Monday, 22 July 2013

Catholic News in Tamil - 18/07/13

1. திருத்தந்தை பிரான்சிஸ் : பொருளாதார அமைப்புகளுக்கு ஒரு சிறப்பு திருப்பீட அவை

2. திருத்தந்தை பிரான்சிஸ்  : இன்னும் மூன்று நாள்களில் நாம் ரியோவில் சந்திப்போம்

3. கர்தினால் டர்க்சன் : கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் இறையன்புக்குச் சான்று பகர அழைப்பு

4. காங்கோ குடியரசில் வன்முறையை நிறுத்துமாறு ஆயர்கள் வலியுறுத்தல்

5. உரோமின் San Lorenzo பகுதியில் குண்டுகள் போடப்பட்டதன் 70ம் ஆண்டு

6. இரு கொரிய நாடுகளுக்கிடையே ஒப்புரவு ஏற்பட செபம்

7. நமீபியா கடும் வறட்சியால் துன்புறுகின்றது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : பொருளாதார அமைப்புகளுக்கு ஒரு சிறப்பு திருப்பீட அவை

ஜூலை,19,2013. திருப்பீட பொருளாதார-நிர்வாக அமைப்பின் நிறுவனத்துக்கு உதவும் ஆலோசனை அவை ஒன்றை இவ்வெள்ளிக்கிழமையன்று உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்தின் பொருளாதார மற்றும் நிர்வாகத் துறைகளைச் சீரமைப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு அவை, தகவல்களைச் சேகரித்து திருத்தந்தைக்கு வழங்கும். அத்துடன், இவ்வவை, திருப்பீடத்தின் நிர்வாக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை ஆய்வுசெய்யும் கர்தினால்கள் குழுவுடன் ஒத்துழைக்கும். 
வத்திக்கான் நிர்வாகத்தின் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் மிகுந்த கவனமுடன் திட்டமிடுவதற்கும், தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகளை எளிதாக்கும் நோக்கத்திலும் இச்சிறப்பு அவை உருவாக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முறைப்படி எழுதிக் கையொப்பமிடப்பட்டுள்ள ஆணையில் இச்சிறப்பு அவையின் நோக்கங்களும், அவ்வவை உறுப்பினர்களின் நியமனங்களும் விளக்கப்பட்டுள்ளன. 
சட்டம், பொருளாதாரம், நிதி, நிர்வாகம் ஆகியவற்றில் திறமைமிக்க, பல நாடுகளைச் சேர்ந்த பொதுநிலையினர், இச்சிறப்பு அவைக்கென நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வத்திக்கான் அல்லது திருஅவையின் பொருளாதார நிறுவனங்களின் சிறந்த ஆலோசகர்கள் அல்லது அந்நிறுவனங்களை மதிப்பீடு செய்பவர்களாகத் தற்போது செயல்பட்டு வருகின்றனர். இவ்வவையில் செயலர் மட்டும் ஓர் அருள்பணியாளர் ஆவார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரேசில் திருப்பயணத்தை முடித்துத் திரும்பியவுடன் இவ்வவையின் முதல் கூட்டம் நடக்கும்.
இவ்வவையின் உறுப்பினர்கள்:
Dr. Joseph FX Zahra (Malta), தலைவர்.
Msgr. Lucio Angel Vallejo Balda (திருப்பீட பொருளாதாரத் துறையின் செயலர்), செயலர்.
Mr. Jean-Baptiste de Franssu (France), Dr. Enrique Llano (Spain)
Dr. Jochen Messemer (Germany), Ms. Francesca Immacolata Chaouqui (Italy)
Mr. Jean Videlain-Sevestre (France), Mr. George Yeo (Singapore)
Dr. Zahra and Dr.Messemer (திருப்பீட பொருளாதாரத் துறையின் பன்னாட்டு மதிப்பீட்டாளர்கள்)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ்  : இன்னும் மூன்று நாள்களில் நாம் ரியோவில் சந்திப்போம்

