Monday, 22 July 2013

Catholic News in Tamil - 22/07/13

 
1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணம்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : எப்பொழுதும் செபத்தையும் செயலையும் இணைத்து வாழுங்கள்

3. திருத்தந்தை பிரான்சிஸ் : இளையோரே, இயேசுவின் குரலைக் கேளுங்கள்

4. திருத்தந்தை பிரான்சிஸ் : பிரேசில் நாட்டுத் திருப்பயணத்தை அன்னைமரியிடம் ஒப்படைப்பு

5. ஒரு பெண்ணின் சுயநிர்ணய உரிமையை மதிப்பதற்கு, ஒரு குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமா?

6. ஆப்ரிக்காவின் பெரும் ஏரிப் ப‌குதியில் அமைதி குறித்த‌ க‌த்தோலிக்க‌ அமைப்பின் முய‌ற்சிக்கு வெற்றி

7. பாகிஸ்தானில் மதச்சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை

8. நுரையீரல் நோயால் இறக்கும் குழந்தைகள் 4.10 இலட்சம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணம்

ஜூலை,22,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது முதல் வெளிநாட்டு மேய்ப்புப்பணித் திருப்பயணத்தை இத்திங்கள் உரோம் நேரம் காலை 8.45 மணிக்குத் தொடங்கினார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக இத்திருப்பயணத்தைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ரியோ டி ஜெனீரோவின் “Galeão/Antonio Carlos Jobim” பன்னாட்டு விமான நிலையத்தைச் சென்றடையும்போது அந்நாட்டு நேரம் மாலை 4 மணியாக இருக்கும். இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடைப்பட்ட கால இடைவெளி 8 மணி 30 நிமிடங்களாகும்.  
இச்செவ்வாய் முதல் வருகிற ஞாயிறுவரை நடைபெறும் இவ்விளையோர் தின நிகழ்வுகள், நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குகள்(மத்.28,19)”என்ற தலைப்பில் இடம்பெறும்.
மேலும், 12 மணி 15 நிமிடங்கள் கொண்ட இந்த நீண்ட விமானப் பயணத்தில் தான் கடந்து செல்லும் மௌரித்தானியா, அல்ஜீரியா, செனெகல், இன்னும் இத்தாலி ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் ஆசீரையும் தெரிவிக்கும் தந்திச் செய்திகளையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருப்பயணத்தில் பிரேசில் பாதுகாவலர் புனித அப்பெரிசிதா அன்னைமரியா திருத்தலம் செல்வார், பிரேசில் அரசுத்தலைவரைச் சந்திப்பார், இலட்சக்கணக்கான உலக இளையோரைச் சந்திப்பார், 14 உரைகளுக்குமேல் நிகழ்த்துவார், இப்படி பல முக்கிய நிகழ்வுகளை நடத்தி, ஜூலை 29, வருகிற திங்கள் முற்பகல் 11.30 மணியளவில் உரோம் வந்தடைவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
A330 ஆல் இத்தாலியா விமானத்தில் இத்திருப்பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் இத்திங்களன்று தனது டுவிட்டர் பக்கத்தில், இன்னும் சில மணிநேரங்களில் நான் பிரேசில் சென்றடைவேன், 28வது உலக இளையோர் தினத்தைக் கொண்டாடுவதற்காக விரைவில் உங்களோடு இருக்கப்போகிறேன் என்பதால் எனது இதயம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது என்று எழுதியுள்ளார்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : எப்பொழுதும் செபத்தையும் செயலையும் இணைத்து வாழுங்கள்

