Tuesday, 30 July 2013

Catholic News in Tamil - 29/07/13


1. கர்தினால் தொனினியின் மரணத்தையொட்டி திருத்தந்தையின் அனுதாபங்கள்

2. திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

3. வ‌ள‌ர்ச்சித் திட்ட‌ங்க‌ளில் ப‌ணிபுரிய‌ இந்திய‌ காரித்தாஸ் அமைப்பின் சுயவிருப்பப் பணியாளர் குழு

4. வடகொரிய மனித உரிமை மீறல்களைத் தடுக்க ஒன்றிணையுமாறு கிறிஸ்தவ அமைப்பு
அழைப்பு

5. குஜராத்தின் நகர்களில் ஆண்குழந்தைகளைவிட பெண்குழந்தைகளின் மரணம் அதிகம்

6. தூக்கத்தை கெடுக்கும் முழுநிலவு: சுவிஸ் விஞ்ஞானிகள் தகவல்

------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால் தொனினியின் மரணத்தையொட்டி திருத்தந்தையின் அனுதாபங்கள்

ஜூலை,29,2013. இத்தாலியின் Ravenna-Cerviaவின் முன்னாள் பேராய‌ர் க‌ர்தினால் Ersilio Tonini இஞ்ஞாயிறன்று தனது 99வது வயதில் இறையடி சேர்ந்ததைத் தொடர்ந்து, ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல்தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Ravenna-Cervia  உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Lorenzo Ghizzoniக்கு திருத்த‌ந்தை அனுப்பியுள்ள‌ இந்த‌ இர‌ங்க‌ல் த‌ந்தி, அந்த‌ உயர்ம‌றைமாவ‌ட்ட‌ விசுவாசிக‌ளுட‌னும், அவ‌ர் பிற‌ந்த‌ Piacentinoபகுதி மற்றும் ஆயராக இருந்த Macerata-Tolentino மறைமாவட்ட விசுவாசிகளோடும் ஆன்மீக ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதாகவும் கூறுகிறது.
கர்தினால் Toniniயின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிப்பதாகவும் உறுதி கூறியுள்ள திருத்தந்தை, கர்தினாலின் இறுதி காலத்தில் உதவிய மக்களுக்கு தன் தனிப்பட்ட நன்றியையும் தெரிவித்துள்ளார்.
கர்தினால் Toniniயின் மரணத்தையொட்டி திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயும் தன் இரங்கல்தந்தியை அனுப்பியுள்ளார். 1914ம் ஆண்டு ஜூலை மாத‌ம் 20ம்தேதி இத்தாலி நாட்டின் San Giorgio Piacentino பகுதியின் Centovera எனுமிட‌த்தில் பிற‌ந்த‌ க‌ர்தினால் Tonini, 1937ம் ஆண்டு குருவாக‌வும், 1969ல் ஆய‌ராக‌வும் அருள்பொழிவுச் செய்ய‌ப்ப‌ட்டார். 1994ல் த‌ன‌து 80ம் வ‌ய‌தில் இவர் க‌ர்தினாலாக‌ உய‌ர்த்த‌ப்ப‌ட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி   

2. திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

ஜூலை,29,2013. 'நான் திரும்பி வந்துள்ளேன், இப்பயணத்தினால் ஏற்பட்ட களைப்பைவிட, இப்பயணம் தந்த மகிழ்வு அதிகமாக உள்ளது என உறுதி கூறுகிறேன்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரேசில் நாட்டில் தன் திருப்பயணத்தை முடித்துக்கொண்டு இத்திங்கள் காலை இத்தாலிய நேரம் 11.25 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 3 மணிக்கு உரோம் நகர் திரும்பியபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும், இஞ்ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 'அன்புநிறை இளையோரே! கிறிஸ்துவின் உண்மையான விளையாட்டு வீரர்களாக இருங்கள். அவரின் குழுவில் விளையாடுங்கள்' எனவும், மற்றொரு டுவிட்டர் செய்தியில், 'இயேசுவின் உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும்பொருட்டு அவரின் வாழ்வில் நமது வாழ்வை அமைக்க வேண்டும்' என்றும் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. வ‌ள‌ர்ச்சித் திட்ட‌ங்க‌ளில் ப‌ணிபுரிய‌ இந்திய‌ காரித்தாஸ் அமைப்பின் சுயவிருப்பப் பணியாளர் குழு

