Tuesday 30 July 2013

Catholic News in Tamil - 24/07/13

1. ரியோவில் கூடியிருக்கும் இளையோரிடையே காணப்படும் மகிழ்வு, இறைவனின் புன்னகையை உலகிற்குப் பறைசாற்றுகிறது - இத்தாலியக் கர்தினால் Bagnasco

2. அனைத்துச் சாலைகளும் ரியோ தெ ஜனெய்ரோ நகரை நோக்கியேச் செல்கின்றன - பேராயர் Orani João Tempesta

3. மத்தியக் கிழக்குப் பகுதிலிருந்து வெளியாகும் புள்ளி விவரங்கள் திருப்பீடத்தை மிகவும் கவலைக்குள்ளாக்கி வருகிறது - பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்

4. அமைதியின் தூதராக கர்தினால் பிமென்ட்டா விளங்கினார் - இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Gracias

5. மன்னார் ஆயரை அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சு

6. தாய்லாந்து, மியான்மார் நாடுகளில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பயணம்

7. Manus தீவு, Lampedusa தீவைப் போல மாறும் ஆபத்து உள்ளது -  Papua New Guinea ஆயர்கள்

8. தமிழ் நூல்களை ஒலிவடிவ புத்தகங்களாக மாற்றும் அமெரிக்க தமிழர்

------------------------------------------------------------------------------------------------------

1. ரியோவில் கூடியிருக்கும் இளையோரிடையே காணப்படும் மகிழ்வு, இறைவனின் புன்னகையை உலகிற்குப் பறைசாற்றுகிறது - இத்தாலியக் கர்தினால் Bagnasco

ஜூலை,24,2013. உலகின் பல நாடுகளிலிருந்தும் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் கூடியிருக்கும் இளையோரிடையே காணப்படும் மகிழ்வு, இறைவனின் புன்னகையை உலகிற்குப் பறைசாற்றுகிறது என்று இத்தாலியக் கர்தினால் ஒருவர் கூறினார்.
பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் இடம்பெறும் 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள அங்கு சென்றிருக்கும் இத்தாலிய இளையோரை Casa Italia என்ற இல்லத்தில் சந்தித்த இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Angelo Bagnasco அவர்கள், அவ்வில்லத்தில் காணப்பட்ட ஆனந்தத்தையும் உற்சாகத்தையும் கண்டு இவ்வாறு கூறினார்.
இச்செவ்வாய் மாலை இவ்விளையோருக்கு சிறப்புத் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் Bagnasco அவர்கள், இளையோர் ஒவ்வொருவருடனும் பேசி மகிழ்ந்திருந்ததை, Zenit கத்தோலிக்க நாளிதழ் "பிரான்சிஸ் தாக்கம்" என்று விவரித்தது.
2000மாம் ஆண்டு இத்தாலியின் உரோம் நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாளுக்கென இயற்றப்பட்ட இளையோர் நாள் பாடலை அவ்வில்லத்தில் கூடியிருந்த இளையோர் பாடியதை, கர்தினால் Bagnasco அவர்கள் பாராட்டியதோடு, பிரேசில் நாட்டில் தாங்கள் பெற்றுள்ள வரவேற்புக்கு நன்றியும் கூறினார்.

ஆதாரம் Zenit

2. அனைத்துச் சாலைகளும் ரியோ தெ ஜனெய்ரோ நகரை நோக்கியேச் செல்கின்றன - பேராயர் Orani João Tempesta

ஜூலை,24,2013. இந்த வாரம் முழுவதும் அனைத்துச் சாலைகளும் ரியோ தெ ஜனெய்ரோ நகரை நோக்கியேச் செல்கின்றன என்று அந்நகரின் பேராயர் Orani João Tempesta அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ரியோ தெ ஜனெய்ரோ நகரை நெருங்கியபோது, அந்நகர் பேராயரும், நகர மேயரும் செய்தியாளர்களுக்கு நடத்திய ஒரு கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளையோரும் கலந்துகொண்டனர்.
அர்ஜென்டினா நாட்டிலிருந்து வந்திருந்த Alberto Perez என்ற இளைஞர், தனது நாட்டிலிருந்து 2,174 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாகவே கடந்து வந்ததாகவும், இங்கிருந்து திரும்பும்போது புதிய ஓர் இதயத்துடன் திரும்பும் நம்பிக்கை தனக்கு உள்ளதென்றும் கூறினார்.
Mozambique நாட்டிலிருந்து வந்திருந்த Crespim என்ற இளைஞர், தான் பகல் நேரத்தில் படிப்பதாகவும், இரவு நேரத்தில் உழைப்பதாகவும் கூறியதோடு, இந்த உலக நாளுக்கென தன் முதலாளி வழங்கியுள்ள முன் தொகைக்காக அடுத்த ஓராண்டு எவ்வித ஊதியமும் இன்றி தான் உழைக்க வேண்டும் என்றும், உலக இளையோர் நாளில் கலந்துகொள்ள இத்தகையத் தியாகம் ஏற்புடையதுதான் என்றும் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ரியோவின் மேயர், Eduardo Paes அவர்கள், இதுவரை நிகழ்ந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களைக் காட்டிலும் இது மறக்க முடியாத ஓர் அனுபவமாக இளையோருக்கு இருக்கும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.

ஆதாரம் Zenit

3. மத்தியக் கிழக்குப் பகுதிலிருந்து வெளியாகும் புள்ளி விவரங்கள் திருப்பீடத்தை மிகவும் கவலைக்குள்ளாக்கி வருகிறது - பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்

ஜூலை,24,2013. மத்தியக் கிழக்குப் பகுதியின் அமைதியற்றச் சூழலிலிருந்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் புள்ளி விவரங்கள் திருப்பீடத்தை மிகவும் கவலைக்குள்ளாக்கி வருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.அவையின் அமர்வுகளில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பு குறித்து நியூ யார்க் நகரில் இச்செவ்வாயன்று நடைபெற்ற அமர்வு ஒன்றில் இவ்வாறு கூறினார்.
'சிரியாவில் ஓர் அரசியல் தீர்வு உருவாவதற்குள் இன்னும் எவ்வளவு இரத்தம் சிந்தப்படவேண்டும்' என்று உயிர்ப்புப் பெருவிழாவன்று வழங்கிய 'ஊருக்கும் உலகுக்கும்' செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய அனைத்து நாடுகளிலும் அமைதி உருவாக கத்தோலிக்கத் திருஅவை தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளது என்று கூறினார்.
சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் போராட்டங்களால் அந்நாட்டு மக்களில் பத்தில் ஒரு பகுதியினர், அதாவது, 1 கோடியே, 80 இலட்சம் பேர் புலம் பெயர்ந்தோராக வாழ்வது மிகவும் வேதனையான உண்மை என்பதையும் பேராயர் சுள்ளிக்காட் எடுத்துரைத்தார்.
மக்களின் துயரங்களை மனதில் கொள்ளாமல், அடிப்படைவாதக் கொள்கைகளை நிலைநாட்ட ஒவ்வொரு குழுவும் ஆயுதம் ஏந்தும்போது, தீர்வுகள் கிடைப்பது அரிதாகிறது என்பதையும் திருப்பீடப் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.
அனைத்துத் தரப்பினரும், ஆயுதங்களைக் களைந்து, பேச்சு வார்த்தைகளிலும், ஒப்புரவிலும் தங்கள் கவனத்தைத் திருப்புவதையே திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வருகிறது என்பதையும் பேராயர் சுள்ளிக்காட் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

4. அமைதியின் தூதராக கர்தினால் பிமென்ட்டா விளங்கினார் - இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Gracias

ஜூலை,24,2013. பல்வேறு கருத்துக்களும், கண்ணோட்டங்களும் கொண்ட மக்களை ஒருங்கிணைக்கும் அமைதித் தூதராக கர்தினால் சைமன் பிமென்ட்டா அவர்கள் விளங்கினார் என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias கூறினார்.
ஜூலை 19, கடந்த வெள்ளிக்கிழமையன்று தன் 93வது வயதில் இறையடி சேர்ந்த முன்னாள் மும்பைப் பேராயர் கர்தினால் சைமன் பிமேன்ட்டா அவர்களின் இறுதிச் சடங்குத் திருப்பலி இச்செவ்வாயன்று கர்தினால் அவர்கள் பிறந்த இடமான Marol எனுமிடத்தில் நடைபெற்றது.
இத்திருப்பலியைத் தலைமையேற்று நடத்திய மும்பைப் பேராயர் கர்தினால் Gracias அவர்கள், கர்தினால் பிமேன்ட்டா அவர்களின் வாழ்வும் பணியும் மென்மையான, அமைதியான முறையில் அமைந்திருந்தன என்று கூறினார்.
தொடர்ந்து மழை பெய்த போதிலும், 5000க்கும் அதிகமானோர் கூடிவந்து, கர்தினால் பிமேன்ட்டா அவர்களுக்குத் தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர் என்று இந்தியச் செய்திதாள்கள் கூறின.

ஆதாரம் Times of India

5. மன்னார் ஆயரை அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சு

ஜூலை,24,2013. இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நிலவும் பற்றாக்குறைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக சென்று ஆய்வுசெய்யும் பொருட்டு, அரசுத் தலைவர் மஹிந்த இராஜபக்ஷ அவர்களின் பரிந்துரையின்படி, இரண்டு அமைச்சர்கள் இச்செவ்வாய் மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தனர்.
மன்னார் மறைமாவட்ட கிறிஸ்தவ அருள் பணியாளர்களுக்கும் அரசுத் தலைவருக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதையடுத்து, இச்செவ்வாய் மாலை மன்னாருக்குச் சென்றிருந்த அமைச்சர்களான திஸ்ஸ கரலியத்த மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் மாலை 6 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்களைச் சந்தித்து பேசினர்.
மன்னாரில் தற்போதுள்ள நிலவிவரும் சட்டவிரோத மீள்குடியேற்றம், பாகுபாடான தொழில்வாய்ப்பு வழங்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இச்சந்திப்பில் பேசப்பட்டன என்று தெரிகிறது.

ஆதாரம் TamilWin

6. தாய்லாந்து, மியான்மார் நாடுகளில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பயணம்

ஜூலை,24,2013. தாய்லாந்து, மியான்மார் ஆகிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் சவால்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதைத் தொடர விரும்புகிறோம் என்று இங்கிலாந்து ஆயர் Declan Lang கூறினார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவையின் பிரதிநிதிகளும், Missio எனப்படும் பிறரன்புப் பணி அமைப்பின் பிரதிநிதிகளும் கடந்த இரு வாரங்களாய் Bangkok, Yangon, Myitkyina ஆகிய பகுதிகளில் பயணங்கள் மேற்கொண்டனர்.
Yangon பேராயர் Charles Bo அவர்களையும், Myitkyina ஆயர் Francis Daw Tang அவர்களையும் இப்பிரதிநிதிகள் சந்தித்து, அப்பகுதிகளில் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறித்து பேசினர்.
மியான்மார் நாட்டில் நேர்மறையான பல மாற்றங்கள் உருவாகிவருவது நிறைவைத் தந்தபோதிலும், கச்சின் பகுதி மக்களுக்கும் அரசுக்கும் இடையே நிகழும் மோதல்கள் வருத்தத்தைத் தருகின்றன என்று ஆயர் Lang எடுத்துரைத்தார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவையும், Missio அமைப்பும் இப்பகுதிகளில் பல்வேறு சமுதாய முன்னேற்றப் பணிகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

7. Manus தீவு, Lampedusa தீவைப் போல மாறும் ஆபத்து உள்ளது -  Papua New Guinea ஆயர்கள்

ஜூலை,24,2013. இத்தாலியின் Lampedusa தீவைப் போல, Papua New Guinea நாட்டில் Manus தீவு மாறும் ஆபத்து உள்ளதென்று அந்நாட்டின் ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய நாட்டை நோக்கி படகுகளில் செல்லும் புலம் பெயர்ந்தொரைத் தங்கவைக்க Papua New Guinea நாட்டின் Manus தீவு ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியப் பிரதமரும், Papua New Guinea பிரதமரும் இணைந்து, சென்ற வார இறுதியில் வெளியிட்ட ஓர் அறிக்கையை அடுத்து, ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
Papua New Guinea நாடு ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு நாடு என்றும், Manus தீவுக்கு வரும் புலம்பெயர்ந்தொரைத் தங்கவைக்க, அங்கு போதிய வசதிகள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், புலம் பெயர்ந்தோர் குறித்த பிரச்சனையிலிருந்து ஆஸ்திரேலியா தப்பிக்க இந்த வழியைப் பின்பற்றுகிறது என்றும் கூறியுள்ளனர்.
அண்மையில் Lampedusaவுக்குச் சென்றிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் 'உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மை' என்று கூறியதை Papua New Guinea ஆயர்கள் குறிப்பிட்டு, புலம் பெயர்ந்தோர் பிரச்சனைக்கு, Manus தீவு ஒரு தீர்வு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆதாரம் Fides / AsiaNews

8. தமிழ் நூல்களை ஒலிவடிவ புத்தகங்களாக மாற்றும் அமெரிக்க தமிழர்

ஜூலை,24,2013. கல்கி, உ.வே.சுவாமிநாதையர் ஆகியோரின் நூல்களை, முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி கேட்கும் வண்ணம், அமெரிக்க வாழ் தமிழர், ஸ்ரீகாந்த் அவர்கள், ஒலிவடிவ புத்தகங்களாக உருவாக்கி வருகிறார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த, ஸ்ரீகாந்த், 20 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் குடியேறினார். அங்கு, மென்பொருள் துறையில், திட்ட மேலாளராக வேலை பார்த்தபடி, தமிழ் மன்றத்தை நிறுவிய ஸ்ரீகாந்த் அவர்கள், அதன் மூலம், தமிழ் தொடர்பான, பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது, சான்பிரான்சிஸ்கோ பாரதி தமிழ் மன்றத்தின் தலைவராக பணிபுரிந்து வரும் ஸ்ரீகாந்த் அவர்கள், அங்குள்ள, Stanford பல்கலை கழக வானொலியில், பாடல், நேர்காணல், நாடகம் என, பலநிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறார்.
அவருடைய பணிகளில் முக்கியமானது, நாவல்களை, ஒலிவடிவ புத்தகங்களாக தயாரிப்பது. கல்கியின், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு' ஆகிய நாவல்களை, ஒலிவடிவ புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். மேலும், உ.வே.சா.,வின், "என் சரித்திரம்' நூலை, ஒலிவடிவ புத்தகமாக மாற்றும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
இவருடைய ஒலிவடிவ நாவல்களைக் கேட்ட, மாற்றுத் திறனாளிகளும், முதியோரும், இவருடைய சேவையைப் பாராட்டி, நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும், பாராட்டி வருகின்றனர். அவருடைய இணைய முகவரி: www.tamilaudiobooks.com

ஆதாரம் Thinamalar

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...