ஜூலை,22,2013. பொதுநிலையினராகவோ, துறவிகளாகவோ அல்லது அருள்பொழிவு செய்யப்பட்ட அருள்பணியாளர்களாகவோ யாராக இருந்தாலும் கிறிஸ்தவர்களுக்குத் தியானமும் சேவையும், செபமும் செயலும் தேவைப்படுகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இயேசுவுக்கு மிகவும் விசுவாசமான சீடர்களாயிருந்த மார்த்தா, மரியா ஆகிய இரு சகோதரிகள் தங்களது பெத்தானியா வீட்டில் இயேசுவை உபசரித்த நிகழ்வை விளக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தியை மையமாக வைத்து மூவேளை செப உரையில் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், தேவையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கு உதவிகளைச் செய்யத் தூண்டாத செபம் பலனற்ற மற்றும் முழுமையற்ற செபம் என்று கூறினார்.
அதேநேரம், திருப்பணிகளைச் செய்யும்போது வேலையை மட்டும் செய்துவிட்டு செபத்தில் கடவுளோடு உரையாடல் நடத்த நேரம் ஒதுக்காதபோது, தேவையில் இருக்கும் நம் சகோதரரில் பிரசன்னமாக இருக்கும் கடவுளுக்குப் பணிசெய்வதில் ஆபத்தைக் கொண்டுவரும் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதீன வாழ்வின் தந்தையான புனித பெனடிக்ட் சொல்லியிருப்பதுபோல, செபமும் செயலும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்றும் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், செபமும் செயலும் ஒன்றிலிருந்து மற்றதை பிரிக்கமுடியாததாய் இருக்கும்அதேவேளை, அனைத்துப் பிறரன்புப் பணிகளுக்கும் செபம் அடித்தளமாகச் செயல்படுகின்றது என்று கூறினார்.
நாம் பிறருக்கு உதவி செய்யும்போது அது இயேசுவின்மீதுள்ள அன்பால் செய்கிறோம், தேவையில் இருப்போருக்கு தொண்டுபுரியும்போது அது நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கின்றது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். 
நமது அனைத்துச் செயல்களுக்கும் முக்கிய ஊற்றாக இருக்கும் இறைவார்த்தையைக் கேட்பதிலிருந்து, கிறிஸ்தவர்களின் வாழ்வில் சேவையும் பிறரன்புப் பணிகளும் ஒருபோதும் பிரிந்துவிடாமல் இருக்க வேண்டும், எப்படியெனில் சீடருக்குரிய மனநிலையுடன், இயேசுவின் பாதத்தடியில் அமர்ந்து இறைவார்த்தையைக் கேட்ட மரியாபோல.. என்றும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : இளையோரே, இயேசுவின் குரலைக் கேளுங்கள்

ஜூலை,22,2013. வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நின்று கொண்டிருந்த திருப்பயணிகளில் சிலர், போன் வியாஜ்ஜோ என்ற திருப்பயண வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் விளம்பரத் துணிகளைப் பிடித்திருந்ததைத் தான் நின்றுகொண்டிருந்த வத்திக்கான் ஜன்னல் வழியாகப் பார்த்து அதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், இத்திங்களன்று தான் தொடங்கியுள்ள பிரேசில் நாட்டுத் திருப்பயணத்துக்காகச் செபிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
இந்தத் திருப்பயணத்தில் செபத்தின்மூலம் ஆன்மீக வழியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இப்பயணம், உலகெங்கிலுமுள்ள இளையோரின் மாபெரும் திருப்பயணத்தின் புதிய படிநிலை என்றும் குறிப்பிட்டார்.
உலக இளையோர் தினத்தின் இந்த ஒரு வாரத்தை உலக இளையோர் வாரம் என்றும் அழைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இளையோர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும் என்றும் கூறினார். 

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : பிரேசில் நாட்டுத் திருப்பயணத்தை அன்னைமரியிடம் ஒப்படைப்பு

ஜூலை,22,2013. இச்சனிக்கிழமை மாலையில் உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவுக்குச் சென்று தனது பிரேசில் நாட்டுத் திருப்பயணத்தை அன்னைமரியின் பாதுகாவலில் வைத்து, ரியோ டி ஜெனீரோவில் கூடுகின்ற மற்றும் உலகெங்கும் இருக்கின்ற இளையோருக்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சனிக்கிழமை மாலை 4.45 மணிக்கு, புனித மேரி மேஜர் பசிலிக்கா சென்ற திருத்தந்தை பிரான்சிஸ், அப்பசிலிக்காவிலுள்ள, உரோம் மக்களின் அன்னைமரி திருப்படத்தின் முன்பாக ஏறக்குறைய அரைமணி நேரம் தனியாகச் செபித்த பின்னர், ஒரு மலர்க் கிரீடத்தையும், 28வது உலக இளையோர் தின அடையாளம் பதித்த மெழுகுதிரியையும் ஏற்றி வைத்தார்.
அன்னைமரி திருப்படம் வைக்கப்பட்டுள்ள சிற்றாலயத்துக்குத் திருப்பூட்டறையின் பக்கக்கதவு வழியாக நேரிடையாகச் சென்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் செலவிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், அந்நேரத்தில் அங்கிருந்த விசுவாசிகளிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி, இந்தப் பிரேசில் நாட்டுத் திருப்பயணத்தில் "செபம், விசுவாசம், தபம்" ஆகியவற்றோடு தன்னோடு உடன் வருமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

5. ஒரு பெண்ணின் சுயநிர்ணய உரிமையை மதிப்பதற்கு, ஒரு குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமா?

ஜூலை,22,2013. க‌ருக்க‌லைப்பைத் தடைச்செய்யும் கொரியச் சட்டங்கள் குறித்து கவலைகொள்ளாமல் கருக்கலைப்பை மறைமுகமாக ஆதரிக்கும் அந்நாட்டு நீதித்துறையைக் குற்றஞ்சாட்டியுள்ளது கொரிய தலத்திருஅவை.
400க்கும் மேற்ப‌ட்ட‌ ச‌ட்ட‌ விரோத‌ க‌ருக்க‌லைப்புக்க‌ளை மேற்கொண்ட‌ நான்கு பேருக்கு, உரிய‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌த் த‌வ‌றியுள்ள‌ அந்நாட்டின் Daejeon நீதிம‌ன்ற‌ தீர்ப்பு குறித்து க‌வ‌லையை வெளியிட்ட‌ கொரிய‌ ஆய‌ர் பேர‌வையின் வாழ்வுக்கு ஆத‌ர‌வான‌ ஆணைக்குழுவின் த‌லைவ‌ர் ஆய‌ர் Linus Lee Seong-hyo, குற்ற‌த்தின் தீவிர‌த்தை உண‌ர்த்துவ‌தாக‌ தீர்ப்பு இல்லை என்றார்.
தாயின் உயிருக்கு ஆபத்து என்பது உட்பட, குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே கருக்கலைப்பை அனுமதிக்கும் கொரியாவில், தாயின் வயிற்றில் கரு உருவாகிய 24 வாரங்களூக்குப்பின் கருவைக் கலைத்தல் முற்றிலுமாகத் தடைச் செய்யப்பட்டுள்ளபோதிலும், கருக்கலைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்றார் ஆயர்.
கருக்கலைப்பைத் தடைச்செய்யும் சட்டம் இருக்கிறபோதிலும், சுயமாக முடிவெடுப்பதற்குரிய பெண்களின் உரிமையைக் குறைத்து மதிப்பிட முடியாது என Daejeon நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருப்பது, சட்டத்தின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என மேலும் கூறினார் ஆயர் Linus.
ஒரு பெண்ணின் சுயநிர்ணய உரிமையை மதிப்பதற்கு, ஒரு குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது கொரிய தலத்திருஅவை.

ஆதாரம் UCAN

6. ஆப்ரிக்காவின் பெரும் ஏரிப் ப‌குதியில் அமைதி குறித்த‌ க‌த்தோலிக்க‌ அமைப்பின் முய‌ற்சிக்கு வெற்றி

ஜூலை,22,2013. ஆப்ரிக்காவில் பெரும் ஏரியை அடுத்துள்ள நாடுகளில் அமைதியை ஏற்படுத்த கத்தோலிக்க சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு தொடர்ந்து எடுத்த முயற்சியின்பேரில் புருண்டி நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவின் மத்தியப் பகுதியில் பயணம் மேற்கொண்டுவரும் சான் எஜிதியோ அமைப்பின் தலவர் Marco Impagliazzo, புருண்டி தலைநகரில் அண்மை நாடுகளின் பிரதிநிதிகளோடு நடத்தியக் கூட்டத்தில் இந்த‌ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட ஏற்பாடுச் செய்திருந்தார்.
1988ம் ஆண்டு முதல் ஆப்ரிக்காவின் பெரும் ஏரிப் பகுதியில் அமைதிக்காக உழைத்து வரும் சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பு, 2005ம் ஆண்டிலேயே அப்பகுதி நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் உருவாக உதவியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

7. பாகிஸ்தானில் மதச்சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை

ஜூலை,22,2013. கடந்த 18 மாதங்களில் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக நடத்தப்பட்ட 203 தாக்குதல்களில் 700 மரணங்கள் உட்பட 1800 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் அறிக்கை ஒன்று குற்றஞ்சாட்டுகிறது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வாழும் ஷியா இஸ்லாமியர்களுக்கு எதிராக 77 தாக்குதல்களும், இந்துக்களுக்கு எதிராக 16 தாக்குதல்களும், சீக்கியர்களுக்கு எதிராக 3 தாக்குதல்களும் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டும் இவ்வறிக்கை, கிறிஸ்தவர்களுக்கு எதிராக 37 தாக்குதல்கள் இடமெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.
பாகிஸ்தானில் மதத் தீவிரவாதம் தொடர்புடைய வன்முறைகள் களையப்படுவதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் அழைப்பு விடுக்கிறது அமெரிக்கை ஐக்கிய நாட்டிலிருந்து வெளியிடப்பட்டுள்ள உலக மத சுதந்திரம் குறித்த இந்த அறிக்கை.

ஆதாரம் Fides

8. நுரையீரல் நோயால் இறக்கும் குழந்தைகள் 4.10 இலட்சம்

ஜூலை,22,2013. "இந்தியாவில் ஆண்டுதோறும் நுரையீரல் நோயால், நான்கு இலட்சத்து, 10 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர் என, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு தரும் புள்ளிவிவரங்களை வெளியிட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன், இந்நோய் குறித்த போதிய விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்தினார்.
குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள பெற்றோர்கள் முன்வந்தால், இறப்பை வெகுவாக தடுக்க முடியும்,'' எனவும் கூறினார் தஞ்சை ஆட்சியர் பாஸ்கரன்.

ஆதாரம் தினமலர்

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...