Wednesday, 3 July 2013

Catholic News in Tamil - 02/07/13

1. திருத்தந்தை பிரான்சிஸ் : நமது பலவீனங்களுக்கு மத்தியிலும் நாம் துணிவுடன் இருக்க வேண்டும்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : பாறையாகிய கிறிஸ்துவை விட்டு விலகி நாம் கிறிஸ்தவர்களாக வாழ முடியாது

3. கர்தினால் கோக்கோபல்மேரியோ : வறுமையும் நிலையான வளர்ச்சியும் திருஅவைக்குச் சவால் 

4. ஆறாயிரம் இளையோர் தங்களின் இறையழைப்புக்குச் சாட்சி சொல்லவுள்ளனர்

5. மனிதரின் இயற்கையான இயல்பை புறக்கணிப்பது திருமணத்துக்கு கேடு விளைவிக்கும், கர்தினால் ரூயினி

6. நைஜீரியாவில் மரண தண்டனை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு ஆயர்கள் கண்டனம்

7. சிறுபான்மை சமய சமூகங்களைப் பாதுகாப்பதற்குப் பாகிஸ்தான் திருஅவை புதிய முயற்சி

8. இந்தியாவில் இளம் பருவத்தினர் சாத்தானை வழிபடும் குழுக்களால் மயக்கப்படுவது குறித்து கிறிஸ்தவ சபைகள் கவலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : நமது பலவீனங்களுக்கு மத்தியிலும் நாம் துணிவுடன் இருக்க வேண்டும்

ஜூலை,02,2013. கிறிஸ்தவர்கள் தங்கள் பலவீனங்களுக்கு மத்தியிலும் துணிவுடன் இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று புனித மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலையில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சோதனைகளை எதிர்கொள்ளும்போது அவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கு வெட்கப்படக் கூடாது, மாறாக, நாம் பலவீனமானவர்கள் என்பதை ஏற்பதற்குத் துணிவு கொண்டு, தூய ஆவியின் அருளால் இறைவனால் வழிநடத்தப்படுவதற்கு நம்மை அனுமதிக்க வேண்டும் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
சோதனை வேளைகளிலும், கடினமான சூழல்களிலும், நான்கு மனப்பான்மைகளில் நாம் வாழ்வதை இந்நாளின் திருப்பலி வாசகங்களிலிருந்து எடுத்து விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், லோத்துவின் காலந்தாழ்த்துதல் பற்றிக் குறிப்பிட்டு, நாமும் நமது பாவநிலையிலிருந்து வெளியே வரத் தீர்மானிக்கிறோம், ஆனால் ஏதோ ஒன்று நம்மை உள்ளே இழுக்கின்றது என்று கூறினார்.
புனித குழந்தை தெரேசா நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது போல, சில நேரங்களில், சில சோதனைகளில் அவற்றிலிருந்து தப்பிப்பதே ஒரே தீர்வு, ஆதலால் அப்படிச் செய்வதற்கு நாம் வெட்கப்படக் கூடாது என்றும் கூறினார் திருத்தந்தை.
லோத்திடம் வானதூதர் எச்சரித்தது போல, இப்படித் தப்பித்துச் செல்லும்போது திரும்பிப் பார்க்கக் கூடாது, கண்களை முன்னோக்கியே வைக்க வேண்டும், லோத்தின் மனைவி செய்தது போல, ஆர்வக் கோளாறினால் நாம் திரும்பிப் பார்க்கக் கூடாது, ஆர்வக் கோளாறு வாழ்வைப் பாழ்படுத்தும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எச்சரித்தார்.
மேலும், இயேசுவோடு படகில் சென்ற சீடர்கள் கடல் கொந்தளிப்பைக் கண்டு பயந்தார்கள், ஆண்டவரே காப்பாற்றும், சாகப்போகிறோம் என்றார்கள் என்றுரைத்த திருத்தந்தை, ஆண்டவரின் பாதையில் முன்னோக்கிச் செல்லப் பயப்படுவதும் சாத்தானின் சோதனை என்று விளக்கினார்.
இறுதியில், நான்காவது மனப்பான்மை தூய ஆவியின் அருளில் வாழ்வது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், பாவத்தாலும் பயத்தாலும் ஆட்கொள்ளப்படும்போது ஆண்டவரிடம் திரும்பி அவரைத் தியானிக்க வேண்டும், பயப்பட வேண்டாம், எப்போதும் ஆண்டவரை நோக்குவோம் என்றுரைத்து மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : பாறையாகிய கிறிஸ்துவை விட்டு விலகி நாம் கிறிஸ்தவர்களாக வாழ முடியாது

ஜூலை,02,2013. நாம், பாறையாகிய கிறிஸ்துவை விட்டு விலகி கிறிஸ்தவர்களாக வாழ முடியாது. அவர் நமக்குச் சக்தியையும், உறுதியான தன்மையையும் வழங்குகிறார். அதோடு, மகிழ்வையும் மனஅமைதியையும் அருளுகிறார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் இச்செவ்வாய்க்கிழமையன்று இவ்வாறு எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருப்பீடச் செயலகம் @TerzaLoggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், வளர்ச்சி குறித்த, இக்காலத்துக்கு ஒத்துவராத மல்தூசியன் முறைகளை நியாயப்படுத்துவதற்கு, மக்கள்தொகை புள்ளி விபரங்கள் பயன்படுத்தப்பட முடியாது என்று இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


3. கர்தினால் கோக்கோபல்மேரியோ : வறுமையும் நிலையான வளர்ச்சியும் திருஅவைக்குச் சவால் 

ஜூலை,02,2013. இன்னும் அதிகமான நீதியும் சமத்துவமும் நிறைந்த ஓர் உலகு மனித சமுதாயத்தின் பெரும் பகுதியினரால் மறக்கப்பட்டு வருகின்றது என்று திருப்பீட சட்ட விளக்கங்கள் அவைத் தலைவர் கர்தினால் பிரான்செஸ்கோ கோக்கோபல்மேரியோ கூறினார்.
வறுமை, பொதுச்சொத்துக்கள் மற்றும் உறுதியான வளர்ச்சி என்ற தலைப்பில் இடம்பெற்ற அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் கோக்கோபல்மேரியோ இவ்வாறு கூறினார்.
இப்பூமியின் இயற்கை வளங்களை அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்தவும், அவற்றைச் சிறந்த முறையில் சமமாகப் பங்கிடவும், வெப்பநிலை மாற்றத்தின் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு தொலைநோக்குப் பார்வையில் தீர்மானங்கள் எடுக்கவும் அனைத்துலகச் சமுதாயம் திறமையற்று இருக்கின்றது என்றும் கர்தினால் கோக்கோபல்மேரியோ குறை கூறினார்.
ஏழ்மை, புதிய மில்லென்யத்தின் பெரும் சவாலாக இருக்கின்றது என்றும், ஏழ்மையை ஒழிப்பதற்கு அனைத்துலக நிறுவனங்களும், நாடுகளும் பல அழகான எண்ணங்களையும், பல திட்டங்களையும், பல விதிமுறைகளையும் முன்வைக்கின்றன, ஆனால் அவை வெறும் ஏக்கங்களாகவே இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.
அனைத்துலகச் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தால் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
  
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஆறாயிரம் இளையோர் தங்களின் இறையழைப்புக்குச் சாட்சி சொல்லவுள்ளனர்

ஜூலை,02,2013. இம்மாதம் 4 முதல் 7 வரை, குருத்துவ மாணவர்கள், இருபால் துறவு சபைகளின் புகுமுகுத்துறவியர் (நவதுறவியர்) மற்றும் இறையழைத்தலின் பாதையை ஊக்குவிப்பவர்கள் என உலகின் ஏறத்தாழ ஆறாயிரம் இளையோர் தங்களின் இறையழைப்புக்குச் சாட்சி சொல்லவுள்ளனர் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
நம்பிக்கை ஆண்டின் பெரும் நிகழ்வுகளில் ஒன்றாக இவ்வியாழனன்று தொடங்கும் இந்த இளையோர் கூட்டத்தின் முதல் நிகழ்வாக, காஸ்தெல் சாந்த் ஆஞ்சலோவிலிருந்து கொன்சீலியாசினோ சாலை வழியாகத் திருப்பயணம் தொடங்கி வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவடையும். அங்கு இவர்களை கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்த்ரி வரவேற்று உரை வழங்குவார்.
5ம் தேதியன்று பல்வேறு மொழிகளில் மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறும். 6ம் தேதி காலையில் ஒப்புரவு திருவருள்சாதனம் மற்றும் திருநற்கருணை ஆராதனை நடைபெறும்.
இவ்விளையோருடன் வரும் தலைவர்களுக்கு இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் உருவாக்குதல் குறித்த விவகாரங்களில் சிந்தனைகள் வழங்கப்படும். 
7ம் தேதி ஞாயிறு காலையில் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்விளையோருக்குத் திருப்பலி நிகழ்த்துவார் என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. மனிதரின் இயற்கையான இயல்பை புறக்கணிப்பது திருமணத்துக்கு கேடு விளைவிக்கும், கர்தினால் ரூயினி

ஜூலை,02,2013. ஓரினச்சேர்க்கைகளைத் திருமணங்கள் என அங்கீகரிப்பது, இயற்கையான நியதிகளைப் புறக்கணிப்பதாகும் மற்றும் இது இயற்கையான திருமணங்களுக்கு ஊறு விளைவிக்கின்றது என இத்தாலியக் கர்தினால் கமிலோ ரூயினி கருத்து தெரிவித்தார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு உச்சநீதிமன்றம் திருமணம் குறித்த விதிமுறையைப் பாதுகாக்கத் தவறியுள்ளது எனக் குறிப்பிட்ட கர்தினால் ரூயினி, நம் வாழ்வின் இருப்பின் அடிப்படை அமைப்பு முறைகளே திசை திருப்பப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
Il Foglio என்ற இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள, உரோம் மறைமாவட்ட முன்னாள் முதன்மைத் தலைவரான கர்தினால் ரூயினி, திருமணம் குறித்த அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒரு தந்தை, ஒரு தாய், குழந்தைகள் இல்லாத ஒரு குடும்பம் குறித்துப் பேசுகிறது என்று கூறியுள்ளார்.
ஒரே பாலினத் திருமணம், இயற்கையான திருமணத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதால் இடம்பெறுவது, இது மனிதரின் இயற்கையான இயல்பை புறக்கணிப்பதாகவும் உள்ளது என்றும் கர்தினால் ரூயினி கூறினார்.

ஆதாரம் : CNA                        

6. நைஜீரியாவில் மரண தண்டனை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு ஆயர்கள் கண்டனம்

ஜூலை,02,2013. நைஜீரியாவின் Benin City Edo மாநிலத்தில் நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ள அதேவேளை, அந்நாடு பண்பாடற்ற நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றது என்று குறை கூறியுள்ளனர் ஆயர்கள்.
நைஜீரிய நாடு, மரண தண்டனையை இரத்து செய்வதில் பண்பாடுள்ள உலகத்தோடு சேருவதற்கு மிக அருகாமையில் வந்து கொண்டிருக்கின்றது என்று தாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள செய்தி தங்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது என்று  நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatous Ayu Kaigama தெரிவித்தார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் மரண தண்டனைகள் வழங்குவது 2006ம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஜூன் 24ம் தேதியன்று நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது மூலம் இப்பழக்கம் நீக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட வேண்டியிருந்தது. ஆயினும் அந்த நபர் வைக்கப்பட்டிருக்கும் சிறையில் இதற்கான வசதிகள் இல்லாததால் அவரது தண்டனை தள்ளிப்போடப்பட்டுள்ளது.
நைஜீரிய அரசின் இந்நடவடிக்கையை உலகின் பல மனித உரிமை நிறுவனங்கள் குறை கூறியுள்ளன.

ஆதாரம் : Fides
7. சிறுபான்மை சமய சமூகங்களைப் பாதுகாப்பதற்குப் பாகிஸ்தான் திருஅவை புதிய முயற்சி

ஜூலை,02,2013. பாகிஸ்தானில் சிறுபான்மை சமய சமூகங்களை, குறிப்பாக, கிறிஸ்தவர்களை வன்முறை மற்றும் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கென சிறப்புக் குழுக்களை உருவாக்கியுள்ளது அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை.
பாகிஸ்தானில் மறைப்பணியாற்றும் துறவு சபைகளின் அதிபர்கள் அவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு கடந்த வாரத்தில் கராச்சியில் நடத்திய கூட்டத்தில் வன்முறையை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் புதிய வழிகள் குறித்து ஆராய்ந்தபோது சமூகப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
பல்வேறு கிறிஸ்தவச் சபைகளைச் சேர்ந்த குருக்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற தொழில்களைச் செய்பவர்களைக் கொண்ட 15  சமூகப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கியுள்ளது அந்தப் பணிக்குழு.
பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு எதிரானப் பாகுபாடுகளைக் களையவும், இனவாதப் பிரிவினைச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், சட்டம் மற்றும் நீதியை ஊக்குவிக்கவும் இக்குழுக்கள் செயல்படும்.
இந்தச் சிறப்பு பாதுகாப்புக் குழுக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு, மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து, சட்டம் சார்ந்த உதவிகளைச் செய்யும் என, அப்பணிக்குழுவை வழிநடத்தும் Rasheed Gill, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஆதாரம் : Fides

8. இந்தியாவில் இளம் பருவத்தினர் சாத்தானை வழிபடும் குழுக்களால் மயக்கப்படுவது குறித்து கிறிஸ்தவ சபைகள் கவலை

ஜூலை,02,2013. வட கிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் இளம் பருவத்தினர் சாத்தானை வழிபடும் குழுக்களால் மயக்கப்படுகின்றனர் என்ற கவலையை அம்மாநிலத்தின் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் வெளியிட்டுள்ளன.
நாகாலாந்து தலைநகர் கோகிமாவில் கடந்த சில மாதங்களில் மட்டும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட இளம்பருவத்தினர் சாத்தானை வழிபடும் குழுக்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர் எனவும், இவர்களை மீட்டெடுக்கும் பணிகளில் நாகாலாந்து கத்தோலிக்கப் பெண்கள் கழகத்தின் தாய்மார் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை குறித்து பல உள்ளூர் கிறிஸ்தவ குழுக்கள் Fides செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள செய்தியில், சாத்தானை வழிபடும் குழுக்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இளம்பருவத்தினரை மீட்டெடுக்கும் பணிகளைக் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தீவிரமாகச் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளன.
சாத்தானை வழிபடும் குழுக்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய, இந்திய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையச் செயலர் அருள்பணி சார்லஸ் இருதயம், இச்செய்தி அதிர்ச்சி தருவதாகவும், இந்த நம்பிக்கை ஆண்டில் இத்தீமையை முற்றிலும் ஒழிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.        

ஆதாரம் : Fides

No comments:

Post a Comment