Thursday, 18 June 2020

திருநற்கருணை நம் வலுவற்ற நினைவை குணப்படுத்துகிறது

கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழாத் திருப்பலி

நம் நினைவுத்திறன் வலுவிழந்து போகும்வேளையில், திருநற்கருணை அதை எவ்விதம் மூன்று வழிகளில் குணமாக்குகிறது என்பதை, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
மேரி தெரேசா: வத்திக்கான்  செய்திகள்
ஜூன் 14, இஞ்ஞாயிறு, உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழாத் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நமக்கு வழங்கும் பல கொடைகளை நினைத்துப் பார்க்கவேண்டியதன் முக்கியத்துவம் பற்றிய சிந்தனைகளை தன் மறையுரையில் பகிர்ந்துகொண்டார். 
கோவிட்-19 உருவாக்கியுள்ள நெருக்கடி விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஏறத்தாழ ஐம்பது விசுவாசிகள் பங்கேற்ற இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நினைவுத் திறன் அற்றுப்போனால், நம்மை ஊட்டி வளர்க்கும் மண்ணிலிருந்து நம்மை நாமே வேரோடு பிடுங்கி எறிந்துவிடுகிறோம், மற்றும், உலர்ந்த இலைகளைப் போல காற்றில் அடித்துச்செல்லப்பட அனுமதிக்கின்றோம் என்று கூறினார்.
 நினைவுத்திறன் என்பது, ஒருவரது தனிப்பட்ட விவகாரம் அல்ல, மாறாக, அது கடவுளோடும், மற்றவரோடும் நம்மை இணைக்கும் பாதையாகும் என்றுரைத்த திருத்தந்தை, ஆண்டவரோடு நமக்குள்ள உறவு, வாய்மொழி வழியே, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கப்படுகின்றது என்பதை திருவிவிலியம் எடுத்துரைக்கின்றது என்று கூறினார்.
ஆண்டவரின் அன்பின் நினைவு
தலைமுறை தலைமுறையாக நினைவுகள் வழங்கப்படும் மரபு உடைபடும்போது, நம் நினைவுகள் எவ்வளவு குறுகிவிடும் என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார், இதனாலேயே, வார்த்தைகள் அல்லது அடையாளங்களை கடந்த ஒரு நினைவை, அவர் நமக்கு விட்டுச்சென்றுள்ளார் என்று திருத்தந்தை கூறினார்.
நாம் நடைமுறை வாழ்வில் சுவைத்த ஒன்றை மறப்பது எளிதல்ல என்பதால், ஆண்டவர் நமக்கு உணவை அளித்திருக்கிறார் என்றும், தனது அன்பின் அனைத்து நறுமணத்துடனும் உண்மையிலேயே, உயிருள்ள பிரசன்னமாக இருக்கும் அப்பத்தை அவர் நமக்கு விட்டுச்சென்றிருக்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை, திருநற்கருணை, வெறும் நினைவு மட்டும் அல்ல, அது ஓர் உண்மை நிகழ்வு என்றும், திருப்பலியில், இயேசுவின் மரணத்தையும், உயிர்ப்பையும் நினைவுகூர்கிறோம் என்றும் கூறினார்.
மூன்று நினைவுகளைக் குணமாக்கும் திருநற்கருணை
நம் நினைவுத்திறன் வலுவிழந்து போகும் வேளையில், திருநற்கருணை அதை எவ்விதம் மூன்று வழிகளில் குணமாக்குகிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில், விளக்கிக் கூறினார்.
அனாதை உணர்வைத் தரும் நினைவு
யாருமற்ற அனாதை போன்ற உணர்வைத் தரும் நம் நினைவுகளைக் குணப்படுத்த, திருநற்கருணை, தந்தையின் பிரமாணிக்கமுள்ள அன்பையும், தூய ஆவியாரின் ஆறுதல் தரும் அன்பையும் வழங்குகிறது என்று திருத்தந்தை தன் மறையுரையில் கூறினார்.
எதிர்மறை உணர்வைத் தரும் நினைவு
நம் பிரச்சனைகளிலும், தவறுகளிலும் மட்டும் கவனம் செலுத்தி, எதிர்மறை உணர்வுகளை வளர்த்துக்கொள்ளும் நம் நினைவுத்திறனைக் குணமாக்க, நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை உணர்த்தும்வண்ணம் தன் விருந்தில் நம்மை இணைத்துக்கொள்ளும் கிறிஸ்துவின் திருவிருந்து நமக்கு உதவியாக உள்ளது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
நம் எதிர்மறை உணர்வுகளை விரட்டியடிக்கும் மருந்தாக திருநற்கருணை அமைந்துள்ளது என்பதையும் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
மூடப்பட்ட உணர்வைத் தரும் நினைவு
மூன்றாவதாக, மூடப்பட்ட நம் நினைவுத்திறனை திருநற்கருணை எவ்வாறு குணமாக்குகிறது என்பதை விளக்கும்போது, நம் கடந்தகால காயங்கள், நமக்குள் அச்சத்தையும், அடுத்தவர் மீது சந்தேகத்தையும் உருவாக்குவதால், நாம் மற்றவர்களைவிட்டு விலகி, நம்மை நாமே மூடிய மனநிலையில் வாழ்கிறோம் என்றும், நம் எண்ணங்கள் தவறு என்பதைச் சுட்டிக்காட்ட, திருநற்கருணை நமக்கு உதவுகிறது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
உடைக்கப்படக்கூடிய அப்ப வடிவில்...
மிக எளிதாக உடைக்கப்படக்கூடிய மெல்லிய அப்ப வடிவில், மிக எளிதான உணவின் வடிவில், நம்மிடையே எழுந்தருளும் இயேசு, நம் இதயத்தை செயலிழக்கச் செய்யும் சுயநலக் கவசத்தை உடைத்து, நம்மில் வாழ்வதற்கு தன்னையே வழங்குகிறார் என்று கூறினார் திருத்தந்தை.
மனிதகுலத்தில் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டுள்ள சங்கிலித் தொடர் என்பதை, திருநற்கருணை நமக்கு நினைவுபடுத்துகிறது என்பதால், இந்த நற்கருணை வழியே, இயேசு நம்மை நெருங்கிவரும் வேளையில், நாம் அடுத்தவரைவிட்டு விலகிச்செல்லாமல் வாழ கற்றுக்கொள்வோம் என்ற விண்ணப்பத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையை நிறைவு செய்தார்

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...