Saturday 25 February 2023

அரசியலமைப்புச் சட்டத்தை மீற வேண்டாம் : கர்தினால் இரஞ்சித்.

 


தேசத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து வரவேண்டியது அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் நல அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களின் கடமையாகும்: கர்தினால் இரஞ்சித்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால், அனைத்துலகச் சமூகத்திடமிருந்து இலங்கை அரசு, தான் பெற்றுள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் கர்தினால் மால்கம் இரஞ்சித்.

மார்ச் 9-ஆம் தேதி நாட்டில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள வேளை, இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ள கொழும்பு பேராயர் கர்தினால் இரஞ்சித் அவர்கள், இத்தகைய நிலை நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

திவால்நிலை மற்றும் உலக வங்கி, IMF மற்றும் வெளிநாடுகளின் உதவியால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள வேளை, நாட்டை ஒரு பெரிய நெருக்கடிக்குத் தள்ள வேண்டாம் என்றும் அதிகாரிகளிடம் தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறியுள்ளார் கர்தினால் இரஞ்சித்.

உள்ளாட்சித் தேர்தல் சரியான முறையில் நடைபெறுகிறதா என்பதை கவனிக்க வேண்டியது அரசுத் தலைவரின் கடமை என்பதைத் தான் அவருக்கு நினைவூட்ட விரும்புவதாகவும், இந்த நடவடிக்கையில் அரசுத்தலைவரும், அரசு ஊழியர்களும் தங்களின் கடமையைச் செய்யத் தவறினால், அது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயலாகும் என்றும் கூறியுள்ளார் கர்தினால் இரஞ்சித்.

தேசத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து வரவேண்டியது அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் நல அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களின் கடமையாகும்," என்று மேலும் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் இரஞ்சித். (ASIAN)

Thursday 9 February 2023

மனித வர்த்தகம் மனித மாண்பை சிதைக்கிறது : திருத்தந்தை

 


அநீதி மற்றும் அக்கிரமத்தின் இலாபங்களை விரும்பும் அமைப்புகளே இலட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் வாழக் கட்டாயப்படுத்துகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நமது சமூகத்தை மாற்றியமைப்பதற்கும் மனித வர்த்தகம் என்ற கொடுஞ்செயலைத் தடுப்பதற்கும் பாதைகளைத் தேடுவதில் சோர்வடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 8, இப்புதனன்று மனித வர்த்தகத்திற்கு எதிரான 9-வது அனைத்துலக இறைவேண்டல் மற்றும் விழிப்புணர்வு தினத்திற்கான காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித கடத்தலால் பாதிக்கப்படுவர்களின் பாதுகாவலியான புனித Josephine Margaret Bakhita- வை இன்று நாம் நினைவுகூருகிறோம் என்றும், மனித வர்த்தகத்திற்கு எதிரான அனைத்துலக இறைவேண்டல் மற்றும் விழிப்புணர்வு தினத்தை 'மாண்புடன் பயணித்தல்'  என்ற கருப்பொருளில், இளைஞர்களை முக்கிய பங்களிப்பவர்களாக   ஈடுபடுத்துவதில் நான் உங்களுடன் இணைகின்றேன் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித வர்த்தகம் மனித மாண்பை சிதைக்கிறது. சுரண்டல் மற்றும் அடிபணியவைத்தல் ஆகியவை மனித சுதந்திரத்தை ஒரு எல்லைக்கு உட்படுத்துகின்றன மற்றும் மக்களைப் பயன்படுத்துவதற்கும் நிராகரிப்பதற்குமான பொருள்களாக மாற்றுகின்றன என்றும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அநீதி மற்றும் அக்கிரமத்தின் இலாபங்களை விரும்பும் அமைப்புகள் இலட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் வாழக் கட்டாயப்படுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையில், பொருளாதார நெருக்கடி, போர்கள், காலநிலை மாற்றம் மற்றும் வறுமை நிலையில் வாழும் மக்கள் எதிர்பாராதவிதமாக இத்தகைய மனித வர்த்தகத்திற்குள் தள்ளப்படுகிறார்கள் என்று விவரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முக்கியமாகப் புலம்பெயர்ந்தோர், பெண்கள் மற்றும் குழந்தைகள், உங்களைப் போன்ற கனவுகள் நிறைந்த இளைஞர்கள்,  மற்றும் மாண்புடன் வாழ விரும்புபவர்களைப் பாதிக்கும் வகையில் மனித வர்த்தகம் கவலையளிக்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறது என்று வேதனை தெரிவித்துள்ளார்.  

நாம் ஒரு கடினமான காலத்தில் வாழ்கின்றோம் என்றும், ஆனால், இப்படிப்பட்ட நிலையில்தான் நாம் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், கிறிஸ்துவிலிருந்தும் அவருடைய நற்செய்தியிலிருந்தும் வரும் ஒளியைப் பரப்புவதற்கு, நன்மையை விரும்பும் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


ஊடகங்கள் நம்மை மீட்கவேயன்றி மூழ்கடிப்பதற்கல்ல- கர்தினால் பரோலின்

 

கத்தோலிக்க ஊடகத்தின் இருப்பு, தீவிரமாக ஊக்கமளிக்கும் ஒன்று, இதன் வழியாக வரலாற்றின் ஓட்டத்திற்குள் நாம் இருப்பதை உணர முடியும் - கர்தினால் பரோலின்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கத்தோலிக்க ஊடக செய்திகள் மீட்பிற்கு நம்மை வழிநடத்துவதற்கே தவிர உலகில் மூழ்குவதற்கு அல்ல என்றும், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகளில் மிகவும் துல்லியமான அறிகுறிகள் கல்வி மற்றும் உரையாடலில் உள்ளது என்றும் கூறியுள்ளார் கர்தினால் பரோலின்.

ஜனவரி 25 புதன் கிழமை முதல் 27 சனிக்கிழமை வரை பிரான்சில் உள்ள லூர்து நகரில் நடைபெற்று வரும் 26வது புனித பிரான்சிஸ் தே சேல்ஸ் நாளை முன்னிட்டு கத்தோலிக்க ஊடகங்களின் கூட்டமைப்பு நடத்திய Jacques Hamel 2023 பரிசை வழங்க பிரான்சில் உள்ள லூர்து நகருக்கு வந்தபோது இவ்வாறு கூறியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியா என 25க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஊடகப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் கத்தோலிக்கத் தொடர்பாளர்களை ஒன்றிணைக்கும் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் கத்தோலிக்க ஊடகங்களின் கூட்டமைப்புக் கூட்டத்தில் திருப்பீடத்தின் செயல்பாட்டையும் விளக்கினார் கர்தினால் பரோலின்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்
திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்

கத்தோலிக்க ஊடகத்தின் இருப்பு, தீவிரமாக ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும், என்றும், இதனால் உண்மையிலேயே வரலாற்றின் ஓட்டத்திற்குள் கொண்டு வரப்படுவதை நாம் உணர முடியும் என்றும் கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள்,

கத்தோலிக்க ஊடக செய்திகள் மீட்பிற்கு நம்மை வழிநடத்துவதற்கே தவிர உலகில் மூழ்கடிப்பதற்கு அல்ல என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமும் நூற்றுக்கணக்கான கொடிய தாக்குதல்கள், அழிவுகரமான ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள், சிறார், வீரர்களை இழந்த குடும்பங்கள் போன்றோரைப் பற்றியும் அறிந்து கொள்ள ஊடகம்  உதவுகின்றது என்று எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகளில் மிகவும் துல்லியமான அறிகுறிகள் கல்வி மற்றும் உரையாடலில் உள்ளது என்று எடுத்துரைத்துள்ளார்.

ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியின் தூண்களை உடனடியாக உறுதிப்படுத்தாமல், எதிர்கால சந்ததியினரை போரின் கடுமையிலிருந்து காப்பாற்றுவதும் மேம்படுத்துவதும் கடினமான ஒன்று என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களையும் வலியுறுத்தி பேசியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், சர்வதேச நாடுகளுக்கு, ஏழைகள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என அனைத்து நிலையில் இருப்பவர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மற்றும் மதிப்பளித்தல் வழியாக அமைதியின் கருத்தை, நியாயமான உறவுகளின் பலனை ஆதரிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

கர்தினால் பரோலின் கூட்டத்தில் பங்கேற்றவர்களுடன்
கர்தினால் பரோலின் கூட்டத்தில் பங்கேற்றவர்களுடன்

மூன்றாம் உலகப் போர்ச்சூழல்

சமூக முன்னேற்றம் மற்றும் முழுமையான விடுதலையில் வாழ்க்கை நிலைமைகள் அடங்கியுள்ளன என்று எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், 1967ஆம் ஆண்டு முதல், உலக அமைதி நாளை ஒவ்வொரு ஜனவரி மாதம் முதல் நாளில் சிறப்பிக்க வேண்டும் என்ற திட்டம் கத்தோலிக்க திருஅவையால் மட்டும் அல்ல, உலகில் உள்ள அனைத்து உண்மையான நண்பர்களின் ஆதரவையும் பெற்று அனைவராலும் கொண்டாடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதிக்கான அயராத தேடலில் திருஅவையின் அன்றாட வேலை, மக்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே உரையாடல், சந்திப்பு மற்றும் புரிதலுக்கான இடைவெளிகளை குறைக்க முயற்சிப்பதாகும் என்றும், அரசியல், நிதி, பொருளாதாரம், ஆயுதத் தொழில் ஆகியவை இரத்தம் சிந்துவதன் வழியாகவோ அல்லது முழு மக்களையும் பட்டினியால் வாட்டுவதன் வழியாகவோ முன்னேற்றப்பட முடியாது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.

போரை அல்ல அமைதியை

மக்கள் போரை அல்ல அமைதியை, ஆயுதங்களை அல்ல உணவை, இடையூறுகளை அல்ல கவனிப்பை, பொருளாதரச் சுரண்டலை அல்ல நீதியை, போலித்தனத்தை அல்ல நேர்மையை, ஊழலை அல்ல வெளிப்படையான தன்மையை விரும்புகின்றார்கள், எதிர்பார்க்கின்ரார்கள் என்றும் கூறியுள்ளார் கர்தினால் பரோலின்

வளர்ச்சிக்கான தூய்மையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியின் எதிர்காலத்திற்கான சாத்தியக்கூறுகளை அச்சுறுத்தும் அணு ஆயுதங்கள் அல்ல அமைதியே என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முரணான வழிமுறைகளால் நிலையான அமைதியைப் பெற முடியாது எனவும், "அமைதியால் மட்டுமே அமைதி உறுதிப்படுத்தப்படுகிறது" என்று திருத்தந்தை ஆறாம் பவுல் கூறியதையும்  எடுத்துரைத்தார்.

நல்லிணக்கம், ஒத்துழைப்பு, நீதி, உரையாடல், ஒற்றுமை என்னும் 5 வழிகாட்டுதல்களை எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், ஒருவரின் சொந்த நிலையை சாதகமாக்குவதற்காக செய்திகளையும் தகவல்களையும் பொய்யாக்காத உண்மை நிலை ஊடகங்களுக்குத் தேவை என்றும் வலியுறுத்தினார்.


அமைதிக்கான போராட்டத்தில் நம்பிக்கையை இழக்காதீர் தென்சூடான் ஆயர்

 


அமைதிக்கான போராட்டத்தில் நம்பிக்கையை இழக்கவேண்டாம். நம்பிக்கையால் எல்லாவிதமான தடைகளையும் கடக்கலாம் : ஆயர் Christian Carlassare

மெரினா ராஜ் – வத்திக்கான்

அமைதிக்கான  போராட்டத்தில் நம்பிக்க்கையை இழக்கவேண்டாம் என்றும் துணிவுடன் உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்றும்  திருத்தந்தையின் தென்சூடான் பயணம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறினார் ஆயர் Christian Carlassare

பிப்ரவரி 5 ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்ற திருத்தந்தையின் 40ஆவது திருத்தூதுப் பயணத்தைக்  குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு அளித்துள்ள நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் தென்சூடானின் Rumbek மறைமாவட்டத்தின் ஆயர்  Christian Carlassare

திருத்தந்தை பிரான்சிஸ், கேன்டர்பரி பேராயர் மற்றும் ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் இணைந்து மேற்கொண்ட தென்சூடான்  திருத்தூதுப்பயணம் அமைதிக்கான பயணமாகவும் பெரும் ஆசீர்வாதத்தை அளித்த பரிசாகவும் அமைந்ததாக எடுத்துரைத்தார் ஆயர்  Carlassare

மக்களின் பிரச்சனைகளுக்கு அமைதியின் வழியில் ஒன்றிணைந்து செல்லும்போது வழிகிடைக்கின்றது என்று கூறியுள்ள இத்தாலியைச் சேர்ந்த ஆயர்  Carlassare அவர்கள், 2005-ஆம் ஆண்டு முதல் தென்சூடானில் வசித்து வருபவர். நாட்டின் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களுக்கிடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவம், இளைஞர்களுக்கான கல்வியின் அவசியம் மற்றும் அனைத்துலக ஆயுத வர்த்தகத்தின் பங்கு பற்றியும் இந்த நேர்காணலில் அவர்  எடுத்துரைத்தார்.

நிச்சயமற்ற மற்றும் விரக்தியான சூழ்நிலையின் போதும் ஒன்றிணைந்து செயல்பட்டால், அமைதி நிச்சயம் என்பதை ஊக்குவித்த திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம், மக்களுக்குப் பெரும் ஆசீரையும், அமைதிக்கான வழியில் நாம் ஒன்றித்துப் பயணிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

நாம் அனைவரும் கிறிஸ்தவர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்பதை வெளிப்படுத்தியதாகவும், மதம் பிளவுபடுத்துவதற்கல்ல ஒன்றிணைப்பதற்கே என்பதை எடுத்துரைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ஆயர் Carlassare

மோதலின் போது அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள், மற்றும் ஏழை மக்களே என்று கூறிய ஆயர், ஒவ்வொரு தலத்திரு அவையும் இல்லமாக இருந்து அவர்களுக்கு  நம்பிக்கையையும் புதிய கண்ணோட்டத்தையும் தருவதாக எடுத்துரைத்துள்ளார். மேலும் இளையோருக்கு நற்செய்தி அறிவிப்பு, கல்வி போன்றவற்றை அளித்து சமூகவாழ்வில் ஈடுபாடு கொள்ள வேண்டிய அறிவுசார் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளின் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் எடுத்துரைத்தார் ஆயர் Carlassare.   

அமைதிக்கான போராட்டத்தில் நம்பிக்கையை இழக்கவேண்டாம் என்றும்  நம்பிக்கையால் எல்லாவிதமான தடைகளையும் கடக்கலாம் என்றும், துணிவுடன் உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார் ஆயர் Carlassare


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை இரங்கல்

 

4.300 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ள இந்நிலநடுக்கங்களின் அளவு 7.9 மற்றும் 7.5 ரிக்டர் அளவாகும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வடமேற்கு சிரியா, தென்கிழக்கு துருக்கி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆன்மீக உடனிருப்பையும் ஆறுதலையும் தெரிவித்து இரங்கல் தந்திகளை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 6 திங்கள்கிழமை, அதிகாலை துருக்கிக்கும் சிரியாவுக்கும் இடையில் உள்ள Kahramanmaras என்னும் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததற்கும் காயமடைந்ததற்கும் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி இரங்கல் தந்தியினை அந்நாடுகளின் திருப்பீடத்தூதர்களுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

தென்கிழக்கு துருக்கியின் திருப்பீடத்தூதர் கர்தினால் MAREK SOLCZYŃSKI மற்றும் வடகிழக்கு சிரியாவின் திருப்பீடத்தூதர் கர்தினால் MARIO ZENARI ஆகிய இருவருக்கும் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திட்டு திருத்தந்தையின் பெயரால் அவ்விரங்கல் தந்திகள் அனுப்பப்பட்டுள்ளன.  

எல்லாம்வல்ல இறைவனின் அருள்கரத்தில் இறந்தவர்களை ஒப்படைத்து அவர்களின் ஆன்மா நிறையமைதி பெற செபிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன் ஆன்மிக உடனிருப்பை அளிப்பதாகவும் அவ்விரங்கல் தந்தியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிவாரணப்பணிகளில் ஈடுபடுவோர்க்கு இறைவனின் வல்லமை அதிகமாகக் கிடைக்கப்பெற்று விடாமுயற்சியுடன் அவர்கள் செயல்பட தொடர்ந்து செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   

4,300க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ள இந்நிலநடுக்கத்தால் தென்கிழக்கு துருக்கியில் 1900-க்கும் மேற்பட்டோர் மற்றும் சிரியாவில் 900-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளாதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பகுதிகளையும் தாக்கியுள்ள மிக மோசமான நிலநடுக்கங்கள் 7.9 மற்றும் 7.5 ரிக்டர் அளவை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கானோர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகவும்,  மீட்புப் பணியாளர்கள் அப்பகுதி முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளில் தொடர் மீட்புப்பணிகளை செய்துகொண்டிருப்பதால் உயிரழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.