Saturday, 13 July 2013

Catholic News in Tamil - 11/07/13

1. திருத்தந்தை பிரான்சிஸ் : உலகில் நிறுவனம் போன்று நடத்தப்படும் குற்றங்களைத் தடுக்கும் அரசுகளின் முயற்சிகளுடன் திருப்பீடமும் இணையும்

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘Motu Proprio’ அறிக்கை குறித்த பேராயர் மம்பெர்த்தி அவர்களின் விளக்கம்

3. கர்தினால் Veglio : தண்ணீரின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட அழைப்பு

4. ரியோ டி ஜெனீரோவில் "ஆண்டவரின் அடிச்சுவடுகளில்" கண்காட்சி

5. Vanity Fair இதழ் : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் '2013ம் ஆண்டின்  மனிதர்'

6. மால்ட்டாவிலிருந்து புலம் பெயர்ந்தோர் வெளியேற்றப்படுவதற்குத் தடை

7. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புலம் பெயர்ந்தோர் சார்பான கருத்துக்கு  ஆஸ்திரேலிய இளையோர் ஆதரவு

8. வளர் இளம் பருவத்தில் தாயாகும் பெண்கள் குறித்து ஐ.நா. கவலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : உலகில் நிறுவனம் போன்று நடத்தப்படும் குற்றங்களைத் தடுக்கும் அரசுகளின் முயற்சிகளுடன் திருப்பீடமும் இணையும்

ஜூலை,11,2013. மனித சமுதாயத்தின் பொது நலனைக் குலைக்கும் வண்ணம், ஒரு பன்னாட்டு நிறுவனத்தைப் போல, திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்கள் உலகில் பெருகி வருவதைத் தடுக்க அகில உலகச் சமுதாயம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் திருப்பீடமும் இணைகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தனது சொந்த எண்ணங்களையும் முயற்சியையும் வெளிப்படுத்தும் நோக்கத்தில் திருத்தந்தை வெளியிடும் கருத்துக்கள் ‘Motu Proprio’ என்று வழங்கப்படுகின்றன.
உலக அளவில் நிறுவனம் போன்று நடத்தப்படும் குற்றங்களைத் தடுக்க, பல அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் திருப்பீடம் தன்னையே இணைத்துக்கொள்ளும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று விடுத்துள்ள ‘Motu Proprio’ அறிக்கையின் வழியே உறுதி அளித்துள்ளார்.
மனித மாண்பு, பொதுநலன், அமைதி என்ற உயர்ந்த விழுமியங்களை என்றும் ஆதரிக்கும் கத்தோலிக்கத் திருஅவை, நன்னெறி விழுமியங்களுக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளுக்குத் தக்க நீதி வழங்கும் என்றும் திருத்தந்தை இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 11, இவ்வியாழனன்று தான் விடுக்கும் அப்போஸ்தலிக்க மடல் வழியே வெளியிட்டுள்ள தன் ‘Motu Proprio’ எண்ணங்கள், செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் திருத்தந்தை இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘Motu Proprio’ அறிக்கை குறித்த பேராயர் மம்பெர்த்தி அவர்களின் விளக்கம்

ஜூலை,11,2013. குற்றங்களுக்கு எதிராக திருப்பீடம் மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளை தெளிவுபடுத்தும் திருத்தந்தையின் ‘Motu Proprio’ அறிக்கையைக் குறித்து இவ்வியாழனன்று திருப்பீடத்தின் வெளியுறவுத் துறை செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
திருப்பீடம், வத்திக்கான் நாடு ஆகிய பிரிவுகளில் குற்றங்களுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய முயற்சிகளை 2010ம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மேற்கொண்டார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள இந்த அறிக்கை இந்த முயற்சிகளின் தொடர்ச்சி என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
போர்க்குற்றங்கள் தொடர்பாக 1949ம் ஆண்டு ஜெனீவாவில் வெளியிடப்பட்ட நான்கு முடிவுகள், இன வேறுபாடுகளை ஒழிக்க 1965ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவுகள், சித்ரவதை மற்றும் மனித மாண்பைக் குலைக்கும் குற்றங்களுக்கு எதிராக 1984ம் ஆண்டு வெளியிடப்பட்ட முடிவுகள், மற்றும் குழந்தைகளுக்கும், சிறாருக்கும் எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள முடிவுகள் என்று, உலக அரங்கில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து சட்டங்களையும் வத்திக்கான் நாடும், திருப்பீடமும் பின்பற்றும் என்பதைத் திருத்தந்தையின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
இதேபோல், குறிப்பட்ட ஓர் இனத்தை அழிக்கும் முயற்சிகள், இனவெறி ஆகிய குற்றங்களுக்கும் எதிராக உலக நாடுகள் விதித்துள்ள தண்டனைகளை வத்திக்கானும் பின்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. கர்தினால் Veglio : தண்ணீரின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட அழைப்பு

