Thursday, 9 February 2023

ஊடகங்கள் நம்மை மீட்கவேயன்றி மூழ்கடிப்பதற்கல்ல- கர்தினால் பரோலின்

 

கத்தோலிக்க ஊடகத்தின் இருப்பு, தீவிரமாக ஊக்கமளிக்கும் ஒன்று, இதன் வழியாக வரலாற்றின் ஓட்டத்திற்குள் நாம் இருப்பதை உணர முடியும் - கர்தினால் பரோலின்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கத்தோலிக்க ஊடக செய்திகள் மீட்பிற்கு நம்மை வழிநடத்துவதற்கே தவிர உலகில் மூழ்குவதற்கு அல்ல என்றும், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகளில் மிகவும் துல்லியமான அறிகுறிகள் கல்வி மற்றும் உரையாடலில் உள்ளது என்றும் கூறியுள்ளார் கர்தினால் பரோலின்.

ஜனவரி 25 புதன் கிழமை முதல் 27 சனிக்கிழமை வரை பிரான்சில் உள்ள லூர்து நகரில் நடைபெற்று வரும் 26வது புனித பிரான்சிஸ் தே சேல்ஸ் நாளை முன்னிட்டு கத்தோலிக்க ஊடகங்களின் கூட்டமைப்பு நடத்திய Jacques Hamel 2023 பரிசை வழங்க பிரான்சில் உள்ள லூர்து நகருக்கு வந்தபோது இவ்வாறு கூறியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியா என 25க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஊடகப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் கத்தோலிக்கத் தொடர்பாளர்களை ஒன்றிணைக்கும் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் கத்தோலிக்க ஊடகங்களின் கூட்டமைப்புக் கூட்டத்தில் திருப்பீடத்தின் செயல்பாட்டையும் விளக்கினார் கர்தினால் பரோலின்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்
திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்

கத்தோலிக்க ஊடகத்தின் இருப்பு, தீவிரமாக ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும், என்றும், இதனால் உண்மையிலேயே வரலாற்றின் ஓட்டத்திற்குள் கொண்டு வரப்படுவதை நாம் உணர முடியும் என்றும் கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள்,

கத்தோலிக்க ஊடக செய்திகள் மீட்பிற்கு நம்மை வழிநடத்துவதற்கே தவிர உலகில் மூழ்கடிப்பதற்கு அல்ல என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமும் நூற்றுக்கணக்கான கொடிய தாக்குதல்கள், அழிவுகரமான ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள், சிறார், வீரர்களை இழந்த குடும்பங்கள் போன்றோரைப் பற்றியும் அறிந்து கொள்ள ஊடகம்  உதவுகின்றது என்று எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகளில் மிகவும் துல்லியமான அறிகுறிகள் கல்வி மற்றும் உரையாடலில் உள்ளது என்று எடுத்துரைத்துள்ளார்.

ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியின் தூண்களை உடனடியாக உறுதிப்படுத்தாமல், எதிர்கால சந்ததியினரை போரின் கடுமையிலிருந்து காப்பாற்றுவதும் மேம்படுத்துவதும் கடினமான ஒன்று என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களையும் வலியுறுத்தி பேசியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், சர்வதேச நாடுகளுக்கு, ஏழைகள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என அனைத்து நிலையில் இருப்பவர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மற்றும் மதிப்பளித்தல் வழியாக அமைதியின் கருத்தை, நியாயமான உறவுகளின் பலனை ஆதரிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

கர்தினால் பரோலின் கூட்டத்தில் பங்கேற்றவர்களுடன்
கர்தினால் பரோலின் கூட்டத்தில் பங்கேற்றவர்களுடன்

மூன்றாம் உலகப் போர்ச்சூழல்

சமூக முன்னேற்றம் மற்றும் முழுமையான விடுதலையில் வாழ்க்கை நிலைமைகள் அடங்கியுள்ளன என்று எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், 1967ஆம் ஆண்டு முதல், உலக அமைதி நாளை ஒவ்வொரு ஜனவரி மாதம் முதல் நாளில் சிறப்பிக்க வேண்டும் என்ற திட்டம் கத்தோலிக்க திருஅவையால் மட்டும் அல்ல, உலகில் உள்ள அனைத்து உண்மையான நண்பர்களின் ஆதரவையும் பெற்று அனைவராலும் கொண்டாடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதிக்கான அயராத தேடலில் திருஅவையின் அன்றாட வேலை, மக்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே உரையாடல், சந்திப்பு மற்றும் புரிதலுக்கான இடைவெளிகளை குறைக்க முயற்சிப்பதாகும் என்றும், அரசியல், நிதி, பொருளாதாரம், ஆயுதத் தொழில் ஆகியவை இரத்தம் சிந்துவதன் வழியாகவோ அல்லது முழு மக்களையும் பட்டினியால் வாட்டுவதன் வழியாகவோ முன்னேற்றப்பட முடியாது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.

போரை அல்ல அமைதியை

மக்கள் போரை அல்ல அமைதியை, ஆயுதங்களை அல்ல உணவை, இடையூறுகளை அல்ல கவனிப்பை, பொருளாதரச் சுரண்டலை அல்ல நீதியை, போலித்தனத்தை அல்ல நேர்மையை, ஊழலை அல்ல வெளிப்படையான தன்மையை விரும்புகின்றார்கள், எதிர்பார்க்கின்ரார்கள் என்றும் கூறியுள்ளார் கர்தினால் பரோலின்

வளர்ச்சிக்கான தூய்மையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியின் எதிர்காலத்திற்கான சாத்தியக்கூறுகளை அச்சுறுத்தும் அணு ஆயுதங்கள் அல்ல அமைதியே என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முரணான வழிமுறைகளால் நிலையான அமைதியைப் பெற முடியாது எனவும், "அமைதியால் மட்டுமே அமைதி உறுதிப்படுத்தப்படுகிறது" என்று திருத்தந்தை ஆறாம் பவுல் கூறியதையும்  எடுத்துரைத்தார்.

நல்லிணக்கம், ஒத்துழைப்பு, நீதி, உரையாடல், ஒற்றுமை என்னும் 5 வழிகாட்டுதல்களை எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், ஒருவரின் சொந்த நிலையை சாதகமாக்குவதற்காக செய்திகளையும் தகவல்களையும் பொய்யாக்காத உண்மை நிலை ஊடகங்களுக்குத் தேவை என்றும் வலியுறுத்தினார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...