1. திருத்தந்தை பிரான்சிஸ் : அனைத்து விசுவாசிகளையும் கிறிஸ்துவில் உறுதிப்படுத்திப் பலப்படுத்துவது திருத்தந்தையின் பணி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : முழுவதும் அன்பும், முழுவதும் அருளும் உள்ள ஓர் இறைவனை நம்புவது எவ்வளவு மகிழ்ச்சியானது
3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவில் நாம் இழப்பது எதுவுமில்லை
4. "மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் தற்போதைய நிலையை இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை", பேராயர் Nzapalainga
5. பேராயர் சுள்ளிக்காட் : பாலியல் வன்முறைக்குச் சரியான பதில் பழிவாங்குதல் அல்ல
6. மியான்மார் பெரிய மதங்களின் தலைவர்கள் : சமயக் காழ்ப்புணர்வுச் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்
7. போலந்து, உக்ரெய்ன் கத்தோலிக்கத் தலைவர்கள் ஒப்புரவுக்கு அழைப்பு
8. உலகில் மரணதண்டனை நிறுத்தப்பட அழைப்பு, பான் கி மூன்
9. இலங்கையில் பாதியிலே கல்வியைக் கைவிடும் சிறார்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : அனைத்து விசுவாசிகளையும் கிறிஸ்துவில் உறுதிப்படுத்திப் பலப்படுத்துவது திருத்தந்தையின் பணி
ஜூன்,29,2013. ஒருவர் இறைவனால் வழிநடத்தப்படுவதற்குத் தன்னை அனுமதித்து, கிறிஸ்து மற்றும் நற்செய்திக்கான அன்பால் நிறைந்து, ஒன்றிப்பின் ஊழியர்களாக வாழ்வதன் வழியாகவே ஆண்டவரை அறிவிக்க முடியும், இவற்றையே புனிதர்கள் பேதுரு, பவுல் நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேராயர்களிடம் கூறினார்.
புனிதர்கள் பேதுரு, பவுல்
பெருவிழாவாகிய இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா
பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், இந்தியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 34 பேராயர்களுக்கு பாலியம் என்ற கழுத்துப்பட்டையை அணிவித்து, இந்நாளைய திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
உரோம் திருஅவையின் முதன்மைப் பாதுகாவலர்களாகிய திருத்தூதர்கள் பேதுரு, பவுல்
பெருவிழாவன்று உலகெங்கிலுமிருந்து வந்துள்ள ஆயர்களின் பிரசன்னத்தில்
இவ்விழாவைச் சிறப்பிப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது என்றும்
கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“உறுதிப்படுத்து” என்ற சொல்லால் வழிநடத்தப்பட்ட பாப்பிறைப் பணி குறித்த மூன்று எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, விசுவாசத்தில், அன்பில், ஒற்றுமையில் உறுதிப்படுத்துவது குறித்து விளக்கினார்.
நமது எண்ணங்களையும், நமது உணர்வுகளையும் மனித அதிகாரம் குறித்த வாதப்போக்கையும் நம்மில் மேலோங்கச் செய்யும்போதெல்லாம், இறைவனாலும் விசுவாசத்தாலும் நாம் கற்பிக்கப்பட்டு வழிநடத்தப்படுவதற்கு நம்மை அனுமதிப்பதில்லை, மாறாக, நாம் இடறலான தடைகளாக மாறி விடுகிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பில் உறுதிப்படுத்துவது குறித்து விளக்கிய திருத்தந்தை, நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என்று புனித பவுல் குறிப்பிட்ட போராட்டம், உலகெங்கும் தொடர்ந்து இரத்தத்தைச் சிந்தும் மனித ஆயுதங்களோடு நடத்தும் போராட்டங்களில் ஒன்றல்ல, மாறாக, இது மறைசாட்சி மரணத்தை வருவிக்கும் போராட்டம் எனவும் விளக்கினார்.
கிறிஸ்துவுக்காகவும் பிறருக்காகவும் தனது வாழ்வு முழுவதையும் கொடையாக வழங்கும் ஆயுதத்தைப் புனித பவுல் கொண்டிருந்தார், கிறிஸ்துமீது புனித பவுல் கொண்டிருந்த இத்தகைய அன்பில், எவ்விதப் பாகுபாடுகள், வரையறைகள் அல்லது எல்லைகளின்றி, தமது சகோதர சகோதரிகளை உறுப்படுத்தி வாழ்வதற்கே உரோம் ஆயர் அழைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று பேராயர்கள் பெற்றுள்ள பாலியம், உரோம் ஆயரோடும், உலகளாவியத் திருஅவையோடும் கொண்டுள்ள ஒன்றிப்பின் அடையாளமாகவுள்ளவேளை, திருஅவையில் பெரும் சொத்தாக இருக்கும் பல்வகைத்தன்மை, திருஅவையின்
உடலைக் காயப்படுத்தும் ஒவ்வொரு மோதலையும் மேற்கொள்வதற்கானப் பணிசெய்வதற்கு
எப்போதும் நம்மைத் தூண்ட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ் .
கிறிஸ்துவில் விசுவாசம் கொள்வதே, கிறிஸ்தவர்கள் என்ற வகையில் நமது வாழ்வின் ஒளி என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
சென்னை மயிலைப் பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி, விசாகப்பட்டினம் பேராயர் பிரகாஷ் மல்லவரப்பு, டில்லி பேராயர் அனில் ஜோசப் தாமஸ் கூட்டோ உட்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 34 பேராயர்கள் இச்சனிக்கிழமையன்று 'பாலியம்' எனப்படும் கழுத்துப்பட்டையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து பெற்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : முழுவதும் அன்பும், முழுவதும் அருளும் உள்ள ஓர் இறைவனை நம்புவது எவ்வளவு மகிழ்ச்சியானது
ஜூன்,29,2013. பேரரசின் வல்லமையால் அல்ல, மாறாக,
திருத்தூதர்கள் பேதுரு மற்றும் பவுலின் கிறிஸ்துவுக்குச் சாட்சி பகரும்
மறைசாட்சி மரணத்தின் வல்லமையால் உரோம் திருஅவை உலகின் அனைத்துத்
திருஅவைகளுக்கும் ஆதாரப்பூர்வமான இடமாக விளங்குகின்றது என்று திருத்தந்தை
பிரான்சிஸ் கூறினார்.
புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவாகிய இச்சனிக்கிழமை நண்பகலில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இவ்விரு புனிதர்களின் வாழ்வு பற்றி விளக்கி, இவர்கள் இருவரும் இயேசு கிறிஸ்துவில் இறைவனின் இரக்கத்தையும் மன்னிப்பையும் அனுபவித்தனர் எனவும் கூறினார்.
மேலும்,
சிமியோன் பேதுருவின் சகோதரர் பெலவேந்திரர் பற்றியும் குறிப்பிட்டு
இப்பெருவிழாவில் கலந்து கொண்ட கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ சபைப்
பிரதிநிதிகளுக்கும், அச்சபையின்
முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமேயோவுக்கு நாம் அனைவரும் சேர்ந்து நம்
வாழ்த்துக்களைத் தெரிவிப்போம் எனவும் கூறினார் திருத்தந்தை.
புனித பெலவேந்திரர் கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ சபையின் பாதுகாவலர் ஆவார்.
இந்நாளில் உலகின் பல்வேறு பகுதிகளில் பாலியம் பெறும் பேராயர்களுக்காவும் செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
மேலும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் துன்புறும் மக்க்ளுக்காகச் சிறப்பாகச் செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவில் நாம் இழப்பது எதுவுமில்லை
ஜூன்,29,2013.
ஒரு கொடை அல்லது தியாகம் போன்று கிறிஸ்துவுக்காக நம் வாழ்வை இழப்பதற்குக்
கற்றுக்கொள்வோம். கிறிஸ்துவில் நாம் இழப்பது ஒன்றுமில்லை என்று தனது
டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் @Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் எழுதியுள்ளார்.
மேலும், திருப்பீடச் செயலகம் @TerzaLoggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், திருஅவையின் மறைப்பணி ஆர்வம் மற்றும் ஒன்றிப்பின் அடையாளங்களாக விளங்கும் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து சிறப்பிப்போம் என்று இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. "மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் தற்போதைய நிலையை இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை", பேராயர் Nzapalainga
ஜூன்,29,2013.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் செலேக்கா புரட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ள
பெரும் அழிவுகளால் அந்நாடு தற்போது இருக்கும் நிலையை இதற்கு முன்னர்
பார்த்ததே இல்லை என்று அந்நாட்டின் Bangui பேராயர் Dieudonné Nzapalainga கூறினார்.
இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் பாலியம் பெற்ற 34 பேராயர்களில் ஒருவராகிய பேராயர் Nzapalainga, பொது மக்களின் சொத்துக்களையும், நாட்டின் ஆவணங்கள் உட்பட நிர்வாகம் சார்ந்த மற்ற ஏடுகளையும் செலேக்கா புரட்சியாளர்கள் பெருமளவில் சேதப்படுத்தியுள்ளனர் என்று Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
திருஅவையின் அமைப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மறைமாவட்டங்கள் மற்றும் மறைப்பணித்தளங்களின் குறைந்தது நூறு வாகனங்கள் திருடப்பட்டுள்ளன என்றும் பேராயர் Nzapalainga தெரிவித்தார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் இந்நிலைமையைத் தான் திருத்தந்தையிடம் கூறவிருப்பதாகவும், நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான தங்களது ஆவலை வெளிப்படுத்தவிருப்பதாகவும் கூறினார் பேராயர் Nzapalainga.
ஆதாரம் : Fides
5. பேராயர் சுள்ளிக்காட் : பாலியல் வன்முறைக்குச் சரியான பதில் பழிவாங்குதல் அல்ல
ஜூன்,29,2013. போர் இடம்பெறும் இடங்களில் நடத்தப்படும் பாலியல் வன்முறைக்குச் சரியான பதில் பழிவாங்குதல் அல்ல, ஏனெனில் இது தொடர் வன்முறைக்கு இட்டுச்செல்லும் என, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் கூறினார்.
“பெண்கள், அமைதி, பாதுகாப்பு : மோதல்கள் இடம்பெறும் இடங்களில் பாலியல் வன்முறை”
என்ற தலைப்பில் நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா.பாதுகாப்பு அவை
நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் சுள்ளிக்காட் இவ்வாறு கூறினார்.
பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும், இளையோரையும் முதியோரையும் பாதிக்கும் இக்கொடூரச் பாலியல் வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பேராயர் சுள்ளிக்காட், இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான ஆதரவு வழங்கப்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், நலவாழ்வு குறித்த ஐ.நா. கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பேராயர் சுள்ளிக்காட், உலகில் 5 வயதுக்குட்பட்ட 19 ஆயிரம் சிறார் தடுத்துநிறுத்தக்கூடிய நோய்களால் தினமும் இறக்கின்றனர் என்ற கவலையையும் வெளியிட்டார்.
உலகிலுள்ள எய்ட்ஸ் நோயாளிகளில் ஏறக்குறைய பாதிப்பேர் மட்டுமே அதற்கான சிகிச்சையைப் பெறுவதற்கு வாய்ப்புப் பெற்றுள்ளனர் என்றும், மனிதர்
மற்றும் அவர்களின் நலவாழ்வு குறித்த தேவைகளை அனைத்துலகச் சமுதாயம்
முழுமையாகப் புரிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார் பேராயர் சுள்ளிக்காட்.
5,400 மருத்துவமனைகள், 17,500 சிறு மருத்துவமனைகள், 567 தொழுநோயாளர் பராமரிப்பு மையங்கள், 15,700 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மையங்கள் ஆகியவற்றைத் திருஅவை நடத்துகின்றது, இவை மக்களின் நலவாழ்வில் திருப்பீடம் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகின்றது என்றும் கூறினார் பேராயர் சுள்ளிக்காட்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. மியான்மார் பெரிய மதங்களின் தலைவர்கள் : சமயக் காழ்ப்புணர்வுச் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்
ஜூன்,29,2013. மியான்மாரில் இடம்பெறும் சமயக் காழ்ப்புணர்வு களையப்பட்டு, நாட்டின் நல்வாழ்வையும், நம்பிக்கை
நிறைந்த வருங்காலத்தையும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கைகளை
எடுக்குமாறு அந்நாட்டின் பெரிய மதங்களின் தலைவர்கள் உருக்கமான வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
யாங்கூனில் அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதர் Derek Mitchell தலைமையில் அந்நாட்டின் பெரிய மதங்களின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தின் இறுதியில் அனைவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
யாங்கூன் கத்தோலிக்கப் பேராயர் Charlas Maung Bo உட்பட மியான்மாரின் புத்த மற்றும் முஸ்லீம் மதத் தலைவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், அந்நாட்டில் சமய நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதற்கு அமெரிக்க ஐக்கிய நாடும், அனைத்துலகச் சமுதாயமும் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மியான்மாரில் அண்மை மாதங்களில் முஸ்லீம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : Fides
7. போலந்து, உக்ரெய்ன் கத்தோலிக்கத் தலைவர்கள் ஒப்புரவுக்கு அழைப்பு
ஜூன்,29,2013. போலந்து மற்றும் உக்ரெய்ன் நாடுகளின் எல்லையிலுள்ள Volhyniaவில் படுகொலைகள் இடம்பெற்றதன் 70ம் ஆண்டு அண்மித்துவரும்வேளை, மன்னிப்பு மற்றும் ஒப்புரவுக்கு அழைப்புவிடுக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளனர் இவ்விரு நாடுகளின் கத்தோலிக்கத் தலைவர்கள்.
நாத்சிகளால் ஆக்ரமிக்கப்பட்டிருந்த Volhyniaவில் 1943ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி உக்ரேய்ன் தேசியவாதிகள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் ஏறக்குறைய ஒரு இலட்சம் போலந்து நாட்டவரும், ஏறக்குறைய 20 ஆயிரம் உக்ரெய்ன் நாட்டவரும் கொல்லப்பட்டனர்.
இவ்வன்முறை இடம்பெற்றதன் 70ம் ஆண்டை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள போலந்து மற்றும் உக்ரெய்ன் நாடுகளின் கத்தோலிக்கத் தலைவர்கள், இந்த இனவெறிக் கொலைகள் இடம்பெற்றதை ஏற்றுள்ள அதேவேளை, இவ்விரு நாட்டவரும் ஒருவரையொருவர் மன்னிக்குமாறு கேட்டுள்ளனர்.
உண்மை மட்டுமே நம்மை விடுதலையாக்கும் என்பதை அறிந்துள்ளோம், எனவே அது மன்னிப்புக்கு இட்டுச்செல்ல வேண்டுமெனவும் அத்தலைவர்களின் அறிக்கை கூறுகின்றது.
ஆதாரம் : CWN
8. உலகில் மரணதண்டனை நிறுத்தப்பட அழைப்பு, பான் கி மூன்
ஜூன்,29,2013.
மரணதண்டனை நிறைவேற்றும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை
எடுக்குக்குமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்
செயலர் பான் கி மூன்.
மரணதண்டனையை
ஒழிப்பது குறித்து நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெற்றுவரும்
உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் இவ்வாறு வலியுறுத்திய பான் கி மூன், மரணதண்டனையை
இன்னும் நிறைவேற்றிவரும் நாடுகள் இதனை ஒழிப்பது குறித்து உண்மையான
விவாதங்கள் இடம்பெறுவதற்கு அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
நீதி
வழங்குவதில் ஏற்படும் தவறான முடிவுகளுக்கு அப்பாவி மக்களின் உயிர்கள்
பலியாவதைத் தடுப்பதற்கான கடமையை நாம் கொண்டுள்ளோம் என்று கூறிய பான் கி
மூன், மரணதண்டனையை ஒழிப்பதே இதற்கு மிகவும் இன்றியமையாத வழி என்றும் கூறினார்.
மரணதண்டனையை
நிறைவேற்றும் பழக்கத்தை நிறுத்துவதற்கு அழைப்புவிடுக்கும் நான்கு
தீர்மானங்களை ஐ.நா.பொது அவை 2007ம் ஆண்டில் கொண்டுவந்த பின்னர், ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளுள் ஏறக்குறைய 150, இப்பழக்கத்தை இரத்து செய்துள்ளன அல்லது அதை நிறைவேற்றாமல் உள்ளன.
ஆதாரம் : UN
9. இலங்கையில் பாதியிலே கல்வியைக் கைவிடும் சிறார்
ஜூன்,29,2013.
இலங்கையில் 2015ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்கும்
முயற்சியை எடுத்து வருகிறது ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யுனிசெப்.
இலங்கையில் எழுத்தறிவு உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் உச்சத்தில் இருக்கின்றபோதிலும், அங்குச் சில பகுதிகளில், இன்றும் ஆரம்பப்பள்ளியைப் பாதியில் கைவிடும் சிறார்கள் கணிசமாக இருப்பதாக யுனிசெப் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
இலங்கை அரசின் ஆதரவுடன் யுனிசெப் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வின்படி, இலங்கையில்
மற்ற நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைவிட மலையக தோட்டப்பகுதியைச் சேர்ந்த
பிள்ளைகளே அதிகமாகத் தங்களது கல்வியை ஆரம்ப்ப்பள்ளிக்கூட மட்டத்திலேயே
கைவிடுவதாகத் தெரியவந்துள்ளது.
மலையகத் தோட்டங்களில் ஆண்பிள்ளைகளைவிட பெண்குழந்தைகளே அதிகமாக ஆரம்பப்பள்ளிக்கூடப் படிப்பைக் கைவிடுவதாக இவ்வறிக்கை கூறியுள்ளது.
இதற்கு, சமூக-பொருளாதார நிலையே காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆதாரம் : Colombo page
No comments:
Post a Comment