1. ஜக்தல்பூர் சீரோ-மலபார் வழிபாட்டுமுறை மறைமாவட்டத்துக்குப் புதிய ஆயர்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : செபம், மனத்தாழ்மை, பிறரன்பு ஆகியவை தூயவாழ்வுக்கான வழி
3. ரியோ டி ஜெனீரோ திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றது
4. இயேசு சபை அதிபர் இளையோரிடம் : கண்களும் இதயங்களும் திறந்தே இருக்கட்டும்
5. கர்தினால் கிரேசியஸ் : அருள்சகோதரி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது மனித சமுதாயத்துக்கு எதிரான பயங்கரவாதச் செயல்
6. பாகிஸ்தான் கிறிஸ்தவர் ஒருவருக்கு தெய்வநிந்தனை சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனை
7. தெற்கு ஆசியாவில் மனித வியாபாரத்துக்குப் பலியாகும் ஒரு இலட்சம் பெண்களைப் பாதுகாப்பதற்கு ஐ.நா. புதிய திட்டம்
8. மியான்மாரில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள், அரசுத்தலைவர் செயின்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஜக்தல்பூர் சீரோ-மலபார் வழிபாட்டுமுறை மறைமாவட்டத்துக்குப் புதிய ஆயர்
ஜூலை,16,2013. இந்தியாவின் ஜக்தல்பூர் சீரோ-மலபார் வழிபாட்டுமுறை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஜோசப் கொல்லம்பரம்பில் (Joseph Kollamparampil) அவர்களை இச்செவ்வாயன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜக்தல்பூர் சீரோ-மலபார் வழிபாட்டுமுறை மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் சைமன் ஸ்டாக் பாலத்தாரா (Simon Stock Palathara) அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், அம்மறைமாவட்டத்துக்குப் புதிய ஆயரை நியமனம் செய்துள்ளார்.
கேரளாவில் 1958ம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் ஜோசப் கொல்லம்பரம்பில், C.M.I.என்ற கார்மேல் அமலமரி சபையில் சேர்ந்து 1985ம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் மறைப்பணியியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தற்போது போபால் Samanvaya இறையியல் கல்லூரியின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : செபம், மனத்தாழ்மை, பிறரன்பு ஆகியவை தூயவாழ்வுக்கான வழி
ஜூலை,16,2013. கிறிஸ்தவ வாழ்வில் செபம், மனத்தாழ்மை, எல்லார்மீதும்
காட்டப்படும் பிறரன்பு ஆகியவை இன்றியமையாத கூறுகள். இவை தூயவாழ்வுக்கான
வழி என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் @Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ப்ரெஞ்ச், போர்த்துக்கீசியம், ஜெர்மானியம், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் எழுதி வருகிறார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான்
வானியல் ஆய்வு மையத்திலுள்ள இயேசு சபை இல்லக் குழுவுடன் சேர்ந்து மதிய
உணவு அருந்தினார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம் என்று
அக்குழுவினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளனர்.
இஞ்ஞாயிறன்று
காஸ்தெல் கந்தோல்ஃபோவில் நண்பகல் மூவேளை உரை ஆற்றிய பின்னர்
அவ்விடத்திலுள்ள இயேசு சபை இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மதிய
உணவு அருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. ரியோ டி ஜெனீரோ திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றது
ஜூலை,16,2013. அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தின நிகழ்வுக்காகப் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவுக்கும், Aparecida மரியா தேசிய திருத்தலத்துக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்லவிருப்பது மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கப்படுவதாக Aparecida உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் Raymundo Damasceno Assis கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Aparecida மரியா திருத்தலத்துக்குச் செல்லவிருப்பது குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் Damasceno,
கடந்த வாரத்தில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து இத்திருப்பயணம் குறித்துப் பேசியதை
விளக்கினார்.
இம்மாதம் 24ம் தேதி காலை 10 மணியளவில் Aparecida மரியா திருத்தலத்துக்குச் செல்லவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், அப்பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்துவார், பின்னர் அப்பசிலிக்கா வளாகத்தில் மக்களைச் சந்திப்பார், பிற்பகலில் குருத்துவ மாணவர்களையும், அடைப்பட்ட துறவு இல்லச் சகோதரிகளையும் சந்திப்பார் என்று கூறினார் கர்தினால் Damasceno.
ரியோ
டி ஜெனீரோவில் இம்மாதம் 23 முதல் 28 வரை நடைபெறவிருக்கும் அனைத்துலக
இளையோர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு 3 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு
மேற்பட்ட மக்கள் ஏற்கனவே தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாமலே பலர் இதில் கலந்து கொள்வார்கள்
என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
6,500 நிருபர்கள் இவ்விளையோர் தின நிகழ்வுகள் குறித்து செய்திகளை வெளியிடுவார்கள் எனவும், 7,000 வெளிநாட்டவர் உட்பட 60 ஆயிரம் தன்னார்வப் பணியாளர்களும் பணியில் இருப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. இயேசு சபை அதிபர் இளையோரிடம் : கண்களும் இதயங்களும் திறந்தே இருக்கட்டும்
ஜூலை,16,2013.
இவ்விளையோர் தினத்தில் கலந்து கொள்ளச் செல்லும் இளையோர் எப்பொழுதும்
தங்களின் கண்களையும் இதயங்களையும் திறந்தே வைத்திருக்குமாறு
கேட்டுக்கொண்டார் இயேசு சபை அதிபர் அருள்பணி அடோல்ஃபோ நிக்கோலாஸ்.
ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவிருக்கும் இளையோர் தினத்தில் கலந்து கொள்வதற்காக, சான்
சால்வதோரில் 10 நாள்கள் முன்தயாரிப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்
ஏறக்குறைய இரண்டாயிரம் இளையோருக்கு இத்திங்களன்று திருப்பலி நிகழ்த்தியபோது
இவ்வாறு கூறினார் அருள்பணி நிக்கோலாஸ்.
பல முதியவர்கள் சொல்வது போல இளையோரிடம் விசுவாசம் இல்லாமல் இல்லை, இளையோர் தங்களின் இதயங்களை நோக்கினால் அங்கே அதனைக் காண்பார்கள் என்றும், பிரேசில் மக்களையும் அங்கு வரும் மற்ற திருப்பயணிகளையும் பெரிய இதயத்துடனும், பரந்த கண்ணோட்டத்துடனும் பார்க்கும்போது வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்றும் அருள்பணி நிக்கோலாஸ் கூறினார்.
கிறிஸ்தவத்தில் இரகசியங்களின் இரகசியம் அன்பு என்றுரைத்த அருள்பணி நிக்கோலாஸ், இறையன்பு பிறரன்பாக மாறுகிறது என்றும் கூறினார்.
இந்த
முன்தயாரிப்புக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய இரண்டாயிரம்
இளையோரில் பெரும்பாலானோர் பல நாடுகளின் இயேசு சபை பல்கலைக்கழகங்களைச்
சார்ந்தவர்கள் ஆவர்.
ஆதாரம் : CNS
5. கர்தினால் கிரேசியஸ் : அருள்சகோதரி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது மனித சமுதாயத்துக்கு எதிரான பயங்கரவாதச் செயல்
ஜூலை,16,2013. ஒரிசாவில் இளம் அருள்சகோதரி ஒருவர், கும்பல்
ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது மனித சமுதாயத்துக்கு
எதிரான பயங்கரவாதச் செயல் என்று தனது வன்மையான கண்டனத்தைத்
தெரிவித்துள்ளார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு
கிரேசியஸ்.
இந்த அருள்சகோதரி, கும்பல்
ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது நம் பெண்ணுக்கு எதிரான
உடல் மற்றும் உணர்வுரீதியான பயங்கரவாதச் செயல் என்று கடுஞ்சொற்களால்
சாடியுள்ளார் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
இச்செயல், தனது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்துள்ள இளம் பெண்ணுக்குச் செய்யப்பட்ட தீய செயல் என்றும், இப்பாலியல் வன்கொடுமை, பெண்களின் மதிப்புக்கு எதிரான அருவருக்கதக்க குற்றம் மற்றும் வெறுக்கத்தக்க வரம்புமீறிய வெறிச்செயல் என்றும், நமது நாட்டிலும் சமூகத்திலும் பெண்களின் நிலையை இச்செயல் பிரதிபலிக்கின்றது என்றும் கர்தினால் கிரேசியஸ் கூறியுள்ளார்.
அரசு நிறுவனங்களின் அக்கறையற்ற நிலை திகைக்க வைக்கின்றது எனவும், கந்தமாலில் சட்டமும் ஒழுங்கும் கடுமையாய்ச் சீரழிந்துள்ளன எனவும் குறைகூறியுள்ள கர்தினால் கிரேசியஸ், நாட்டில் பாலியல் வன்செயல்கள் அதிகரித்து வருவது கடும் சமூகப் பிரச்சனை எனவும் கூறியுள்ளார்.
மேலும், தனது
உறவினர்களில் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ள
28 வயது அருள்சகோதரி விவகாரம் குறித்துக் கண்டித்துப் பேசியுள்ள
கட்டாக்-புவனேஷ்வர் பேராயர் John Barwa அவர்களும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு காக்கப்பட உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமாறு கேட்டுள்ளார்.
ஆதாரம் : AsiaNews
6. பாகிஸ்தான் கிறிஸ்தவர் ஒருவருக்கு தெய்வநிந்தனை சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனை
ஜூலை,16,2013.
கைபேசியில் தெய்வநிந்தனை செய்தியை அனுப்பினார் என்று குற்றம் சாட்டப்பட்டு
பாகிஸ்தான் கிறிஸ்தவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Seventh Day Adventist கிறிஸ்தவ சபையைச் சார்ந்த Sajjad Gill என்பவர் தனது அண்டை வீட்டாரால் குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தானின் தெய்வநிந்தனை சட்டத்தின்கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தெய்வநிந்தனை செய்தி, முறைப்படி பதிவு செய்யப்படாத கைபேசியிலிருந்து வந்திருப்பதாகவும், Gillன் கைபேசியை சோதித்த காவல்துறையினர் அச்செய்தி அவரது கைபேசியிலிருந்து அனுப்பப்படவில்லை என அறிந்ததாகவும் கூறும் ஊடகங்கள், இருந்தபோதிலும் நீதிமன்றம் Gillஐ குற்றவாளி எனக் கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளன.
மேலும், இந்தியாவின் ஒரிசாவில், பிரிந்த கிறிஸ்தவ சபை பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்க, அதனை விபத்து என்று சொல்லி அவ்வழக்கைக் காவல்துறை திசைதிருப்ப முயற்சிப்பதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
ஆதாரம் : Fides
7. தெற்கு ஆசியாவில் மனித வியாபாரத்துக்குப் பலியாகும் ஒரு இலட்சம் பெண்களைப் பாதுகாப்பதற்கு ஐ.நா. புதிய திட்டம்
ஜூலை,16,2013. தெற்கு ஆசியாவில் மனித வியாபாரத்துக்குப் பலியாகும் ஒரு இலட்சம் சிறுமிகள் மற்றும் பெண்களை, அதிலிருந்து காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தொழில் நிறுவனமும், பிரிட்டன் அரசின் பன்னாட்டு வளர்ச்சித் துறையும் இணைந்து புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளன.
தெற்கு ஆசியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் முறைப்படி வேலை அங்கீகாரத்தையும், தரமான ஊதியத்தையும் பெறவும், மனித வியாபாரத்துக்குப் பலியாகாமல் இருக்கவும் உதவிசெய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய திட்டத்தின் மூலம், அப்பெண்கள் வேலைக்குரிய திறமைகளோடும், அந்நாடுகளில் வாழ்வதற்கான தயாரிப்புகளோடும் செல்வதற்கு உதவி பெறுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
சிறார் தொழில்முறையை ஒழிக்கும் நோக்கத்தில், 16
வயதுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான சிறுமிகள் பள்ளிப்படிப்பை விட்டுவிடாமல்
இருப்பதற்கும் இப்புதிய திட்டம் உதவி செய்யவிருக்கின்றது எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் கட்டாய வேலைசெய்யும் பெண்கள், ஆண்டுக்கு 120 கோடி டாலருக்கு அதிகமாகப் பணம் சம்பாதிக்கின்றனர் என்று ILO நிறுவனம் கூறியுள்ளது.
ILO அனைத்துலக தொழில் நிறுவனத்தின் கணிப்புப்படி, உலகில்
ஏறக்குறைய 2 கோடியே 10 இலட்சம் பேர் வியாபாரம் செய்யப்பட்டு கட்டாய
வேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனத் தெரிகின்றது.
ஆதாரம் : UN
8. மியான்மாரில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள், அரசுத்தலைவர் செயின்
ஜூலை,16,2013.
மியான்மாரிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் இவ்வாண்டு முடிவதற்குள்
விடுதலை செய்யப்படுவார்கள் என மியான்மார் அரசுத்தலைவர் தெயின் செயின்
கூறினார்.
இத்திங்களன்று
பிரிட்டனுக்கான தனது முதல் அதிகாரப்பூர்வச் சுற்றுப்பயணத்தைத்
தொடங்கியுள்ள மியான்மார் அரசுத்தலைவர் செயின் இலண்டனில் பிரதமர் டேவிட்
காமரூனைச் சந்தித்த பின்னர் இத்தகவலை வெளியிட்டார்.
மியான்மாரில், 2013ம் ஆண்டு முடிவதற்குள் மனச்சான்றின் கைதிகள் யாரும் இருக்கமாட்டார்கள் என்றும் இத்திங்களன்று தெயின் செயின் கூறினார்.
2010ம்
ஆண்டு மார்ச் மாதத்தில் அரசுத்தலைவர் தெயின் செயின் ஆட்சிக்கு வந்த
பின்னர் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment