Thursday, 9 February 2023

மனித வர்த்தகம் மனித மாண்பை சிதைக்கிறது : திருத்தந்தை

 


அநீதி மற்றும் அக்கிரமத்தின் இலாபங்களை விரும்பும் அமைப்புகளே இலட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் வாழக் கட்டாயப்படுத்துகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நமது சமூகத்தை மாற்றியமைப்பதற்கும் மனித வர்த்தகம் என்ற கொடுஞ்செயலைத் தடுப்பதற்கும் பாதைகளைத் தேடுவதில் சோர்வடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 8, இப்புதனன்று மனித வர்த்தகத்திற்கு எதிரான 9-வது அனைத்துலக இறைவேண்டல் மற்றும் விழிப்புணர்வு தினத்திற்கான காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித கடத்தலால் பாதிக்கப்படுவர்களின் பாதுகாவலியான புனித Josephine Margaret Bakhita- வை இன்று நாம் நினைவுகூருகிறோம் என்றும், மனித வர்த்தகத்திற்கு எதிரான அனைத்துலக இறைவேண்டல் மற்றும் விழிப்புணர்வு தினத்தை 'மாண்புடன் பயணித்தல்'  என்ற கருப்பொருளில், இளைஞர்களை முக்கிய பங்களிப்பவர்களாக   ஈடுபடுத்துவதில் நான் உங்களுடன் இணைகின்றேன் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித வர்த்தகம் மனித மாண்பை சிதைக்கிறது. சுரண்டல் மற்றும் அடிபணியவைத்தல் ஆகியவை மனித சுதந்திரத்தை ஒரு எல்லைக்கு உட்படுத்துகின்றன மற்றும் மக்களைப் பயன்படுத்துவதற்கும் நிராகரிப்பதற்குமான பொருள்களாக மாற்றுகின்றன என்றும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அநீதி மற்றும் அக்கிரமத்தின் இலாபங்களை விரும்பும் அமைப்புகள் இலட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் வாழக் கட்டாயப்படுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையில், பொருளாதார நெருக்கடி, போர்கள், காலநிலை மாற்றம் மற்றும் வறுமை நிலையில் வாழும் மக்கள் எதிர்பாராதவிதமாக இத்தகைய மனித வர்த்தகத்திற்குள் தள்ளப்படுகிறார்கள் என்று விவரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முக்கியமாகப் புலம்பெயர்ந்தோர், பெண்கள் மற்றும் குழந்தைகள், உங்களைப் போன்ற கனவுகள் நிறைந்த இளைஞர்கள்,  மற்றும் மாண்புடன் வாழ விரும்புபவர்களைப் பாதிக்கும் வகையில் மனித வர்த்தகம் கவலையளிக்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறது என்று வேதனை தெரிவித்துள்ளார்.  

நாம் ஒரு கடினமான காலத்தில் வாழ்கின்றோம் என்றும், ஆனால், இப்படிப்பட்ட நிலையில்தான் நாம் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், கிறிஸ்துவிலிருந்தும் அவருடைய நற்செய்தியிலிருந்தும் வரும் ஒளியைப் பரப்புவதற்கு, நன்மையை விரும்பும் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...