மச்சு-பிச்சு மலை மர்மம்
தென்அமெரிக்க நாடான பெருவின் மச்சுபிச்சு மலை அதிசயங்கள் குறித்து 1911ம் ஆண்டு முதன்முதலில் உலகுக்கு அறிவித்தவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிங்காம்.
பெரு நாட்டில் வாழ்ந்த இன்கா பேரரசு, வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த 1450ம்
ஆண்டுகளில் மச்சுபிச்சு மலை கட்டுமானங்கள் அமைக்கப்பட்டதாக வரலாற்று
ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இன்கா பேரரசின் தலைநகரான குஸ்கோ நகரில் இருந்து
சுமார் 80 கி.மீ. தொலைவில் அடர்ந்த காடுகளுக்கு இடையே மச்சுபிச்சு அமைந்துள்ளது. இதன் மூன்றுபுறமும் சூழ்ந்து பாயும் உருபாமா நதி, மச்சுபிச்சுவுக்கு இயற்கை அகழிபோல் அமைந்துள்ளது. இது இன்கா பேரரசர் பச்சாகுட்டியின் மலை உறைவிடம் எனவும், எதிரிகள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுக்கப்பட்ட பகுதி எனவும் கூறப்படுகிறது.
சுமார் நூறு ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்த இன்கா பேரரசு, 1572ல் சரிந்தது. பெரியம்மை தாக்குதல் மற்றும் இஸ்பானிய படையெடுப்பால் இன்கா இனம் அழிந்து போனது.
மச்சுபிச்சு மலையானது குடியிருப்பு பகுதி, விவசாயப் பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையே பெரிய மதில் சுவர். விவசாயத் தளங்களில் நீரூற்றுகள், ஓடைகள் என திட்டமிடப்பட்ட பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. மச்சுபிச்சு மட்டுமின்றி அருகில் உள்ள மலைகளிலும் கட்டுமானங்கள், விவசாயத் தளங்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே சாலை வசதியும் செய்யப்பட்டிருப்பது பிரமிப்பாக உள்ளது.
மச்சுபிச்சுவைப் பாதுகாக்கப்பட்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக 1981ல் பெரு அரசு அறிவித்தது. 1983ல் யுனெஸ்கோ அமைப்பு அதை உலகப் பாரம்பரிய தலமாக அறிவித்தது.
ஆதாரம் சித்தார்கோட்டை
No comments:
Post a Comment