Monday 22 July 2013

Catholic News in Tamil - 17/07/13

1. திருத்தந்தை பிரான்சிஸ் : மனித சமுதாயத்தில் வலுவற்றோர் என்று நாம் கருதுவோரே, இறைவன் படைப்புக்கள் அனைத்திலும் தலைசிறந்தவர்கள்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : துன்புறுவோர் மீது கருணை கொள்ள வேண்டும்

3. திருப்பீடப் பேச்சாளர் : நிருபர் கூட்டத்தில் அனைத்துலக இளையோர் தினம் பற்றிய விளக்கம்

4. கர்தினால் Rylko : இறைவனைத் தேடிவரும் இளையோர், உலக இளையோர் நாளின் வெற்றிக்குக் காரணம்

5. 28வது அகில உலக இளையோர் தின நாட்களின்போது, 250 ஆயர்கள் இளையோருக்கு மறைகல்வி அமர்வுகளை நடத்துவர்

6. கர்தினால் Rai : அரசினால் உருவாக்கப்படாத இராணுவம் சட்டத்திற்குப் புறம்பானது

7. ஆஸ்திரேலிய இளையோர், பெரு நாட்டில் வறியோர் மத்தியில் பணி

8. மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் நவீனத் தொடர்புத் துறை நுட்பங்கள் பெருமளவில் உதவிகள் செய்யமுடியும், ஐ.நா.

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : மனித சமுதாயத்தில் வலுவற்றோர் என்று நாம் கருதுவோரே, இறைவன் படைப்புக்கள் அனைத்திலும் தலைசிறந்தவர்கள்

ஜூலை,17,2013. மனித சமுதாயத்தில் வலுவற்றோர் என்று நாம் கருதுவோரே, இறைவன் படைப்புக்கள் அனைத்திலும் தலைசிறந்தவர்கள்; எனவே, வாழ்வைப் பாதுகாப்பதற்கு பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்வது இறைவனுக்கு நாம் தரும் தகுந்த பதிலிருப்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
2001ம் ஆண்டு முதல் அயர்லாந்து நாட்டின் தலத்திருஅவை அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறன்று 'வாழ்வுக்கான நாள்' என்று கொண்டாடி வருகிறது. இவ்வாண்டு அக்டோபர் 6ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் இந்த நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வாண்டு கொண்டாடப்படும் இந்த சிறப்பு நாளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மையக் கருத்தான, "வாழ்வின் பாதுகாப்பு - எவ்வகையிலும் தகுதியானது" என்ற வார்த்தைகள், 2005ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Aires பேராயராக இருந்த வேளையில் வழங்கிய ஒரு மறையுரையிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள் என்று அயர்லாந்து ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
நோயுற்றோர், வயதானோர், வறியோர், கருவில் உள்ள குழந்தைகள் என்று மனித சமுதாயத்தில் வலுவற்று காணப்படும் மக்களே, இறைவன் தன் உருவில் படைத்துள்ள மிக அற்புதமான படைப்புக்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பு அளிக்கவேண்டும் என்று திருத்தந்தையின் செய்தி வலியுறுத்தியுள்ளது.
1995ம் ஆண்டு "வாழ்வின் நற்செய்தி" (Evangelium Vitae) என்ற தலைப்பில் தான் வெளியிட்ட சுற்றுமடலைத் தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்வின் நாளைக் கொண்டாடும்படியாக முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் ஊக்குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CBC, Ireland

