Tuesday, 30 July 2013

Catholic News in Tamil - 25/07/13


1. கத்தோலிக்க இளையோர் உலகத்தின் தலைநகரமாக ரியோ தெ ஜனெய்ரோ இந்நாட்களில் விளங்குகிறது - கர்தினால் Stanislaw Rylko

2. கோவில் ஒன்றைக் களங்கப்படுத்திய குற்றவாளிகளை மன்னித்த இலங்கையின் கர்தினால் மால்கம் இரஞ்சித்

3. ஒடிஸ்ஸா மாநிலத்தின் ஐந்து மறைமாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ தலைவர்களுக்கு கருத்தரங்கு

4. LRAன் வன்முறைகளை அடக்க ஆப்ரிக்க நாடுகள் தங்கள் இராணுவத்தை நம்பி இருப்பது நிரந்தரத் தீர்வு அல்ல - ஆயர் Hiiboro Kussala

5. சீனாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, துயர் துடைப்புப் பணியில் கத்தோலிக்கர்கள் தீவிரம்

6. 6200க்கும் அதிகமான மைல்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு

7. போபால் நகர் நச்சுவாயு கசிவு வழக்கின் முதன்மை குற்றவாளியான Dow Chemical நீதி மன்றத்திற்கு வரும்படி போபால் நீதி மன்றம் 'சம்மன்'

8. சிரியாவின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 24 இலட்சம் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் குழந்தைகள் - UNICEFன் இணை இயக்குனர்

------------------------------------------------------------------------------------------------------

1. கத்தோலிக்க இளையோர் உலகத்தின் தலைநகரமாக ரியோ தெ ஜனெய்ரோ இந்நாட்களில் விளங்குகிறது - கர்தினால் Stanislaw Rylko

ஜூலை,25,2013. கத்தோலிக்க இளையோர் உலகத்தின் தலைநகரமாக ரியோ தெ ஜனெய்ரோ இந்நாட்களில் விளங்குகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூலை 23ம் தேதி இச்செவ்வாயன்று 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் துவக்கத் திருப்பலியின் ஆரம்பத்தில், திருப்பீடத்தின் பொதுநிலையினர் பணி அவையின் தலைவரான கர்தினால் Stanislaw Rylko அவர்கள், இளையோரை வரவேற்று பேசியபோது இவ்வாறு கூறினார்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு, உலக இளையோர் நாள் நிகழ்வுகள் மீண்டும் இலத்தீன் அமெரிக்காவில் இடம்பெறுகின்றன என்பதை நினைவுகூர்ந்த கர்தினால் Rylko அவர்கள், 1987ம் ஆண்டு Buenos Aires நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளின்போது, "நீங்களே திருத்தந்தையின் நம்பிக்கை" என்று முத்திபேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், இளையோரிடம் கூறிய வார்த்தைகளை மீண்டும் எடுத்துரைத்தார்.
கரங்களை விரித்து இவ்வுலகை அணைக்கும் வண்ணம் நின்றிக்கும் மீட்பர் கிறிஸ்துவே இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் நாயகன் என்று கூறிய கர்தினால் Rylko அவர்கள், கிறிஸ்துவைத் தேர்ந்தெடுப்போர் எதையும் இழப்பதில்லை என்ற உறுதியை அளித்தார்.
உலகின் உப்பாகவும், ஒளியாகவும் திகழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுவதுபோல், நமது சுகமானச் சூழல்களை விடுத்து, உலகின் எல்லைகளுக்குக் கிறிஸ்துவைச் சுமந்து செல்வோம் என்ற அழைப்பை விடுத்தார் கர்தினால் Rylko.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit

2. கோவில் ஒன்றைக் களங்கப்படுத்திய குற்றவாளிகளை மன்னித்த இலங்கையின் கர்தினால் மால்கம் இரஞ்சித்

ஜூலை,25,2013. இலங்கையில் கத்தோலிக்கக் கோவில் ஒன்றைத் தாக்கி, களங்கப்படுத்திய குற்றவாளிகள் மீது குற்றப்பழி சுமத்தாமல், அவர்களை மன்னிப்பதாக இலங்கையின் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறினார்.
ஜூன் மாதம் 5ம் தேதி இலங்கையின் தெற்குப் பகுதியில், Angulana என்ற ஊரில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சேவியர் கத்தோலிக்க ஆலயத்தைத் தாக்கி, அங்குள்ள திரு நற்கருணைப் பேழையை எரிக்க முயன்ற மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இக்குற்றவாளிகளை தான் முற்றிலும் மன்னிப்பதாக கர்தினால்  இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளது, இலங்கை வாழ் மக்களிடையே, குறிப்பாக, அமைதியை விரும்பும் புத்த  மதத் தலைவர்களிடையே மகிழ்வைத் தந்துள்ளது என்று கொழும்பு உயர்மறை மாவட்டப் பிரதிநிதி அருள் பணியாளர் Cyril Gamin Fernando அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்தியிடம் கூறியுள்ளார்.
திரு நற்கருணைப் பேழையை எரிக்க முயன்ற இக்குற்றவாளிகளின் முயற்சிகள் பயனற்றுப் போயின என்றும், இந்த அவமரியாதை நிகழ்வுக்குப் பின்னர், அக்கோவிலில் குற்றங்களுக்குக் கழுவாய் தேடும் வழிபாடு ஒன்று நிகழ்ந்தது என்றும் CNA செய்திக் குறிப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : CNA/EWTN

3. ஒடிஸ்ஸா மாநிலத்தின் ஐந்து மறைமாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ தலைவர்களுக்கு கருத்தரங்கு

ஜூலை,25,2013. இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், தங்கள் நம்பிக்கையால், அச்சமுதாயத்தில் நீதியையும், அமைதியையும் உருவாக்கும் புளிப்பு மாவாக இருக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் கூறினார்.
ஒடிஸ்ஸா மாநிலத்தில் நீதி நிறைந்த சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன், அம்மாநிலத்தின் ஐந்து மறைமாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ தலைவர்களுக்கு இந்திய  ஆயர் பேரவையின் நீதி, அமைதி, முன்னேற்றப் பணிக்குழு கருத்தரங்கு ஒன்றை அண்மையில் நடத்தியது.
இக்கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றிய பேராயர் பார்வா அவர்கள், புதியதோர் சமுதாயத்தை உருவாக்க கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய விவிலிய விழுமியங்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, முன்னேற்றப் பணிக்குழுவின் செயலர் அருள் பணியாளர் சார்ல்ஸ் இருதயம், இந்திய இயேசு சபை நீதிப் பணிக்குழுவின் செயலர் அருள் பணியாளர் ஸ்டனிஸ்லாஸ் ஜெபமாலை ஆகியோர் உட்பட பலர் இந்தக் கருத்தரங்கை வழி நடத்தினர் என்று இந்திய ஆயர் பேரவை செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CBCI

4. LRAன் வன்முறைகளை அடக்க ஆப்ரிக்க நாடுகள் தங்கள் இராணுவத்தை நம்பி இருப்பது நிரந்தரத் தீர்வு அல்ல - ஆயர் Hiiboro Kussala

ஜூலை,25,2013. இறைவன் போராட்டப் படையின் கொரில்லாக்கள் என்ற பொருள்படும் LRA என்ற அமைப்பின் தலைவரான ஜோசப் கோனியையும், (Joseph Kony) அவரது வன்முறைகளையும் களைய உலகச் சமுதாயம் இன்னும் அதிக முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று தெற்கு சூடான் நாட்டின் ஆயர் ஒருவர் கூறினார்.
தெற்கு சூடான் நாட்டின் தம்புர-யாம்பியோ (Tambura-Yambio) என்ற மறைமாவட்டத்தின் ஆயர் Edward Hiiboro Kussala அவர்கள், Aid to the Church in Need எனப்படும் பிறரன்பு அமைப்பிற்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
1987ம் ஆண்டு உருவாக்கப்பட்ட LRA என்ற வன்முறை அமைப்பு, ஆப்ரிக்காவின் உகாண்டா, தெற்கு சூடான், காங்கோ ஆகிய நாடுகளில் சிறுவர் சிறுமியரை கடத்திச் சென்று அடிமைகளாக நடத்துவதும், மக்களின் இல்லங்களுக்குத் தீவைத்து அழிப்பதும் என்று தங்கள் வன்முறையை பரப்பி வருகின்றனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
LRA வன்முறைக் குழுவால் அச்சத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகிறது என்று கூறிய ஆயர் Hiiboro அவர்கள், ஜோசெப் கோனியின் வன்முறைகளை அடக்க ஆப்ரிக்க நாடுகள் பல தங்கள் இராணுவத்தை நம்பி இருப்பது நிரந்தரத் தீர்வு அல்ல என்று கூறினார்.
நீதி நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதும், உலக நாடுகளின் தலையீடும் இந்தக் குற்றக் குழுவின் செயல்பாடுகளை நிறுத்தும் வழி என்பதையும் ஆயர் Hiiboro தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : Fides

5. சீனாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, துயர் துடைப்புப் பணியில் கத்தோலிக்கர்கள் தீவிரம்

ஜூலை,25,2013. ஜூலை 22, இத்திங்களன்று காலை 7.45 மணியளவில் சீனாவின் Gan Su பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, அப்பகுதியில் கத்தோலிக்கர்கள் துயர் துடைப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து, 400க்கும் அதிகமான நில அதிர்வுகள் நிகழ்ந்தன என்றும், மாலை 6 மணிக்குள் Lan Zhou மறைமாவட்டமும், Jinde என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பும், பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான பொருட்களை கொண்டு சென்றுள்ளன என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நில நடுக்கத்தைத் தொடர்ந்து, Xiao Gou Tou என்ற பங்குக் கோவிலின் இளையோர், நகரின் நடுப்பகுதியில், எவ்விதத் தூண்டுதலும் இன்றி, ஒன்றாகக் கூடிவந்து செபிக்கத் துவங்கினர் என்றும், இதைக் கண்ட வேறு மதத்தவரும் இந்த செப முயற்சியில் பங்கேற்றனர் என்றும் Fides செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
இதுவரை கிடைத்தத் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தில் 95 பேர் இறந்துள்ளனர், 1000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர் என்றும், 5,82,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஆதாரம் : Fides

6. 6200க்கும் அதிகமான மைல்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு

ஜூலை,25,2013. உலகின் பல நாடுகளிலும் 6200க்கும் அதிகமான மைல்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் ஒருவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்ற வாரம் வத்திக்கானில் சந்தித்தார் என்பதை அந்த இளைஞர் தற்போது ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த Leandro Martins என்ற இளைஞர், Amsterdam நகரில் துவங்கிய தன் சைக்கிள் பயணத்தை, ஆசியாவில் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இப்பயணத்தின் ஒரு பகுதியாக இவர் வத்திக்கான் வந்திருந்தபோது, திருத்தந்தையைச் சந்திக்க முயற்சிகள் மேற்கொண்டதாகவும், தான் ஒரு கத்தோலிக்கர் இல்லை என்றாலும், எளிமையின் உருவமாக விளங்கும் திருத்தந்தையைச் சந்திக்க தன் ஆவலை வெளியிட்டு 15 முறை மின்னஞ்சல்களை அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
இவரது தொடர்ந்து முயற்சிகளின் பலனாக, ஜூலை 18, கடந்த வியாழனன்று திருத்தந்தை இவரைச் சந்தித்ததாகவும், இவர் சுமந்து செல்லும் பிரேசில் நாட்டின் கொடியில் 'இறைவன் உங்களுடன் பயணத்தில் இணைவராக' என்ற சொற்களுடன் திருத்தந்தை தன் கையொப்பம் இட்டதாகவும் Matins ஊடங்களுக்குக் கூறினார்.
அருள் பணியாளர்கள் தங்களிடம் உள்ள விலையுயர்ந்த கார்களை விற்றுவிட்டு, மலிவான கார்களில் பயணம் செய்யவும், முடிந்தால் சைக்கிள்களில் பயணம் செய்யவும் திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பு இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : The Huffington Post

7. போபால் நகர் நச்சுவாயு கசிவு வழக்கின் முதன்மை குற்றவாளியான Dow Chemical நீதி மன்றத்திற்கு வரும்படி போபால் நீதி மன்றம் 'சம்மன்'

ஜூலை,25,2013. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் போபால் நகரில் இடம்பெற்ற நச்சுவாயு கசிவு வழக்கின் முதன்மை குற்றவாளியான Dow Chemical என்ற நிறுவனத்தை நீதி மன்றத்திற்கு வரும்படி போபால் நீதி மன்றம் 'சம்மன்' ஒன்றை இச்செவ்வாயன்று அனுப்பியுள்ளது.
1984ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தினால், இதுவரை 25,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும், 5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்குக் காரணமான Union Carbide என்ற நிறுவனத்தை 2001ம் ஆண்டு Dow Chemical என்ற நிறுவனம் வாங்கியது. இந்த விபத்துக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று Dow Chemical நிறுவனம் இதுவரைச் சொல்லிவருகிறது.
இத்தனை ஆண்டுகள் இந்த விபத்தைக் குறித்து மக்கள் தொடர்ந்து வந்த பல வழக்குகள் தோல்வியுற்ற நிலையில், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் போபால் தகவல் மற்றும் செயல்பாடுகள் (The Bhopal Group of Information and Action) என்ற பெயரைத் தாங்கியுள்ள ஒரு சமூக நீதி அமைப்பு தொடுத்துள்ள வழக்கின் எதிரொலியாக, போபால் நீதி மன்றம் இச்சம்மனை அனுப்பியுள்ளது என்று UCAN செய்தி கூறியது.
நீதி மன்றத்தின் இந்த சம்மனுக்கு ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN

8. சிரியாவின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 24 இலட்சம் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் குழந்தைகள் - UNICEFன் இணை இயக்குனர்

ஜூலை,25,2013. சிரியா நாட்டின் Aleppo நகரில் நிலவும் சூழல் மனிதாபிமானத்தைக் கேள்விக்குரியதாக்கும் நிலை என்று ஐ.நா.வின் குழந்தைகள் அவசர நிதியுதவி அமைப்பான UNICEFன் இணை இயக்குனர் Yoka Brandt அவர்கள் கூறினார்.
கடந்த வாரம் இரு நாட்கள் Damascus சென்று திரும்பியுள்ள UNICEF மற்றும் செஞ்சிலுவை அமைப்பின் பிரதி நிதிகள் குழுவில் பங்கேற்ற Brandt அவர்கள், அங்கு குழந்தைகளின் நிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.
குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், உணவுப் பொருட்கள், ஆகியவற்றை 30,000க்கும் அதிகமானவர்களுக்கு வழங்கி திரும்பியுள்ள இக்குழுவினரின் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய இணை இயக்குனர் Brandt அவர்கள், சிரியாவின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 24 இலட்சம் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் குழந்தைகள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
உணவு, நீர், உறைவிடம் என்ற அனைத்துத் தேவைகளிலும் மிகக் கொடுமையானச் சூழலைச் சந்திக்கும் இக்குழந்தைகளுக்கு இன்னும் பெருமளவில் உதவிகள் தேவை என்றும், குறிப்பாக, அவர்களின் உடல் நலன், கல்வி ஆகிய தேவைகள் மிகப் பெரியன என்றும் சுட்டிக்காட்டினார் UNICEFன் இணை இயக்குனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / UN

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...