Wednesday, 31 July 2013

Catholic News in Tamil 30/07/13

1. திருத்தந்தை பிரான்சிஸ் : அடுத்த ஆண்டில் ஆசியாவுக்குச் செல்வேன்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : உலக இளையோர் தின அனுபவத்தைத் தொடர்ந்து வாழுமாறு இளையோர்க்கு அழைப்பு

3. பேருந்து விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்குத் திருத்தந்தை ஆறுதல்

4. 28வது உலக இளையோர் தினம் கொரியத் திருஅவைக்கு ஏராளமான வரங்களை வழங்கியுள்ளது, Daejeon ஆயர்

5. இயேசு சபை அருள்பணி Paolo Dall'Oglio உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு  வேண்டுகோள்

6. அபு தாபியில் புதிய கத்தோலிக்க ஆலயம்

7. ஜிம்பாபுவே நாட்டுக்காகச் செபிக்குமாறு உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுகோள்

8. மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் இஸ்ரேல்-பாலஸ்தீன அதிகாரிகள் நேரடிப் பேச்சுவார்த்தை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : அடுத்த ஆண்டில் ஆசியாவுக்குச் செல்வேன்

ஜூலை,30,2013. பிலிப்பீன்ஸ் மற்றும் இலங்கையிலிருந்து அழைப்பிதழ்கள் வந்திருப்பதால் அடுத்த ஆண்டில் ஆசியாவுக்குச் செல்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று இத்திங்களன்று விமானப் பயணத்தில் பன்னாட்டு நிருபர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ரியோ தெ ஜனெய்ரோவிலிருந்து உரோமைக்குத் திரும்பிய நீண்ட விமானப் பயணத்தில் தன்னோடு பயணம் செய்த பன்னாட்டு நிருபர்களின் கேள்விகளுக்கு ஒரு மணி, இருபது நிமிட நேரம் பதிலளித்துக் கொண்டுவந்த திருத்தந்தை பிரான்சிஸ், தனது அடுத்த வெளிநாட்டுத் திருப்பயணங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது, 2014ம் ஆண்டில் ஆசியாவுக்குச் செல்வது குறித்து சிந்திக்க வேண்டுமென்று தெரிவித்தார்.
முத்திப்பேறு பெற்ற  திருத்தந்தையர்கள் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகியோரின் புனிதர்பட்ட விழா, வத்திக்கான் வங்கி, திருப்பீடத் தலைமையகத்தின் சீரமைப்பு, வத்திக்கானில் ஓரினச்சேர்க்கையாளர் குறித்த விவகாரம், திருமணம், திருமணமுறிவு, மற்றும் மறுதிருமணம் செய்துள்ளவர்களுக்கு மேய்ப்புப்பணி... இப்படி வத்திக்கான் சார்ந்த பல சூடான விவகாரங்கள் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்கு மிக எளிமையாகத் திறந்த மனத்துடன் பதிலளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தப் பிரேசில் திருப்பயணத்துக்குப் பின்னர் தான் உடலளவில் களைப்பாக இருந்தாலும், ஆன்மீகரீதியில் புதுப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், முப்பது இலட்சம் இளையோருடன் தனக்கு மிக நல்ல அனுபவங்கள் கிடைத்ததாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : உலக இளையோர் தின அனுபவத்தைத் தொடர்ந்து வாழுமாறு இளையோர்க்கு அழைப்பு

ஜூலை,30,2013. இளையோர் நண்பர்களே, உலக இளையோர் தினத்தில் ஒன்றிணைந்து நாம் அறிக்கையிட்டதை இப்போது தினம்தோறும் தொடர்ந்து வாழ வேண்டும் என்று இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், ரியோவில் விவரிக்க முடியாத சிறந்த அனுபவம் பெற்றேன்.  ஒவ்வொருவருக்கும் நன்றி, எனக்காகச் செபியுங்கள் என்று இத்திங்களன்று தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றொரு செய்தியையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரேசில் நாட்டுக்கான தனது ஒரு வாரத் திருப்பயணத்தை நிறைவுசெய்து இத்திங்கள் நண்பகல் வேளையில் வத்திக்கான் திரும்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், தினமும் ஒன்பது மொழிகளில் தனது டுவிட்டரில் எழுதி வருகிறார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரேசில் நாட்டுக்கானத் திருப்பயணம் அவரின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணமாக அமைந்துள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. பேருந்து விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்குத் திருத்தந்தை ஆறுதல்

ஜூலை,30,2013. தென் இத்தாலியில் இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்பேருந்து விபத்தில் இறந்தவர்கள் இறைவனின் நிறைசாந்தியை அடையத் தான் செபிப்பதாக அச்செய்தியில் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆறுதலையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த அனுதாபச் செய்தியை நேப்பிள்ல்ஸ் பேராயர் கர்தினால் Cresenzio Sepe அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone.
நேப்பிள்ல்ஸ் நகருக்கும் கனோசா நகருக்கும் இடையே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பேருந்து ஒன்று 30 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் அதில் பயணம் செய்த ஏறக்குறைய 50 பேரில் 38 பேர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் இறந்தவர்கள் அனைவருக்கும் மொத்தமாக Pozzuoliவில், இச்செவ்வாயன்று அடக்கச் சடங்கு நடத்தப்பட்டது. Pozzuoli ஆயர் Gennaro Pascarella நிகழ்த்திய இவ்வடக்கச் சடங்கு திருப்பலியில் இத்தாலிய பிரதமர் Enrico Letta உட்பட பல முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. 28வது உலக இளையோர் தினம் கொரியத் திருஅவைக்கு ஏராளமான வரங்களை வழங்கியுள்ளது, Daejeon ஆயர்

ஜூலை,30,2013. தென் கொரியாவிலிருந்து ரியோ தெ ஜனெய்ரோ சென்ற அருள்பணியாளர்கள், இளையோர் என ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் 28வது உலக இளையோர் தினம் சிறப்பான அருள் வழங்குவதாக இருந்தது என Daejeon ஆயர் Lazzaro You Heung-sik கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புன்சிரிப்பு, நட்புணர்வு, இன்னும் குறிப்பாக அவரது அன்பின் செய்தி இந்த இளையோர் தினத்தை மேலும் அழகானதாக அமைத்தன என்றுரைத்த ஆயர் You, இவ்வுலக தினம் கத்தோலிக்கத் திருஅவைக்கு ஓர் அசாதாரணமான மற்றும் தனித்துவமிக்கக் கொண்டாட்டமாக இருந்தது என்று கூறினார்.
ரியோவில் இடம்பெற்ற 28வது உலக இளையோர் தின நிகழ்வுகள் குறித்த தனது அனுபவங்களை ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட ஆயர் You, தான் திருத்தந்தையோடு நேரில் பேசிய அனுபவம் பற்றியும் விளக்கினார்.
கொரியத் திருஅவை உறுதியாக இருக்கின்றது, தொடர்ந்து அதனை உறுதியுடன் நடத்திச் செல்லுங்கள் என்று, தனது இயல்பான புன்சிரிப்புடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னிடம் கூறியதாகவும் ஆயர் You கூறினார். 
Daejeon ஆயர் You, கொரியாவிலிருந்து 350 இளையோருடன் இவ்வுலக இளையோர் தினத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews  

5. இயேசு சபை அருள்பணி Paolo Dall'Oglio உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு  வேண்டுகோள்

ஜூலை,30,2013. சிரியாவில் கடத்திவைக்கப்பட்டுள்ள இயேசு சபை அருள்பணி Paolo Dall'Oglio அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன இயேசு சபையின் சமூகப்பணி அமைப்புகள்
Astalli, Magis உட்பட இத்தாலியில் இயங்கும் இயேசு சபையின் சமூகப்பணி அமைப்புகள், சிரியாவின் Raqqa நகரிலிருந்து  கடத்தப்பட்டுள்ள அருள்பணி Dall'Oglio உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு அழைப்புவிடுத்துள்ளன.
தமாஸ்கு நகரிலுள்ள திருப்பீடத் தூதரகமும் இவ்வருள்பணியாளர் கடத்தப்பட்டுள்ளது குறித்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளவேளை, இவர் சிரியாவில் இருக்கும்போதெல்லாம் வழக்கமாகத் தன்னோடு தொலைபேசியில் தொடர்பு கொள்வார் எனவும், ஆனால் கடந்த சில நாள்களாக அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லையெனவும் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.    
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக சிரியாவில் மறைப்பணியாற்றிவரும் அருள்பணி Paolo Dall'Oglio, அந்நாட்டில் ஒப்புரவுக்கும் அமைதிக்கும் உரையாடலுக்கும் முன் நின்று உழைத்து வருபவர்.
அருள்பணி Dall'Oglio காணாமற்போயுள்ள தகவல் தொடர்பாக இத்தாலிய வெளியுறவு அமைச்சகமும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இயேசு சபையினரின் Astalli என்ற ஆலோசனை மையம், அகதிகள், புலம்பெயர்ந்தோர் ஆகியோருக்கு சட்டரீதியாக ஆலோசனை வழங்கி  அம்மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றது.
Magis என்ற அச்சபையினரின் அரசு சாரா இயக்கமும் புலம்பெயர்ந்தோர்க்கு உதவி வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. அபு தாபியில் புதிய கத்தோலிக்க ஆலயம்

