Tuesday, 30 July 2013

Catholic News in Tamil - 26/07/13


1. சம்பல்பூர் மறைமாவட்டத்துக்குப் புதிய ஆயர்

2. Rourkela மறைமாவட்டத்துக்குப் புதிய ஆயர்

3. Diphu மறைமாவட்டம் புதிய ஆயரைப் பெறுகிறது

4. நேபாள சமூக அமைப்பு உட்பட ஐவருக்கு Ramon Magsaysay விருது

5. அகதிப் படகுகள் பற்றிய ஆஸ்திரேலிய கொள்கை குறித்து ஐநா கவலை

6. இலங்கையில் போர் காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய விசேட ஆணைக்குழு

------------------------------------------------------------------------------------------------------

1. சம்பல்பூர் மறைமாவட்டத்துக்குப் புதிய ஆயர்

ஜூலை,26,2013. இந்தியாவின் Sambalpur, Rourkela,மற்றும் Diphu மறைமாவட்டங்களுக்கு புதிய ஆயர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Sambalpur மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த இறைவார்த்தை சபை ஆயர் Lukas Kerketta அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், அம்மறைமாவட்டத்தின் புதிய ஆயராக Cuttack-Bhubaneswar உயர் மறைமாவட்ட குரு நிரஞ்சன் சுவால் சிங்கை நியமித்துள்ளார்.
ஒரிசாவின் கொட்டமா எனுமிடத்தில் 1961ம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் நிரஞ்சன், உரோம் நகர் உர்பான் பாப்பிறைப் பல்ககலைக்கழகத்தில் இறையியல் பயின்றபின், 1991ம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
உரோம் நகரில் பயின்று, 2005ல் முனைவர் பட்டம் பெற்ற இவர், இதுநாள் வரை கட்டாக்-புபனேஸ்வர் உயர் மறைமாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகளிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதில் ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றி வந்துள்ளார். குரு நிரஞ்சன் சுவால் சிங்கை Sambalpur மறைமாவட்டத்தின் ஆயராக இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. Rourkela மறைமாவட்டத்துக்குப் புதிய ஆயர்

ஜூலை,26,2013. மேலும், இந்தியாவின் Rourkela மறைமாவட்டத்தின் ஆயராக அருட்திரு Kishore Kumar Kujurஐ இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Sambalpur மறைமாவட்ட குருவான இவர், 1964ம் ஆண்டு ஒரிசாவின் Gaibira எனுமிடத்தில் பிறந்து 1993ம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
Rourkela மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த இறைவார்த்தை சபை ஆயர் John Barwa 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டாக்-புபனேஸ்வர் உயர்மறைமாவட்ட பேராயராக நியமிக்கப்பட்டதிலிருந்து Rourkela மறைமாவட்டம் ஆயரின்றி இருந்து வந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. Diphu மறைமாவட்டம் புதிய ஆயரைப் பெறுகிறது

ஜூலை,26,2013. மேலும், இந்தியாவின் Diphu மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்திரு Paul Mattekattஐ இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Diphu மறைமாவட்ட குருவான இவர், 1961ம் ஆண்டு கேரளாவில் பிறந்து 1988ம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
குருவான‌பின் உரோமை உர்பான் பாப்பிறை ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் இறையியல் சட்டத்தில் உயர் க‌ல்வி பயின்றுள்ளார் புதிய‌ ஆய‌ர் Mattekatt.
Diphu மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் John Moolachira, 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Guwahati உயர்மறைமாவட்டத்தின் வாரிசுரிமைப் பேராயராக மாற்றப்பட்டத்திலிருந்து, இம்மறைமாவட்டம் ஆயரின்றி இருந்து வந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. நேபாள சமூக அமைப்பு உட்பட ஐவருக்கு Ramon Magsaysay விருது

ஜூலை,26,2013. மக்கள் வியாபாரப்பொருட்களாக கடத்தப்படுவதை எதிர்த்துப்போராடும் நேபாளத்தின் Shakti Samuha என்ற அமைப்பு உட்பட ஐவருக்கு இவ்வாண்டின் Ramon Magsaysay விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலில் அடிமைகளாக நடத்தப்பட்டிருந்த 15 பெண்களால் 2000மாம் ஆண்டு நேபாளத்தில் துவக்கப்பட்ட Shakti Samuha அமைப்பு, தற்போது பாலியல் தொழிலாளர்களைக் காப்பாற்ற உழைத்து வருகின்றது.
இந்த அமைப்பின் சமூகச்சேவைகளைப் பாராட்டி இவ்வாண்டின் Ramon Magsaysay விருதை வழங்குவதாக உரைத்துள்ள Magsaysay நிறுவனம், சமூக மேம்பாட்டிற்காகப் பணியாற்றி வரும் ஆப்கானிஸ்தானின் ஒரே பெண் ஆளுனர் Habiba Sarabi, மியான்மாரைச் சேர்ந்த  கைம்பெண் Lahpai Seng Raw, பிலிப்பீன்சின் ம‌ருத்துவ‌ர் Ernesto Domingo ஆகியோருக்கும் இந்தோனேசியாவின் இலஞ்ச ஒழிப்பு அமைப்பான Komisi Pemberantasan Korupsi என்பதற்கும் இவ்விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews

5. அகதிப் படகுகள் பற்றிய ஆஸ்திரேலிய கொள்கை குறித்து ஐநா கவலை

ஜூலை,26,2013. ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடுவோர் தொடர்பான புதிய கொள்கை, தஞ்சம் கோருவோருக்கு அளிக்கப்பட வேண்டிய போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்திருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
புதியக் கொள்கையின்படி, ஆஸ்திரேலியா நோக்கி படகில் தஞ்சம்கோரி வருவோர் பாப்புவா நியுகினிக்கு அனுப்பப்பட்டு, அங்கேயே அவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, அகதிகளாக அங்கீகரிக்கப்படுவோர், அங்கேயே மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
ஆனால், தஞ்சக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் விடயத்தில் பாப்புவா நியுகினியின் சட்டதிட்டங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக UNHCR என்ற ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு கூறுகிறது.
பாப்புவா நியுகினியில் இருக்கின்ற அகதிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதிருப்பது குறித்து UNHCR வருத்தம் அடைந்துள்ளதாகவும் கூறுகிறது.
2013 ஆண்டின் ஜூலை 16ந்தேதி வரை 218 படகுகளில் 15,182 பேர் புகலிடம் தேடி ஆஸ்திரேலியா நோக்கி படகுகளில் வந்துள்ளனர்.

ஆதாரம் : TamilWin

6. இலங்கையில் போர் காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய விசேட ஆணைக்குழு

ஜூலை,26,2013. 30 வருட போர் காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசுத்தலைவர் மகிந்த இராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக அரசுத்தலைவரின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் பதவிக்காலம், அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பன குறித்து தீர்மானம் எடுக்கப்படும் வகையில் அரசுத்தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு அரசுத்தலைவரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க கூறினார்.
போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட 2002ம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி வரை வடக்கு, கிழக்கு உட்பட, நாட்டில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அரசுத்தலைவரின் உத்தரவின் பேரில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுநியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...