1. புனித பிரான்சிஸ் சேவியரும், அருள்பணியாளர் அருப்பேயும் இயேசுசபையினருக்கு அழகான அடையாளங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்
2. 47வது உலக அமைதி தினம் : சகோதரத்துவம், அமைதிக்கான அடித்தளம் மற்றும் பாதை
3. திருத்தந்தை பிரான்சிஸ் : உயர்வான இலட்சியங்களுக்காக, அனைத்தையும் பணயம் வைப்பது சிறந்தது
4. இங்கிலாந்து பேராயர் : திருத்தந்தை மக்களை அடைவதற்கு அனைத்து வழிகளிலும் முயன்றது தன்னை அதிகம் கவர்ந்தது
5. பேராயர் Lahham : புலம்பெயர்ந்தோர் முகாமில் கிறிஸ்துவத்தைப் பரப்ப முயல்வது சரியான வழிமுறை அல்ல
6. Los Angeles பேராயர் : நாம் கத்தோலிக்கத் திருஅவையாக இருப்பதால், குடியேற்றதாரர் குறித்த விவாதத்தில் ஆர்வமாய் இருக்கிறோம்
7. 27வது அனைத்துலக அமைதிக் கருத்தரங்கு : நம்பிக்கையின் துணிச்சல்
8. அனைத்துலக நட்பு தினம் : நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் தினம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. புனித பிரான்சிஸ் சேவியரும், அருள்பணியாளர் அருப்பேயும் இயேசுசபையினருக்கு அழகான அடையாளங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்
ஜூலை,31,2013. இயேசு சபையினர் எவரும், கிறிஸ்துவுக்குப் பதிலாக தன்னை மையப்படுத்துவது தவறு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜூலை 31, இப்புதனன்று, இயேசு சபையைத் தோற்றுவித்த புனித லொயோலா இஞ்ஞாசியார் அவர்களின் திருநாள் கொண்டாடப்பட்டதையொட்டி, உரோம்
நகரில் உள்ள இயேசு ஆலயத்தில் காலை 8.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் ஆற்றிய திருப்பலியில் இவ்வாறு மறையுரை வழங்கினார்.
கிறிஸ்துவை மையமாக்குதல், பணியாற்றுவதற்கென கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்படுதல், குறைகளை உணர்ந்து, கிறிஸ்துவுக்கு முன்பும், மற்றவர்களுக்கு முன்பும் பணிவுடன் வாழ்தல் என்ற மூன்று கருத்துக்களை, தன் மறையுரையின் மையமாக்கினார் திருத்தந்தை.
கிறிஸ்துவும், திருஅவையும் இணைபிரியாத ஒரே நெருப்பு என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, திருஅவை வழியாக கிறிஸ்துவுக்குப் பணி செய்வதே ஒவ்வொரு இயேசு சபையினரின் கடமை என்பதையும் வலியுறுத்தினார்.
புனித பவுல், புனித இஞ்ஞாசியார் என்ற இருவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை எடுத்துக்கூறி, இயேசு சபையினரும் கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார் திருத்தந்தை.
நான் கிறிஸ்துவுக்கு என்ன செய்திருக்கிறேன்? என்ன செய்கிறேன்? என்ன செய்ய வேண்டும்? என்று புனித இஞ்ஞாசியார் தன் ஆன்மீகப் பயிற்சிகளில் எழுப்பிய முக்கியக் கேள்விகளை, கூடியிருந்த இயேசு சபையினருக்கு மீண்டும் நினைவுறுத்தினார் திருத்தந்தை.
வாழ்வின் இறுதிகாலத்தில் ஒவ்வொரு இயேசு சபையினருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டிய அழகான அடையாளங்கள், புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களும், அருள் பணியாளர் அருப்பே அவர்களும் என்று கூறியத் திருத்தந்தை, இவ்விருவர் வாழ்வின் இறுதியிலும் அவர்கள் கிறிஸ்துவுக்குத் தங்களையே முற்றிலும் அர்ப்பணமாக்கியதைச் சுட்டிக்காட்டினார்.
200க்கும் அதிகமான இயேசு சபையினரும், 500க்கும் அதிகமான ஏனைய துறவியரும், போதுநிலையினரும் கலந்துகொண்ட இத்திருப்பலியின் துவக்கத்தில், இயேசு சபையின் உலகத் தலைவர் அருள் பணியாளர் Adolfo Nicolas அவர்கள், திருத்தந்தையை, ‘நம் சகோதரர் பிரான்சிஸ்’ என்று அழைத்து, தன் வரவேற்பை வழங்கினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனதால் மட்டுமல்ல, தன் எண்ணங்களிலும், செயல்பாட்டிலும்
ஒரு இயேசு சபையினராய் இருப்பதை அவர் பிரேசில் நாட்டிலிருந்து திரும்பிய
பயணத்தில் குறிப்பிட்டார் என்பதை அருள் பணியாளர் Nicolas தன் வரவேற்புரையில் எடுத்துரைத்தார்.
ஆதாரம் வத்திக்கான் வானொலி
2. 47வது உலக அமைதி தினம் : சகோதரத்துவம், அமைதிக்கான அடித்தளம் மற்றும் பாதை
ஜூலை,31,2013.
2014ம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று கத்தோலிக்க உலகில் சிறப்பிக்கப்படும்
47வது உலக அமைதி தினத்துக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தெரிவு
செய்யப்பட்டுள்ள தலைப்பு இப்புதனன்று வெளியிடப்பட்டது.
"சகோதரத்துவம், அமைதிக்கான அடித்தளம் மற்றும் பாதை" என்பது, 47வது உலக அமைதி தினத்துக்கான தலைப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உலக அமைதி தினம், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தனது பாப்பிறைப் பணியில் முதன்முறையாகச்
சிறப்பிக்கவிருக்கும் உலக கத்தோலிக்க அமைதி தினமாக இருக்கும்.
1968ம் ஆண்டில் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட உலக கத்தோலிக்க அமைதி தினம், ஆண்டுதோறும் சனவரி முதல் தேதியன்று சிறப்பிக்கப்படுகின்றது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : உயர்வான இலட்சியங்களுக்காக, அனைத்தையும் பணயம் வைப்பது சிறந்தது
ஜூலை,31,2013. "என் அன்பு நண்பர்களே, உயர்வான இலட்சியங்களுக்காக, அனைத்தையும் பணயம் வைப்பது சிறந்தது. கிறிஸ்துவின் மீதும், அவரது நற்செய்தியின் மீதும் நமது வாழ்வைப் பணயம் வைப்பது தகுதியானது" என்ற Twitter செய்தியை இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.
மேலும், ஜூலை 26, கடந்த வெள்ளிக்கிழமையன்று, ரியோ தெ ஜனெய்ரோ நகர் வீதிகளில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ரியோ நகரின் சாலைகளில் தன் திறந்த காரில் பயணித்தபோது, கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த காவலர்களை மீறி, Nathan de Brito என்ற 10 வயது சிறுவன் திருத்தந்தையிடம் ஓடிச்சென்று அவரை அணைத்தார்.
ஒரு சில நிமிடங்கள் நீடித்த இந்த நிகழ்வில், சிறுவன் Nathan திருத்தந்தையிடம் தான் கிறிஸ்துவுக்காக ஒரு குருவாக விழைவதாகத் தெரிவித்ததாகவும், திருத்தந்தை அவர்கள், கண் கலங்கியபடி, இன்று முதல் உன் அழைப்பு உறுதியாகிவிட்டது என்று சொன்னதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி / CNA
4. இங்கிலாந்து பேராயர் : திருத்தந்தை மக்களை அடைவதற்கு அனைத்து வழிகளிலும் முயன்றது தன்னை அதிகம் கவர்ந்தது
ஜூலை,31,2013. திருத்தந்தையிடம் விளங்கிய சக்தியும், அவர் மக்களை அடைவதற்கு அனைத்து வழிகளிலும் முயன்றதும் தன்னை அதிகம் கவர்ந்தன என்று இங்கிலாந்து பேராயர் ஒருவர் கூறினார்.
28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள ரியோ தெ ஜனெய்ரோ நகருக்குச் சென்றிருந்த Birmingham பேராயர் Bernard Longley அவர்கள், தன் அனுபவங்களை CNA கத்தோலிக்கச் செய்தியிடம் பகிர்ந்துகொண்டபோது இவ்வாறு கூறினார்.
கரங்களை நீட்டி அனைவரையும் அரவணைக்கும் உலக மீட்பரின் திரு உருவத்திற்குக் கீழ் நடைபெற்ற இந்த இளையோர் விழாவில், மற்றொரு மேய்ப்பரும் மக்களை அரவணைக்க எப்போதும் காத்திருந்தார் என்ற உணர்வை திருத்தந்தை இளையோரிடையே உருவாக்கினார் என்று பேராயர் Longley அவர்கள் கூறினார்.
புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவையின் உறுப்பினரான பேராயர் Longley அவர்கள், திருத்தந்தையின் நேரடியான, தெளிவான, எளிய கருத்துக்களைக் கேட்க இளையோர் ஆவலாக இருந்ததைப் போலவே, ஆயர்கள் பலர் வழங்கிய மறைகல்வி அமர்வுகளிலும் இளையோர் ஆர்வம் கொண்டிருந்ததைக் காண முடிந்தது என்று கூறினார்.
ஆதாரம் : CNA
5. பேராயர் Lahham : புலம்பெயர்ந்தோர் முகாமில் கிறிஸ்துவத்தைப் பரப்ப முயல்வது சரியான வழிமுறை அல்ல
ஜூலை,31,2013. புலம் பெயர்ந்த மக்களின் அடிப்படை தேவைகளுக்கான பொருட்களை அளிக்கும் தருணத்தில், அவர்களுக்கு விவிலியத்தையும் கொடுத்து, கிறிஸ்துவ மறையை பரப்ப முயல்வது சரியான வழிமுறை அல்ல என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை பேராயர் Maroun Lahham கூறினார்.
Jordan நாட்டின் Zaatari எனுமிடத்தில் அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில், ஒரு சில கிறிஸ்தவக் குழுக்கள், விவிலியத்தையும், வேறு சில துண்டு பிரசுரங்களையும் மக்களிடம் அளித்தது ஓலி-ஒளி காட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளைக் குறித்து, Jordan நாட்டு அப்போஸ்தலிக்க நிர்வாகியான பேராயர் Lahham அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கிறிஸ்துவை இவ்வழியில் மக்களுக்கு அறிமுகப்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று கூறினார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தருணத்தில், அதுவே கிறிஸ்துவ அன்புக்கு சாட்சியாக விளங்கும் வலிமை பெற்றது என்றும், அத்தருணத்தை மறைபரப்பு வாய்ப்பாக பயன்படுத்துவது சரியான சாட்சியமாக இருக்காது என்றும் பேராயர் Lahham எடுத்துரைத்தார்.
சரியாக ஓராண்டுக்கு முன்னர், அதாவது, 2012ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, 2,000 கூடாரங்களில் 10,000க்கும் அதிகமான மக்களுடன் துவங்கிய Zaatari முகாமில், தற்போது, 1,20,000 புலம்பெயர்ந்தோர் தங்கியுள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : Fides
6. Los Angeles பேராயர் : நாம் கத்தோலிக்கத் திருஅவையாக இருப்பதால், குடியேற்றதாரர் குறித்த விவாதத்தில் ஆர்வமாய் இருக்கிறோம்
ஜூலை,31,2013.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்றுவரும் குடியேற்றதாரர் குறித்த விவாதம்
தலத்திருஅவையின் எதிர்காலம் மற்றும் கத்தோலிக்கர் குறித்ததாய் உள்ளது என, அந்நாட்டின் Los Angeles பேராயர் Jose H. Gómez கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியேற்றதாரர் விவகாரம் குறித்து Fides செய்தி நிறுவனத்துடன் செய்திகளைப் பகிந்துகொண்டுள்ள பேராயர் Gómez, மெக்சிகோ மற்றும் இலத்தீன் அமெரிக்கர்கள் இவ்விவகாரத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
அமெரிக்க அரசியல்வாதிகளால் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் இலட்சக்கணக்கான மக்களில் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர் என்றும், திருஅவை, தனது மக்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதையல்ல, ஆனால் எத்தனை சிறார் திருமுழுக்குப் பெற்றுள்ளார்கள் என்பதையே கவனத்தில் கொள்கின்றது என்றும் கூறினார் பேராயர் Gómez.
Los Angeles உயர்மறைமாவட்டம் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 84,000 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிக்கின்றது, இவர்களில் பெரும்பாலானோர் இலத்தீன் அமெரிக்காவையும் பிற சிறுபான்மை இனங்களையும் சேர்ந்தவர்கள் என்றும் பேராயர் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவையின் வரவுசெலவு அலுவலகம் இத்திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் குடியேற்றதாரர் குறித்த சீர்திருத்த மசோதா அங்கீகரிக்கப்பட்டால், அந்நாட்டில் சரியான ஆவணங்கள் இன்றி வாழ்கின்றவர்களில், நான்கு பேருக்கு ஒருவர் வீதம் தங்களது நிலைகளைச் சரிசெய்ய முடியாத நிலைக்கு உட்படுவார்கள் எனத் தெரிகிறது.
ஆதாரம் : Fides
7. 27வது அனைத்துலக அமைதிக் கருத்தரங்கு : நம்பிக்கையின் துணிச்சல்
ஜூலை,31,2013. “நம்பிக்கையின் துணிச்சல் : உரையாடலில் மதங்களும் கலாச்சாரங்களும்” என்ற தலைப்பில், உலகில் அமைதியை ஊக்குவிக்கும் 27வது அனைத்துலக கருத்தரங்கு உரோம் ஜான் எஜிதியோ பிறரன்பு அமைப்பினால் நடத்தப்படவுள்ளது.
வருகிற செப்டம்பர் 29ம் தேதியிலிருந்து அக்டோபர் முதல் தேதி வரை நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில், உலகின் முக்கிய மதங்களின் பிரதிநிதிகள், ஐரோப்பிய
அரசியல் மற்றும் கலாச்சார வாழ்வின் பிரதிநிதிகள் என அறுபதுக்கும்
மேற்பட்ட நாடுகளிலிருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் இடம்பெறும் நெருக்கடிகள், ஆப்ரிக்காவில் ஒப்புரவு, ஆசியாவில் மதங்களின் பங்கு, இலத்தீன் அமெரிக்காவின் எதிர்காலம், குடியேற்றம், மத நம்பிக்கையற்றவர்கள் மற்றும் மத நம்பிக்கையாளருக்கிடையே உரையாடல், துன்பத்தில் வாழ்வின் மதிப்பு, நீண்ட ஆயுள்காலம் ஓர் ஆசீர்வாதம், இன்றைய மறைசாட்சிய வாழ்வு, பெண்களுக்கு எதிரான வன்முறை என, பல தலைப்புகளில் இக்கருத்தரங்கு நடைபெறும்.
உரோமையில் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில் இடம்பெறும் உரைகள், கருத்துப் பகிர்வுகள், பொதுவான விவாதங்கள் போன்றவை, உரோம் நகரை அமைதி மற்றும் ஒன்றிணைந்த வாழ்வின் அடையாளத் தலைநகராகக் காட்டும் என அந்தேரயா ரிக்கார்தி என்பவர் கூறியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. அனைத்துலக நட்பு தினம் : நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் தினம்
ஜூலை,31,2013. உலகளாவிய சமுதாயம், நட்பின் ஆற்றலைப் பயன்படுத்தி, பொதுவான உறவை வலுப்படுத்தவும், அமைதி மற்றும் உறுதியான வளர்ச்சிக்கான முயற்சிகளைத் தூண்டவும் வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
ஜூலை 30, இச்செவ்வாயன்று அனைத்துலக நட்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், இன்றைய
உலகில் பல பதட்டநிலைகளுக்கும் கலவரங்களுக்கும் காரணமாக இருக்கும்
புரிந்துகொள்ளாமை மற்றும் நம்பிக்கையின்மையை எதிர்த்துச் செயல்படுவதற்கு
இந்த நட்பு தினம் முக்கியமான வாய்ப்பாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான அமைதியை ஊக்குவித்து, உறுதியான
முன்னேற்றத்தை வளர்ப்பதற்கு மனித ஒருமைப்பாட்டுணர்வு அவசியம் என்பதை இந்த
நட்பு தினம் நினைவுபடுத்துகின்றது என்றும் கூறியுள்ள பான் கி மூன்,
போர்கள் மனிதர்களின் மனங்களில் தொடங்குவதால் அமைதியைப் பாதுகாப்பதும்
மனிதர்களின் மனங்களில் உருவாக வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துலக நட்பு தினம், 2011ம் ஆண்டு மே மாதத்தில் ஐ.நா. பொது அவையால் அங்கீகரிக்கப்பட்டது.
ஆதாரம் : UN
No comments:
Post a Comment