Thursday, 18 June 2020

உண்மை நட்பிற்கு கவசம் தேவையில்லை

புற்று நோய்க்கென சிகிச்சை பெற்றுவரும் குழந்தைக்கு ஆசீர் வழங்கும் திருத்தந்தை

உள்ளத்தின் உறுதி, உண்மை நட்பை உருவாக்கும். உண்மை நண்பர்கள் நடுவே, கவசங்கள் தேவையில்லை.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
7வது வகுப்பு படித்துவந்த நிக்கி என்ற சிறுமி, இரத்தப் புற்றுநோயால் துன்புற்றாள். ‘கீமோதெரப்பி’ (Chemotherapy) எனப்படும் கதிர்வீச்சு மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்ட நிக்கி, தன் தலைமுடி அனைத்தையும் இழந்தாள். அவள் பள்ளிக்குத் திரும்பியபோது, ஏனைய மாணவரின் கேலிக்குப் பயந்து, ஒட்டுமுடியால் ஆன ஒரு தலைக்கவசத்தை (wig) அணிந்து, பள்ளிக்குச் சென்றார். ஏனைய மாணவ, மாணவியர், நிக்கி அணிந்துவந்த ஒட்டுமுடி கவசத்தை சுட்டிக்காட்டி, கேலிசெய்தனர். அவளது நண்பர்கள் அவளைவிட்டு விலகினர். ஒவ்வொருநாளும், நிக்கி வீட்டுக்குத் திரும்பியதும், அழுதாள். அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை என்று, அவளது பெற்றோர் கூறிவந்தனர்.
அத்தருணத்தில், நிக்கி, மற்றொரு சிறுவனைப்பற்றி கேள்விப்பட்டாள். அச்சிறுவன் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு விவிலியத்தை எடுத்துச் சென்றான். பள்ளியிலிருந்த பலர் அவனைக் கேலி செய்தனர். அச்சிறுவன், ஒருநாள், தன்னைக் கேலிசெய்த ஒரு மாணவனை வழிமறித்து, அவன் கையில் விவிலியத்தைக் கொடுத்தான். "நான் உனக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இன்று முழுவதும் நீ இந்த விவிலியத்தை பள்ளியில் உன்னோடு எடுத்துச்செல், பார்க்கலாம்" என்று சவால் விடுத்தான். அந்தச் சவாலை ஏற்றுக்கொள்ள முடியாமல், அந்த மாணவன், நழுவிச்செல்ல முயன்றான். அன்று முதல், அச்சிறுவனை யாரும் கேலி செய்யவில்லை. அவனது துணிவைக் கண்ட பல மாணவர்கள், அவனுடைய நண்பர்கள் ஆயினர்.
இந்நிகழ்வைப்பற்றி கேள்விப்பட்ட சிறுமி நிக்கி, தனக்குள் ஒரு தீர்மானத்திற்கு வந்தாள். அடுத்தநாள், நிக்கி, தன் பெற்றோருடன் பள்ளிக்குச் சென்றாள். காரைவிட்டு இறங்கியதும், தன் பெற்றோரிடம், "இன்று என் உண்மையான நண்பர்கள் யார் என்று கண்டுபிடிக்கப் போகிறேன்" என்று சொன்னாள். பின்னர், தான் அணிந்திருந்த ஒட்டுமுடி கவசத்தைக் கழற்றி, காரில் வைத்துவிட்டு, புன்முறுவலுடன் பள்ளிக்குள் நுழைந்தாள் நிக்கி. அன்று முதல், நிக்கியை யாரும் கேலி செய்யவில்லை.
உள்ளத்தின் உறுதி, உண்மை நட்பை உருவாக்கும். உண்மை நண்பர்கள் நடுவே, கவசங்கள் தேவையில்லை.

No comments:

Post a Comment

Pope: Youth Olympic Games a sign of hope emerging from world of sport

  Pope: Youth Olympic Games a sign of hope emerging from world of sport Pope Leo XIV sends his greetings to the participants in the Youth Ol...