Saturday, 27 June 2020

நாவினால் சுட்ட வடு

சுவரில் படம் வரையும் சூடான் இளையோர்

பிறர் மீது எய்த கடும்சொல்லுக்கு நாம் மன்னிப்பு கேட்டாலும், அந்தச் சொல் தைத்த இடத்தில் உருவான வடு மறைவது மிகக் கடினம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
ஒரு முன்கோபக்கார சிறுவன் இருந்தான். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி, வயது வரம்பு பாராமல், எல்லாரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப்படுவான். இதனால், நாளடைவில், பலருக்கு அவனைப் பிடிக்காமல்போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். சிறுவனுக்கு, தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை. அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு, ஒரு நாள், அவனிடம், ஒரு வாளி நிறைய ஆணிகளையும், ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.
ஒவ்வொரு முறை ஆத்திரப்படும்போதும் சம்பந்தப்பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு, வீட்டுக்குப் பின்னால் உள்ள சுவரில் ஓர் ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும்படி அறிவுரைத்தார்.
முதல் நாள் சுவரில், ஏறக்குறைய 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!
நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு சுவர்ப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்துபோய், சுவரில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் சுவரில் ஆணி அடிக்கவேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.
அப்பாவிடம் போய் விவரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல், அவனிடம், ஆணி பிடுங்கும் ஒரு கருவியைக் கொடுத்து, சுவரில் அவன் அடித்த ஆணிகளை, ஒவ்வொன்றாகப் பிடுங்கச்சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.
எல்லா ஆணிகளும் பிடுங்கப்பட்டபின், அப்பாவும், மகனும், சுவரைப் பார்க்கப் போனார்கள். சுவரில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டிய அப்பா, "கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்" என்று அவனுக்கு எடுத்துக்கூறினார்.
மகனும், அப்பா சொன்ன கருத்தை நன்றாக உணர்ந்து, திருந்தி, ஊர் போற்றும் வகையில் வளர்ந்து, வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...