Saturday 13 July 2013

CAtholic News in Tamil - 10/07/13

 
1. கனடா இரயில் விபத்தில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் ஆழ்ந்த வருத்தம்

2. திருத்தந்தை பிரான்சிஸ்  : கிறிஸ்துவை நெருங்கிப் பின்பற்ற நாம் விழைந்தால், சுகமான வாழ்வைத் தெரிவு செய்யமுடியாது

3. கர்தினால் Pengo : ஆப்ரிக்காவில் நற்செய்திப்பணிக்கு, அமைதி, நீதி மற்றும் ஒப்புரவு ஆகிய விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்

4. பிலிப்பின்ஸ் பேராயர் : வாழ்வைப் பாதுகாப்பது ஒவ்வொரு கத்தோலிக்கரின் தலையாயக் கடமை

5. வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள லூர்து நகர் திருத்தலத்தைச் சீரமைப்பதற்கு இங்கிலாந்து பேராயர் நிக்கோல்ஸ் விண்ணப்பம்

6. எகிப்தில் அமைதியும் ஒப்புரவும் உருவாக மூன்று நாட்கள் செபம்

7. பெங்களூரு ISI நிறுவனப் பொன்விழா

8. சிரியாவில் ஆயுதப் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும், ஐ.நா. பொதுச்செயலர் வேண்டுகோள்

------------------------------------------------------------------------------------------------------

1. கனடா இரயில் விபத்தில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் ஆழ்ந்த வருத்தம்

ஜூலை,10,2013. கனடா நாட்டின் Lac-Mégantic எனும் ஊரில் நிகழ்ந்த இரயில் விபத்தில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
இவ்விபத்தில் இறந்தோருக்கு தன் செபங்களை உறுதி செய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் ஆறுதலையும், துயர் துடைப்புப் பணியில் ஈடுபட்டிருப்போருக்குத் தன் நன்றி கலந்த செபங்களையும் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே அவர்கள், கனடா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ரிச்சர்ட் ஸ்மித் அவர்களுக்கு இத்தந்தியை அனுப்பியுள்ளார்.
எரிபொருளுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் நிறைக்கப்பட்ட 72 வாகனங்கள் கொண்ட ஒரு இரயில் தொடர், ஜூலை 5, கடந்த வெள்ளி இரவு, ஓட்டுனர் யாரும் இன்றி தானாகவே இரண்டு மணி நேரம் ஓடி, பின்னர் தடம் புரண்டதில், வாகனங்கள் வெடித்து, இரயில் பாதையைச் சுற்றிலும் பெரும் அழிவை ஏற்படுத்தின.
இவ்விபத்தில் 13 பேர் இறந்துள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ள வேளை, இன்னும் 50க்கும் மேற்பட்டோரின் நிலை உறுதி செய்யப்படாமல் உள்ளது. இவர்களில் பலர் இந்தத் தீப்பிழம்பில் எரிந்து சாம்பலாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ்  : கிறிஸ்துவை நெருங்கிப் பின்பற்ற நாம் விழைந்தால், சுகமான வாழ்வைத் தெரிவு செய்யமுடியாது

ஜூலை,10,2013. கிறிஸ்துவை நெருங்கிப் பின்பற்ற நாம் விழைந்தால், சுகமான, அமைதியான வாழ்வை நாம் தெரிவு செய்யமுடியாது. அத்தகைய வாழ்வு மிகவும் சவால்கள் நிறைந்ததாக, அதேநேரம், மகிழ்வு நிறைந்ததாக இருக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று Twitter செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலியம், அரேபியம், லத்தீன் ஆகிய மொழிகள் உட்பட ஒன்பது மொழிகளில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் பெயரால் திருப்பீடம் இப்புதனன்று வெளியிட்டுள்ள ஒரு Twitter செய்தியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள் நன்னெறியின் அடிப்படையில், பொறுப்புள்ள வகையில் அமைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. கர்தினால் Pengo : ஆப்ரிக்காவில் நற்செய்திப்பணிக்கு, அமைதி, நீதி மற்றும் ஒப்புரவு ஆகிய விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்

ஜூலை,10,2013. ஆப்ரிக்கக் கண்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நற்செய்திப் பணி, அமைதி, நீதி மற்றும் ஒப்புரவு ஆகிய விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று Dar es salaam  உயர்மறைமாவட்டத்தின் கர்தினால் Polycarp Pengo அவர்கள் கூறினார்.
ஜூலை 8, இத்திங்கள் முதல் ஜூலை 14, வருகிற ஞாயிறு முடிய காங்கோ குடியரசில் நடைபெற்றுவரும் ஆப்ரிக்க ஆயர்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் ஆரம்பத் திருப்பலியாற்றிய கர்தினால் Pengo அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை அமைதிக்கும், நீதிக்கும் வழங்கவேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்திப் பேசினார்.
ஆயர்களின் மாநாட்டில் உரையாற்றிய Senegal நாட்டைச் சேர்ந்த கர்தினால் Theodore Adrian Sarr அவர்கள், அமைதி, நீதி ஆகிய முக்கியப் பணிகளைச் செய்யக்கூடிய பணியாளர்களை, ஆப்ரிக்கத் திருஅவை பெறவேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
5 கர்தினால்கள், 100க்கும் அதிகமான ஆயர்கள், இன்னும் பல நூறு குருக்கள் மற்றும் பொதுநிலையினர் கலந்துகொண்ட இத்திருப்பலியில், அரசுத்துறையைச் சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பிலிப்பின்ஸ் பேராயர் : வாழ்வைப் பாதுகாப்பது ஒவ்வொரு கத்தோலிக்கரின் தலையாயக் கடமை

ஜூலை,10,2013. வாழ்வைப் பாதுகாப்பது ஒவ்வொரு கத்தோலிக்கரின் தலையாயக் கடமை என்பதால், வாழ்வுக்கு எதிராக பிலிப்பின்ஸ் அரசு உருவாக்கிவரும் சட்டத்தை வன்மையாக எதிர்க்கும் கடமை அனைவருக்கும் உண்டு என்று பிலிப்பின்ஸ் பேராயர் ஒருவர் கூறினார்.
கருத்தடை மற்றும் கருக்கலைப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய சட்டம் ஒன்றை பிலிப்பின்ஸ் அரசு அண்மையில் நடைமுறைப்படுத்தியுள்ளதை அடுத்து, மக்களில் பலர் இச்சட்டத்தை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தை அணுகியுள்ளனர்.
இந்த வழக்கு இச்செவ்வாயன்று விசாரணைக்கு வந்துள்ள வேளையில், கத்தோலிக்கர்களின் சார்பில் வாதாடச் செல்லும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட திருப்பலியை ஆற்றிய பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Socrates Villegas அவர்கள், மனசாட்சிக்கு எதிராகச் செல்லும் அனைத்து முயற்சிகளையும் திருஅவை எதிர்க்கும் என்று கூறினார்.
14 ஆண்டுகளாக பிலிப்பின்ஸ் நாட்டின் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட கருத்தடைச் சட்டம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சட்டமானது.
இச்சட்டத்தை எதிர்த்து, கத்தோலிக்கர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர் என்றும், வழக்கு விசாரணையில் தகுந்த முடிவு இல்லையெனில், இம்மாதம் 26ம் தேதி வழக்கு தொடரும் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : Fides / AsiaNews

5. வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள லூர்து நகர் திருத்தலத்தைச் சீரமைப்பதற்கு இங்கிலாந்து பேராயர் நிக்கோல்ஸ் விண்ணப்பம்

ஜூலை,10,2013. உலகப் புகழ்பெற்ற லூர்துநகர் திருத்தலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் உருவான பாதிப்புக்களை சரிசெய்ய இங்கிலாந்து மக்கள் நிதி உதவி செய்யவேண்டும் என்று இங்கிலாந்து பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் விண்ணப்பித்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் இங்கிலாந்தின் Westminster உயர்மறைமாவட்டம் ஜூலை 21ம் தேதி முதல் 27ம் தேதி முடிய லூர்து நகருக்குத் திருப்பயணம் செல்வது வழக்கம். இவ்வாண்டு மேற்கொள்ளப்படும் இத்திருப்பயணத்தின்போது, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு திருப்பயணிகள் நிதி உதவி செய்யுமாறு பேராயர் நிக்கோல்ஸ் விண்ணப்பித்துள்ளார்.
அயர்லாந்திலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் ஜூலை மாதம் லூர்து நகர் செல்லும் திருப்பயணிகளுக்கு, நதியின் ஓரத்தில் வழக்கமான இடங்களில் நடைபெறும் திருப்பலிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பயணிகளையும் வேளாண்மையையும் நம்பி வாழும் லூர்து நகர் மக்கள் இந்த வெள்ளத்தின் பாதிப்புக்களைக் கடந்து வருவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று திருப்பயணங்களை ஏற்பாடு செய்யும் அருள் பணியாளர் Denis Touw கூறியுள்ளார்.

ஆதாரம் : ICN

6. எகிப்தில் அமைதியும் ஒப்புரவும் உருவாக மூன்று நாட்கள் செபம்

ஜூலை,10,2013. எகிப்தில் அமைதியும் ஒப்புரவும் உருவாகவேண்டும் என்ற முயற்சியில், இச்செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் செப நாட்களாக அமையவேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளார், இங்கிலாந்து காப்டிக் ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டு முறையின் தலைவர் ஆயர் Angaelos
இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இரமதான் மாதத்தின் துவக்கத்தையொட்டி, இந்த அழைப்பை விடுத்துள்ள ஆயர் Angaelos அவர்கள், அமைதியான முறையில் அந்நாட்டில் மாற்றங்களைக் கொணர விழையும் மக்கள் வன்முறைகளைச் சந்திப்பது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்று கூறினார்.
அரசுத் தலைவர் Morsi அவர்கள் தலைமைப் பதவியிலிருந்து விலகும்படி போராடிவரும் மக்களில், இத்திங்களன்று, 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 455 பேர் காயமுற்றுள்ளனர் என்றும் அரசுத் தகவல்கள் கூறுகின்றன.
உண்மையான அமைதியையும், முன்னேற்றத்தையும் விரும்பும் மக்கள் மீது வன்முறைகள் காட்டப்படுவது எவ்வகையிலும் நியாயமற்ற செயல் என்று ஆயர் Angaelos கூறியுள்ளார்.

ஆதாரம் : ICN

7. பெங்களூரு ISI நிறுவனப் பொன்விழா

ஜூலை,10,2013. ஜூலை 12, வருகிற வெள்ளிக்கிழமை முதல் பெங்களூருவில் அமைந்துள்ள ISI எனப்படும் இந்திய சமுதாய நிறுவனம் தன் பொன்விழா ஆண்டைத் துவக்குகிறது.
பொன் விழா ஆண்டு நிகழ்வுகளின் துவக்கமாக, வருகிற வெள்ளியன்று, மனித உரிமை ஆர்வலர் Teesta Setalwad அவர்கள் 'ஒரு குடியரசின் போராட்டம்: சட்ட உரிமைகளும், பெரும்பான்மையினரின் கருத்துக்களும்' என்ற தலைப்பில் வழங்கும் உரையுடன் ISIயின் பொன்விழா ஆண்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.
சமுதாய மாற்றங்களை உருவாக்கும் பயிற்சிகளுக்காக, 1963ம் ஆண்டு இயேசு சபை அருள் பணியாளர் Henry Volken அவர்களின் முயற்சியால், ISI நிறுவனம்  உருவாக்கப்பட்டதென்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மனித உரிமைகள், பாலியல் ரீதியான சமத்துவம், மதசார்பற்ற சமுதாயம், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஆகிய பல்வேறு தளங்களில் பயிற்சிகள் அளிக்கும் நிறுவனமாக ISI செயல்பட்டு வருகிறது என்றும், தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் இந்நிறுவனத்தின் இலக்கு மக்கள் என்றும் UCAN செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
ISI எனப்படும் இந்திய சமுதாய நிறுவனம், 1951ம் ஆண்டு இயேசு சபை அருள் பணியாளர் Jerome D'Souza அவர்களால் புது டில்லியில் துவக்கப்பட்டது என்பதும், அதன் ஒரு கிளை நிறுவனமாக, பெங்களூரு ISI துவக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN

8. சிரியாவில் ஆயுதப் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும், ஐ.நா. பொதுச்செயலர் வேண்டுகோள்

ஜூலை,10,2013. இஸ்லாமியர்களின் நோன்பு மாதமான இரமதானையொட்டி, சிரியாவில் ஆயுதப் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் விண்ணப்பித்துள்ளார்.
இத்திங்களன்று துவங்கிய இரமதான் மாதத்தையொட்டி செய்தி வழங்கியுள்ள பான் கி மூன் அவர்கள், இந்த ஒரு மாதமாகிலும் ஆயுதங்களைக் களைந்து, அமைதி காக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியாவின் அரசும், ஏனைய போராட்டக் குழுக்களும் தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் கைதிகளை விடுவிக்குமாறும் ஐ.நா. பொதுச்செயலர் தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.
2011ம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் துவங்கிய உள்நாட்டுப் போராட்டத்தால், இதுவரை, அந்நாட்டு மக்கள் மூன்று ஆண்டுகளாக இரமதான் மாதத்தை துன்பத்துடன் கழித்துள்ளனர் என்று ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அந்நாட்டில் நிகழ்ந்துவரும் வன்முறைகளால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 2 கோடிக்கும் அதிகமானோர் புலம் பெயர்ந்துள்ளனர் எனும் ஐ.நா.வின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...