அழிவின் விளிம்பில் விலங்குகள்
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் ஆப்ரிக்கக் காட்டுயானைகளின் எண்ணிக்கையில் 62 விழுக்காட்டு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தப் போக்கு இப்படியே தொடருமானால், ஆப்ரிக்கக் காட்டுயானை இனமே அடுத்த பத்து ஆண்டுகளில் இல்லாமல் அழிந்துபோகும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பத்து
ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் நடமாடாத காட்டுப்பிரதேசத்தில் மூன்றில்
ஒரு பகுதிகளில் இப்போது நெடுஞ்சாலைகள் மூலம் மனித நடமாட்டம்
அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இது யானைகளின் அழிவில் முடிவதாகக் கூறுகிறார்கள்.
அழிந்துவரும் விலங்குகளின் மிக நீண்ட பட்டியலில், சுறா மீனும் இருக்கிறது. ஓர் ஆண்டுக்கு உலக அளவில், குறைந்தது
பத்துகோடி சுறாமீன்கள் கொல்லப்படுவதாக கணக்கிட்டுள்ளனர். ஆனால் இதை
ஈடுகட்டுமளவுக்கு ஆண்டுக்கு பத்துகோடி சுறாக்கள் புதிதாக
உற்பத்தியாவதில்லை.
சுறாவின்
துடுப்புக்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஒருவகை சூப்புக்கு சீனாவில் பெரும்
கிராக்கி நிலவுவதுதான் சுறாக்கள் இப்படி வேகமாகப் பிடிக்கப்படுவதற்கு
முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது.
அழிவின் விளிம்பில் இருப்பதாக அறிவியலாளர்களால் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டிருக்கும் ஐந்து ரக சுறாக்களைப் பிடிப்பதற்கும், அவற்றின் துடுப்புக்களை வெட்டி எடுப்பதற்கும் உலக அளவில் தடைவிதிக்கப்படவேண்டும் என்பது அறிவியலாளர்களின் முக்கிய கோரிக்கை.
ஊர்வன வகைகளிலும் ஐந்தில் ஒன்று அழிந்து போகும் ஆபத்தான நிலையில் உள்ளதாக அண்மை ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
முதலைகள், பல்லிகள், ஆமைகள், பாம்புகள் உட்பட 19 வகையான ஊர்வன வகைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளன என்றும், அச்சுறுத்தலான சூழலில் வாழும் அவற்றில் பத்தில் ஒரு பங்கு அழிவின் விளிம்பில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
உலகளவில் 9,500 வகைகளுக்கு மேலான ஊர்வன உயிரினங்கள் உள்ளன.
ஆதாரம் : BBC
No comments:
Post a Comment