Friday, 5 July 2013

Catholic News in Tamil -05/07/2013


1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்கத் திருமடல் விசுவாச ஒளி” (Lumen Fidei)

2. கர்தினால் Ouellet : “விசுவாச ஒளிதிருமடல் இரு திருத்தந்தையரையும் இணைக்கின்றது

3. திருத்தந்தை பிரான்சிஸ் : கடவுளின் செய்தியின் மையம் அவரது கருணை

4. திருத்தந்தை பிரான்சிஸ் : முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், இரண்டாம் ஜான் பால் ஆகியோரைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல்

5. திருத்தந்தை பிரான்சிஸ் : வத்திக்கான் நாட்டை புனித வளன் மற்றும் அதிதூதர் மிக்கேலுக்கு அர்ப்பணிப்பு 

6. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நண்பரையும்விட மேலானவர்

7. முதுபெரும் தலைவர் Sidrak : எகிப்திய மக்கள் நாட்டை மீண்டும் பெற்றுள்ளனர்

8. கிறிஸ்தவத் தொழிலதிபர் : உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் ஊழலிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்

9. ஜெர்மனியில் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு


------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்கத் திருமடல் விசுவாச ஒளி” (Lumen Fidei)

ஜூலை,05,2013. விசுவாசம் குறித்த, “Lumen Fidei” அதாவது விசுவாச ஒளிஎன்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்கத் திருமடல், இவ்வெள்ளிக்கிழமையன்று நிருபர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
மூன்று இறையியல் புண்ணியங்கள் குறித்த பாப்பிறையின் போதனைகளை நிறைவு செய்வதாய் இந்தத் திருமடல் உள்ளது.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 2005ம் ஆண்டில் வெளியிட்ட பிறரன்பு குறித்த "Deus Caritas Est" திருமடல், 2007ம் ஆண்டில் வெளியிட்ட நம்பிக்கை குறித்த "Spe Salvi" திருமடல் ஆகிய இரண்டையும் தொடர்ந்து, விசுவாசம் குறித்த Lumen Fidei என்ற திருமடலை இந்த விசுவாச ஆண்டில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விசுவாச ஒளிஎன்ற இத்திருமடல் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே அறிவித்தது போல, இத்திருமடல் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் தொடங்கப்பட்டது. இதில் மூன்று பிரிவுகளில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இறையியல் பாணி அமைந்திருப்பது தெரிகின்றது.
முன்னுரை, முடிவுரை உட்பட 5 பிரிவுகளுடன் 82 பக்கங்களைக் கொண்டுள்ள விசுவாச ஒளிதிருமடலின் இறுதிப் பிரிவில், பொது நலனுக்குச் சேவை செய்வதில் விசுவாசத்தின் பங்கு பற்றியும், துன்புறுவோருக்கு நம்பிக்கை கொடுப்பது பற்றியும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொடுக்கும் முன்னுரிமைகள் அழுத்தமாக கூறப்பட்டுள்ளன. 
புனித பிரான்சிஸ் அசிசி, முத்திப்பேறுபெற்ற அன்னை தெரேசா போன்ற எத்தனையோ பல விசுவாசத்தின் ஆண்களும் பெண்களும், துன்புறும் மனிதர்களை ஒளியின் இடைநிலையாளர்களாகக் கண்டனர் எனச் சொல்லி, அன்னைமரியின் செபத்தோடு இத்திருமடலை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கர்தினால் Ouellet : “விசுவாச ஒளிதிருமடல் இரு திருத்தந்தையரையும் இணைக்கின்றது

ஜூலை,05,2013. ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர் பேராயர் Gerhard Ludwig Müller, புதுவழியில் நற்செய்தி அறிவிப்பை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Rino Fisichella ஆகியோர் விசுவாச ஒளிதிருமடலை, இவ்வெள்ளிக்கிழமையன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டுப் பேசினர்.
இத்திருமடல் குறித்துப் பேசிய கர்தினால் Ouellet, இத்திருமடல் இரு திருத்தந்தையராலும் எழுதப்பட்டுள்ளது நல்ல பொருத்தமாக இருக்கின்றது என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் போதனைகளின் தொடர்ச்சியாக இருப்பதை, இத்திருமடலை வாசிக்கும் எவரும் உடனடியாகப் புரிந்து கொள்வார்கள் என்றும் கர்தினால் Ouellet தெரிவித்தார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விசுவாச ஒளிஎன்ற இந்த முதல் திருமடல், வெற்றிகரமான மற்றும் பலனுள்ள வாழ்வின் வழிகாட்டும் ஒளியாக, கிறிஸ்தவ விசுவாசத்தைக் கொண்டாடுவதாக இருக்கின்றது என்றும் கூறப்பட்டது.
இறைபக்தியோடு சமூகச் செயல்கள் செய்யத் தூண்டுவதாகவும், மெய்யியல், இயற்கை அறிவியல் உட்பட மனித வாழ்வின் இருப்பின் ஒவ்வொரு கூறையும் ஒளிர்விப்பதாகவும் இத்திருமடல் அமைந்துள்ளது என்றும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மனித சமுதாயத்தின் நெருக்கடி, கடவுளைப் புறக்கணிப்பதிலிருந்து தொடங்குகிறது என்பதை விரிவாக அலசியுள்ள இத்திருமடல், உயர்ந்த நோக்கங்கள் இன்றி தன்னலத்தால் உருவாக்கப்படும் நீதி, அதன் முக்கிய கூறுகளைப் புறக்கணிக்கின்றன, அவர்களின் வாழ்வும் பயனற்றதாக மாறுகின்றது எனவும் இத்திருமடல் கூறுவதாகச் சொல்லப்பட்டது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : கடவுளின் செய்தியின் மையம் அவரது கருணை

ஜூலை,05,2013. நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்றுரைத்த இயேசுவின் திருவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து இவ்வெள்ளிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், கடவுளின் செய்தியின் மையம் அவரது கருணையே என்று கூறினார்.
இயேசு பாவிகளோடு உணவருந்துகிறார் என்பதைக் குறை கூறிய பரிசேயர்களுக்குப் பதிலுரைத்த இயேசுவின் திருவார்த்தைகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், பணப்பற்றுடையவர்கள், நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்கள் மற்றும் உரோமையர்களுக்காகத் தங்களின் சொந்த மக்களிடமிருந்து வரி தண்டுபவர்கள் என்பதால், வரி தண்டுபவர்கள் பாவிகள் என்று கருதப்பட்டனர் என்று கூறினார்.
ஆயினும், வரி தண்டுபவராகிய மத்தேயுவை இயேசு கருணையுடன் நோக்கினார், இயேசுவின் அழைப்பை அவர் கேட்டு மகிழ்ச்சியால் நிரம்பி, அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார், அவரின் கருணையைப் பெற்ற அந்த நேரம் மத்தேயுவுக்கு ஆழமான ஆன்மீக அனுபவமாக இருந்தது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இரண்டாவது தருணம் விழாவாக வருகிறது. இயேசு பாவிகளோடு விருந்து கொண்டாடினார், அங்கே கடவுளின் கருணை கொண்டாடப்பட்டது, அங்கே கடவுளின் கருணை, வாழ்வை மாற்றியது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வியப்பூட்டும் சந்திப்பும், விழாவும் நற்செய்தியை அறிவிப்பின் அன்றாடப் பணியாக வருகின்றது என்று கூறிய திருத்தந்தை, இப்பணி அந்த முதல் சந்திப்பின் நினைவிலிருந்து, அந்த விழாவிலிருந்து ஊட்டம் பெற வேண்டும் என்று கூறினார்.
இயேசு வெளியே சென்று ஏழைகளையும் நோயாளிகளையும் கண்டுபிடித்து அவர்களோடு விழாக் கொண்டாடினார், இப்பழக்கத்தைத் தொடர்ந்த இயேசு பாவிகளோடும் விழாக் கொண்டாடி அவர்களுக்குத் தமது மன்னிப்பை அருளினார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், இரண்டாம் ஜான் பால் ஆகியோரைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல்

ஜூலை,05,2013. முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான்இரண்டாம் ஜான் பால் உட்பட 12 இறையடியார்களைப் புனிதர் மற்றும் முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவது குறித்த ஆவணங்களுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி மரணமடைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் பரிந்துரையால் இடம்பெற்ற ஒரு புதுமை உட்பட மூன்று இறையடியார்களின் பரிந்துரைகளால் இடம்பெற்ற புதுமைகள் குறித்த விபரங்கள் இவ்வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
முத்திப்பேறுபெற்ற ஒருவரைப் புனிதர் என அறிவிப்பதற்கு ஒரு புதுமை இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை திருஅவையில் இருக்கின்றபோதிலும், முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்திருப்பது அவரின் விருப்பம் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்டுவரும் இவ்வேளையில், இப்பொதுச் சங்கத்தைத் தொடங்கியவர் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான் என்பதும், திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டதற்கு அவர் பெயரால் இடம்பெற்ற ஒரு புதுமையே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், 1936ம் ஆண்டில் இஸ்பெயினில் இடம்பெற்ற புரட்சியில் விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்ட 42 மறைசாட்சிகள், இன்னும், இறையடியார்கள் Nicola D'Onofrio, Bernardo Filippo, Maria Isabella, Maria Carmen Rendiles Martínez, Giuseppe Lazzati ஆகியோரின் வீரத்துவமான புண்ணிய வாழ்வு குறித்த விபரங்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை பிரான்சிஸ் : வத்திக்கான் நாட்டை புனித வளன் மற்றும் அதிதூதர் மிக்கேலுக்கு அர்ப்பணிப்பு 

ஜூலை,05,2013. வத்திக்கானின் நிர்வாகக் கட்டிடத்துக்கு அருகில் புதிதாக எழுப்பப்பட்டுள்ள அதிதூதர் புனித மிக்கேல் திருவுருவ நினைவுச் சின்னத்தை இவ்வெள்ளிக்கிழமை காலையில் ஆசீர்வதித்து வத்திக்கான் நாட்டை புனித வளன் மற்றும் அதிதூதர் புனித மிக்கேலிடம் அர்ப்பணித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முதலில் புனித வளனிடமும், பின்னர் புனித மிக்கேல் அதிதூதரிடமும் இறைஞ்சும் இரண்டு செபங்களைச் செபித்து வத்திக்கான் நாட்டுக்காக இவர்களிடம் இறைஞ்சினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீடத்தைக் கண்காணிக்குமாறும், திருஅவையின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒவ்வொரு சதித்திட்டத்திலிருந்தும்  அதனைப் பாதுகாக்குமாறும், மனிதர்கள் சோதனைகளை எதிர்த்து வெற்றி கொள்பவர்களாக இருக்குமாறும் புனித வளனிடம் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.   
வத்திக்கான் நகர நாட்டைப் பாதுகாக்குமாறு அதிதூதர் புனித மிக்கேலிடம் செபித்து அர்ப்பணித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின்பேரில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து, அரைமணி நேரம் இடம்பெற்ற இந்நிகழ்வு முழுவதும் இருந்தார் எனத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் நாட்டின் நிர்வாகத் தலைவர் கர்தினால் ஜூசப்பே பெர்த்தெல்லோ முதலில் அங்கிருந்த சிறிய குழுவினரை வரவேற்றுப் பேசிய பின்னர், வத்திக்கான் நாட்டின் முன்னாள் நிர்வாகத் தலைவர் கர்தினால் ஜொவான்னி லயோலோவும் சிறிய உரையாற்றினார்.
அதிதூதர் புனித மிக்கேல் திருவுருவ நினைவுச் சின்னம், இன்னும், இதற்கருகில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள புனித வளன் நீர் ஊற்றின் முக்கியத்துவம் குறித்து இந்நிகழ்வில் விளக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நண்பரையும்விட மேலானவர்

ஜூலை,05,2013. இயேசு நண்பரையும்விட மேலானவர். அவர் உண்மை  மற்றும் வாழ்வின் ஆசிரியர். மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்லும் பாதையை நமக்கு அவர் காட்டுகின்றவர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தி, அவரின் @Pontifex என்ற டுவிட்டர் பக்கத்தில் இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்குத் திருமடல்  இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டதை முன்னிட்டு @TerzaLoggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள திருப்பீடச் செயலகம், இன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்குத் திருமடல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு, Lumen Fidei அதாவது விசுவாச ஒளி எனப் பெயரிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. முதுபெரும் தலைவர் Sidrak : எகிப்திய மக்கள் நாட்டை மீண்டும் பெற்றுள்ளனர்

ஜூலை,05,2013. எகிப்தின் அரசுத்தலைவர் மோர்சி இராணுவத்தால் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு அந்நாட்டின் தலைமை நீதிபதி நாட்டை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டின் காப்டிக் கத்தோலிக்கரின் அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தலைவர் Ibrahim Isaac Sidrak, எகிப்திய மக்கள் அமைதியான முறையில் நாட்டை மீண்டும் பெற்றுள்ளனர் எனக் கூறினார்.
எகிப்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய முதுபெரும் தலைவர் Sidrak, இப்புதன் மாலையிலிருந்து அந்நாட்டினர் விழாக் கொண்டாடுவதாகத் தெரிவித்தார்.
எகிப்தின் அரசியல் நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கும், நிலையான நாட்டின் தன்மைக்குமான அரசின் திட்டங்களுக்கு அந்நாட்டின் காப்டிக் கத்தோலிக்கத் திருஅவை தனது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்த முதுபெரும் தலைவர் Sidrak, நாட்டில் காணப்படும் பல அடையாளங்கள் தாங்கள் சரியான பாதையில் செல்வதைக் காட்டுகின்றன எனவும் கூறுகினார்.
இதற்கிடையே, எகிப்தில் அதிபர் மோர்சி பதவி கவிழ்க்கப்பட்டமைக்கு எதிராக இவ்வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையில், அந்நாட்டு இராணுவம் தேசிய நல்லிணக்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆதாரம் : Fides

8. கிறிஸ்தவத் தொழிலதிபர் : உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் ஊழலிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்

ஜூலை,05,2013. இந்தியாவில், மத்திய அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு குறித்த புதிய மசோதா இந்திய சமூகத்துக்கென எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான முயற்சி என்று, உலகளாவிய கிறிஸ்தவ வணிக அமைப்பின் நிறுவனர் Freddy Mendonca கருத்து தெரிவித்தார்.
எனினும், இம்மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஊழலிலிருந்து இது பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் Mendonca கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட சிறாரில் 43 விழுக்காட்டினர் நீண்டகால ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் வாழும்வேளை, நாட்டில் பசியை அகற்றுவதற்கு, இந்தச் சிறப்பான மசோதா உறுதியளிக்கின்றது என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது. 
இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இம்மசோதா, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை அளிக்க வழி செய்கின்றது.
இந்த திட்டத்தின்கீழ் 80 கோடிப் பேருக்கு மிகக் குறைந்த விலையில் மாதம் 5 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்படும். உணவுப் பொருட்களின் விலை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும்.
இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் இரண்டாயிரம் கோடி டாலர்வரை செலவாகும். உலகில் செயல்படுத்தப்படும் மிகப்பெரும் உணவுத் திட்டமாக இது இருக்கும் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews

9. ஜெர்மனியில் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு

ஜூலை,05,2013. ஜெர்மனியில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
அந்நாட்டில் சில ஆண்டுகளாக குறைந்த அளவு பிறப்பு விகிதம்தான் இருந்தது, ஆனால் 2012ம் ஆண்டில் இந்த விகிதம் அதிகரித்துள்ளது என்று புள்ளி விபரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
கடந்த 2012ம் ஆண்டு 6,74,000 குழந்தைகள் ஜெர்மனியில் பிறந்துள்ளனர், இவ்வெண்ணிக்கை, 2011ம் ஆண்டில் இருந்ததைவிட 1.6 விழுக்காடு அதிகம் என்றும் அப்புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
தற்போதைய பிறப்பு விகிதம் அதிகரிப்புக்கு, குடியேற்றதார மக்களின் எண்ணிக்கையே காரணம் என்றும் அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆதாரம் : The Local

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...