1. ரியோ டி ஜெனிரோ 28வது அனைத்துலக இளையோர் தினத்தில் கலந்து கொள்வோர்க்குப் பரிபூரணபலன்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்கள் ஒருபோதும் சோர்வடையக் கூடாது
3. 28வது அனைத்துலக இளையோர் தினம் குறித்து கர்தினால் Rylko
4. புலம் பெயர்ந்த மக்களுக்குப் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும், அனைத்துலக காரித்தாஸ் தலைவர்
5. திருத்தந்தையர் 23ம் ஜான், இரண்டாம் ஜான் பால் ஆகிய இருவரையும் புனிதர்கள் என அறிவிக்கும் நாளை நிர்ணயிக்கும் கூட்டம் வருகிற செப்டம்பரில்
6. புத்த கயா தொடர் குண்டு வெடிப்புக்களுக்கு தெற்கு ஆசிய ஆயர்கள் கண்டனம்
7. ரம்ஜான் மாதத்தில் சிரியாவில் அமைதி காக்கப்படுமாறு அழைப்பு
8. எல் சால்வதோரின் அமைதிக்கான நடவடிக்கையில் ஒவ்வொருவரும் பங்காற்ற வேண்டும்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ரியோ டி ஜெனிரோ 28வது அனைத்துலக இளையோர் தினத்தில் கலந்து கொள்வோர்க்குப் பரிபூரணபலன்
ஜூலை,09,2013.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இம்மாதம் 22 முதல் 28 வரை
இடம்பெறவிருக்கும் 28வது அனைத்துலக இளையோர் தினத்தில் கலந்து
கொள்வோர்க்குப் பரிபூரணபலனை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தினத்தில் கலந்து கொள்ள இயலாமல், ஊடகங்கள் வழியாக இத்தின நிகழ்வுகளில் ஆன்மீகரீதியில் பங்கு கொள்வோர்க்கும் பரிபூரணபலனை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்பரிபூரணபலனைப் பெறுவதற்கு, ஒப்புரவு அருள்சாதனம், திருநற்கருணை ஆகிய அருள்சாதனங்களில் பங்குபெற்று திருத்தந்தையின் கருத்துகளுக்காகச் செபிக்க வேண்டும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பரிபூரணபலன் வழங்கும் இச்சலுகையை அறிவிக்கும் அறிக்கையில், திருப்பீடப் பாவமன்னிப்புச்சலுகை துறையின் தலைவர் கர்தினால் Manuel Monteiro de Castro, செயலர் ஆயர் Krzysztof Nykiel ஆகிய இருவரும் கையெழுத்திட்டு அதனை வெளியிட்டுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்கள் ஒருபோதும் சோர்வடையக் கூடாது
ஜூலை,09,2013.
கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் முழு நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அவர்கள்
ஒருபோதும் சோர்வடையக் கூடாது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், இச்செவ்வாய்க்கிழமையன்று இவ்வாறு ஒன்பது மொழிகளில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருப்பீடச் செயலகம் @TerzaLoggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், மிகுந்த வறிய நாடுகளுக்கு உண்மையிலேயே சாதகமாக இருக்கும் ஒருமைப்பாட்டுணர்வுப் படிவம், அறிவியல், தொழிநுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தேவைப்படுகின்றது என்று இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. 28வது அனைத்துலக இளையோர் தினம் குறித்து கர்தினால் Rylko
ஜூலை,09,2013. ரியோ டி ஜெனிரோவில் இம்மாதம் 22 முதல் 28 வரை இடம்பெறவிருக்கும் 28வது அனைத்துலக இளையோர் தினம், 26
ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலத்தீன் அமெரிக்காவில்
நடைபெறவிருக்கின்றது என்று திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால்
Stanisław Rylko கூறினார்.
விரைவில் தொடங்கவுள்ள 28வது அனைத்துலக இளையோர் தினம் குறித்த சிந்தனைகளை வத்திக்கான் வானொலியில் பகிர்ந்து கொண்ட கர்தினால் Rylko, உரோமைக்கு வெளியே முதன்முதலாக அர்ஜென்டினாவின் Buenos Airesல் 1987ம் ஆண்டு இவ்வனைத்துலக இளையோர் தினம் நடைபெற்றது என்று கூறினார்.
இளையோர் திருத்தந்தை மீதும், திருஅவை மீதும் எவ்வளவு அன்பு கொண்டுள்ளனர் என்பதையும், இவர்களின் மறைப்பணி ஆர்வத்தையும், விசுவாசத்தின்மீது இவர்கள் கொண்டுள்ள மகிழ்ச்சியையும் இந்த அனைத்துலக இளையோர் தின நிகழ்வுகள் காட்டுகின்றன எனவும் கர்தினால் Rylko கூறினார்.
