Wednesday 17 July 2013

Catholic News in Tamil - 15/07/13

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

2. அழைப்பு மற்றும் தனிப்பட்ட அன்பின் கனியே வாழ்வு

3. உத்தரகண்ட்டில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவனந்தபுரம் பெருமறைமாவட்டம் உதவி

4. எய்ட்ஸ் விழிப்புணர்வுப்பணியில் தாய்வான் திரு அவை

5. காற்று மாசுக்கேட்டால் ஆண்டுக்கு 20 இலட்சம் மரணங்கள்

6. இலங்கையில் 90 நிமிடங்களுக்கு பெண் ஒருவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

ஜூலை,15,2013. இறைவன் நம்மிடமிருந்து பலியை அல்ல, மாறாக இரக்கத்தையே எதிர்பார்க்கிறார் என்பதை உணர்ந்தவர்களாக நாம் ஒவ்வொருவரும் நல்ல சமாரியர்களாகச் செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமுக்கு வெளியே இருக்கும் காஸ்தல் கந்தோல்ஃபோ கோடைவிடுமுறை இல்லத்திலிருந்து இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் 'நல்ல சமாரியர்'  உவமையை எடுத்துரைத்து விளக்கமளித்தார்.
குரு மற்றும் லேவியரைப்போல் அல்லாமல், இறைவிருப்பத்தைச் செயல்படுத்திக்காட்டி, நன்மைத்தனத்திற்கும் தாராளமனப்பான்மைக்கும் உதாரணமாக விளங்கிய நல்ல சமாரியரை நமக்கு எடுத்துக்காட்டாக வைக்கிறார் இயேசு, என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வித்தியாசமான மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததற்காகவே யூதர்களால் வெறுக்கப்பட்ட சமாரியரே, தற்போது இறைவிருப்பத்திற்கு இயைந்தவகையில் செயல்படுபவராக உள்ளார் எனவும் கூறினார் திருத்தந்தை.
அடுத்த வாரத்தில் தன் பங்கேற்புடன் இடம்பெறவிருக்கும் உலக இளையோர் தினக்கொண்டாட்டங்கள் குறித்தும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அதன் வெற்றிக்கென தனிப்பட்ட முறையில் செபிக்குமாறும் அங்கு குழுமியிருந்தோருக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த மூவேளை செப உரையை வழங்குமுன்னர் காஸ்தல் கந்தோல்ஃபோ விடுமுறை இல்ல வளாகத்தில் குழுமியிருந்த மக்களையும் நேரடியாகச் சந்தித்தத் திருத்தந்தை, முன்னாள் திருத்தந்தையர்கள் இரண்டாம் ஜான் பால் மற்றும் 16ம் பெனடிக்ட் அவர்களையும் நினைவுகூர்ந்து, அவர்களின் சாட்சிய வாழ்வு இன்றைய மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும், ஊக்கம் தருவதாகவும் இருப்பதாக எனவும் கூறினார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

2. அழைப்பு மற்றும் தனிப்பட்ட அன்பின் கனியே வாழ்வு

ஜூலை,15,2013. கிறிஸ்தவருக்கு வாழ்வு என்பது ஒரு சாதாரண தற்செயல் நிகழ்வு அல்ல, மாறாக, அழைப்பு மற்றும் தனிப்பட்ட அன்பின் கனி என தன் ஞாயிறு டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வாழ்வின் முக்கியத்துவம் மற்றும் அதன் புனிதத்துவம் குறித்து தன் போதனைகளில் தொடர்ந்து எடுத்துரைத்து வரும் திருத்தந்தை, தன் டுவிட்டர் பக்கத்தில் இஞ்ஞாயிறன்று 7 மொழிகளில் இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

3. உத்தரகண்ட்டில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவனந்தபுரம் பெருமறைமாவட்டம் உதவி

ஜூலை,15,2013. வட இந்தியாவின் உத்தரகண்டில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, வரும் ஞாயிறன்று திருவனந்தபுரம் பெருமறைமாவட்டத்தின் அனைத்துக் கோவில்களிலும் நிதி திரட்டப்படும் என அறிவித்துள்ளார் அப்பெருமறைமாவட்டப் பேராயர் சூசை பாக்கியம்.
இந்தியாவின் தென் பகுதியைத் தாக்கிய சுனாமிக்குப் பின்னர் உத்தரகண்டில் அன்ண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கே பெரிய இயற்கை பாதிப்பு என்ற பேராயர் சூசை பாக்கியம் அவர்கள், பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை என்பதையும் எடுத்துரைத்தார்.
இப்பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களில், 50,000 காப்பாற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும், உணவு, மருந்து, துணி போன்றவைகளின் பற்றாக்குறை இன்னும் உள்ளது என்ற பேராயர் சூசை பாக்கியம் அவர்கள், துன்புறும் மக்களுக்கு உதவ வேண்டிய கடமையை வலியுறுத்தினார்.

ஆதாரம் :  UCAN

4. எய்ட்ஸ் விழிப்புணர்வுப்பணியில் தாய்வான் திரு அவை

ஜூலை,15,2013. எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தாய்வான் நாட்டின் சமூகக்குழுக்களும் திருஅவை அமைப்புகளும் மிகத் தீவிரப்பணிகளை மேற்கொண்டாலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்நோய் பரவுதல் பெருமளவில் அதிகரித்துள்ளதாக தாய்வான் அரசு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று மடங்காகியுள்ளதாகக் கூறும் இவ்வறிக்கை, 20 முதல் 29 வயதுவரை உள்ளோரே இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
தாய்வானின் தலத்திரு அவை, கல்வி நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களுக்கு வழங்கி வருவதாக  அந்நாட்டின் மறைக்கல்வி ஆசிரியர் மேத்யூ லீ எடுத்துரைத்தார்.
இளைய தலைமுறையினருக்கு இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் வழி அவர்களின் நண்பர்களுக்கும் இந்நோயின் தீவிரம் குறித்து எடுத்துரைக்க தாய்வான் திருஅவை திட்டம் தீட்டி செயல்பட்டு வருவதாக கூறினார், மாணவர்களிடையேப் பணியாற்றிவரும் அருள்பணியாளர் லூயிஸ் ஆல்ட்ரிக் (Louis Aldrich).
தாய்வான் நாட்டில் 1984க்கும் 2013க்கும் இடைப்பட்டக் காலத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 24 ஆயிரத்து 792ஐ எட்டியுள்ளதாகவும், இதில் 45.7 விழுக்காட்டினர் ஒரே பாலின நடவடிக்கைகள் மூலமும், 25.2 விழுக்காட்டினர் ஒரே போதை மருந்து ஊசியை பகிர்ந்துகொண்டதாலும் இந்நோய்க்கிருமிகளைப் பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் :  Asia News

5. காற்று மாசுக்கேட்டால் ஆண்டுக்கு 20 இலட்சம் மரணங்கள்

ஜூலை,15,2013. காற்று மாசுக்கேட்டால் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 20 இலட்சம் மரணங்கள் இடம்பெறுவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இதயம் மற்றும் நுரையீரல் தொடர்புடைய நோய்களுக்கு, குறிப்பாக, நுரையீரல் புற்றுநோய்களுக்கு காற்று மாசுக்கேடு முக்கியக்காரணமாக உள்ளது எனக்கூறும் இந்த ஆய்வறிக்கை, காற்று மாசுக்கேட்டால் அதிக எண்ணிக்கையில் மக்கள் இறப்பது கிழக்கு மற்றும் தென் ஆசியாவில்தான் எனவும் தெரிவிக்கிறது.
சுவாசிக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம்  உலகில் மக்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும் என்றார் ஆய்வாளர் Jason West.
கட்டிடப்பணிகள் மற்றும் வாகனங்கள் மூலமாக காற்று மாசுக்கேடு அடைவதைப்பற்றியும் இவ்வாய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் :  Catholic Online  

6. இலங்கையில் 90 நிமிடங்களுக்கு பெண் ஒருவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்

ஜூலை,15,2013. இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாவதாக பெண்கள் உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்கள் உரிமை அமைப்பின்  இணை தலைவர் சரோஜா சாவித்ரி பால்ராஜ், இந்த பாலியல் அத்துமீறல் சம்பவங்களுக்குப் பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் கூறினார்.
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன என்பதற்கு, ஆசிரியை ஒருவர் அரசியல்வாதி ஒருவரால் முழங்காலில் நிற்கவைக்கப்பட்ட சம்பவம் ஓர் உதாரணமாக இருக்கிறது எனவும் கூறிய இணை தலைவர் பால்ராஜ், 2011ம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட குடும்ப வன்முறைகளுடன் ஒப்பிடுகையில், 2013ம் ஆண்டில் அது 80 விழுக்காடாக உயர்வடைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து வாகனங்களில் பெண்கள் அவமதிக்கப்படுகின்ற சம்பவங்கள் 95 விழுக்காடாக அதிகரித்துள்ளன எனவும் கூறினார் அவர்.

ஆதாரம் :  TamilWin

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...