1. திருத்தந்தை பிரான்சிஸ் : மனஉறுதியுடனும் விடா முயற்சியுடனும் செபிக்க வேண்டும்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனோடு உரையாடத் தெரியாதவர்கள் விடுதலை பெற்றவர்கள் அல்ல
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்கத் திருமடல் ஜூலை 5ல் வெளியிடப்படுகிறது
4. திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்
5. லித்வேனிய இளைஞர்களுக்கு திருத்தந்தையின் செய்தி
6. ஆகஸ்ட் மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணித் திட்டங்கள்
7. ஊட்டச்சத்து குறைவு இந்தியாவில்தான் அதிகம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : மனஉறுதியுடனும் விடா முயற்சியுடனும் செபிக்க வேண்டும்
ஜூலை,01,2013. நம்முடைய செபம் ஆபிரகாமின் செயலைப்போல் மன உறுதி கொண்டதாகவும், விடாமுயற்சியுடையதாகவும்
இருக்க வேண்டும் என இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்
நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான திருப்பீட அவையின் அங்கத்தினர்களோடு இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, சோதோம் நகரை அழிவிலிருந்து காப்பாற்ற இறைவனோடு வாதாடிய ஆபிரகாமின் செயலை நம் செபத்திற்கு எடுத்துக்காட்டாக முன்வைத்தார்.
நம் செபம் எப்போதும் மன உறுதி நிறைந்ததாய் இருக்கவேண்டும் என்பதை இந்நிகழ்வு காட்டுகிறது என்றார் திருத்தந்தை.
நமக்கு இறைவனின் அருள் வேண்டுமெனில், அது மன உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் கேட்கப்படவேண்டும், அப்போதுதான் அது உண்மையான செபமாகும் என்றார் திருத்தந்தை.
“இறைவனுக்கு
அனைத்தும் தெரியும். நீதிமான்கள் மீதும் பாவிகள் மீதும் அவர் மழையைப்
பொழியச் செய்கிறார்" என இயேசு கூறிய வார்த்தைகளையும் இங்கு சுட்டிக்காட்டிய
திருத்தந்தை, இதே கருத்துடன்தான் ஆபிரகாமும் சோதோம் நகரை அழிவிலிருந்து காப்பாற்ற, இறைவனோடு வாதாடினார் என்றார்.
திருப்பாடல் 102ன் முக்கியத்துவத்தையும் மேற்கோள் காட்டி தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனோடு உரையாடத் தெரியாதவர்கள் விடுதலை பெற்றவர்கள் அல்ல
ஜூலை,01,2013. இறைவனுக்கும், தன் மனச்சான்றின் குரலுக்கும் செவிமடுத்து, மனத்துணிவுடன் தன் தலைமைப் பணியைத் துறந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நமக்கெல்லாம் நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளார் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமக்கு எதுவெல்லாம் இயைந்ததாக உள்ளதோ, எதெல்லாம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ, அவைகளுக்கு அல்ல, மாறாக, இறைவனின்
குரலுக்கும் நம் மனச்சான்றின் குரலுக்கும் செவிமடுப்பதன் மூலம் சிறந்த
முடிவுகளை நாம் எடுக்க முடியும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உள்ளார் என்றார்.
சுதந்திரமாக இல்லாமலும், இறைவனோடு உரையாடத் தெரியாமலும் இருக்கும் கிறிஸ்தவர்களை இயேசு விரும்புவதில்லை, ஏனெனில் இறைவனோடு உரையாடத் தெரியாதவர்கள் விடுதலை பெற்றவர்கள் அல்ல எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று, உலகம்
முழுவதும் கத்தோலிக்கக் கோவில்களில் திருத்தந்தையின் பிறன்பு
நடவடிக்கைகளுக்கென நிதி திரட்டப்பட்டதைக் குறித்தும் தன் மூவேளை செப
உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, திருத்தந்தையர்களின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் இச்செயல்பாட்டிற்கு தன் நன்றியையும் வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்கத் திருமடல் ஜூலை 5ல் வெளியிடப்படுகிறது
ஜூலை,01,2013. "Lumen fidei" என்ற பெயரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்கத் திருமடல் ஜூலை 5, வருகிற வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்படும் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் இத்திங்களன்று அறிவித்தது.
திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டையொட்டி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் தொடங்கப்பட்ட இத்திருமடல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் முடிக்கப்பட்டுள்ளது. எனவே “நான்கு கைகள்” திருமடல் எனவும் இதனை ஏற்கனவே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஜூலை 8, வருகிற திங்கட்கிழமையன்று இத்தாலியின் Lampedusa தீவுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று, அவ்விடத்திலுள்ள
புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் அத்தீவில் வாழும் மக்களைச் சந்தித்து
ஊக்கப்படுத்துவார் எனவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
அண்மையில் ஆப்ரிக்காவிலிருந்து குடியேற்றதாரர்களை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் பலர் கடலிலே உயிரிழந்தனர். இவர்களுக்காகவும் ampedusa தீவில் செபிக்கவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், தேவையில்
இருக்கும் புலம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுமாறு
அழைப்புவிடுப்பார் என்றும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும்
அறிவித்தது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்
ஜூலை,01,2013. 'இன்று திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கான நாள். இந்நாளின் செபங்களுக்கும் ஒருமைப்பாட்டிற்கும் நன்றி கூறுகின்றேன்' என தன் ஞாயிறு டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின்
பிறரன்பு நடவடிக்கைகளுக்கு செபம் மற்றும் நிதி உதவி மூலம்
ஆதரவு வழங்குபவர்களுக்கு தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு
நன்றியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, அதே நாளில் இரண்டாவது செய்தியையும் வெளியிட்டுள்ளார்.
'கிறிஸ்தவர்கள் ஒரு போதும் சலிப்படைவதில்லை, மற்றும் சோகமடைவதில்லை. மாறாக, கிறிஸ்துவை அன்புகூர்பவர்கள், மகிழ்வு நிரம்பியவர்களாகவும் அம்மகிழ்வை வழங்குபவர்களாகவும் இருப்பார்கள்' என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரண்டாவது டுவிட்டர் செய்தி கூறுகின்றது.
இதற்கிடையே, திருப்பீடச்செயலகம் இத்திங்களன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'அடிப்படை மருந்துக்கள், மற்றும் தொழில் நுட்பம் உலகில் அனைவருக்கும் கிடைக்க வழிவகுக்கும் உலக அர்ப்பணம் உருவாவதை, கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படாத பேராசையே தடைச்செய்கிறது' என தெரிவித்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. லித்வேனிய இளைஞர்களுக்கு திருத்தந்தையின் செய்தி
ஜூலை,01,2013. இளையோருக்குப் பல்வேறு கொடைகளை வழங்கும் இயேசுகிறிஸ்து, அதற்குக் கைமாறாக, அவ்விளையோர்
தன் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்பதை மட்டுமே கேட்கிறார் என
லித்வேனியாவில் ஆறாவது இளையோர் தினக் கொண்டாட்டங்களுக்கு அனுப்பியுள்ள
செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் லித்வேனியாவின் Kaunas எனுமிடத்தில் கூடியிருந்த இளையோருக்குச் செய்தி அனுப்பியத் திருத்தந்தை, இளையோரின் நண்பராக, சகோதரராக, உண்மை மற்றும் வாழ்வின் குருவாக இருக்க விரும்பும் இயேசு, இறைவனின் அன்பை, இரக்கத்தை கொடையாக வழங்குகிறார் என்றார்.
நம்முடைய குறைகளுடன், பலவீனங்களுடன் அவர் நம்மை அன்புகூர்கிறார், எனெனில், அவ்வாறு அன்புகூரப்படும்போது நாம் புதுப்பிக்கப்படுகிறோம் எனவும் கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்துவோடு நட்பு கொள்வது, மற்றும், இறை அன்பைப் பெறுவது என்பது, திருவருட்சாதனங்கள் வழி, குறிப்பாக திருநற்கருணை மற்றும் ஒப்புரவு அருட்சாதனங்கள் வழி என்ற திருத்தந்தை, இயேசுவின் வார்த்தைக்குச் செவிமடுப்பது இன்னுமோரு வழி எனவும் தெரிவித்தார்.
இயேசுவின் நட்பு என்பது ஒரு மாயத்தோற்றம் அல்ல, அது
அனைவருக்கும் உரிய ஓர் உறுதியான உண்மை என்பதை சிலுவையில் இயேசு
வெளிப்படுத்தினார் என லித்வேனிய இளைஞர்களுக்கு அனுப்பியுள்ள
செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. ஆகஸ்ட் மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணித் திட்டங்கள்
ஜூலை,01,2013. ஜூலை, ஆகஸ்ட் ஆகிய கோடை விடுமுறை மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பொதுவானப் பணித் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளவேளை, வருகிற ஆகஸ்ட் 7, 14, 21, 28 ஆகிய புதன்கிழமைகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொது மறைபோதகங்கள் இடம் பெறாது எனத் திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் வழக்கமான புதன் பொது மறைபோதகம் வருகிற செப்டம்பர்
4ம் தேதியன்று மீண்டும் தொடங்கும் எனவும் திருப்பீடம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் மூவேளை செப உரைகள் வத்திக்கானில் இடம்பெறும். ஆயினும், ஆகஸ்ட்
15ம் தேதி அன்னைமரியின் விண்ணேற்பு விழாவன்று திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் காஸ்தெல் கந்தோல்ஃபோ பங்கில் திருப்பலி நிகழ்த்துவார். பின்னர்
அங்கிருக்கும் பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்திலிருந்து நண்பகல்
மூவேளை செப உரையை வழங்குவார் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. ஊட்டச்சத்து குறைவு இந்தியாவில்தான் அதிகம்
ஜூலை,01,2013. அனைத்துலக அளவில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் இந்தியாவில்தான் 40 விழுக்காட்டினர் உள்ளனர் என்றும், இதற்கு இந்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அமல்படுத்துவதில் சீரான வழிகள் பின்பற்றப்படவில்லை என்றும், ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக இந்தியாவில், ஊட்டச்சத்து குறைவு வளர்ச்சி, இரத்தசோகை பாதிப்பு விகிதம் ஆகியவை அதிக அளவில் உள்ளது எனக் கூறும், கனடாவை மையமாக கொண்டு செயல்படும் அரசு சாரா ஊட்டச்சத்து ஆய்வு மையத்தின் தலைவர் எம்.ஜி.,வெங்கடேஷ் மன்னார், சீனா, நேபாளம், பிரேசில், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை மிக மோசமாக உள்ளது என்றார்.
இந்தியாவில், திட்டங்கள், கொள்கைகள் செயல்படுத்துவதில், கையாள்வதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன, என்ற மன்னார், சுகாதாரம், குழந்தைகள் நலம் மற்றும் பெண்கள் முன்னேற்றம், கல்வி, கிராமப்புற வளர்ச்சி ஆகிய துறைகளில் குறைபாடுகள் உள்ளன என்றும் கவலையை வெளியிட்டார் அவர்.
ஆதாரம் : தினமலர்
No comments:
Post a Comment