“நீங்கள் போய் எல்லா மக்கள் இனத்தாரையும் சீடராக்குங்கள்” (மத்.28,19) என்பது 28வது அனைத்துலக இளையோர் தினத்தின் கருப்பொருளாகும்.
இவ்விளையோர் தினத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. புலம் பெயர்ந்த மக்களுக்குப் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும், அனைத்துலக காரித்தாஸ் தலைவர்
ஜூலை,09,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லாம்பெதூசா தீவுக்குச் சென்றது, உலகில்
நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இலட்சக்கணக்கான அகதிகளை நினைவுபடுத்துவதாய்
இருக்கின்றது என்று அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால்
ஆஸ்கார் ரொட்ரிகெஸ் மாராதியாகா கூறினார்.
இன்று உலகில் நான்கு கோடிக்கு மேற்பட்ட மக்கள், நாடுகளுக்குள்ளே புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் நாடுகளின்றி வாழ்பவர்கள் என்றுரைத்த கர்தினால் மாராதியாகா, உலகில் புலம் பெயர்ந்த மக்களுக்குப் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் கேட்டுக்கொண்டார்.
வியன்னாவிலுள்ள
அரசர் அப்துல்லா அனைத்துலக பல்சமய மையத்தில் இவ்வாண்டு நவம்பரில்
இடம்பெறவுள்ள அமைதிக்கான மதங்கள் கருத்தரங்கில் 400க்கு மேற்பட்ட சமயத்
தலைவர்கள், அகதிகளை வரவேற்பதில் மதங்களின் பங்கு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளனர்.
அகதிகளையும் புலம் பெயர்ந்த மக்களையும், குடியுரிமை இல்லாமல் இருப்பவர்களையும் வரவேற்கும் வழிமுறைகளை வலியுறுத்தவுள்ள இவ்வறிக்கை இனங்களிடையே புரிந்து கொள்ளுதலையும், சகிப்புத்தன்மையையும் வளர்த்து, இனவெறிக்கு எதிராகப் போராடும் நோக்கத்தையும் கொண்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம் : ICN
5. திருத்தந்தையர் 23ம் ஜான், இரண்டாம் ஜான் பால் ஆகிய இருவரையும் புனிதர்கள் என அறிவிக்கும் நாளை நிர்ணயிக்கும் கூட்டம் வருகிற செப்டம்பரில்
ஜூலை,09,2013. முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், இரண்டாம் ஜான் பால் ஆகிய இருவரையும் புனிதர் என அறிவிக்கும் தேதி குறித்து கலந்து பேசுவதற்கு, வருகிற
செப்டம்பரில் கர்தினால்கள் அவை இடம்பெறக்கூடும் எனத் திருப்பீட பத்திரிகை
அலுவலக இயக்குனர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இவ்விரு திருத்தந்தையரும் ஒரே நாளில் புனிதர்கள் என அறிவிப்படக்கூடும், அந்த நாள் இவ்வாண்டுக்குள் இடம்பெறலாம் என்றும் அருள்பணி லொம்பார்தி கூறினார்.
அண்மைக்
காலத்தில் இரு திருத்தந்தையர் ஒரே நாளில் புனிதர்கள் அறிவிக்கப்படுவது
இதுவே முதன்முறையாக இருக்கும் எனவும் கூறிய அருள்பணி லொம்பார்தி, 2000மாம் ஆண்டில் திருத்தந்தை 23ம் ஜான், திருத்தந்தை 9ம் பத்திநாதர் ஆகிய இருவரும் ஒரே நாளில் முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. புத்த கயா தொடர் குண்டு வெடிப்புக்களுக்கு தெற்கு ஆசிய ஆயர்கள் கண்டனம்
ஜூலை,09,2013.
இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள புத்த கயாவில் இடம்பெற்ற தொடர் குண்டு
வெடிப்புக்களுக்கு எதிரான தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்
தெற்கு ஆசிய ஆயர்கள்.
வன்முறையைத் தூண்டிவிடும் பிரிவினைவாதம் மற்றும் பாகுபாட்டுணர்வையும் கண்டித்துள்ள ஆயர்கள், இந்தியாவில் பல்சமய நல்லிணக்கமும் நீதியும் இடம்பெறவும், குறிப்பாக, ஏழைகள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படவும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இவ்வன்முறையை வன்மையாய்க் கண்டித்துள்ள பாட்னா பேராயர் வில்லியம் டி சூசா, அமைதியின் இருப்பிடமான, மிகவும் புனிதமான இந்தப் புத்தமத திருத்தலம், தொடர் குண்டு வெடிப்புக்களுக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இவ்வன்முறை, பீகார் மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் நோக்கத்தில் சில சமூக விரோதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகத் தெரிகின்றது என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு அப்பகுதியில் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கம் இடம்பெறுவதற்கு ஆவன செய்யுமாறும் கேட்டுள்ளார் பேராயர் டி சூசா.
புத்தர் ஞானம் பெற்ற இடமான இந்தப் புத்தமதத் திருத்தலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கடந்த ஞாயிறு அதிகாலையில், அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், இரண்டு புத்தத் துறவிகள் படுகாயம் அடைந்தனர். அத்துடன் நாடு முழுவதும் உள்ள, புத்த வழிபாட்டுத் தலங்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதாரம் : Fides
7. ரம்ஜான் மாதத்தில் சிரியாவில் அமைதி காக்கப்படுமாறு அழைப்பு
ஜூலை,09,2013. ரம்ஜான் புனித மாதம் தவத்தின் காலம், கடவுளிடம் மனந்திரும்பிச் செல்லும் காலம், நம்
சகோதர சகோதரிகளிடம் மன்னிப்புக் கேட்கும் காலம் என்பதால் இந்த ரம்ஜான்
மாதத்தில் சிரியாவில் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுள்ளார் இயேசு சபை
அருள்பணி Paolo dall'Oglio.
இத்திங்கள் மாலை தொடங்கியுள்ள ரம்ஜான் நோன்பு மாதத்தையொட்டி இவ்வாறு கேட்டுள்ள இயேசு சபை அருள்பணி dall'Oglio, சட்டம் மற்றும் நீதியை மதிக்கும் அதேவேளை, ஒவ்வொருவரும் மனம் வருந்துவதின் அருளைப் பெறுமாறு இறைவனை இறைஞ்சுவோம் எனவும் கூறியுள்ளார்.
சிரியாவிலும், பிற மத்திய கிழக்கு நாடுகளிலும் சண்டை முடிவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள இயேசு சபை அருள்பணி dall'Oglio, பாகிஸ்தானிலிருந்து லெபனன்வரை, எகிப்திலிருந்து மொரோக்கோவரை, மோதல்கள் இடம்பெற்று வருகின்றன, இவை எண்ணற்ற இழப்புக்களை மட்டுமல்லாமல், இசுலாமின் முகத்தை உருவிழக்கச் செய்கின்றன என்றும் கூறினார்.
கடவுளில் நம்பிக்கை வைப்பவர்கள் இரத்தம் சிந்தும் சண்டையை புறக்கணிக்கின்றனர், ஆனால், சுன்னி மற்றும் ஷியைட் முஸ்லீம் பிரிவினருக்கிடையே தொடர்ந்து சண்டை இடம்பெற்றுவருகிறது, இச்சூழலில் சிரியா, மோதலின் முக்கிய போர்த்தளங்களில் ஒன்றாக இருக்கின்றது என்றும் அக்குரு Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஆதாரம் : Fides
8. எல் சால்வதோரின் அமைதிக்கான நடவடிக்கையில் ஒவ்வொருவரும் பங்காற்ற வேண்டும்
ஜூலை,09,2013.
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற வன்முறை
மற்றும் கொலைகளுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார் சான்
சால்வதோர் துணை ஆயர் கிரகோரியோ ரோசா சாவேஸ்.
குடிமக்கள்
போர் நிறுத்த உடன்பாட்டில் நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நம்பகத்தன்மையும்
உறுதியான நிலையும் மிகவும் முக்கியமானவை என்றுரைத்த ஆயர் ரோசா சாவேஸ், அமைதிக்கான நடவடிக்கையில் ஒவ்வொருவரும் பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாட்டில் அமைதியைக் கொண்டுவருவதற்குப் பல்வேறு வழிகளில் முயற்சிகள் எடுக்கப்பட்டன, ஆயினும், குழப்பமும் நிச்சயமற்ற நிலையிலுமே நாடு இருக்கின்றது என்று Fides செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய தகவலில் கூறியுள்ளார் ஆயர் ரோசா சாவேஸ்.
எல் சால்வதோரில் போரிடும் Mara Salvatrucha, Barrio ஆகிய
இரு முக்கிய புரட்சிக் குழுக்கள் 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் போர்
நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன. அதற்குப் பின்னர் அந்நாட்டில்
தினமும் இடம்பெறும் கொலைகள் 14லிருந்து 5 ஆகக் குறைந்துள்ளன என, காவல்துறையின் அண்மை அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஆதாரம் : Fides
No comments:
Post a Comment