1. திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவரே, எம்மிடையே இருக்கும் அக்கறையின்மை குறித்து கண்ணீர்விட அருள்தாரும்
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக ரியோ டி ஜெனீரோ ஆவலுடன் எதிர்பார்ப்பு
3. சிரியாவில் இடம்பெறும் சண்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரிட்டன் ஆயர்கள் செபம்
4. இந்திய ஆயர் : ரமதான் மாதத்தில் சிரியாவுக்காகச் செபம்
5. எகிப்தின் புதிய அரசியல் அமைப்பு இசுலாமியப் பண்புகளை அதிகமாகக் கொண்டுள்ளது, காப்டிக் ஆயர் அவாட்
6. மெக்சிகோ ஆயர் : கொலைகளைக் கட்டுப்படுத்த அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது
7. யுனெஸ்கோ : போர்ப் பகுதிகளில் வாழும் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய சிறாரின் எண்ணிக்கை அதிகரிப்பு
8. WHO : புகைப்பிடித்தலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குப் பலன்
9. ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான சீன எழுத்துக்கள் கண்டுபிடிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவரே, எம்மிடையே இருக்கும் அக்கறையின்மை குறித்து கண்ணீர்விட அருள்தாரும்
ஜூலை,12,2013. ஆண்டவரே, இவ்வுலகிலும் எம்மிலும் இருக்கின்ற கொடுங்குணம் குறித்தும், அக்கறையின்மை குறித்தும் கண்ணீர்விட எமக்கு அருள்தாரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று Twitter செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலியம், அரேபியம், இலத்தீன் ஆகிய மொழிகள் உட்பட ஒன்பது மொழிகளில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ளவிருக்கும் ரியோ டி ஜெனீரோ இளையோர்
மாநாட்டில் இடம்பெறவிருக்கும் சிலுவைப்பாதை பக்திமுயற்சி, ஒருமைப்பாட்டின் செய்தியைக் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இக்கால இளையோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதாய் சிலுவைப்பாதையின் 14 நிலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும், இப்பக்திமுயற்சி ஒரு மணி, 15 நிமிடங்கள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த 14 நிலைகளையும் 280 தன்னார்வத் தொண்டர்கள் அமைத்து வருகின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக ரியோ டி ஜெனீரோ ஆவலுடன் எதிர்பார்ப்பு
ஜூலை,12,2013.
இம்மாதம் 22 முதல் 28 வரை பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவிருக்கும்
அனைத்துலக இளையோர் தினத்துக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை
வரவேற்பதற்கு அந்நாடு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத்
தெரிவித்தார் கர்தினால் Stanislaw Rylko.
ரியோ டி ஜெனீரோவில் இடம்பெற்றுவரும் இளையோர் தின ஏற்பாடுகளைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ள, திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் Rylko வத்திக்கான் வானொலிக்கு இவ்வெள்ளியன்று அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
அனைத்துலக
இளையோர் தினம் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே இருக்கும் இவ்வேளையில்
இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான தன்னார்வப் பணியாளர்களின்
தாராள உள்ளத்தையும் அறிவுத்திறனையும் கண்டு தான் வியப்படைவதாகத்
தெரிவித்தார் கர்தினால் Rylko.
இவ்விளையோர் தினக் கொண்டாட்டங்களை ரியோ டி ஜெனீரோ நகரம் மட்டுமல்ல, பிரேசில் நாடு முழுவதுமே ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதை உணர முடிந்தது என்றும் கூறினார் கர்தினால் Rylko.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. சிரியாவில் இடம்பெறும் சண்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரிட்டன் ஆயர்கள் செபம்
ஜூலை,12,2013.
சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டையில்
பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிக்குமாறு பிரிட்டன் ஆயர்கள் பேரவைத் தலைவர்
பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கத்தோலிக்கருக்கு வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
இலண்டனின் Westminster பேராலயத்தில்
இவ்வெள்ளிக்கிழமை காலையில் திருப்பலி நிகழ்த்திய பேராயர் நிக்கோல்ஸ்
சிரியாவின் உள்நாட்டுச் சண்டையில் துன்பங்களை அனுபவித்துவரும்
அனைவருக்காகவும் செபித்தார்.
மேலும், இவ்வாரத் தொடக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரிட்டன் ஆயர்கள், சிரியாவின் பிரச்சனைக்கு அமைதியான தீர்வு கிடைக்கும்படியாக அனைத்துக் கத்தோலிக்கரும் செபிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், சிரியாவில் சண்டை முடிவதற்குத் தங்களால் இயன்ற உதவிகளை, அப்பகுதியில்
செயல்படும் பிறரன்பு நிறுவனங்கள் வழியாகச் செய்வதற்குத் தயாராக
இருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர் பிரிட்டன் ஆயர்கள்.
கடந்த
இரண்டு வாரங்களாக எகிப்தில் இடம்பெற்றுவரும் கலவரங்கள் தங்களுக்கு மிகுந்த
கவலையைக் கொடுத்திருப்பதாகவும் பிரிட்டன் ஆயர்கள் அவ்வறிக்கையில்
குறிப்பிட்டுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. இந்திய ஆயர் : ரமதான் மாதத்தில் சிரியாவுக்காகச் செபம்
ஜூலை,12,2013. இந்த ரமதான் மாதத்தில் அனைத்து முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்காகவும், குறிப்பாக, சிரியாவில் துன்புறும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்காகச் சிறப்பாகச் செபிப்போம் என்று இந்தியாவின் Vasai பேராயர் Felix Machado கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகெங்கும்
வாழும் முஸ்லீம்கள் ரமதான் நோன்பு மாதத்தைக் கடைப்பிடித்துவரும்வேளை
அவர்களுக்குத் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ள பேராயர் Machado, செபம், நோன்பு, தியானம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள முஸ்லீம்களுடன் இறைவன் எந்நாளும் உடன் இருப்பாராக என்றும் கூறியுள்ளார்.
இந்திய
ஆயர் பேரவை மற்றும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் பல்சமய உரையாடல்
மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆணைக்குழுக்களின் தலைவராகப் பணியாற்றுகின்றார்
பேராயர் Machado.
மேலும், ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும் தலைவர் Raphael Louis Sako அவர்களும், உலகின் முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கு, தனது அமைதியின் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஆதாரம் : AsiaNews
5. எகிப்தின் புதிய அரசியல் அமைப்பு இசுலாமியப் பண்புகளை அதிகமாகக் கொண்டுள்ளது, காப்டிக் ஆயர் அவாட்
ஜூலை,12,2013.
எகிப்தில் கடந்த திங்களன்று அமலுக்கு வந்துள்ள சீரமைக்கப்பட்ட புதிய
அரசியல் அமைப்பு முந்தைய அரசியல் அமைப்பைவிட இன்னும் அதிகமான இசுலாமியப்
பண்புகளைக் கொண்டிருப்பதாக அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர் ஒருவர் தனது
அச்சத்தை வெளியிட்டுள்ளார்.
அரசாணையின் மூலம் இம்மாதம் 8ம் தேதி அமலுக்கு வந்துள்ள சீரமைக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பு குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த காப்டிக் கத்தோலிக்க ஆயர் Kamal Fahim Awad Hanna இவ்வாறு கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்கள்
மற்றும் யூதர்களின் உரிமைகளைச் சுட்டிக்காட்டும் பகுதி கடந்த ஆண்டின்
அரசியல் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்றுரைத்த ஆயர் Kamal Fahim, எகிப்திலுள்ள கிறிஸ்தவர்களும் யூதர்களும் தங்களின் மதங்களைச் சார்ந்த விவகாரங்களை நடைமுறைப்படுத்தவும், தங்களின் ஆன்மீகத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் சமயக் கோட்பாடுகளே அவர்களுக்கு முக்கியமான ஆதாரமாக இருக்கின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
ஆதாரம் : Fides
6. மெக்சிகோ ஆயர் : கொலைகளைக் கட்டுப்படுத்த அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது
ஜூலை,12,2013. மெக்சிகோவில் போதைப்பொருள் வியாபாரிகளோடு தொடர்புடைய காணாமற்போதலும், கொலைகளும் தொடர்ந்து இடம்பெற்றுவரும்வேளை, இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மெதுவாகச் செய்து வருகின்றது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் குறை கூறியுள்ளார்.
மெக்சிகோவின் குவாதாலூப்பே அன்னைமரியா திருத்தலத்துக்குத் திருப்பயணமாகச் சென்ற அந்நாட்டின் Saltillo ஆயர் Raul Vera Lopez நிருபர் கூட்டத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த
வாரத்தில் 14 மாநிலங்களில் இடம்பெற்ற தேர்தல்களுக்கு முன்னர் சில
வேட்பாளர்கள் கொல்லப்பட்டது உட்பட அவ்விடங்களில் இடம்பெற்ற வன்முறைகளைச்
சுட்டிக்காட்டிப் பேசிய ஆயர் Lopez, திட்டமிட்டக் குற்றங்களை ஒழிப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் தெளிவாக இல்லை என்று கூறினார்.
திட்டமிட்டக் குற்றக்கும்பல்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் வன்முறைச் செயல்கள் நிறுத்தப்படாவிட்டால், போதைப்பொருள் வியாபாரிகள் விரும்பும் ஆட்களே அரசுப்பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என்றும் ஆயர் எச்சரித்தார்.
ஆதாரம் : Fides
7. யுனெஸ்கோ : போர்ப் பகுதிகளில் வாழும் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய சிறாரின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜூலை,12,2013.
உலகில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் 5 கோடியே 70 இலட்சம் பேரில்
பாதிப்பேர் சண்டையினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர் என்று
யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்ட ஒரு புதிய ஆய்வறிக்கை கூறுகின்றது.
கடந்த ஆண்டு அக்டோபரில் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் தலிபான்களால் சுடப்பட்ட Malala Yousafzai என்ற பாகிஸ்தான் சிறுமியின் 16வது பிறந்தநாளையொட்டி, யுனெஸ்கோவும், பிரிட்டனின் Save the Children பிறரன்பு நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன.
உலக அளவில் 2008ம் ஆண்டில் 6 கோடியாக இருந்த பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சிறாரின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டில் 5 கோடியே 70 இலட்சமாகக் குறைந்துள்ளது எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகின்றது.
எனினும்,
சண்டையினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கல்வியறிவின்றி இருக்கும்
ஆரம்பப்பள்ளிக்குச் செல்லும் வயதுடைய ஏறக்குறைய மூன்று கோடிச் சிறாருக்கு
கல்வி வழங்கப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறும்
அவ்வறிக்கை பரிந்துரைக்கின்றது.
சிறுமி Malala Yousafzaiயின் 16வது பிறந்தநாள் ஜூலை 12, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்டது.
ஆதாரம் : UN
8. WHO : புகைப்பிடித்தலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குப் பலன்
ஜூலை,12,2013. புகைப்பிடித்தலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்குப் பலன் கிடைப்பதாக WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
பணியிடங்களில் புகைப்பிடித்தலுக்குத் தடைவிதிப்பது, சிகரெட் பாக்கெட்டுகளில் நலக்கேடு பற்றிய எச்சரிக்கைகளை குறிப்பது உட்பட புகைப்பிடித்தலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள், இலட்சக்கணக்கான மக்களின் நலவாழ்வைப் பாதுகாத்துள்ளன என்று WHO நிறுவனம் கூறியுள்ளது.
இன்று
உலகில் 200 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இத்தகைய வாழ்வைப் பாதுகாக்கும்
நடவடிக்கைகளால் பலன் அடைந்து வருகின்றனர் என்றும் அந்நிறுவனம்
தெரிவித்துள்ளது.
புகையிலையைப் பயன்படுத்துவதால் உலகில் ஒவ்வோர் ஆண்டும் 50 இலட்சத்துக்கு மேற்பட்டோர் இறக்கின்றனர், தற்போதைய நிலை நீடித்தால் 2030ம் ஆண்டுக்குள் இவ்வெண்ணிக்கை 80 இலட்சத்தைத் தாண்டிவிடும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆதாரம் : UN
9. ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான சீன எழுத்துக்கள் கண்டுபிடிப்பு
ஜூலை,12,2013.
உலகின் மிகப் பழமையான எழுத்து வடிவங்கள் என்று கருதப்படக்கூடிய ஒரு தொகுதி
எழுத்து வடிவங்களை இரு கற்கோடாரிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் சீனாவில்
கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் கிழக்குப் பகுதியில், உடைந்த
கோடாரி போன்ற பொருள்களில் காணப்பட்ட இந்த எழுத்து வடிவங்கள் குறைந்தது
ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அந்தக் கோடாரிகளில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் ஆரம்பகாலச் சீன மொழியாக இருக்கும் என்று ஒரு ஆய்வாளர் கூறியுள்ளவேளை, இவை ஆதிமனிதர்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்திய சித்திரத் தொகுப்புக்கள் என்று வேறு சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த எழுத்து வடிவங்களின் பொருளை இதுவரை படித்தறிய முடியவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மெசபத்தோமிய
நாகரிகக் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட எழுத்து வடிவங்களும் ஏறக்குறைய
இந்தக் காலப் பகுதியைச் சேர்ந்தவைதான் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஷங்காய்க்குத்
தெற்கே 2003ம் ஆண்டுக்கும் 2006ம் ஆண்டுக்கும் இடையே நடைபெற்ற
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 200க்கும் மேற்பட்ட பல மதிப்புமிக்க
பொருட்களில் இந்தக் எழுத்து வடிவங்களைக் கொண்ட கோடரிகளும் உள்ளடங்கும்.
இதுவரை சீனாவில் கிடைத்த மிகப் பழமையான எழுத்துக்கள் விலங்குகளின் எலும்புகளில் காணப்பட்டுள்ளன. அவை Shang அரச குலம் ஆட்சி செய்த 3,600 ஆண்டுகளுக்கு முந்தியவை.
No comments:
Post a Comment