ஜூலை,19,2013. உங்களில் பலர் ஏற்கனவே ரியோ சென்றடைந்துவிட்டீர்கள், இன்னும் பலர் அங்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள். இன்னும் மூன்றே நாள்களில் அங்கு நாம் ஒருவர் ஒருவரைச் சந்திப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று Twitter செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலியம், அரேபியம், இலத்தீன் ஆகிய மொழிகள் உட்பட ஒன்பது மொழிகளில் இந்த Twitter செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ரியோ டி ஜெனீரோவில் உலக இளையோர் தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக, ப்ரெஞ்ச் கயானாவிலிருந்து இளையோர் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது குறித்த தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விபத்தில் பலியான பிரான்ஸ் நாட்டு இளம்பெண் மற்றும் இதில் படுகாயமடைந்துள்ள மூன்று பேரின் குடும்பங்கள், இக்குழுவை வழிநடத்திச் செல்பவர்கள் ஆகியோரின் வேதனையில் தானும் முழுமனத்துடன் பங்குகொள்வதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த அனுதாபச் செய்தியை திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, ப்ரெஞ்ச் கயானா தலைநகர் Cayenne ஆயர் Emmanuel Lafont அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. கர்தினால் டர்க்சன் : கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் இறையன்புக்குச் சான்று பகர அழைப்பு

ஜூலை,19,2013. கத்தோலிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், மாணவர்களும், மற்ற பணியாளர்களும் தங்களின் அன்றாடப் பணிகளில் இறையன்புக்குச் சான்று பகருமாறு கேட்டுக்கொண்டார் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்.
பிரேசில் நாட்டின் Minas Gerais மாநிலத்தின் Belo Horizonte என்ற நகரத்தில், அழைப்பும் வாழ்க்கைத் தொழிலும் என்ற தலைப்பில் நடைபெற்ற கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் உலக மாநாட்டில் இவ்வெள்ளிக்கிழமையன்று உரையாற்றிய கர்தினால் டர்க்சன், கத்தோலிக்க சமூகக் கோட்பாடுகளின் அடிப்படையில் கல்வியும் ஆசிரியப் பணியும் இடம்பெற வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு துறையிலும் நிறையப் போட்டிகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும்  இக்காலத்தில், நிறைய மதிப்பெண்கள் எடுத்து பட்டம் பெறுவது வெற்றியை நிர்ணயிக்காது என்றுரைத்த கர்தினால் டர்க்சன், மனித சமுதாயத்தில் அனைவரின் நன்மைக்காகச் செயல்படும் திறமையைக் கொண்டிருப்பது அவசியம் என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.
ஒவ்வொரு துறையிலும் தங்களின் நிறுவனங்களைத் திறமையுடன் நடத்திச் செல்லும் முயற்சிகளில், ஊழல், இலஞ்சம், பேராசை, வளங்களை மோசமாகக் கையாளுதல், விதிமுறைகள் இல்லாமை, எனத்  தடைகள் வெளியிலிருந்தும் வருகின்றன என்றும் கர்தினால் கூறினார்.
ஒருவர் தனது அன்றாடப் பணிவாழ்வில் விசுவாசத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையை எதிர்நோக்குவது, இக்காலத்தின் கடும் தவறுகளில் ஒன்றாக இருக்கின்றது என்பதைக் குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன், இச்சவால்களுக்கு மத்தியில் ஞானமுடன் செயல்படுமாறு, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட அனைவரையும்  கேட்டுக்கொண்டார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. காங்கோ குடியரசில் வன்முறையை நிறுத்துமாறு ஆயர்கள் வலியுறுத்தல்

ஜூலை,19,2013. காங்கோ குடியரசில் இரத்தம் சிந்தும் ஆயுதம் ஏந்திய சண்டையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் ஆயுதங்களைக் கைவிட்டு அமைதிக்கான பணிகளில் உயிர்த்துடிப்புடன் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள்.
காங்கோ குடியரசின் தலைவர்கள் தங்களின் சொந்த ஆதாயங்களுக்காக உழைக்காமல் நாட்டு மக்களின் பொதுநலனில் அக்கறை கொண்டு செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள்.
ருவாண்டாவுக்கும் உகாண்டாவுக்கும் எல்லைப்புறத்திலுள்ள வட Kivu மாநிலத்தில் தாக்குதல்களை நடத்திவரும் புரட்சியாளர்களுக்குச் சிறப்பான வேண்டுகோளை முன்வைத்துள்ள காங்கோ ஆயர்கள், இத்தாக்குதல்கள் இரண்டாவது காங்கோ சண்டையாக உள்ளது என்று கவலையுடன் கூறியுள்ளனர்.
வன்முறை இறப்புக்களையும், படுகொலைகளையும், பாலியல் வன்செயல்களையும் தொடர்ந்து சந்தித்துவரும் வட Kivu மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் அறுபது இலட்சத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.  
காங்கோவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டையால் பல இலட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். 
மேலும், முதல் காங்கோச் சண்டை பத்து ஆண்டுகளுக்குமுன் முடிவுற்றது.

ஆதாரம் : CNA                           

5. உரோமின் San Lorenzo பகுதியில் குண்டுகள் போடப்பட்டதன் 70ம் ஆண்டு

ஜூலை,19,2013. சரியாக எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1943ம் ஆண்டு ஜூலை 19ம் தேதியன்று அமெரிக்க ஐக்கிய நாட்டு நேசப்படைகள் உரோமின் San Lorenzo பகுதியில் குண்டுகளைப் போட்டதில் இறந்த மற்றும் காயமடைந்த மக்களைப் பார்ப்பதற்காக அன்று மாலையே அங்குச் சென்றார் திருத்தந்தை 12ம் பத்திநாதர் என்று லொசர்வாத்தோரே ரொமானோ நாளிதழ் அறிவித்தது.
உடனடியாக San Lorenzo பசிலிக்கா வந்த மக்கள் திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்களிடம் கண்களால் கண்ணீரோடு மட்டும் பேசினர். திருத்தந்தையும் அவர்களை அணைத்துக்கொண்டார் என்று அந்த நாளிதழ் அறிவித்தது.
1943ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி உரோமின் Tiburtino, Prenestino, Casilino, Labicano, Tuscolano, Nomentano, San Lorenzo ஆகிய பகுதிகளில் ஏறக்குறைய 1,060 டன் எடையுள்ள நான்காயிரம் குண்டுகளைப் போட்டதில் மூவாயிரம் பேர் இறந்தனர் மற்றும் 11 ஆயிரம் பேர் காயமடைந்தனர். San Lorenzoவில் மட்டும் 1,500 பேர் இறந்தனர் மற்றும் 4,000 பேர் காயமடைந்தனர்.
இந்நினைவுநாளை முன்னிட்டு உரோம் மறைமாவட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதி கர்தினால் Agostino Vallini, இவ்வெள்ளிக்கிழமை மாலையில் San Lorenzo பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்துவது திட்டமிடப்பட்டுள்ளது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இரு கொரிய நாடுகளுக்கிடையே ஒப்புரவு ஏற்பட செபம்

ஜூலை,19,2013. வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையேயுள்ள எல்லையில் இராணுவமற்ற பகுதியில் அமைதிக்கான பேரணி நடத்தி செபிக்கத் திட்டமிட்டுள்ளனர் கொரியக் கத்தோலிக்கர்.
கொரியத் திருஅவை, இந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களை, ஒப்புரவு மற்றும் ஒன்றிப்புக்காகச் செபிக்கும் சிறப்புக் காலமாகக் கடைப்பிடித்துவரும்வேளை, கொரியக் கத்தோலிக்கர் இவ்விரு கொரிய நாடுகளின் எல்லையில் அமைதிக்காகச் செபிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
1953ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி இரு கொரிய நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதன் 60ம் ஆண்டின் நினைவாக பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளது கொரிய ஆயர் பேரவையின் ஒப்புரவு ஆணையம்.
இத்திட்டங்கள் குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆயர் Peter Lee Ki-heon, இரு கொரிய நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றபோதிலும், கொரியத் தீபகற்பம் இன்னும் போர்ச் சூழலிலே இருக்கின்றது, இறுதி அமைதி ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லை என்று கூறியுள்ளார். 

ஆதாரம் : Fides
7. நமீபியா கடும் வறட்சியால் துன்புறுகின்றது

ஜூலை,19,2013. ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதியில் வறட்சி மிகுந்த நாடான நமீபியா கடந்த 30 ஆண்டுகளில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் ஊட்டச்சத்துக்குறைவால் துன்புறுகின்றனர் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.
கடந்த மே மாதத்தில் அறுவடை பொய்த்துவிட்டதால் அந்நாட்டு அரசுத்தலைவர் Hifkepunye Pohamba தேசிய அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
பல விவசாயிகள் தங்களின் ஆடுமாடுகளை விற்கத் தொடங்கியுள்ளவேளை, அங்கோலா நாட்டிலிருந்து பசுக்கள் உணவு தேடி நமீபியாவுக்குள் வரத் தொடங்கியுள்ளன என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. 
1990ம் ஆண்டில் தென்னாப்ரிக்காவிலிருந்து விடுதலையடைந்த நமீபியாவில் 20 இலட்சம் பேர் வறுமையில் வாழ்கின்றனர்.

ஆதாரம் : Reuters                    
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...