1. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் கடவுளின் குழந்தைகள், இந்த அடையாள அட்டையை யாரும் நம்மிடமிருந்து திருட முடியாது
2. திருத்தந்தை பிரான்சிஸ், இத்தாலிய பிரதமர் சந்திப்பு
3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவின் அன்பும் நட்பும் மாயை அல்ல
4. 2012ம் ஆண்டின் திருப்பீடத்தின் நிதிநிலை அறிக்கை
5. பேராயர் தொமாசி : தொழிற்நுட்பங்கள் அறநெறி விதிகளுக்கு கட்டுப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும்
6. அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முயலும் Congo அரசின் திட்டங்களுக்கு தலத்திருஅவை எதிர்ப்பு
7. புனித பூமியிலிருந்து 120 இளையோர் Rio de Janeiro மாநாட்டிற்குச் செல்ல உள்ளனர்.
8. 21ம் நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளில் அதற்கு முன்னர் எப்போதையும்விட தட்பவெப்ப நிலைகளில் தீவிர பாதிப்புகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் கடவுளின் குழந்தைகள், இந்த அடையாள அட்டையை யாரும் நம்மிடமிருந்து திருட முடியாது
ஜூலை,04,2013. இயேசு நம்மைக் கடவுளின் குழந்தைகளாக என்றென்றும் ஆக்கினார், நமக்கு அடையாள அட்டையாக இருக்கும் இதனை யாரும் நம்மிடமிருந்து திருட முடியாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில், முடக்குவாதமுற்றவரை இயேசு குணப்படுத்திய இந்நாளைய நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, இவ்வுலகை இறைவனோடு ஒப்புரவாக்கி அதனைப் புதுப்படைப்பாக்கியதே உண்மையான புதுமை என்று கூறினார்.
இயேசு, முடக்குவாதமுற்றவரிடம் மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சொன்னபோது, அந்த நபர் உடலளவில் குணமாக விரும்பியதால் சற்றே ஏமாற்றம் அடைந்திருக்கலாம் என்றுரைத்த திருத்தந்தை, இயேசு இப்படிச் சொன்னதைக் கேட்ட மறைநூல் அறிஞர்கள் சிலர், கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும், இவன் கடவுளைப் பழிக்கிறான் என்று தமக்குள் சொல்லிக் கொண்டதால், இயேசு முடக்குவாதமுற்றவரின் உடலையும் குணப்படுத்தினார் என்று விளக்கினார்.
குணமாக்குதல், போதனை, பழிப்புரைக்கு எதிரான உறுதியான சொற்கள் ஆகியவை ஓர் அடையாளம் மட்டுமே, இவை இயேசு செய்ததற்கும் மேலான ஓர் அடையாளம், அதுதான் பாவங்களின் மன்னிப்பு என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வுலகம் இயேசுவில் கடவுளோடு ஒப்புரவாகின்றது, இது மிக ஆழமான புதுமை என்று கூறினார்
இந்த ஒப்புரவு உலகின் மறுபடைப்பு, இது இயேசுவின் அதி உன்னதமான மறைப்பணி, பாவிகளாகிய நம் அனைவரையும் மீட்கும் பணி, இயேசு இதனை வெறும் வார்த்தைகளாலும், அடையாளங்களாலும், சாலையில் நடந்து செல்வதாலும் செய்யவில்லை, மாறாக, இதனை தமது சதையால் செய்தார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளாகிய இயேசு, பாவிகளாகிய நம்மை நமது உட்புறத்திலிருந்து குணமாக்குவதற்காக நம்மைப்போல் ஒருவரானார் என்றும், அனைத்துப் பாவங்களையும் தம்மீது சுமந்து தானே பாவமாகி, நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்தார் என்றும், இதுவே புதிய படைப்பு, இதுவே மாபெரும் புதுமை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, இதுவே நமது துணிச்சலுக்கு ஆணிவேர் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நான் விடுதலைப் பெற்றுள்ளேன், நான் வானகத் தந்தையால் அன்பு செய்யப்படும் குழந்தை, நான் வானகத் தந்தையை அன்பு செய்கிறேன் என்ற துணிச்சலும் ஏற்படுகின்றது, இவ்வாறு நம்மை உணர வைக்கும் கடவுளின் இவ்வேலையைப் புரிந்து கொள்வதற்கு ஆண்டவரிடம் அருள் கேட்போம் என்று மறையுரையில் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ், இத்தாலிய பிரதமர் சந்திப்பு
ஜூலை,04,2013. இத்தாலிய பிரதமர் Enrico Letta, உரோம் மாநகர மேயர் Ignazio Roberto Maria Marino, உரோம் மாநகர முன்னாள் மேயர் Giovanni Alemanno ஆகியோரை இவ்வியாழக்கிழமையன்று திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்களுக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீடத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் இவ்வரசு அதிகாரிகள் சந்தித்தனர்.
தற்போது இத்தாலியும் ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்நோக்கும் சமூக மற்றும் பிற நெருக்கடிகள் குறித்தும், குறிப்பாக, வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளையோர் குறித்து கவனம் செலுத்துமாறு இச்சந்திப்புகளில் வலியுறுத்தப்பட்டது என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
அனைத்துலக சில அரசியல் விவகாரங்கள், குறிப்பாக, மத்தியதரைக்கடல்
நாடுகள் மற்றும் மத்திய கிழக்குப் பகுதி நாடுகளின் அரசியல் சூழல்கள்
குறித்த கவலையும் இச்சந்திப்புகளில் வெளிப்படுத்தப்பட்டன.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது குறித்து நிருபர்களுக்குப் பேட்டியளித்த உரோம் மாநகர மேயர் Marino, தான் வத்திக்கானுக்குச் சென்றது இதுவே முதல்முறை எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாசல்வரை வந்து தங்களை வரவேற்று, பின்னர் வழியனுப்பியதையும் பெருமிதத்தோடு பேசியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவின் அன்பும் நட்பும் மாயை அல்ல
ஜூலை,04,2013. கிறிஸ்துவின் அன்பும் நட்பும் மாயை அல்ல, ஆனால்
அவை எவ்வளவு உண்மையானவை என்பதை இயேசு சிலுவையில் காட்டினார் என்று தனது
டுவிட்டர் பக்கத்தில் இவ்வியாழக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் @Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் ஏறக்குறைய தினமும் எழுதி வருகிறார்.
மேலும், AIF என்ற வத்திக்கானின் நிதியைக் கண்காணிக்கும் இரகசிய அமைப்பு, உலகளாவிய இரகசிய நிதி அமைப்பின்(FIUs) வலையமைப்பான Egmont குழுவின் 21வது உறுப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்துள்ளது.
AIF நிதி அமைப்பு, Egmont குழுவில் இணைந்துள்ளதன் மூலம், நிதி
சார்ந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தகவல் பரிமாற்றங்களுக்கும்
அக்குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் உதவிகள் கிடைக்கும் எனக்
கூறப்பட்டுள்ளது.
1995ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Egmont குழுவில் 130க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புகளாக உள்ளன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. 2012ம் ஆண்டின் திருப்பீடத்தின் நிதிநிலை அறிக்கை
ஜூலை,04,2013. திருப்பீடத்தின் நிதி நிர்வாகம், திறமையுடன் நன்றாகச் செயல்பட்டதால் 2012ம் ஆண்டில் 21,85,622 யூரோக்கள் இலாபம் கிடைத்துள்ளதாக இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட திருப்பீடத்தின் 2012ம் ஆண்டுக்கான நிதி அறிக்கை கூறுகிறது.
