Tuesday, 23 June 2020

இருப்பதை நினைத்து மகிழலாமே!

ஏமன் நாட்டு இயற்கை வனப்பு

இல்லாததை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிராமல், இருப்பதை வைத்தே முன்னேறத் தொடங்கினால், வாழ்வு சிறப்பாக அமையும்
மேரி தெரேசா: வத்திக்கான்
அன்று தென்றல் ஒரு பாறையைக் கடந்துபோனது. அது போகும்போது அந்தப் பாறையின் மேல் ஒரு சிறிய விதை கிடந்ததைப் பார்த்தது. உடனே தென்றல், அந்த விதையிடம், நீ இருக்கிற இடத்தைப் பார்த்தாயா, அது ஒரு பாறை. அங்கு உன்னால் எதுவும் செய்ய முடியாது. அதனால் என்னோடு வந்துவிடு, நான் உன்னை பாதுகாப்பாக ஒரு நல்ல நிலத்தில் விட்டுச்செல்கிறேன். நீ வளர்ந்து பெரிய மரமாகி விடுவாய் என்று சொன்னது. அதற்கு அந்த விதை, பரவாயில்லை, நீ உனது வழியில் செல். நான் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் எப்படியாவது உயிர்வாழ முயற்சி எடுக்கிறேன் என்று சொல்லி, தென்றலோடு செல்ல மறுத்துவிட்டது. தென்றலும் தன் வழியே சென்றது. ஆறுமாதம் சென்று அந்த தென்றல் அதே வழியில் வந்தது. அந்த இடத்தில் ஒரு மரத்தைப் பார்த்ததும், தென்றலுக்கு வியப்பு. நீ அந்த விதைதானே, ஆறு மாத காலத்திற்குள் நீ எப்படி இவ்வளவு பெரியதாக வளர்ந்திருக்கிறாய் என்று கேட்டது, தென்றல். அதற்கு அந்த விதை, நான் இந்த இடத்தில் கிடைத்த ஒரு சிறிய மழைத்துளியைப் பயன்படுத்தி, என் வேரை ஊன்றினேன். பின்னர், என் வேரைப் பரப்பி இன்று ஒரு பெரிய மரமாக வளர்ந்திருக்கிறேன். ஆக, நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல, எனது மனநிலை எப்படி இருக்கின்றது என்பதுதானே முக்கியம். அதனால்தான் இன்று இவ்வளவு பெரிய மரமாக நான் உருவாக முடிந்தது என்று சொன்னது.
சிந்தனைக்கு
நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்கு பலநேரங்களில் மற்றவர்களையே குறைசொல்லிக்கொண்டிருக்கிறோம். அதோடு, இல்லாததை நினைத்து பலநேரங்களில் வருந்திக்கொண்டிருக்கிறோம். அதற்கு மாறாக, இருப்பதை வைத்தே வாழ்வில் முன்னேறத் தொடங்கியிருந்தால், இதற்குள் வாழ்வு எப்படியோ உயர்ந்திருக்கும். எனவே இருப்பதை நினைத்து மகிழ்ந்து, முன்னேற முயற்சிப்போமா! (நன்றி-தினம் ஒரு கதை www.bing.com)

No comments:

Post a Comment