Thursday, 25 June 2020

மௌனமான மறையுரை

அசிசி நகர் புனித பிரான்சிஸ் பறவைகளுக்கு உணவளிப்பதைக் காணும் இளம் துறவி

அசிசி நகர் புனித பிரான்சிஸ், இளையவரிடம், "நமது செயல்கள், வார்த்தைகளைவிட வலிமையானவை. நாம் தேவையான அளவு இன்று போதித்துவிட்டோம். தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும்" என்று கூறினார்.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
அசிசி நகர் புனித பிரான்சிஸ், ஒரு நாள், ஓர் இளம் துறவியை அழைத்து, "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்" என்று கூறி, உடன் அழைத்துச் சென்றார். தனக்குக் கிடைத்த அந்த அரிய வாய்ப்பை எண்ணி, அந்த இளையவர் மிகவும் மகிழ்ந்தார்.
ஊருக்குள் நுழைந்ததும், அங்கிருந்த ஒரு மரத்தின் கூட்டிலிருந்து கீழே விழுந்து கிடந்த ஒரு குஞ்சுப் பறவையை மீண்டும் மரமேறி அந்தக் கூட்டில் வைத்துவிட்டு இறங்கினார் பிரான்சிஸ். வயலில் அறுவடை செய்துகொண்டிருந்த பணியாள்களுடன் இறங்கி வேலை செய்தார். இதைக் கண்ட அந்த இளம் துறவியும் குனிந்து வேலைகள் செய்தார். ஊருக்குள் சென்றதும், அங்கு ஒரு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த வயதானப் பெண்மணிக்கு பிரான்சிஸ் தண்ணீர் இறைக்க உதவினார். அவருடன் அந்தத் தண்ணீர் பாத்திரங்களை அவர் வீடுவரை சுமந்து சென்றார்.
இவ்விதம், பிரான்சிஸும், உடன் சென்ற இளையவரும், நாள் முழுவதும், அந்த ஊரில் பலருக்கும் பணிவிடைகள் செய்தனர். ஒவ்வொரு முறையும், பிரான்சிஸ், ஓர் இடத்தில் நிற்கும்போது, அந்த இடத்தில் அவர் போதிக்கப்போகிறார் என்று இளையவர் எண்ணினார். ஆனால், ஒரு வார்த்தையும் சொல்லாமல், பிரான்சிஸ் பல உதவிகளைச் செய்தார். அந்த நாள் இறுதியில், பிரான்சிஸ் கோவிலுக்குச் சென்றார். அவர் கட்டாயம் அந்த நேரத்தில் போதிப்பார் என்று இளையவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, பிரான்சிஸ், கோவிலில் அமைதியாக செபித்துவிட்டுக் கிளம்பினார்.
இருவரும் மீண்டும் ஊரைவிட்டு வெளியே வந்து, தங்கள் துறவகத்தை நோக்கிச் சென்றபோது, இளையவர் தன் உள்ளத்தில் நிறைந்திருந்த ஏமாற்றத்தை வெளியிட்டார். "போதிப்பதற்காகத்தானே ஊருக்குள் சென்றோம். இப்போது போதிக்காமலேயே திரும்புகிறோமே!" என்று தன் உள்ளக் குமுறலைக் கூறினார். பிரான்சிஸ், இளையவரிடம், "நமது செயல்கள், வார்த்தைகளைவிட வலிமையானவை. நாம் தேவையான அளவு இன்று போதித்துவிட்டோம். தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும்" என்று கூறினார்.
பல நேரங்களில், நாம் பகிர்ந்துகொள்ளும் நற்செய்தி, வாய்ச்சொல்லாக இருப்பதைவிட, வாழ்வாக அமைவது மிகச் சிறந்தது.

No comments:

Post a Comment