Tuesday, 23 June 2020

தாத்தாவின் பழைய வீடு

ஒரு தாத்தாவும் அவர் பேரனும்

தன் மகள் கட்டிய காகித வீடு இடிந்து அவள் அழுதபோதுதான், தன் தந்தையின் இடிந்த வீடு குறித்த நினைவுகள், மகனாகிய அந்த தந்தைக்கு வந்தது.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தாள் மலர். அங்கே அப்பா தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தார்.
‘அப்பா எனக்கு நிறைய அட்டை, கலர்பேப்பர், கலர்பேனா, எல்லாம் வேணும்பா. பள்ளிக்கூடத்துல, அந்த காலத்துல வாழ்ந்த மக்களோட வீடுகள், அரண்மனை மாதிரிகள் செய்து காட்டணும்பா, அதுக்கு மார்க் உண்டுப்பா” என்று கூற, மறுநாள் எல்லா பொருட்களையும் வாங்கிக் கொடுத்தார் அப்பா.
பள்ளிக்கூடம் முடித்து வீட்டுக்கு வந்ததும், தன்னுடைய வீட்டு பாடங்களையெல்லாம் செய்து முடித்துவிட்டு, இரவு நேரங்களில் அப்பா வாங்கி தந்த பொருட்களை பயன்படுத்தி, அந்த காலத்து வீடுகள், அரண்மனை, கோவில், கிணறு என ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்தாள் மலர். ஒருவாரமாக உழைத்து, எல்லாவற்றையும் செய்து முடித்தாள். அதில் ஓர் அரண்மனை, சில வீடுகள், கிணறு, கோவில், தோட்டம் ஆகியவற்றை அமைத்திருந்தாள். அன்று, அவளது தாத்தா, கிராமத்திலிருந்து, நகரிலுள்ள இவர்களின் வீட்டிற்கு வந்திருந்தார்.
தன் அப்பாவையம், தாத்தாவையும் கூட்டிக்கொண்டு வந்து, தான் செய்தவற்றை காட்டினாள். அதை பார்த்த அவர்கள் ஆச்சரியப்பட்டு,மலரை அணைத்து முத்தமிட்டு, “ரொம்ப நல்லா செய்திருக்க, அப்படியே தத்ரூபமா இருக்கு” என்று பாராட்டினர்.
மறுநாள், மலர் செய்து வைத்திருந்த மாதிரிகளை பள்ளியில் காண்பிக்க எடுக்க சென்றாள். அங்கே ஒரு வீடு உடைந்திருந்தது. அதை பார்த்த அவள் “அப்பா ஒரு வீடு உடைந்திருக்குப்பா.. மார்க் எல்லாம் போச்சு” என்று அழ ஆரம்பித்தாள். மலரை தூக்கி வைத்து, “அழாதம்மா” என்று சமாதானப்படுத்தினார் அப்பா.
“அப்பா, இதெல்லாம் நான் எவ்வளவு யோசிச்சு, யோசிச்சு, செய்தேன் தெரியுமா? அதுவுமில்லாம, ராத்திரியெல்லாம் ரொம்ப நேரம் கண் முழிச்சி செய்தேன். ஆனா இப்படி ஆயிடுச்சே” என்று சொல்லி, அழுதுகொண்டே இருந்தாள். மலரின் அப்பா, அவளை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவள் அழுகையை நிறுத்தவில்லை.
இதைப்பார்த்த தாத்தா மலரை கூப்பிட்டு, அந்த உடைந்த வீட்டை கொண்டுவரச் சொன்னார்.
“உடைஞ்ச வீடு தாத்தாவின் பழைய வீடுன்னு எழுதி வைச்சிடு. யாராவது கேட்டால், இது அந்த காலத்துல எங்க தாத்தா வீடா இருந்துச்சு. பெரிய மழை பெய்தப்ப இடிஞ்சிருச்சுன்னு சொல்லிடு, மார்க்கெல்லாம் குறைக்க மாட்டாங்க, சரியா பாப்பா” என்றார் தாத்தா.
கண்களை துடைத்துவிட்டு, ஓர் அட்டையில் தாத்தாவின் பழைய வீடு என்று எழுதி, உடைந்திருந்த வீட்டில் ஒட்டிவைத்து விட்டு ‘ரொம்ப நன்றி தாத்தா’ என்றாள் மலர்.
அப்போதுதான் மலரின் தந்தைக்கு உறைத்தது. தன் தந்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமத்தில் தான் தங்கியிருக்கும் வீட்டை சரிசெய்து தரும்படி, தன்னிடம் கேட்டுக்கொண்டிருப்பதும், இப்போதும், அது விடயமாகத்தான் தன் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்பதும், நினைவுக்கு வர, வீட்டை சீர்செய்யத் தேவையான பணத்தை, இம்முறை, தந்தையிடம் கொடுத்து அனுப்பவேண்டும் என தீர்மானித்தார்.

No comments:

Post a Comment