அணு மின் உற்பத்தி
அணு உடைப்பு அல்லது தொடர் அணுப்பிளப்பு என்பதே, அணு சக்தி மூலமான மின்சார உற்பத்திக்கு அடிப்படை.
எந்த ஒரு யுரேனியக் கட்டியிலும் யுரேனியம்-235 என்ற வகை அணுக்கள் உள்ளன. அவைதான் தொடர்ந்து பிளவுபடக்கூடியவை.
எந்த அணுவிலும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்
என மூன்று வகைத் துகள்கள் இருக்கின்றன. யுரேனியம்-235 அணு ஒன்றை ஒரு
நியூட்ரான் தாக்கினால் அந்த அணு உடைந்து போய்விடும். அப்போது ஒவ்வோர்
அணுவிலிருந்தும் இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் தோன்றுகின்றன. அந்த
ஒவ்வொன்றும் மேலும் யுரேனியம்-235 அணுக்களைத் தாக்க வல்லவை. அப்போது மேலும்
நியூட்ரான்கள் தோன்றும். இப்படியே போய்க்கொண்டிருந்தால் நொடியில் எண்ணற்ற
யுரேனியம்-235 அணுக்கள் பிளவு படும். தொடர் அணுப்பிளப்பு ஆரம்பித்த உடனேயே
வெப்பம் வெளிப்பட ஆரம்பிக்கும். இதை அப்படியே விட்டால் வெப்பம் தாங்க
முடியாத அளவுக்கு உயர்ந்து விடும். ஆகவே அந்த வெப்பத்தை வாங்கிக்
கொள்வதற்காகத்தான் எரிபொருள் தண்டுகளைச் சுற்றிலும் தண்ணீர்
வைக்கப்படுகிறது.
அணுக்கள்
தொடர்ந்து பிளவுபடும்போது வெப்ப வடிவில் ஆற்றல் வெளிப்படும். இந்த வெப்பம்
தண்ணீரை ஆவியாக்கி நீராவியை உண்டாக்கும். இந்த நீராவி டர்பைன்களை
இயக்கும். அதன் பலனாக ஜெனரேட்டர்கள் இயங்கும். ஜெனரேட்டர்கள் இயங்கும் போது
மின்சாரம் உற்பத்தி ஆகும்.
இயற்கையில்
கிடைக்கும் யுரேனியத்தில் யுரேனியம்-235 அணுக்கள் 0.71 விழுக்காடே
இருக்கும். அத்துடன் ஒப்பிட்டால் இயற்கை யுரேனியத்தில் 99.27 விழுக்காடு
அளவுக்கு யுரேனியம்-238 என்ற வேறு வகை அணுக்களும் இருக்கும். ஆனால்
யுரேனியம்-238 அணு ஒன்றை நியூட்ரான் தாக்கினால் அந்த அணு உடையாது. அது
அந்த நியூட்ரானை விழுங்கி விடும். அப்படி விழுங்கிய பின்னர் அது
புளூட்டோனியம்-239 என்ற அணுவாக மாறிவிடும். அது நல்லது தான். ஏனெனில்
புளூட்டோனியம் அணுவானது யுரேனியம்- 235 அணு போலவே நியூட்ரான்களால்
பிளவுபடத்தக்கது.
ஆகவே
அணு உலை ஒன்றில் தொடர்ந்து அணுப்பிளப்பு ஏற்படும் போது யுரேனியம்-235
அணுக்களும் உடையும். புதிதாகத் தோன்றும் புளூட்டோனியம்-239 அணுக்களும்
உடையும். அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் சுமார்
மூன்றில் ஒரு பங்கு புளூட்டோனியம்-239 பிளவு மூலம் கிடைக்கிறது.
ஆதாரம் : அறிவியல்புரம்
(இக்கட்டுரைக் குறித்த முழு விவரங்களையும் படிக்க www.vaticanradio.org என்ற எம் வலைத்தளத்தைத் திறக்கவும்)
No comments:
Post a Comment