உலகின் இரண்டாவது நீளமான நதி
(Amazon River)
தென் அமெரிக்காவில் பாயும் அமேசான் நதி உலகின் இரண்டாவது நீளமான நதியாகும். ஆப்ரிக்காவில் பாயும் நைல் நதி, உலகின் முதல் நீளமான நதியாகும். ஆயினும், அமேசான் நதி கொணரும் நீரின் அளவு, மிசிசிப்பி, யாங்சே போன்ற உலகின் அடுத்த இடத்திலுள்ள நீளமான ஏழு நதிகள் கொணரும் (Madeira, Rio Negro தவிர) மொத்த நீரின் அளவைவிட அதிகம். மேலும், அமேசான் நதி, உலகிலேயே
பரப்பளவில் பெரிய ஆற்றுப்படுகையை கொண்ட நதியுமாகும். இந்த
ஆற்றுப்படுகையின் பரப்பளவு ஏறக்குறைய 70 இலட்சத்து 50 ஆயிரம் சதுர கிலோ
மீட்டராகும். இந்த அளவு, உலகின் மொத்த ஆற்றுப்படுகையின் அளவில் ஐந்தில் ஒரு பகுதியாகும். உண்மையில், அமேசான் நதி பிரேசில் நாட்டில் நுழையும்போது உலகின் பெரிய நதியாக மாறுகிறது, இதன்
நீரில் ஐந்தில் ஒரு பகுதியே கடைசியில் அட்லாண்டிக் பெருங்கடலில்
கலக்கிறது. அந்த இடம் ஏறக்குறைய 240 கிலோ மீட்டர் அகலத்தைக்
கொண்டிருப்பதால் இவ்விடம் அமேசான் கடல் என்றே அழைக்கப்படுகின்றது.
இந்நதியின் பெரும்பாலான ஆற்றுப்படுகைப் பகுதி பிரேசில் நாட்டில்
அமைந்துள்ளது. அமேசான் நதி, 1,100க்கும் அதிகமான கிளை ஆறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1,500
கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை. தென் அமெரிக்காவின் பெரு
நாட்டின் ஆன்டஸ் மலைகளின் வில்லாஃப்ரோ ஏரியில் உற்பத்தியாகும் அமேசான் நதி, அக்கண்டத்தின் ஏறக்குறைய 40 விழுக்காட்டுப் பகுதியில் பாய்கிறது. பெரு, கயானா, ஈக்குவதோர், வெனெசுவேலா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளில் பாய்கின்றது. அமேசான் நதியின் நீளம் ஏறக்குறைய 6,400 கிலோ மீட்டராகும். மழைக்காலத்தில் இந்நதியின் அகலம் 48 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். பிரேசில் நாட்டின் Manausக்கு
அருகில் 2010ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி ரியோ நீக்ரோ ஆற்றில்
திறக்கப்பட்ட பாலமே அமேசான் நதியில் கட்டப்பட்டுள்ள முதல் பாலமாகும்.
இந்நதியில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மீன் வகைகள் வாழ்கின்றன. தொடர்ந்து
புதிய மீனினங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் வருகின்றன. மாமிசம் உண்ணும் piranha எனும் கொடிய மீனினம் இந்நதியில் உள்ளது. 1,500ம் ஆண்டில் அமேசான் நதியில் பயணம் செய்த Vicente Yanez Pinzon என்பவர் இந்நதியில் பயணம் செய்த முதல் ஐரோப்பியர் ஆவார். இந்நதியில் 1,542ம் ஆண்டில் பயணம் செய்த Francisco de Orellana என்பவர், இந்நதியில் நீண்ட தூரம் பயணம் செய்த முதல் ஐரோப்பியர் ஆவார்.
No comments:
Post a Comment