Tuesday 9 July 2013

லாம்பெதூசா தீவு

லாம்பெதூசா தீவு

Pelagie தீவுகள், அதாவது "திறந்த கடல்" தீவுகள் எனப்படும் Lampedusa, Linosa, Lampione ஆகிய மூன்று சிறிய தீவுகள், மத்தியதரைக் கடலில் மால்ட்டா நாட்டுக்கும் ஆப்ரிக்காவின் டுனிசியா நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில், இத்தாலியின் சிசிலித் தீவுக்குத் தெற்கே அமைந்துள்ளன. புவியியல் அமைப்பின்படி இத்தீவுகள் ஆப்ரிக்கக் கண்டத்தைச் சார்ந்ததாக இருந்தாலும், அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பின்படி இவை இத்தாலிக்குச் சொந்தமானவை. இத்தீவுகளில் லாம்பெதூசா தீவு சிசிலியிலிருந்து 176 கிலோ மீட்டரில் அமைந்திருந்தாலும் இது டுனிசியாவிலிருந்து 113 கிலோ மீட்டரில் இருப்பதால் ஆப்ரிக்காவிலிருந்து குடியேற்றதாரர்கள் கடல் வழியாக எளிதாக இத்தீவுக்கு வந்து விடுகின்றனர். 2011ம் ஆண்டில் அரபு வசந்தம் எழுச்சி இடம்பெற்றபோது, வட ஆப்ரிக்காவின் டுனிசியா மற்றும் லிபியாவிலிருந்து அவ்வாண்டு மே மாதத்தில் மட்டும் 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியேற்றதாரர்கள் வந்தனர். அவ்வாண்டின் ஆகஸ்ட் கடைசியில் 48 ஆயிரம் பேர் வந்திருந்தனர். மேலும், 2000மாம் ஆண்டுகளில் குடியேற்றதாரர்கள் ஐரோப்பிய நாடுகளில் நுழைவதற்கு இத்தீவு நுழைவாயிலாகப் பயன்பட்டது. குறைவான மரங்களைக் கொண்டுள்ள 9 கிலோ மீட்டர் நீளமுள்ள லாம்பெதூசா தீவுக்குச் சுற்றுலாதான் முக்கிய வருமானம். 1996ம் ஆண்டுமுதல் இத்தீவின் குறிப்பிடத்தக்க ஒரு பகுதி இயற்கைப் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது. 20.2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட லாம்பெதூசா தீவில் ஏறக்குறைய 5,000 மக்களே வாழ்கின்றனர். அவர்களுடன் ஏறக்குறைய 500 குடியேற்றதாரரும் வாழ்கின்றனர். மீன்பிடித்தல், வேளாண்மை, சுற்றுலா ஆகியவையே இத்தீவுக்கு முக்கிய வருமானங்களாகும். இத்தீவின் தெற்கில் அமைந்துள்ள Rabbit கடற்கரை, உலகின் சிறந்த கடற்கரை என 2013ம் ஆண்டில் ஒரு சுற்றுலா நிறுவனம் அறிவித்தது. ஆண்டுதோறும் இத்தீவுக்குச் செல்லும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை வைத்து இவ்வாறு அந்நிறுவனம் அறிவித்தது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...