Thursday, 25 June 2020

பெண் துறவிகளின் தியாகம் – வத்திக்கான் கருத்தரங்கு

இந்தியாவில் வறியோருக்கு உதவும் அருள் சகோதரிகள்

உலகெங்கும், 6,50,000த்திற்கும் அதிகமான அருள் சகோதரிகள், அடித்தட்டு மக்களுக்கென பணியாற்றுவதில் தங்களை அர்ப்பணித்துள்ளனர்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
உலகெங்கும், கடினமானச் சூழல்களில், தங்கள் உயிரையும் பணயம் வைத்து, முன்னணிப் பணிகளில் ஈடுபட்டுள்ள அருள் சகோதரிகளின் தியாகங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் ஓர் இணையதள கருத்தரங்கு, ஜூன் 23, இச்செவ்வாயன்று, வத்திக்கானில் நடைபெற்றது.
பிரித்தானியா, மற்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சார்பாக, வத்திக்கானில் இயங்கிவரும் திருப்பீடத் தூதரகங்களின் உதவியோடு நடைபெற்ற இக்கருத்தரங்கை, உலகளாவிய பெண் துறவிகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இக்கருத்தரங்கின் நோக்கத்தைக் குறித்து பேசிய, அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருப்பீடத் தூதர், Callista Gingrich அவர்கள், பெண் துறவியர் பலர், தங்கள் திறமைகளையும், உழைப்பையும் மட்டுமல்லாமல், தங்கள் உயிரையே அர்ப்பணம் செய்துள்ளதால், அவர்களை நினைவுகூர்வது முக்கியம் என்று கூறினார்.
இக்கருத்தரங்கின் துவக்கத்தில் பேசிய பிரித்தானிய அரசின் திருப்பீடத் தூதர், Sally Axworthy அவர்கள், வேறு எந்த உலக நிறுவனங்களும், அரசுகளும் பணியாற்றத் தயங்கும் சூழல்களில், பெண் துறவிகள் பணியாற்றுவதை தான் பல நாடுகளில் பார்த்துள்ளதாக நினைவுக்கூர்ந்து, அவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தார்.
ஆப்ரிக்காவின் கானா நாட்டில், பிறப்பிலேயே அங்கக்குறைகளுடன் பிறக்கும் குழந்தைகளைப் பராமரிக்கும் அருள் சகோதரி Stan Terese Mario Mumuni அவர்கள், தங்கள் பணி துவங்கப்படாமல் இருந்திருந்தால், அக்குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பர் என்றும், தங்கள் பணியை, இஸ்லாமிய சமுதாயமும் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் கூறினார்.
ஆல்பேனியா நாட்டில் மனித வர்த்தகக் கொடுமையில் சிக்கியோரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அருள் சகோதரி Imelda Poole அவர்கள், வலைத்தள தொடர்புகள் அதிகரித்துள்ளதால், பல குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு, அவர்கள் மனித வர்க்கத்திற்கும், பாலின வன்கொடுமைகளுக்கும் உள்ளாகின்றனர் என்பதை எடுத்துரைத்தார்.
இத்தாலியின் பெர்கமோ பகுதியில் பணியாற்றிவரும் கொம்போனி அருள் சகோதரிகள், கோவிட் 19 நெருக்கடியால், பாதிக்கப்பட்டதைக் குறித்து, இத்துறவு சபையின் அருள் சகோதரி Alicia Vacas அவர்கள் இந்த வலைத்தள கருத்தரங்கில் பகிர்ந்துகொண்டார்.
பெண் துறவு சபைகள் கூட்டமைப்பின் உலகத் தலைவர், அருள் சகோதரி Jolanda Kafka அவர்கள், இக்கருத்தரங்கை நிறைவு செய்து பேசிய வேளையில், உலகெங்கும், 6,50,000த்திற்கும் அதிகமான அருள் சகோதரிகள் அடித்தட்டு மக்களுக்கென பணியாற்றுவதில் தங்களை அர்ப்பணித்துள்ளனர் என்றும், பெறுவதைவிட, கொடுப்பதே, பெண் துறவறத்தின் உன்னத குறிக்கோள் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment