1. இயேசு கிறிஸ்துவில் நம் நட்புணர்வை ஆழப்படுத்துபவைகளாக ரியோ நாட்கள் இருப்பதாக
2. மனித மாண்புக்கு எதிரான இழிசெயல்கள் குறித்த விழிப்புணர்வை மக்களில் ஊட்ட கல்கத்தா பேராயர் அழைப்பு
3. மெக்ஸிகோவில் கத்தோலிக்க குரு ஒருவர் கொலை
4.தேவ நிந்தனை குறுஞ்செய்தி அனுப்பியதாக பாகிஸ்தானில் கிறிஸ்தவ தம்பதி கைது
5. கென்யாவில் 6 இலட்சம் பேருக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்கும் கத்தோலிக்க உதவி நிறுவனம்
6. இந்தியாவில் மூன்றாண்டுகளில் நான்கு இலட்சம் தற்கொலைகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இயேசு கிறிஸ்துவில் நம் நட்புணர்வை ஆழப்படுத்துபவைகளாக ரியோ நாட்கள் இருப்பதாக
ஜூலை, 23,2013. இவ்வளவு சிறப்பு நிறைந்த உயர்வான வரவேற்பை வழங்கிய அனைவருக்கும், அரசு அதிகாரத்திலிருப்போருக்கும் நன்றியை உரைப்பதாக தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் தன் டுவிட்டர் பக்கத்தில் 9 மொழிகளில் செய்திகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், செவ்வாயன்று பிரசில் நாட்டில் இருந்துகொண்டே இச்செய்தியை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திங்கள் கிழமை முழுவதும் பயணம் செய்து உள்ளூர் நேரம் மாலை 4 மணியளவில் பிரேசில் நாட்டைச் சென்றடைந்த திருத்தந்தை, அந்நாளுக்குரிய செய்தியாக, 'இன்று
நாம் ஒர் அற்புதமான வாரத்தை ரியோவில் துவக்குகின்றோம். இயேசு கிறிஸ்துவில்
நம் நட்புணர்வை ஆழப்படுத்தும் நாட்களாக இவை இருப்பதாக' என்ற டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. மனித மாண்புக்கு எதிரான இழிசெயல்கள் குறித்த விழிப்புணர்வை மக்களில் ஊட்ட கல்கத்தா பேராயர் அழைப்பு
ஜூலை,23,2013. கல்கத்தாவில்
மூன்று வயது பெண்குழந்தை ஒன்று கற்பழித்துக் கொலைச்செய்யப்பட்டது
குறித்து தன் வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளார் அந்நகர் பேராயர் தாமஸ்
டி சூசா.
இந்தக் கொடூரமான மனிதாபிமானமற்ற செயல் குறித்து தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக உரைத்த பேராயர், மனித
மாண்புக்கு எதிரான இத்தகைய இழிசெயல்கள் குறித்த விழிப்புணர்வை மக்களில்
ஊட்ட திருஅவை தன்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும்
உறுதியளித்தார்.
வீடற்று
தெருவில் வாழும் ஒரு தம்பதியரின் இந்த மூன்று வயது குழந்தையின் மரணத்தால்
துயருறும் அனைவரோடும் தன் ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாகவும் பேராயர் டிசூசா
தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று
காணாமற்போன இந்த 3 வயது பெண் குழந்தையின் உயிரற்ற உடல் ஞாயிறன்று
காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இக்குழந்தையின் உடலை பரிசோதித்த
மருத்துவர்கள், அது கற்பழித்துக் கொலைச்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மக்களிடையே
நல்ல மனச்சான்றை உருவாக்க அனைத்து மதங்களுடன் கத்தோலிக்க தலத்திருஅவை
இணைந்து உழைக்க உள்ளதாகவும் உரைத்தார் பேராயர் டிசூசா.
ஆதாரம் : FIDES
3. மெக்ஸிகோவில் கத்தோலிக்க குரு ஒருவர் கொலை
ஜூலை,23,2013. மெக்ஸிகோவின் Ensenada நகரில் கத்தோலிக்க குரு ஒருவர், அடையாளம் தெரியாத மனிதர்களால் ஆயதங்களால் தாக்கப்பட்டுக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
மெக்ஸிகோவின் Baja California பகுதியில் சகாய அன்னை கோவிலின் பங்கு குருவாக பணியாற்றி வந்த குரு Ignacio Alvarez Cortez, இத்திங்களன்று கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரின் கொலைக்கான காரணம் மற்றும் இவரைக் கொலை செய்தவர்கள் குறித்த விவரம் எதுவும் இன்னும் கிட்டவில்லை என காவல்துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே மெக்ஸிகோ நாட்டில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் José Flores Preciado என்ற குரு, அடித்தேக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4.தேவ நிந்தனை குறுஞ்செய்தி அனுப்பியதாக பாகிஸ்தானில் கிறிஸ்தவ தம்பதி கைது
ஜூலை,23,2013. இஸ்லாம்
மதத்திற்கு எதிரான தேவநிந்தனை குறுஞ்செய்திகளை கைப்பேசி மூலம் அனுப்பினார்
என கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சுமத்துவது பாகிஸ்தானில் அதிகரித்து
வருவதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் Gojra பகுதியில் கடந்த வாரத்தில் கிறிஸ்தவ இளைஞர் ஒருவருக்கு, தேவ நிந்தனை குறுஞ்செய்தி வழங்கினார் என தண்டனை வழங்கப்பட்டிருக்க, கடந்த சனிக்கிழமையன்று அப்பகுதியின் இஸ்லாமிய குரு ஒருவருக்கு தேவ நிந்தனை வார்த்தைகள் அடங்கிய குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக, கிறிஸ்தவ தம்பதியர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
43 வயதான Shafqat Masih என்பவரும், 40 வயதான அவர் மனைவி Shagufta என்பவரும் இஸ்லாமிய குரு Rana Muhammad Ejaz என்பவருக்கு தேவ நிந்தனை குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இத்தம்பதியர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இத்தம்பதியருக்கு 5க்கும் 11க்கும் இடைப்பட்ட வயதுகளில் 4 குழந்தைகள் உள்ளன.
ஆதாரம் : ANS
5. கென்யாவில் 6 இலட்சம் பேருக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்கும் கத்தோலிக்க உதவி நிறுவனம்
ஜூலை,23,2013. கென்யாவின்
6 இலட்சம் மக்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் ஒன்றை
தீட்டி செயல்படுத்தி வருகின்றது இங்கிலாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க உதவி
நிறுவனமான CAFOD.
கென்யாவில்
ஏழ்மையால் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகளின் பள்ளிகள் மற்றும் நல
மையங்களுக்கு உதவ உள்ள இத்திட்டத்திற்கென ஏற்கனவே 5 இலட்சம் இங்கிலாந்து
பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது இக்கத்தோலிக்க உதவி அமைப்பு.
CAFODன் இத்திட்டத்திற்கென 15 இலட்சம் பவுண்டுகளை உதவியாக வழங்க உள்ளதாக ஐரோப்பிய ஐக்கிய அவையும் அறிவித்துள்ளது.
கென்யாவிலுள்ள நிறுவனம் ஒன்றின் மூலமே இதனை செயல்படுத்த உள்ள CAFOD, இத்திட்டத்தின் மூலம், நான்கு ஆண்டுகளில் 138 பள்ளிகள், நலமையங்கள் மற்றும் 69 சமூக அமைப்புகள் வழியாக, 6 இலட்சத்து 40 ஆயிரம் பேர் பலன் பெறுவர் எனவும் அறிவித்துள்ளது.
ஆதாரம் :
6. இந்தியாவில் மூன்றாண்டுகளில் நான்கு இலட்சம் தற்கொலைகள்
ஜூலை,23,2013. இந்தியாவில், நான்கு நிமிடத்துக்கு, ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில், நான்கு இலட்சத்து, 10,184 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூற்றுப்படி, 2010ம் ஆண்டில், இந்தியாவில், ஒரு இலட்சத்து, 34,599 பேரும், 2011ல், ஒரு இலட்சத்து, 35,585 பேரும், 2012ல், ஒரு இலட்சத்து, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
உலக அளவில், தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்திய அளவில், மேற்கு வங்காளம் முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. 2010ம் ஆண்டில், சென்னையில் மட்டும், 2,438 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
No comments:
Post a Comment