Saturday 27 June 2020

அமைதி முயற்சிகளுக்கு ஊறுவிளைவிக்கும் இஸ்ரேல் திட்டம்

West Bankல் உள்ள யூத குடியிருப்புகளின் ஒரு பகுதி

West Bank நிலப்பகுதியை தன்னோடு இணைக்கும் இஸ்ரேல் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 1080 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்.


கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
புனித பூமியில், பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான West Bank நிலப்பகுதியின் ஒரு பகுதியை தங்களோடு இணைக்கும் இஸ்ரேல் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட West Bank மற்றும், யோர்தான் சமவெளிப்பகுதியில் இஸ்ரேல் குடியேற்றம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, அந்நிலப்பகுதியை, ஜூலை 1ம் தேதி முதல் தங்கள் நாட்டுடன் இணைக்கப்போவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளதையொட்டி, ஐரோப்பிய பாராளுமன்ற அங்கத்தினர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
25 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 1080 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள இக்கடிதத்தில், இஸ்ரேல் அறிவித்த இந்த முடிவு குறித்தும், இதனால் அமைதி முயற்சிகளுக்கு ஏற்படவுள்ள தடைகள் குறித்தும் ஆழ்ந்த கவலை வெளியிடப்பட்டுள்ளது.
West Bankன் யூத குடியிருப்புப் பகுதிகளை, அமெரிக்க அரசின் ஆதரவுடன் இஸ்ரேல் நாடு தன்னோடு இணைத்துக்கொள்வதன் வழியாக, பாலஸ்தீனியர்களின் தனி நாட்டிற்கென வைக்கப்பட்டுள்ள நிலப்பகுதியில், 30 விழுக்காடு இஸ்ரேல் வசம் சென்றுவிடும் என்ற கவலையை வெளியிடும், ஒருங்கிணைந்த ஐரோப்பிய அவையின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இதனால், இஸ்ரேல்-பாலஸ்தீனிய அமைதி முயற்சிகளுக்கு ஊறுவிளைவிக்கப்படுவதுடன், அனைத்துலக உறவுகளைக் கட்டிக்காக்கும் விதிமுறைகளும் மீறப்படுகின்றன என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இஸ்ரேலின் இந்த இணைப்பு முயற்சிக்கு ஐ.நா.அவையின் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும் தன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
வருங்கால அமைதி முயற்சிகளையும், நம்பிக்கைகளையும் தகர்க்கவல்ல இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, மிகப்பெரும், அனைத்துலக விதிமீறல் எனவும் தெரிவித்தார், ஐ.நா. பொதுச்செயலர். (AsiaNews)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...