ஜூலை,11,2013. மனித உயிரைக் காக்கும் ஒரு முக்கிய கொடை தண்ணீர் என்பதை சுற்றுலா உலகமும் உணர்ந்து செயல்படவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இவ்வாண்டு செப்டம்பர் 27ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் உலகச் சுற்றுலா நாளுக்கென குறிக்கப்பட்டுள்ள "சுற்றுலாவும் தண்ணீரும்: நமது பொதுவான எதிர்காலத்தைக் காப்பாற்ற" என்ற தலைப்பை மையமாக்கி, பயணிகள் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Veglio அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
தண்ணீரின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்தாலும், ஒவ்வோர் ஆண்டும் இந்த இயற்கைக் கொடையை சரிவர பயன்படுத்தாமல் வீணாக்கும் செயல்பாடுகளையும் கண்டு வருகிறோம் என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Veglio.
'நாம் அனைவரும் இயற்கையைப் பேணும் காவலர்கள்' என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நமக்கு நினைவுறுத்தியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டும் கர்தினால் Veglioவின் செய்தி, இயற்கை வளங்களைப் பேணிக்காப்பதும், பயன்படுத்துவதும் அனைத்து மனிதர்களின் அடிப்படை உரிமை மற்றும் கடமை என்பதையும் எடுத்துரைக்கிறது.
பொதுவாக நீர்நிலைகள், கடற்கரைகள் என்று நீருள்ள பகுதிகளையே சுற்றுலாப் பயணிகள் நாடிச்செல்லும் வேளையில், அப்பகுதிகளில் உள்ள நீரை வீணாக்காமல் பயன்படுத்தும் வழிகளை சுற்றுலாத் துறையினரும், பன்னாட்டு அரசுகளும் உறுதி செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை கர்தினால் Veglio தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ரியோ டி ஜெனீரோவில் "ஆண்டவரின் அடிச்சுவடுகளில்" கண்காட்சி

ஜூலை,11,2013. "ஆண்டவரின் அடிச்சுவடுகளில்" என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கண்காட்சி, ஜூலை 9, இச்செவ்வாயன்று ரியோ டி ஜெனீரோ நகரில் அமைந்துள்ள தேசிய அருங்கலை மையத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பொது நிலையினர் பணிகளுக்கான திருப்பீட அவையின் ஓர் அங்கமாகிய இரண்டாம் ஜான் பால் இளையோர் அறக்கட்டளையால், உலக இளையோர் நாளுக்கென உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி ஜூலை 9ம் தேதி முதல் அக்டோபர் 12ம் தேதி முடிய இந்த மையத்தில் நடைபெறும்.
Beato Angelico, Melozzo da Forli, Leonardo da Vinci, Bernini, போன்ற உலகப் புகழ்பெற்ற பல கலைஞர்களின் படைப்புக்களை உள்ளடக்கிய இந்தக் கண்காட்சி, கிறிஸ்துவின் வாழ்வு, பாடுகள், உயிர்ப்பு ஆகிய மறையுண்மைகளையும், 'கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்லும் வழி - மரியா' என்ற கருத்தில் அமைந்துள்ள ஓவியங்களையும் உள்ளடக்கியது.
கத்தோலிக்கத் திருஅவை வளர்ந்து வந்துள்ள ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் உரிய கலைப்படைப்புக்கள் நான்கு பகுதிகளாக இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு அறிவித்துள்ளது.

ஆதாரம் : VIS

5. Vanity Fair இதழ் : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் '2013ம் ஆண்டின்  மனிதர்'

ஜூலை,11,2013. இத்தாலியில் வெளியாகும் Vanity Fair என்ற வார இதழ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை 'இவ்வாண்டுக்கான மனிதர்' என்று அறிவித்துள்ளது. ஜூலை 10ம் தேதி இப்புதனன்று வெளியிடப்பட்ட இந்த இதழில் 'துணிவுள்ள திருத்தந்தை பிரான்சிஸ்' என்ற அட்டைப்படம் இடம்பெற்றுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியில் முதல் 100 நாட்கள் பணியாற்றியதை அடிப்படையாகக் கொண்டு, இவ்விதழில் பலரது கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் 100 நாட்கள் பணிகள், அவரை ஓர் உலகத் தலைவராக வெளிப்படுத்தியுள்ளன என்றும், அவர் துவங்கி வைத்த புரட்சி இன்னும்  தொடர்கிறது என்றும் இத்தாலிய வார இதழ் Vanity Fair குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவச் சிலை ஒன்று Buenos Aires பேராலய வளாகத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டதை அறிந்தத் திருத்தந்தை, தொலைபேசி மூலம் அந்த உருவச் சிலையை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வேண்டிக்கொண்டதை பேராலய நிர்வாகிகள் நிறைவேற்றிய்ள்ளனர் என்று ஆர்ஜென்டீனா ஊடகங்கள் கூறியுள்ளன.

