1. திருத்தந்தை பிரான்சிஸ் : பிறருடன் பகிர்ந்துகொள்ளவே நம்பிக்கை நமக்கு வழங்கப்பட்டுள்ளது
2. பிரேசில் நாட்டில் மேய்ப்புப்பணி பயணத்தின்போது, திறந்த காரிலேயே பயணம் செய்ய திருத்தந்தை விருப்பம்
3. இயேசுவின் மீது இளையோர் கொண்டிருக்கும் அன்பும், நம்பிக்கையும் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் வழி இன்னும் ஆழப்படும்
4. உணவுப் பாதுகாப்பு குறித்த சட்டவரைவுகள் தகுந்த முறையில் விவாதிக்கப்படவேண்டும், இந்திய ஆயர் பேரவை வேண்டுகோள்
5. உத்திராக்கண்ட் வெள்ள நிவாரணப் பணிகளில் Faridabad உயர்மறைமாவட்டம்
6. பிரித்தானிய அரசின் ஓரினத் திருமண நடவடிக்கை அந்நாட்டுச் சமுதாயத்தின்மீது நீடித்த பாதிப்புக்களை உருவாக்கும், ஆயர் பேரவை
7. இஸ்பெயினின் ஓர் அரசு சாரா அமைப்பு, ஏழை நாடுகளின் பார்வைத்திறன் குறைந்த குழந்தைகளுக்கு உதவி
8. நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாளில் சமுதாயப் பணிகளை மேற்கொள்ள ஐ.நா. அழைப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : பிறருடன் பகிர்ந்துகொள்ளவே நம்பிக்கை நமக்கு வழங்கப்பட்டுள்ளது
ஜூலை,18,2013. “இந்த நம்பிக்கை ஆண்டில் நாம் நினைவில் கொள்ளவேண்டிய ஓர் உண்மை இது: நம்மிலேயே வைத்துக்கொள்வதற்கு அல்ல, மாறாக, பிறருடன் பகிர்ந்துகொள்ளவே நம்பிக்கை நமக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிறிஸ்தவரும் திருத்தூதரே” என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.
மேலும், வருகிற செப்டம்பர் மாதம் 16ம் தேதி திங்களன்று,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் மறைமாவட்டத்தின் அருள் பணியாளர்களை
புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் சந்திப்பார் என்ற செய்தியை
ஒரு மடல் வழியாக தெரிவித்துள்ளார் கர்தினால் Agostino Vallini.
கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னை உரோம் ஆயர் என்றே அடிக்கடி கூறிவந்துள்ளார் என்பதை, தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் Vallini, செப்டம்பர் மாதம் காலை 10 மணிக்கு இச்சந்திப்பு நிகழும் என்றும் அறிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Buenos Aires பேராயராக பணியாற்றிய வேளையில், 2008ம்
ஆண்டு தன் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள் பணியாளர்களுக்கு எழுதியிருந்த
மடலை உரோம் அருள் பணியாளர்களும் இச்சந்திப்பிற்கு முன்னர் வாசிக்குமாறு
திருத்தந்தை விழைகிறார் என்று கூறியுள்ள கர்தினால் Vallini, அம்மடலின் பிரதி ஒன்றை அனைவருக்கும் மின்னஞ்சல் வழியே அனுப்பியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. பிரேசில் நாட்டில் மேய்ப்புப்பணி பயணத்தின்போது, திறந்த காரிலேயே பயணம் செய்ய திருத்தந்தை விருப்பம்
ஜூலை,18,2013. ஜூலை 22ம் தேதி, வருகிற திங்கள் முதல் பிரேசில் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் முதல் மேய்ப்புப்பணி பயணத்தின்போது, திறந்த காரிலேயே அவர் பயணம் செய்ய விழைவதாக அறிவித்துள்ளார்.
பொதுவாக, திருத்தந்தையர் வெளிநாடுகளில் பயணங்கள் மேற்கொள்ளும்போது, குண்டு துளைக்காத கண்ணாடிக் கூடு பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்வர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மக்களுடன் தொடர்பு கொள்வதை முக்கியமென்று கருதுவதால், தான் வழக்கமாக புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் பயன்படுத்தும் திறந்த காரையே பயன்படுத்த விரும்புகிறார் என்று, இப்பயணத்தின் விவரங்களை இப்புதனன்று செய்தியாளர்களுக்கு வழங்கிய திருப்பீடப் பேச்சாளர் அருள் தந்தை Federico Lombardi அவர்கள் கூறினார்.
திருத்தந்தையின் இந்த முடிவை அடுத்து, பிரேசில் அரசு தன் பாதுகாப்பு முயற்சிகளில் மாற்றங்கள் செய்யுமா என்பது தற்போது தெரியாது என்று கூறிய அருள் தந்தை லொம்பார்தி, வத்திக்கான் காவலர்கள் வழக்கம்போல் திருத்தந்தையைச் சுற்றி பாதுகாப்பு தருவர் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
2014ம் ஆண்டு நிகழவிருக்கும் உலகக் கால்பந்து போட்டி, மற்றும்
2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளையொட்டி பிரேசில்
நாட்டில் நிலவிவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் திருத்தந்தையின் பயணத்தைப்
பாதிக்காது என்று தாங்கள் நம்புவதாகவும் அருள் தந்தை லொம்பார்தி
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி/AP
3. இயேசுவின் மீது இளையோர் கொண்டிருக்கும் அன்பும், நம்பிக்கையும் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் வழி இன்னும் ஆழப்படும்
ஜூலை,18,2013. இயேசுவின் மீது இளையோர் கொண்டிருக்கும் அன்பும், நம்பிக்கையும் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் வழியே இன்னும் ஆழப்பட வேண்டும் என்றும், நாளைய
உலகில் இவ்விளையோர் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவேண்டும் என்றும்
வேண்டிக்கொள்வோம் என்ற அழைப்பை இந்திய ஆயர் ஒருவர் விடுத்தார்.
ஜூலை 16ம் தேதி, கார்மேல் அன்னை திருநாளன்று, மும்பை நகரின் அந்தேரியில் அமைந்துள்ள கார்மேல் அருள் சகோதரிகள் இல்லத்தில் திருப்பலியாற்றிய மும்பை துணை ஆயர் Agnelo Gracias அவர்கள், அன்னையின் பரிந்துரையால், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நல்வாழ்வைப் பெறவும், உலக இளையோர் நாளைக் கொண்டாடச் செல்லும் இளையோர் தங்கள் நம்பிக்கையில் வளரவும் செபங்களை எழுப்பும்படி கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 10,000க்கும் அதிகமான இளையோர் கையெழுத்திட்டுள்ள ஒரு மரச்சிலுவை ரியோ டி ஜெனீரோ நகரில் திருத்தந்தையிடம் அளிக்கப்படும் என்றும், இதனைப் பெற்றுக்கொள்ள திருத்தந்தை விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும் CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Lewe Youth Movement, அதாவது, வாழ்வு இளையோர் இயக்கம் என்ற அமைப்பினரால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலுவை, உலக இளையோர் நாட்களில் ரியோ டி ஜெனீரோ நகரில் இளையோர் முன்னிலையில் வைக்கப்படும் என்றும், இச்சிலுவையில் மேலும் கையெழுத்திட விழையும் இளையோர் அவ்வாறே செய்யலாம் என்றும் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Maria Isabel Magana கூறியுள்ளார்.
தங்கள் நம்பிக்கையை இன்னும் ஆழமாக வாழ்வதற்கு, தேவைப்பட்டால்,
கிறிஸ்துவுடன் தாங்களும் சிலுவையில் அறையப்பட தயாராக இருக்கிறோம் என்பதை
வெளிப்படுத்த இளையோர் இச்சிலுவையில் தங்கள் கையெழுத்தை இடுகின்றனர் என்று Magana விளக்கம் அளித்தார்.
ஆதாரம் : AsiaNews / CNA/EWTN
4. உணவுப் பாதுகாப்பு குறித்த சட்டவரைவுகள் தகுந்த முறையில் விவாதிக்கப்படவேண்டும், இந்திய ஆயர் பேரவை வேண்டுகோள்
ஜூலை,18,2013.
அடுத்துவரும் சில வாரங்களில் இந்திய பாராளுமன்றத்தில்
விவாதிக்கப்படவிருக்கும் உணவுப் பாதுகாப்பு குறித்த சட்டவரைவுகள் தகுந்த
முறையில் விவாதிக்கப்படவேண்டும் என்று இந்திய ஆயர் பேரவையின் அதிகாரி
ஒருவர் கூறினார்.
பீகார் மாநிலத்தில் கலப்படம் செய்யப்பட்ட, கெட்டுப்போன உணவை உண்டதால் 22 குழந்தைகள் பலியானதைக் குறித்து Fides செய்தியிடம் தன் கருத்தை வெளியிட்ட இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, முன்னேற்ற பணிக்குழுவின் செயலர் அருள் பணியாளர் சார்லஸ் இருதயம் இவ்வாறு கூறினார்.
பள்ளியில்
வழங்கப்பட்ட மதிய உணவில் கலந்திருந்த நச்சுப் பொருள்களால் 10
வயதுக்குட்பட்ட 22 குழந்தைகள் பீகார் மாநிலத்தில் இறந்தது குறித்து ஆழ்ந்த
வருத்தத்தைத் தெரிவித்த அருள் பணியாளர் இருதயம் அவர்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்வது அரசின் தலையாயக் கடமை என்று எடுத்துரைத்தார்.
இந்தியாவில்
கத்தோலிக்க திருஅவையால் நடத்தப்படும் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு
வழங்கப்படும் உணவைக் குறித்து மிகுந்த கவனம் தேவைப்படுகிறது என்பதை இந்தத்
துயர நிகழ்வு நமக்குச் சொல்லித் தருகிறது என்று அருள் பணியாளர் இருதயம்
மேலும் கூறினார்.
உணவு
பாதுகாப்புச் சட்டம் என்று இந்தியப் பாராளுமன்றம் மேற்கொண்டுள்ள முயற்சியை
இந்திய கத்தோலிக்கத் திருஅவை முற்றிலும் ஆதரிக்கிறது என்பதையும் அருள்
பணியாளர் இருதயம் வலியுறுத்திக் கூறினார்.
ஆதாரம் : Fides
5. உத்திராக்கண்ட் வெள்ள நிவாரணப் பணிகளில் Faridabad உயர்மறைமாவட்டம்
ஜூலை,18,2013. உத்திராக்கண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு கிராமங்களை மீண்டும் கட்டியெழுப்ப Faridabad சீரோ மலபார் வழிபாட்டு முறை உயர்மறைமாவட்டம் முடிவெடுத்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 12 அருள் பணியாளர்களையும் இன்னும் பல நூறு தன்னார்வத் தொண்டர்களையும் அனுப்பியுள்ளதாக, சீரோ மலபார் பேராயர் Kuriakose Bharanikulangara, UCAN செய்தியிடம் கூறினார்.
Bijnor மறைமாவட்டத்துடன் இணைந்து, Bijnor மாவட்டத்தில் உள்ள Fathepur, Koharpur, Simlakala, Similie ஆகிய கிராமங்களில் பணிகள் துவுக்கப்பட்டுள்ளன என்று பேராயர் தெரிவித்தார்.
ஜூலை 7ம் தேதி முதல் 14ம் தேதி முடிய மக்களிடமிருந்து திரட்டப்பட்ட 4 இலட்சத்திற்கும் அதிகமான தொகை, இக்கிராமங்களுக்குத் தேவையான பொருட்களாக அனுப்பப்பட்டுள்ளது என்று, இப்பணிகளை ஒருங்கிணைக்கும் அருள் பணியாளர் Varghese Palatty, UCAN செய்தியிடம் கூறினார்.
ஆதாரம் : UCAN
6. பிரித்தானிய அரசின் ஓரினத் திருமண நடவடிக்கை அந்நாட்டுச் சமுதாயத்தின்மீது நீடித்த பாதிப்புக்களை உருவாக்கும், ஆயர் பேரவை
ஜூலை,18,2013. ஓரினத் திருமணத்தை ஆதரித்து பிரித்தானிய பாராளுமன்றமும், எலிசபெத் அரசியும் வழங்கியுள்ள ஒப்புதல், பிரித்தானிய சமுதாயத்தின் மீது நீடித்த பாதிப்புக்களை உருவாக்கும் என்று இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர் பேரவை வருத்தம் தெரிவித்துள்ளது.
ஜூலை 17, இப்புதனன்று எலிசபெத் அரசியால் கையெழுத்திடப்பட்ட இந்தச் சட்டம், பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டதும், விவாதிக்கப்பட்டதும் தகுந்த முறையில் அமையவில்லை என்று ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மனித சமுதாயத்தின் அடிப்படை நியதிகளான திருமணம், குடும்பம் ஆகிய அமைப்புக்களை கேள்விக்குறியாக்கியுள்ள இந்தச் சட்டம், கத்தோலிக்கத் திருஅவையின் படிப்பினைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதையும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஓரினத் திருமணங்களை நடத்திவைக்க மறுக்கும் பங்குத்தளங்கள், கோவில்கள்
ஆகிய நிறுவனங்களுக்கு இச்சட்டத்தில் தகுந்த பாதுகாப்பும் தரப்படவில்லை
என்பதை ஆயர்கள் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. இஸ்பெயினின் ஓர் அரசு சாரா அமைப்பு, ஏழை நாடுகளின் பார்வைத்திறன் குறைந்த குழந்தைகளுக்கு உதவி
ஜூலை,18,2013. இஸ்பெயின் நாட்டில் இயங்கி வரும் ஓர் அரசு சாரா அமைப்பு, பார்வைத்திறன் குறைந்த 2 இலட்சத்து 50,000க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கடந்த 15 ஆண்டுகளாக உதவிகள் செய்துள்ளது.
ONCE என்றழைக்கப்படும் இந்த அமைப்பின் உதவியால், இந்தியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் பயனடைந்துள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பார்வைத்திறன் அற்றோரைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், மற்றும் பார்வைத்திறன் அற்றோர் வாசிக்கும் Braille வழிப் புத்தகங்கள் என்ற பல வழிகளில் இவ்வமைப்பினர் உதவிகள் செய்து வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 121,684 குழந்தைகள் ONCE அமைப்பினால் பயனடைந்துள்ளனர் என்று Fides செய்தி மேலும் கூறுகிறது.
ஆதாரம் : Fides
8. நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாளில் சமுதாயப் பணிகளை மேற்கொள்ள ஐ.நா. அழைப்பு
ஜூலை,18,2013. மனித உரிமைகளுக்காகவும், சமுதாய நீதிக்காகவும் தன் வாழ்வின் 67 ஆண்டுகளைச் செலவிட்ட நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள் அன்று, ஒவ்வொருவரும்
67 நிமிடங்களாவது சமுதாயப் பணிகளை மேற்கொள்வது சிறந்த ஓர் அடையாளமாக
இருக்கும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
ஜூலை 18, இவ்வியாழனன்று, உலகப் புகழ்பெற்ற நெல்சன் மண்டேலா அவர்களின் 95வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நாளைச் சிறப்பிக்கும் நோக்கத்துடன், ஜூலை 18ம் தேதியை, நெல்சன் மண்டேலா உலக நாள் என்று ஐ.நா. பொதுஅவை 2010ம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.
நெல்சன் மண்டேலா அவர்கள் தென் ஆப்ரிக்காவில் நிலவி வந்த இனவெறிக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்திற்காக, 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தபோது, அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டது. இந்த நோயின் தாக்கத்தால், அவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமடைந்து வருகிறார்.
இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட அவரது 95வது பிறந்தநாளையொட்டி, தென் ஆப்ரிக்காவின் அனைத்து பள்ளிகளிலும், காலை பாடங்கள் துவங்குவதற்கு முன், நெல்சன் மண்டேலா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி, குழந்தைகள் பாடல்கள் பாடினர்.
1994ம் ஆண்டு முதல் தென் ஆப்ரிக்காவை குடியரசாக மாற்றிய நெல்சன் மண்டேலா அவர்கள், அக்குடியரசின் முதல் அரசுத் தலைவராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். இதுவரை 250க்கும் அதிகமான உலக விருதுகளைப் பெற்றுள்ள அவர், 1993ம் ஆண்டு நொபெல் அமைதி விருதையும் பெற்றுள்ளார்.
ஆதாரம் : UN
No comments:
Post a Comment