ஜூலை,29,2013. உத‌வி தேவைப்ப‌டும் கால‌ங்க‌ளில் சுயவிருப்ப‌ப் ப‌ணியாள‌ர்க‌ளின் சேவையைப் ப‌ய‌ன்ப‌டுத்தும் நோக்கில் குழு ஒன்றை, இந்திய‌ காரித்தாஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது
இத்தகைய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது, இதுவே முத‌ன் முறை என்றார் அந்நிறுவ‌ன‌த்தின் உய‌ர் இய‌க்குன‌ரான அருள்பணியாளர் Frederick D'Souza.
உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கின்போது 300க்கும் மேற்பட்ட சுயவிருப்பப் பணியாளர்கள் இந்திய‌க் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்போடு இணைந்து பணியாற்றியது, இத்தகைய ஒரு குழுவை உருவாக்க காரணமாக இருந்தது என்றார் அருள்பணியாளர் D'Souza.
இந்திய‌க் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில், இயற்கைப் பேரிடர்களின்போது சுயவிருப்பப் பணியாளர்கள் முன்வந்து உழைப்பது வழக்கமே எனினும், வளர்ச்சித்திட்டங்களுக்கென சுயவிருப்பப் பணியாளர்கள் குழு ஒன்றை அதிகாரப்பூர்வமாக உருவாக்கியுள்ளது தற்போதுதான் என்றார் அருள்பணியாளர் D'Souza.

ஆதாரம் : UCAN

4. வடகொரிய மனித உரிமை மீறல்களைத் தடுக்க ஒன்றிணையுமாறு கிறிஸ்தவ அமைப்பு
அழைப்பு

ஜூலை,29,2013. கொரியப் போர் முடிவுற்று 60 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வடகொரியாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக சமுதாயம் கவனம் செலுத்தவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளது CSW எனப்படும் அனைத்துலக கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு.
30 இலட்சம் மக்களைப் பலிவாங்கி, 1953ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தென் மற்றும் வடகொரிய நாடுகளுக்கு இடையே மோதல்கள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருப்பதாக CSW எனப்படும் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு தெரிவிக்கிறது.
தற்போது வடகொரியாவில், ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர், 5 அரசியல் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் இக்கிறிஸ்தவ அமைப்பு, இக்கைதிகளுள் 70 விழுக்காட்டினர் போதிய சத்துணவின்றி வாடுவதாகவும் குற்றஞ்சாட்டுகிறது.

ஆதாரம் :  ICN

5. குஜராத்தின் நகர்களில் ஆண்குழந்தைகளைவிட பெண்குழந்தைகளின் மரணம் அதிகம்

ஜூலை,29,2013. குஜராத்தின் நகர்களில் கடந்த மூன்றாண்டுகளில் ஒரு வயதிற்குட்பட்ட 12,325 பெண்குழந்தைகளும் 8,706 ஆண்குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக அம்மாநிலத்தில் பணிபுரியும் இயேசுசபையினரின் மனித உரிமைகள் மையம் தெரிவிக்கிறது.
இதே காலகட்டத்தில் குஜராத்தின் கிராமப்புறங்களில் ஒரு வயதிற்குட்பட்ட 2,739 ஆண்குழந்தைகளும் 2,246 பெண்குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புறங்களில் பெண்குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பதற்கு, மக்களின் ஆணாதிக்க மனப்பான்மையும், ஆண்குழந்தைகளையே விரும்பும் மனநிலையுமே காரணங்கள் என்றார் இயேசு சபையின் நீதி, அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான Prashant அமைப்பின் தலைவர் அருள்பணியாளர் Cedric Prakash.

ஆதாரம் :  Asia News

6. தூக்கத்தை கெடுக்கும் முழுநிலவு: சுவிஸ் விஞ்ஞானிகள் தகவல்

ஜூலை,29,2013. சுவிஸ் நாட்டைச் சார்ந்த அறிவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், நிம்மதியான தூக்கத்தை பாதிக்கும் ஆற்றல் முழுநிலவுக்கு (பௌர்ணமி) உண்டு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பஸல் பல்கலைக்கழகம் உட்பட சில ஆய்வு நிறுவனங்கள் இணைந்து, புகைத்தலோ அல்லது மதுபானம் அருந்தும் பழக்கமோ அற்ற 33 பேரின் தூக்கம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இதில் 17 பேர் 21 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள், எஞ்சிய 16 பேரும் 57 முதல் 74 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுநிலவு தோன்றியபோது இவர்கள் தமது தூக்கத்தில் இடர்களை எதிர்நோக்கியுள்ளனர், அவர்கள் தூங்கிய பகுதியை இருட்டாக்கியபோது நன்றாக தூங்கியுள்ளனர்.
உடலின் செயற்பாட்டை ஒழுங்குமுறையாக மேற்கொள்ள உதவும் மெலடோனின் எனும் ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்படுவதாலேயே தூக்கமின்மை ஏற்படுவதாக, ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : TamilWin

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...