ஜூலை,30,2013. அரபு ஐக்கிய குடியரசான அபு தாபியில் புதிய கத்தோலிக்க ஆலயம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டி, அப்புதிய ஆலயப் பணிகளை ஆசீர்வதித்துள்ளார் தெற்கு அரேபியாவின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆயர் Paul Hinder.
அபு தாபியின் Mussafah நகரில் புனித பவுலுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ள இப்புதிய ஆலயத்துக்கான அடிக்கலை ஆசீர்வதித்த நிகழ்ச்சியில் குருக்கள், அருள்சகோதரிகள் உட்பட உள்ளூர் கத்தோலிக்கர் பலர் கலந்து கொண்டனர்.
அச்சமயம் உரையாற்றிய ஆயர் Hinder, இறைவன் ஒவ்வொரு மனிதரிலும் வாழ்கிறார், அன்பும் விசுவாசமும் இப்புதிய ஆலயத்தில் நம்மை ஒன்றுசேர்த்துள்ளன எனக் கூறினார்.
அபு தாபியில் ஏறக்குறைய 3,500 கத்தோலிக்கக் குடும்பங்களும், 15,000 கத்தோலிக்கரும் வாழ்கின்றனர்.
அபு தாபியின் தென் மேற்கேயுள்ள Mussafah தொழிற்சாலை நகரத்தில் ஆலயம் கட்டுவதற்கென உள்ளூர் அரசு 1.1 ஏக்கர் நிலத்தை 2011ம் ஆண்டில் வழங்கியது.

ஆதாரம் : CNA                            

7. ஜிம்பாபுவே நாட்டுக்காகச் செபிக்குமாறு உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுகோள்

ஜூலை,30,2013. ஆப்ரிக்க நாடான ஜிம்பாபுவேயில் இப்புதனன்று நடைபெறும் தேர்தல்கள் வன்முறையின்றி நடப்பதற்கு உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் செபிக்குமாறு கேட்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள்.
2008ம் ஆண்டில் ஜிம்பாபுவே நாட்டை இரத்தக்காடாக்கிய வன்முறையைக் குறிப்பிட்டு அந்நாட்டில் அனைத்து வனமுறைகளையும் தவிர்த்து நடக்குமாறு அரசியல் தலைவர்களைக் வலியுறுத்தியுள்ளனர்  அக்கிறிஸ்தவத் தலைவர்கள்.
ஜிம்பாபுவே நாட்டுக்கு, ஊழலும் தீமையும் நிறைந்த ஆட்சியாளர்கள் அல்ல, மாறாக, கடவுள் பயமிக்க மற்றும் அமைதியை அன்புகூரும் தலைவர்கள் தேவை என்றும் அத்தலைவர்கள்  தெரிவித்துள்ளனர்.
ZCC என்ற ஜிம்பாபுவேயின் கிறிஸ்தவ சபைகள் அமைப்பின் சார்பில்  அந்நாட்டின் கிறிஸ்தவத் தலைவர்கள் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் இவ்வாறு கேட்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : ICN                              

8. மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் இஸ்ரேல்-பாலஸ்தீன அதிகாரிகள் நேரடிப் பேச்சுவார்த்தை

ஜூலை,30,2013.  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவுக்கு இடையேயான முதல் நேரடிப் பேச்சுவார்த்தைகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக வாஷிங்டனில் தொடங்கியுள்ளன.
இஸ்ரேலின் சார்பாக Tzipi Livniயும், பாலஸ்தீனாவின் சார்பாக Erekatம் இதில் கலந்து கொள்கின்றனர்.
இரமதான் நோன்பு காலத்தில் இப்பேச்சுவார்த்தை இடம்பெறுவது, பாலஸ்தீனாவுக்கு மிகவும் விசேடமான ஒன்று என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர் John Kerry கூறினார்.
100க்கும் அதிகமான பாலஸ்தீனியக் கைதிகளை விடுதலை செய்வதற்கு இஸ்ரேல் அரசு இசைவு தெரிவித்ததையடுத்து இப்பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தது பாலஸ்தீனம்.
வரவிருக்கும் மாதங்களில் நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளுக்கான நடைமுறை வரைவுத்தொகுப்பு பற்றி தற்போது பேசப்பட்டதாக அமெரிக்க அரசுச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...