1. திருத்தந்தை பிரான்சிஸ், Trinidad மற்றும் Tobago அரசுத்தலைவர் சந்திப்பு
2. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையின் பழைய அமைப்புமுறைகளைப் புதுப்பிப்பதற்கு நாம் பயப்படக் கூடாது
3. திருத்தந்தை பிரான்சிஸ் : கர்தினால் Van Thuân, நம்பிக்கைக்குச் சான்று
4. பங்களாதேஷின் புதிய திருப்பீடத் தூதர் பேராயர் ஜார்ஜ் கொச்சேரி
5. திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவர் நம்மிடம் திருமறை நூல்கள் வழியாகவும், நம் செபத்திலும் பேசுகிறார்
6. ஆறாயிரம் குருத்துவ மாணவர்கள், நவ துறவியர் மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவோருக்குத் திருத்தந்தை திருப்பலி
7. வத்திக்கான் புத்தக வெளியீட்டாளர் : புதிய அப்போஸ்தலிக்கத் திருமடல் ”விசுவாச ஒளி” ஓர் ஆன்மீக ஒளி
8. ஒரிசாவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவருக்கு விருது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ், Trinidad மற்றும் Tobago அரசுத்தலைவர் சந்திப்பு
ஜூலை,06,2013. டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் அரசுத்தலைவர் Anthony Thomas Aquinas Carmona அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீடத்தின்
நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி
ஆகியோரையும் சந்தித்தார் டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசுத்தலைவர் Carmona.
டிரினிடாட் மற்றும் டொபாகோவின் குடிமக்களுக்கு, சிறப்பாக, அந்நாட்டில் கல்விக்கும், நலவாழ்வுக்கும், நலிந்தவர்கள்
மற்றும் தேவையில் இருக்கும் மக்களுக்கும் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும்
பணிகள் இச்சந்திப்புகளில் குறிப்பிட்டுப் பேசப்பட்டன என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
இளையோருக்கும் குடும்பங்களுக்கும் உதவுவதிலும்,
குற்றங்கள் மற்றும் வன்முறையை ஒழிப்பது குறித்த நடவடிக்கைகளுக்கும்
எதிரானப் போராட்டத்திலும் கத்தோலிக்கத் திருஅவை அரசுக்கு ஒத்துழைப்பு
வழங்கும் எனவும் இச்சந்திப்புகளில் கூறப்பட்டன என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது.
இச்சந்திப்பில்
டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசுத்தலைவர் வழங்கிய டிரம்மை அடித்து
அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு (Republic of Trinidad and Tobago), அமெரிக்கக் கண்டத்தில், கரீபியன் பகுதியிலுள்ள தீவு நாடாகும். டிரினிடாட், டொபாகோ ஆகிய இரு தீவுகளில் 'டிரினிடாட்' தீவே பெரியதும், பெரும்பான்மையான
மக்கள் (96%) வாழ்கின்ற தீவுமாகும். இக்குடியரசில் இவ்விரு தீவுகளுடன் 21
சிறிய தீவுகளும் உள்ளன. இத்தீவுகளில் ஐரோப்பிய காலனித்துவம் அமைந்த பின்னர், இங்கு வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆப்ரிக்க, சீன, போர்த்துகீசிய மற்றும் இந்தியத் தலைமுறையினரே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையின் பழைய அமைப்புமுறைகளைப் புதுப்பிப்பதற்கு நாம் பயப்படக் கூடாது
ஜூலை,06,2013. கிறிஸ்தவராய் இருப்பது என்பது வெறும் செயல்களைச் செய்வது என்பதல்ல, மாறாக, தூய ஆவியால் புதுப்பிக்கப்படுவதற்குத் தன்னையே கையளிப்பதாகும் என்றும், திருஅவையின் வாழ்விலும்கூட, பயமின்றி புதுப்பிக்கப்படவேண்டிய பழங்கால அமைப்புமுறைகள் உள்ளன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புதிய
மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர் என்ற இயேசுவின் வார்த்தைகளை
இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலி
மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு கொணர்ந்த புதுப்பித்தல் குறித்த சிந்தனைகளை வழங்கினார்.
திருச்சட்டத்தின் கோட்பாடு இயேசுவோடு சிறப்புப் பெற்று புதுப்பிக்கப்பட்டது, இயேசு அனைத்தையும் புதியதாக்கினார், இயேசு திருச்சட்டத்தின் உண்மையான புதுப்பித்தலைக் கொண்டுவந்தார், அதே திருச்சட்டத்தை மேலும் சீர்செய்து புதுப்பித்தார் என்று கூறினார் திருத்தந்தை.
திருச்சட்டத்தின் கோரிக்கைகளைவிட மேலும் அதிகமாக இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார், திருச்சட்டம் நம் பகைவர்களை வெறுப்பதற்கு அனுமதியளிக்கின்றது, ஆனால் இயேசு பகைவர்களுக்காகச் செபிக்கச் சொல்கிறார், இதுவே இயேசு போதித்த இறையரசு, எல்லாவற்றுக்கும் மேலாக, புதுப்பித்தல் நம் இதயங்களில் இருக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவராய் இருப்பது என்பது, இந்தப் புதிய வாழ்வில் இயேசுவால் புதுப்பிக்கப்பட நம்மையே அனுமதிப்பதாகும் என்றும், கிறிஸ்தவராய் இருப்பது என்பது, நான் ஒவ்வொரு ஞாயிறும் திருப்பலிக்குச் செல்கிறேன், அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்பதல்ல, ஆனால் அனைத்தையும், நம் வாழ்வையும், நம் இதயத்தையும் புதுப்பிக்கும் தூய ஆவியால் நம்மைப் புதுப்பிக்கப்பட அனுமதிப்பதாகும் என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ வாழ்விலும், திருஅவையின் வாழ்விலும்கூட பழைய அமைப்புமுறைகள் உள்ளன, அவைகளைப் புதுப்பிக்க வேண்டிய தேவை உள்ளது, கலாச்சாரங்களோடு
உரையாடல் நடத்துவதன்மூலம் திருஅவை எப்போதும் இதன்மீது கருத்தாய்
இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பெந்தெகோஸ்தே நாளில் அன்னைமரியா சீடர்களோடு இருந்தார், தாய் இருக்கும் இடத்தில் பிள்ளைகள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள், எனவே நற்செய்தியின் புதினம் குறித்தும், தூய ஆவி கொணரும் புதுப்பித்தல் குறித்தும், நம்மைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் கடந்துபோகும் அமைப்புமுறைகளை விட்டுவிடவும் பயப்படாமல் இருப்பதற்கு வரம் கேட்போம், நாம் பயப்பட்டால் நம் தாய் இருக்கிறார் என்பதை உணருவோம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : கர்தினால் Van Thuân, நம்பிக்கைக்குச் சான்று
ஜூலை,06,2013. இறையடியார் கர்தினால் Francis Xavier Nguyên Van Thuân, நம்பிக்கைக்குச்
சான்று மற்றும் அவரின் பணிவும் குருத்துவ ஆர்வமும் எண்ணற்ற மக்களின்
வாழ்வைத் தொட்டுள்ளன என்று பாராட்டிப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கர்தினால் Van Thuân அவர்களின் எழுத்துக்களும், அவர் தம் குருத்துவ வாழ்வு மூலம் வெளிப்படுத்திய எளிமை மற்றும் ஆழமான ஆன்மீக வாழ்வும், கருணையும்
அன்பும் நிறைந்த திருப்பணிக்குத் தன்னை அழைத்த இறைவனோடு ஆழமாக
ஒன்றித்திருந்தார் என்பதைக் காட்டுகின்றன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ்
கூறினார்.
கர்தினால் Van Thuân அவர்களை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவது குறித்து மறைமாவட்ட அளவில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ளதையொட்டி, இச்சனிக்கிழமையன்று
வத்திக்கானில் சந்தித்த ஏறக்குறைய 400 வியட்னாம் விசுவாசிகள் மற்றும்
திருஅவை அதிகாரிகளிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1928ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி மத்திய வியட்னாமில் பிறந்த கர்தினால் Van Thuân, 1953ம் ஆண்டில் குருவானார். இவர் 1967ம் ஆண்டில் திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் Nha Trang மறைமாவட்டத்தின்
முதல் வியட்னாம் ஆயராக நியமிக்கப்பட்டார். 1975ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி
சாய்கான் உயர்மறைமாவட்டத்தின் வாரிசு ஆயராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதே
ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அந்நாட்டின் கம்யூனிச அதிகாரிகளால் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 13 ஆண்டுகாலச் சிறைத் தண்டனையில் 9
ஆண்டுகள் தனிமையில் வைக்கப்பட்டார். 1988ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி
விடுதலை செய்யப்பட்ட இவர் 1991ம் ஆண்டில் திருப்பீட நீதி மற்றும் அமைதி
அவையின் உதவித் தலைவர், பின்னர் அவ்வவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2000மாம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், உடல்நலம் குன்றி 2002ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மரணமடைந்தார். கர்தினால் Van Thuânன் மூதாதையர் 1698ம் ஆண்டில் கிறிஸ்துவ விசுவாசத்துக்காகத் தங்கள் உயிரைக் கையளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. பங்களாதேஷின் புதிய திருப்பீடத் தூதர் பேராயர் ஜார்ஜ் கொச்சேரி
ஜூலை,06,2013. பங்களாதேஷின் புதிய திருப்பீடத் தூதராக, பேராயர் ஜார்ஜ் கொச்சேரி (George Kocherry) அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பேராயர் ஜார்ஜ் கொச்சேரி அவர்கள், இதுவரை ஆப்ரிக்க நாடான ஜிம்பாபுவேயில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றி வந்தார்.
கேரளாவின் Changanacherryல் 1945ம் ஆண்டு பிறந்த பேராயர் ஜார்ஜ் கொச்சேரி, Changanacherry
உயர்மறைமாவட்டத்துக்கென 1974ம் ஆண்டில் அருள்பணியாளராக அருள்பொழிவு
செய்யப்பட்டார். பின்னர் 1978ம் ஆண்டில் திருப்பீடத் தூதரகப் பணியில்
சேர்ந்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவர் நம்மிடம் திருமறை நூல்கள் வழியாகவும், நம் செபத்திலும் பேசுகிறார்.
ஜூலை,06,2013. ஆண்டவர் நம்மிடம், திருமறை நூல்கள் வழியாகவும், நம்
செபத்திலும் பேசுகிறார். நாம் நற்செய்தியைத் தியானிக்கும்போது அவர்
முன்பாக மௌனமாக இருப்பதற்குக் கற்றுக்கொள்வோம் என்று தனது டுவிட்டர்
பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் @Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் ஏறக்குறைய தினமும் எழுதி வருகிறார்.
மேலும், வருகிற திங்கட்கிழமையன்று இத்தாலியின் Lampedusa தீவுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று, அங்கு வாழும் புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் அத்தீவில் வாழும் மக்களைச் சந்தித்து ஊக்கப்படுத்தவுள்ளார்.
அண்மையில், ஆப்ரிக்காவிலிருந்து குடியேற்றதாரர்களை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் பலர் கடலிலே உயிரிழந்தனர். இவர்களுக்காகவும் Lampedusa தீவில் செபிக்கவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், தேவையில்
இருக்கும் புலம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுமாறு
அழைப்புவிடுப்பார் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் ஏற்கனவே
அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. ஆறாயிரம் குருத்துவ மாணவர்கள், நவ துறவியர் மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவோருக்குத் திருத்தந்தை திருப்பலி
ஜூலை,06,2013. 66 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ ஆறாயிரம் குருத்துவ மாணவர்கள்,
நவ துறவியர் மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவோருக்கு இஞ்ஞாயிறு
காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில்
திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்பிக்கை ஆண்டின் ஒரு பகுதியாக, இக்குருத்துவ மாணவர்கள், நவ துறவியர் மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவோருக்கு உரோமையில் இவ்வியாழன் முதல், கூட்டங்கள், திருநற்கருணை ஆராதனை, ஒப்புரவு திருவருட்சாதனங்கள் மற்றும் பிற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இன்னும், இக்குருத்துவ மாணவர்கள், நவ
துறவியர் மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவோரை இச்சனிக்கிழமை
மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பது அவரது இந்நாளையத்
திட்டத்தில் உள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. வத்திக்கான் புத்தக வெளியீட்டாளர் : புதிய அப்போஸ்தலிக்கத் திருமடல் ”விசுவாச ஒளி” ஓர் ஆன்மீக ஒளி
ஜூலை,06,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ”விசுவாச ஒளி” (“Lumen Fidei”) என்ற
முதல் அப்போஸ்தலிக்கத் திருமடலின் தலைப்புப் பரிந்துரைப்பது போல அது ஓர்
ஆன்மீக ஒளியாக உள்ளது என்று வத்திக்கான் புத்தக வெளியீட்டு நிறுவன
இயக்குனர் அருள்பணி ஜூசப்பே கோஸ்தா கூறினார்.
இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட புதிய அப்போஸ்தலிக்கத் திருமடல் குறித்து CNA செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அருள்பணி கோஸ்தா, இத்திருமடல் ஆன்மீகப் புதுப்பித்தல் உணர்வை நன்றாக விளக்குகின்றது என்று கூறினார்.
இத்திருமடல், திருத்தந்தை பிரான்சிஸ், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகிய இருவரின் பாணியையும் கொண்டுள்ளது என்று கூறிய அருள்பணி கோஸ்தா, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது திருமடலாக இதனை வெளியிட்டிருப்பது, இவ்விரு திருத்தந்தையருக்கும் இடையே இருக்கும் ஆன்மீகச் சகோதரத்துவத்தின் அடையாளமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், ”விசுவாச ஒளி” திருமடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனின் CAFOD பிறரன்பு அமைப்பு,
நமது விசுவாசம் கடவுளிடமிருந்து வரும் விலைமதிப்பில்லாத கொடை மற்றும்
மக்களின் வாழ்வை மாற்றவல்ல நன்மைக்கான வல்லமை மிக்க சக்தி என்று
கூறியுள்ளது.
ஆதாரம் : CNA
8. ஒரிசாவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவருக்கு விருது
ஜூலை,06,2013. ஒரிசா
மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு இடம்பெற்ற கிறிஸ்தவர்க்கு
எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை உரிமைகளைப்
பெற்றுத் தருவதற்கு கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவர் ஆற்றிய மனிதாபிமானப்
பணிகளைப் பாராட்டி, அவருக்கு, தேசிய சிறுபான்மை உரிமைகள் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒரிசாவின்
கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணியாளர் அஜய் சிங்
அவர்கள் இவ்வெள்ளிக்கிழமையன்று புதுடெல்லயில் இவ்விருதைப் பெற்றுள்ளார்.
இந்தியாவில்
கடைப்பிடிக்கப்பட்ட சிறுபான்மை உரிமைகள் தினத்தையொட்டி தேசிய சிறுபான்மை
உரிமைகள் அவை ஏற்பாடு செய்திருந்த இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய
நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி
அருள்பணியாளர் அஜய் சிங்க்கு இவ்விருதை வழங்கினார்.
இவ்விருது 2 இலட்சம் ரூபாய் காசோலையையும், ஒரு சான்றிதழையும் கொண்டது.
கந்தமால்
மாவட்டத்தில் 2008ம் ஆண்டு ஆகஸ்டில் ஏழு வாரங்களுக்கு இடம்பெற்ற
கிறிஸ்தவர்க்கு எதிராக வன்முறையில் 100 பேருக்குமேல் இறந்தனர் மற்றும்
ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்தனர்.
ஆதாரம் : UCAN
No comments:
Post a Comment