ஆதாரம் : Huff Post / MailOnline

6. மால்ட்டாவிலிருந்து புலம் பெயர்ந்தோர் வெளியேற்றப்படுவதற்குத் தடை

ஜூலை,11,2013. சோமாலியா நாட்டைச் சேர்ந்த புலம் பெயர்ந்தோரை மீண்டும் லிபியாவுக்கு அனுப்பி வைக்க முயன்ற மால்ட்டா அரசை இந்த முயற்சியிலிருந்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதி மன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது.
சோமாலியா, எரித்ரியா ஆகிய நாடுகளிலிருந்து கடந்த வாரத்தில் மட்டும் மால்ட்டா கரைகளை அடைந்துள்ள 400க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை அந்நாட்டு அரசு மீண்டும் அனுப்பாமல் இருக்க ஐரோப்பிய மனித உரிமைகள் நீதி மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையை மதிப்பதாகவும் மால்ட்டா அரசு அறிவித்துள்ளது.
'உலகமயமாக்கப்பட்டுள்ள பாராமுகம்' என்ற போக்கினால், புலம்பெயர்ந்தோரின் துயரங்கள் நம்மைப் பாதிப்பதில்லை என்ற கருத்தை வலியுறுத்தி, ஜூலை 8, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Lampedusa எனுமிடத்தில் வழங்கிய மறையுரையின் ஓர் எதிரொலியே ஐரோப்பிய மனித உரிமைகள் நீதி மன்றத்தின் இந்த முடிவு என்று, இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டுள்ள அருள் பணியாளர் Joseph Cassar வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தென் கோடியில் அமைந்துள்ள மால்ட்டா நாடு, புலம்பெயர்ந்தோரின் வரவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அந்நாட்டுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமை என்றும் அருள் பணியாளர் Cassar விளக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புலம் பெயர்ந்தோர் சார்பான கருத்துக்கு  ஆஸ்திரேலிய இளையோர் ஆதரவு

ஜூலை,11,2013. இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புலம் பெயர்ந்தோரின் சார்பாக Lampedusaவில் விடுத்த அழைப்பிற்கு ஆஸ்திரேலிய இளையோர் தகுந்த முறையில் பதில் அளித்துள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
AYCS எனப்படும் 'ஆஸ்திரேலிய இளைய கிறிஸ்துவ மாணவர்கள்' அமைப்பு ஒன்று, திருத்தந்தை வழங்கிய மறையுரையால் உந்தப்பட்டு, ஆஸ்திரேலிய புலம் பெயர்ந்தோர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் சார்பில், அந்நாட்டின் குடிபெயர்வுத் துறைக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பல நாடுகளிலும் வன்முறைகளுக்கு உள்ளாகும் மக்கள் ஆஸ்திரேலியாவில் நல்வாழ்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் படகுகளில் அங்கு வருவதாகச் சுட்டிக்காட்டும் இவ்விளையோர் அமைப்பு, தகுந்த ஆவணங்கள் இன்றி ஆஸ்திரேலியாவை அடையும் குழந்தைகளையும் சிறார்களையும் முகாம்களில் இருந்து நீக்கி, அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வது அரசின் கடமை என்பதை வலியுறுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய பள்ளிகளில் பயிலும் 8000க்கும் அதிகமான இளையோர் புலம் பெயர்ந்தோர் வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு அண்மையில் சென்று, அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்தனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides

8. வளர் இளம் பருவத்தில் தாயாகும் பெண்கள் குறித்து ஐ.நா. கவலை

ஜூலை,11,2013. வளர் இளம் பருவத்தில் உள்ள பெண்கள் தாயாகும் நிலைக்கு உள்ளாவது உலகில் நிலவும் கவலை தரும் ஒரு போக்கு என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
ஜூலை 11, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட உலக மக்கள் தொகை நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், 'வளர் இளம் பருவத்தினரின் தாய்மைப் பேறு' என்று இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.
வளர் இளம் பருவத்தில் தாயாகும் நிலைக்குத் தள்ளப்படும் இளம் பெண்கள் தங்கள் உயிரையும், கருவில் வளரும் குழந்தைகளின் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகின்றனர்; இந்நிலையிலிருந்து அவர்களைக் காப்பது உலகச் சமுதாயத்தின் கடமை என்று பான் கி மூன் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் 18 வயதுக்குட்பட்ட 1 கோடியே, 60 இலட்சம் வளர் இளம் சிறுமிகள் தாய்மைப் பேறு அடைகின்றனர் என்றும், இவர்களில் 32 இலட்சம் சிறுமிகள் தகுந்த மருத்துவ பாதுகாப்பு இன்றி கட்டாயக் கருகலைப்புக்கு உள்ளாகின்றனர் என்றும் ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...