவருக்கும் ஏற்ற வகையில் புத்தகங்களை எழுதுதல் போன்றவற்றை வைத்து Incheon நகரம், 2015ம் ஆண்டின் உலக புத்தகத் தலைநகரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டுக்கு பாங்காக், 2014ம் ஆண்டுக்கு Port Harcourt ஆகிய நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2003ம் ஆண்டில் புதுடெல்லி உலக புத்தகத் தலைநகரம் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN

8. மனிதர் நிலவில் காலடி வைத்த தினம் ஜூலை 20
ஜூலை,20,2013. ஜூலை 20, இச்சனிக்கிழமையன்று மனிதர், நிலவில் காலடி வைத்த தினம் நினைவுகூரப்பட்டது.
44 ஆண்டுகளுக்குமுன் இதே ஜூலை 20ம் நாளன்று முதன்முதலாக மனிதர் நிலவில் காலடி பதித்தார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969, ஜூலை 16ம் தேதி அப்பலோ 11 என்ற விண்கலம் நிலவுக்குப் பயணமானது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலின்ஸ், பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர். இந்த விண்கலம் ஜூலை 20ம் தேதி இரவு 8.17 மணிக்கு நிலவில் இறங்கியது. விண்கலத்தில் பயணம் செய்த மூன்று வீரர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங், விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் முதலில் காலடி வைத்தார். இதன் அடையாளமாக, அமெரிக்காவின் தேசியக் கொடியையும் நிலவில் பறக்கவிட்டார். நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற சாதனையையும் படைத்தார். அண்மையில் இவர் மறைந்தார்.

ஆதாரம் : தினமலர்
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...