Thursday, 18 June 2020

ஜூன் 16ம் தேதி - ஆப்ரிக்கக் குழந்தை உலக நாள்

ஆப்ரிக்கக் குழந்தை உலக நாள் கொண்டாட்டம்

ஆப்ரிக்க கண்டத்தில் நிலவும் வறுமை, இன மோதல்கள், சுற்றுச்சூழல் சீரழிவு, ஆகிய பிரச்சனைகளால், குழந்தைகள் அடைந்துவரும் கொடுமைகளுடன், இந்த ஆண்டு, கோவிட் 19 என்ற கூடுதல் கொடுமையை இக்குழந்தைகள் சந்தித்து வருகின்றனர்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஆப்ரிக்க கண்டத்தில் நிலவும் வறுமை, இன மோதல்கள், சுற்றுச்சூழல் சீரழிவு, ஆகிய பிரச்சனைகளால் குழந்தைகள் அடைந்துவரும் கொடுமைகளுடன், இந்த ஆண்டு, கோவிட் 19 என்ற கூடுதல் கொடுமையை இக்குழந்தைகள் சந்தித்து வருகின்றனர் என்பதை, ஜூன் 16, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட ஆப்ரிக்கக் குழந்தை உலக நாள், வெளிச்சமிட்டு காட்டுகிறது.
2020ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட ஆப்ரிக்கக் குழந்தை உலக நாளுக்கென, "குழந்தைகளுக்கு சாதகமான நீதி முறை ஆப்ரிக்காவில் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க" என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டிருந்தது.
அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி மற்றும் வருங்காலத்தை உருவாக்க பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் காணப்படும் குறைகளை, கோவிட் 19 தொற்றுநோய் காலம் வெளிக்கொணர்ந்துள்ளது என்று ஆப்ரிக்க கல்வியாளர்கள் பலர் கூறியுள்ளனர்.
கல்வி மறுக்கப்படும், குழந்தைகள், குறிப்பாக, பெண் குழந்தைகள், மனித வியாபாரம், குழந்தைத் திருமணம், பாலியல் கொடுமைகள் என்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்பதும், இந்த உலக நாளன்று பல அறிஞர்களால் வெளியிடப்பட்டது.
தென் ஆப்ரிக்க நாட்டில் இனவெறி நிலவிய வேளையில், ஜொஹானஸ்பர்க் நகரில், 1976ம் ஆண்டு, ஜூன் 16ம் தேதி, ஆப்ரிக்க குழந்தைகள், தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தரக்குறைவான கல்வியை எதிர்த்து, தெருக்களில் வந்து போராடியபோது, அந்த போராட்டத்தை ஒடுக்க, காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
அந்த போராட்டத்தின் நினைவாக, ஜூன் 16ம் தேதியை, ஆப்ரிக்கக் குழந்தை உலக நாள் என்று, ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கொண்டாடுகின்றன.

No comments:

Post a Comment