Thursday, 18 June 2020

பாகிஸ்தான் திருஅவை பாகுபாட்டு விளம்பரத்திற்கு எதிர்ப்பு

லாகூர் அமலமரி பேராலயத்திற்குமுன் கிறிஸ்தவர்கள்

பல்வேறு துறைகளுக்கு வேலை காலியாகவுள்ள 28 இடங்கள் பற்றி வெளியிட்டுள்ள கராச்சி நாளிதழ் ஒன்று, துப்பரவுப் பணிகளை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
பாகிஸ்தானில், முஸ்லிம் அல்லாத மக்களுக்கு துப்பரவுத் தொழிலில் வேலைவாய்ப்பு வழங்குவதாக, அந்நாட்டுத் நாளிதழ்களில் வெளியான விளம்பரங்கள் குறித்து, தலத்திருஅவை, தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ஜூன் முதல் தேதி, கராச்சியின் மேற்குப் பகுதி மாநகராட்சி, வெளியிட்ட இந்த வேலைவாய்ப்பு விளம்பரங்கள், சிறுபான்மை சமுதாயங்கள் மீது பாகுபாடுகள் காட்டப்படுவதை வெளிப்படுத்துகின்றன என்று, இந்த விளம்பரங்கள் குறித்து, சிந்து மாநில அரசுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது, தலத்திருஅவை.
கராச்சி உயர்மறைமாவட்டத்தின் முதன்மைக்குருவும், நீதி மற்றும் அமைதியின் தேசிய அவையின் இயக்குனருமான அருள்பணி Saleh Diego அவர்கள், அரசின் சிறுபான்மை விவகாரத்துறை பிரதிநிதியைச் சந்தித்து, இவ்விவகாரம் குறித்த திருஅவையின் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
அரசின் இந்த விளம்பரங்கள், சிறுபான்மையினரின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும், இவ்வாறு இடம்பெறுவது முதன்முறையல்ல என்றும், அருள்பணி தியெகோ அவர்கள் கூறியுள்ளார்.
பல்வேறு துறைகளுக்கு வேலை காலியாகவுள்ள 28 இடங்கள் பற்றி வெளியிட்டுள்ள உள்ளூர் நாளிதழ், தூய்மைப் பணிகளை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.
2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில், பாகிஸ்தான் இராணுவம், இதேபோன்ற விளம்பரத்தைக் கொடுத்தபோது, கிறிஸ்தவ ஆர்வலர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், அந்த விளம்பரம் இரத்து செய்யப்பட்டது என்பது, குறிப்பிடத்தக்கது.
மேலும், 2015ம் ஆண்டில் லாகூர் குப்பை மேலாண்மை நிறுவனம், 7,894 பேரை சாக்கடை சுத்தம் செய்யும் வேலைக்கு நியமித்தது. இவர்களில் பெரும்பான்மையினோர் கிறிஸ்தவர்கள். இஸ்லாமபாத்தில், ஏலம் விடும் நிறுவனம் ஒன்று, 1,500 பேரை இதே வேலைக்கு அமர்த்தியது. இவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment