தேக்கோ கலையின் மிகப்பெரும் திருவுருவம்
பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ நகரிலுள்ள கிறிஸ்து மீட்பர் திருவுருவம், தேக்கோ கலைக்கு (Deco Art) மாபெரும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இத்திருவுருவம், உலகிலுள்ள மிகப்பெரிய உருவங்களில் 5வது இடத்திலுள்ளது. ரியோ தெ ஜனெய்ரோவின் Tijuca காட்டிலுள்ள தேசியப் பூங்காவில், 700 மீட்டர் உயரமுள்ள கொர்கொவாதோ (Corcovado) மலை உச்சியில் அந்நகரத்தை நோக்கியவண்ணம் இயேசுவின் இத்திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. 38 மீட்டர் உயரமும், 30 மீட்டர் அகலமும் உடைய இது, 8 மீட்டர் உயரமுள்ள அடிப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 1,145
டன்கள் ஆகும். இதன் கட்டுமானப் பணிகள் 1922ம் ஆண்டு தொடங்கி 1931ம் ஆண்டு
முடிவடைந்தன. 25 ஆயிரம் டாலரில் அமைக்கப்பட்ட கிறிஸ்து மீட்பர் திருவுருவம்
1931ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதியன்று திறக்கப்பட்டது. பிரேசில் பொறியாளர்
Heitor da Silva Costa என்பவரால் வடிவமைக்கப்பட்டு, பிரஞ்சு சிற்பி Paul Landowskiயினால் இது செதுக்கப்பட்டது. 1859ம் ஆண்டில் கொர்கொவாதோ மலையின் அழகை இரசித்த அருள்பணியாளர் Pedro Maria Boss என்பவர்
கிறிஸ்துவுக்கு இப்படியொரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டுமென்ற ஆவலை
இளவரசி இசபெலிடம் தெரிவித்து அதற்காக நிதி கோரியபோது இளவரசி அது குறித்து
அக்கறை காட்டவில்லை. பின்னர் 1889ம் ஆண்டில் பிரேசில் நாட்டில் அரசும், மதமும்
தனித்தனியாகப் பிரிக்கப்பட்டபோது இக்கருத்து நிராகரிக்கப்பட்டது. பின்னர்
பிரேசில் சுதந்திரம் பெற்றதன் நூறாம் ஆண்டையொட்டி 1922ம் ஆண்டில் இரண்டாம்
முறையாக இம்மலையின்மீது ஒரு நினைவுச்சின்னத்தை எழுப்பவேண்டும் என்னும்
கோரிக்கை ரியோ நகர கத்தோலிக்கரிடமிருந்து எழுந்தது. பிரேசில்
கத்தோலிக்கர்கள் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி இத்திருவுருவத்தை எழுப்ப நிதி
திரட்டினர். இந்தக் கிறிஸ்து மீட்பர் திருவுருவம், அமைதியின் அடையாளமாக விரித்த கரங்களோடு இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : விக்கிப்பீடியா
No comments:
Post a Comment