2. திருத்தந்தை பிரான்சிஸ் : துன்புறுவோர் மீது கருணை கொள்ள வேண்டும்

ஜூலை,17,2013. இறைவன் நம்மீது கருணை கொண்டுள்ளார். நாமும் பிறர்மீது, குறிப்பாக, துன்புறுவோர் மீது கருணை கொள்ளவேண்டும் என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.
மேலும், "நீ மகிழ்வுடன், இயேசுவின் நட்பில் ஒவ்வொரு நாளும் வளர்வதற்கு முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் பரிந்துரை உனக்கு நிறைவாய் கிடைக்கட்டும்" என்ற வார்த்தைகளுடன் மூன்று வயது குழந்தைக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் இறையடி சேர்ந்ததன் 50ம் ஆண்டு நினைவு, நடைபெறும் நம்பிக்கை ஆண்டில், ஜூன் மாதம் 3ம் தேதி வத்திக்கானில் கொண்டாடப்பட்டது. அப்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த Alice Maria Rocca என்ற 3 வயது குழந்தை, தன் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தைத் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார்.
இந்த மடலுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதில் எழுதி, அதனை அக்குழந்தைக்கு அண்மையில் அனுப்பியிருந்தார். இந்த மடலைப் பெற்ற Roccaவின் குடும்பத்தினர், திருத்தந்தையிடமிருந்து தாங்கள் பெற்ற இந்த அற்புதக் கொடைக்காக Zenit கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில், நன்றி தெரிவித்துள்ளனர்.
Roccaவுக்கு எழுதியக் கடிதத்தில் தனக்காக வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டத் திருத்தந்தை, குழந்தை Roccaவின் குடும்பத்தினருக்கு தன் ஆசீரை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit

3. திருப்பீடப் பேச்சாளர் : நிருபர் கூட்டத்தில் அனைத்துலக இளையோர் தினம் பற்றிய விளக்கம்

ஜூலை,17,2013. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் இளையோர் நாளையொட்டி எடுத்த முடிவை முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் நிறைவேற்றியதுபோல, தற்போதையத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தை எடுத்த முடிவை நிறைவேற்ற பிரேசில் நாட்டுக்குச் செல்கிறார் என்பது திருத்தந்தையர்களின் தொடர்ச்சியைக் காட்டும் அழகான ஓர் அம்சம் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள் தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
ஜூலை 22, வருகிற திங்கள் முதல், ஜூலை 29, அடுத்தத் திங்கள் வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகருக்கு மேற்கொள்ளும் முதல் அயல்நாட்டு மேய்ப்புப்பணி பயணம் குறித்து இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அருள் தந்தை லொம்பார்தி அவர்கள், இவ்வாறு கூறினார்.
பிரேசில் நாட்டில் மும்முறை பயணங்கள் மேற்கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், ஒரு முறை பயணம் மேற்கொண்ட முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகியோரைத் தொடர்ந்து, இலத்தீன் அமெரிக்க நாட்டில் பிறந்தவரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் நாட்டுக்குத் தன் முதல் அயல்நாட்டுப் பயணத்தை மேற்கொள்கிறார் என்று அருள் தந்தை லொம்பார்தி சுட்டிக்காட்டினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 28வது உலக இளையோர் நாளைக் குறித்து எடுத்த முடிவுகள் அனைத்தையும் தான் நிறைவேற்றப் போவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப் பொறுப்பை ஏற்ற ஒரு சில நாட்களிலேயே அறிவித்ததால், இப்பயணம் குறித்த திட்டங்களை அன்றிலிருந்து செயல்படுத்த முடிந்தது என்பதையும் அருள் தந்தை லொம்பார்தி தெளிவுபடுத்தினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்பயணத்தின் அனைத்து நிகழ்வுகள் குறித்தும் திருப்பீடப் பேச்சாளர் செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கர்தினால் Rylko : இறைவனைத் தேடிவரும் இளையோர், உலக இளையோர் நாளின் வெற்றிக்குக் காரணம்

ஜூலை,17,2013. கடவுளும் மதமும் தேவையில்லை என்பதைக் கூறிவரும் உலகின் செய்திகளுக்கு மத்தியில் இறைவனைத் தேடிவரும் இளையோரே, திருஅவை சிறப்பித்து வரும் உலக இளையோர் நாளின் வெற்றிக்குக் காரணம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பொதுநிலையினர் பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டி ஒன்றில், உலக இளையோர் நாள் இலட்சக்கணக்கான இளையோரை கவர்ந்து வருவது குறித்து எழுப்பப்பட்டக் கேள்விக்கு இவ்விதம் பதில் அளித்தார்.
கிறிஸ்துவைச் சந்திக்க ஆவல் கொண்டுள்ள இளையோர் இவ்வுலகில் இருக்கின்றனர் என்பதை ஒவ்வோர் இளையோர் நாளும் நமக்குத் தெளிவாக்குகிறது என்று முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் கூறியதை கர்தினால் Rylko தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டில், நற்செய்தியின் பணியாளர்களாய் இளையோர் திகழவேண்டும் என்ற ஆவலில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் 28வது உலக இளையோர் நாளுக்கு, "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்..." என்ற மையக்கருத்தைத் தெரிவு செய்தது குறித்தும் கர்தினால் Rylko குறிப்பிட்டார்.
கத்தோலிக்கப் பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ள பிரேசில் நாட்டு இளையோர், உலகெங்கிலுமிருந்து அங்கு வரும் இளையோருடன் தங்கள் நம்பிக்கை வாழ்வைப் பகிர்வதற்கு இந்த இளையோர் நாள் அரியதொரு வாய்ப்பு என்றும் கர்தினால் Rylko தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. 28வது அகில உலக இளையோர் தின நாட்களின்போது, 250 ஆயர்கள் இளையோருக்கு மறைகல்வி அமர்வுகளை நடத்துவர்

ஜூலை,17,2013. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறவிருக்கும் 28வது அகில உலக இளையோர் நாட்களின்போது, ஜூலை 24 முதல் 26 முடிய 250 ஆயர்கள் இளையோருக்கு மறைகல்வி அமர்வுகளை நடத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"நம்பிக்கை நோக்கிய தாகம், இறைவனை நோக்கிய தாகம்", "கிறிஸ்துவின் சீடராய் இருப்பது", "மறைபரப்புப் பணியாளராகச் செல்க" என்ற மூன்று தலைப்புக்களில் இந்த மறைகல்வி அமர்வுகள் பல்வேறு மொழிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்தினால் Timothy Dolan உட்பட, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் 8 பேர், மற்றும் இந்தியா, கானா, பிலிப்பின்ஸ், பங்களாதேஷ், கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் ஆயர்கள் ஆங்கிலத்தில் மறைக்கல்வி அமர்வுகளை நடத்துவர்.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த அமர்வுகளில் இளையோர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில்கள் வழங்கப்படும் என்றும், இந்த அமர்வுகளில் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படும் என்றும், இறுதியில் ஆயர்கள் நிறைவேற்றும் திருப்பலியுடன் இந்த அமர்வுகள் நிறைவு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA/EWTN

6. கர்தினால் Rai : அரசினால் உருவாக்கப்படாத இராணுவம் சட்டத்திற்குப் புறம்பானது

ஜூலை,17,2013. எந்த ஒரு நாட்டிலும் அரசினால் உருவாக்கப்படாத இராணுவம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், இத்தகைய அமைப்புக்கள் செயலாற்றுவது நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைக்கும் என்றும் அந்தியோக்குவின் மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Boutros Rai கூறினார்.
சட்டப்படி நிறுவப்படாத இராணுவ அமைப்புக்கள் ஒவ்வொன்றும், நாட்டின் சட்டம், ஒழுங்கு இவற்றைக் கையில் எடுக்கும்போதுபொதுவான பாதுகாப்பு அழிந்துவிடும் என்று ஜூலை 14, கடந்த ஞாயிறன்று கர்தினால் Boutros Rai அவர்கள் வழங்கிய மறையுரையில் குறிப்பிட்டார்.
லெபனான் நாட்டில், 1943ம் ஆண்டு இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட அமைதி உடன்பாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Boutros Rai அவர்கள், இந்த உடன்பாட்டுக்கு எதிராக, உள்நாட்டிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கின்றன என்று தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : Fides

7. ஆஸ்திரேலிய இளையோர், பெரு நாட்டில் வறியோர் மத்தியில் பணி

ஜூலை,17,2013. விரைவில் துவங்கவிருக்கும் 28வது அகில உலக இளையோர் நாளில் கலந்துகொள்ள சென்றுள்ள ஆஸ்திரேலிய இளையோர், பெரு நாட்டின் லீமா நகரில் வறியோர் அதிகமாய் வாழும் San Juan de Miraflores பகுதியில் மக்கள் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
சிட்னி பேராயர் கர்தினால் ஜார்ஜ் பெல், மூன்று ஆயர்கள், மற்றும் 23 அருள் பணியாளர்களுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்றுள்ள 560 இளையோர், பிரேசில் நாட்டுக்குச் செல்வதற்கு முன்னர், லீமா நகரின் வறியோர் மத்தியில் உழைத்து வருகின்றனர்.
உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் தாங்கள் அதிகம் பெறவிருக்கிறோம் என்பதை உணர்ந்துள்ள இவ்விளையோர், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ளோருக்கு தங்களால் இயன்ற உதவிகள் தரவேண்டும் என்ற ஆவலில் இப்பணிகளை மேற்கொண்டுள்ளதாக Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
வறியோருக்கு இல்லங்கள் அமைத்தல், சாலைகளைச் சீரமைத்தல், சிற்றாலயம் ஒன்றை அமைத்தல் என்ற பல்வேறு முயற்சிகளில் இவ்விளையோர் வருகிற சனிக்கிழமை முடிய ஈடுபடுவர் என்று கூறப்பட்டுள்ளது.
சிட்னி உயர்மறைமாவட்டம், சிட்னி கத்தோலிக்கப் பல்கலைக் கழகம், ஆஸ்திரேலிய மாரனைட் வழிபாட்டு முறை கத்தோலிக்க இளையோர் அமைப்பு என்ற பல்வேறு அமைப்புக்களின் இளையோர் ஒருங்கிணைந்து இப்பணிகளைச் செய்து வருகின்றனர்.

ஆதாரம் : Zenit

8. மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் நவீனத் தொடர்புத் துறை நுட்பங்கள் பெருமளவில் உதவிகள் செய்யமுடியும், ஐ.நா.

ஜூலை,17,2013. மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்குக் கொணர்வதில் இன்றையத் தொடர்புத்துறை நுட்பங்கள் பெருமளவில் உதவிகள் செய்யமுடியும் என்று ஐ.நா.வின் இணைப் பொதுச் செயலர் Jan Eliasson அவர்கள் கூறினார்.
இன்றையத் தொடர்புத்துறை நுட்பங்களை மையப்படுத்தி, நியூ யார்க் நகரில், ஜப்பான் நாடு ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய இணைப் பொதுச் செயலர் Eliasson அவர்கள் இவ்வாறு கூறினார்.
கடந்த வாரம் ஐ.நா. கொண்டாடிய மலாலா நாளை ஓர் எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டிய திருவாளர் Eliasson அவர்கள், சிறுமி மலாலா தாக்கப்பட்ட நிகழ்வு தொடர்புச் சாதனங்கள் வழியே விரைவில் உலகெங்கும் பரவியதால், அவரது உயிர் காப்பற்றப்பட்டதோடு, அவர் மேற்கொண்ட போராட்டமும் உலகெங்கும் ஆதரவைப் பெற்றது என்று கூறினார்.
அண்மையில் இளம் சிறுமி மலாலா அவர்கள், ஐ.நா. அவையில் ஆற்றிய உரையும் உலகெங்கும் மக்களைச் சென்று சேர்ந்தது என்றும், அவர் உரையாற்றிய ஒரு சில நொடிகளில் 24,000க்கும் அதிகமானோர் பதில் அளித்தனர் என்றும் இணைப் பொதுச் செயலர் Eliasson அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மனித உரிமை மீறல்களை, குறிப்பாக, பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக இழைக்கப்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த தொடர்புச் சாதனங்கள் பெருமளவில் தங்கள் கடமைகளை ஆற்றவேண்டும் என்ற அழைப்பையும் ஐ.நா.வின் இணைப் பொதுச் செயலர் Eliasson அவர்கள் விடுத்தார்.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...