திருப்பீடத்தின் நிர்வாக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கர்தினால்கள் அவை இத்திங்கள், இச்செவ்வாய்
தினங்களில் வத்திக்கானில் நடத்திய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2012ம்
ஆண்டின் நிதி அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவியப் பொருளாதார நெருக்கடிகளால், திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்காக வழங்கப்படும் இராயப்பர் காசு, பல்வேறு
துறவு சபைகள் வழங்கிய தொகை ஆகியவை 2011ம் ஆண்டைவிட 2012ம் ஆண்டில் 7.45
விழுக்காடு குறைவு எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டில் இராயப்பர் காசு நன்கொடையால் 69,711,722.76 டாலர் கிடைத்தது, ஆனால், இத்தொகை, 2012ம் ஆண்டில், 65,922,637.08 டாலர் கிடைத்தது எனக் கூறும் அவ்வறிக்கை, 2012ம் ஆண்டில் துறவு சபைகளின் பங்களிப்பும் 5.09 விழுக்காடு குறைவு எனவும் கூறுகிறது.
2012ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை 2,823 பேர் வத்திக்கானில் பணியாற்றினர் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இக்கர்தினால்கள் அவையில், ராஞ்சிப் பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. பேராயர் தொமாசி : தொழிற்நுட்பங்கள் அறநெறி விதிகளுக்கு கட்டுப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும்
ஜூலை,04,2013. மனித வளர்ச்சிக்கு அறிவியலும் தொழிற்நுட்மும் ஆற்றிவரும் நற்சேவைகள் குறித்து பாராட்டிய அதேவேளை, தொழிற்நுட்பங்கள் அறநெறி விதிகளுக்கு கட்டுப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக அவையின் உயர்மட்டக் கூட்டத்தில் இவ்வியாழக்கிழமையன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு கூறினார்.
அறிவியலையும்
தொழிற்நுட்பத்தையும் பயன்படுத்தும்போது அவை ஏழ்மையில் அதிகம் வாடும்
நாடுகளுக்கு உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய
பேராயர் தொமாசி, இதன்மூலம், வளரும் நாடுகளில் அறிவியல் அறிவை ஊக்குவிப்பதும், அந்நாடுகளுக்குத் தொழிற்நுட்பங்களைப் பரிமாற்றம் செய்வதும் பொதுநலனின் அறநெறிக் கூறுகளாக மாறும் எனக் கூறினார்.
உலகில் வறுமையை அகற்றி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமான பாதையாக, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமுதாயம்
ஆகிய மூன்று தூண்களில் நிலையான வளர்ச்சியை மீண்டும் கொண்டுசெல்லும் ஓர்
இக்கட்டான சூழலில் அனைத்துலகச் சமுதாயம் நுழைந்து கொண்டிருக்கின்றது
என்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர் தொமாசி, கல்வியிலும் புதுப்பித்தலிலும் மூலதனங்களைப் போடுமாறு பரிந்துரைத்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முயலும் Congo அரசின் திட்டங்களுக்கு தலத்திருஅவை எதிர்ப்பு
ஜூலை,04,2013. மக்களாட்சிக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கில் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முயலும் Congo அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கத்தோலிக்கர்களை விண்ணப்பித்துள்ளது தலத்திருஅவை.
அரசின் பிரதிநிதித்துவ இயல்பு, அரசுத்தலைவரின் பதவிக்காலம், நீதித்துறையின் சுதந்திரம், பலகட்சி
அமைப்புமுறை போன்றவைகளில் மாற்றங்களைக் கொணர முயலும் தற்போதைய
அரசின் முயற்சி குறித்து கண்டனத்தை வெளியிட்டுள்ள காங்கோ ஆயர்கள், இவை குறித்த அரசியலமைப்பு விதிகளை மாற்ற முயல்வது, நாட்டின் நிலையான தன்மைக்கு ஊறுவிளைவிப்பதாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.
கிராமப்புறங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை எனக் கூறும் ஆயர்கள், காரித்தாஸ்
அமைப்பின் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்வதில் அரசுக்கு உதவத் தயாராக
இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மக்களின் ஏழ்மைநிலையை அகற்றுவதற்கு
உழைக்கவேண்டிய அரசியல் தலைவர்களின் கடமையையும் வலியுறுத்தியுள்ளனர் காங்கோ
ஆயர்கள்.
ஆதாரம் : CNS
7. புனித பூமியிலிருந்து 120 இளையோர் Rio de Janeiro மாநாட்டிற்குச் செல்ல உள்ளனர்.
ஜூலை,04,2013. அரபுமொழி பேசும் கிறிஸ்தவர்களின் பிரதிநிதிகளாக எருசலேமின் 120 இளையோரும் லெபனின் 350 இளையோரும் பிரசிலின் Rio de Janeiro கத்தோலிக்க இளையோர் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதாக அறிவித்தார் எருருசலேம் துணை ஆயர் William Shomali.
இம்மாதம் 22 முதல் 29 வரை இடம்பெற உள்ள இந்த இளையோர் மாநாட்டில் பங்குபெறும் இந்த 370 அரபு இளையோருள் சிலர் ஏற்கனவே மத்ரித் இளையோர் மாநாட்டிலும் கலந்துகொண்டவர்களே எனவும் கூறினார் ஆயர் Shomali.
ஏழை இளையோருக்கு இந்தப் பயணச்செலவு அதிகமே எனினும் தங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தவும், தலத்திருஅவையில்
தங்கள் வாழ்வைப் புதுப்பிக்கவும் உதவும் இந்த இளையோர் மாநாட்டின்
முக்கியத்துவத்தை உணர்ந்தே அவர்கள் இப்பயணத்தைத் தேர்வுச் செய்துள்ளதாகக்
கூறினார் ஆயர்.
உலகம்
முழுவதிலுமிருந்து ஏறத்தாழ 30 இலட்சம் இளையோர் பங்குபெறவுள்ள
இம்மாநாட்டிற்கு அரபு கிறிஸ்தவ இளையோர் குழுவை அழைத்துச்செல்ல உள்ளார் ஆயர்
Shomali.
புனித பூமியின் மக்கள்தொகையில் 2 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : AsiaNews
8. 21ம் நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளில் அதற்கு முன்னர் எப்போதையும்விட தட்பவெப்ப நிலைகளில் தீவிரப் பாதிப்புகள்
ஜூலை 04, 2013.
21ம் நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளில் அதற்கு முன்னர் எப்போதையும்விட
தட்பவெப்ப நிலைகளில் தீவிரப் பாதிப்புகள் இருந்ததாக ஐ.நா. வெளியிட்ட
அறிக்கை கூறுகிறது.
2001க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் நிலத்தின் வெப்பமும் கடலின் வெப்பமும் மிக அதிக அளவில் இருந்ததாகக் கூறும் இந்த அறிக்கை, 1850ம் ஆண்டு முதல் உலகின் தட்பவெப்ப நிலை அதிகாரப்பூர்வமாகப் பதிவுச் செய்யப்பட்டு வருவதிலிருந்து, தற்போதுதான் அதிக வெப்பம் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.
ஆர்க்டிக் கடலில் பனி குறைந்துள்ளதும், உலகின் உயரமான சிகரங்களில் அதிக அளவில் பனி உருகியுள்ளதும் இந்தப் பத்தாண்டுகளில், அதாவது 2001க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது ஐ.நா.வின் அறிக்கை.
பெருவெள்ளம், வறட்சி மற்றும் சூறாவளிகள் இந்தப் பத்தாண்டுகளில் அதிக அளவில் இடம்பெற்றதாகக் கூறும் இவ்வறிக்கை, இவைகளால் மூன்று இலட்சத்து 70 ஆயிரம் பேர் இறந்துள்ளதாகவும், இவ்வெண்ணிக்கை, அதற்கு முந்தைய 10 ஆண்டுகளைவிட 20 விழுக்காடு அதிகம் எனவும் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment