Saturday 20 June 2020

இனப்பாகுபாடு சகித்துக்கொள்ளப்பட முடியாதது, ஐ.நா.வில் திருப்பீடம்

ஐ.நா. அவை கூட்டத்தில் இனவெறிக்குப் பாலியானவர்க்கு அஞ்சலி.

ஒவ்வொரு மனிதரின் அடிப்படை மனித உரிமைகளை ஏற்று, பாதுகாத்து மற்றும், ஊக்கப்படுத்தவேண்டியது, அனைத்து நாடுகளின் கடமையாகும் - பேராயர் யுர்க்கோவிச்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இனப்பாகுபாடு எம்முறையில் இடம்பெற்றாலும், அது, அறவே சகித்துக்கொள்ளப்பட முடியாதது என்பதில், திருப்பீடம் உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஜூன் 18, இவ்வியாழனன்று ஐ.நா.வின் மனித உரிமைகள் அவையில் அறிவித்தார்.
இனப்பாகுபாடு குறித்து உடனடியாக விவாதிக்கப்படவேண்டும் என்று, Burkina Faso நாட்டின் தலைமையில் சில நாடுகள், ஜூன் 15, இத்திங்களன்று ஐ.நா. மனித உரிமைகள் அவையைக் கேட்டுக்கொண்டதன்பேரில், அந்த அவையின் 43வது அமர்வில், இவ்வியாழனன்று இந்த விவகாரம், கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.
அந்த அமர்வில், அண்மையில் அமெரிக்க ஐக்கிய நாட்டில், இரக்கமின்றி கொடூரமாய்க் கொல்லப்பட்ட ஆப்ரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் அவர்களின் சகோதரர் Philonise Floyd அவர்களும், காணொளி வழியாக உரையாற்றினார்.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும், ஏனைய பன்னாட்டு நிறுவனங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்க்கோவிச் (Ivan Jurkovič) அவர்கள், அந்த அமர்வில், திருப்பீடத்தின் சார்பில் அறிக்கை சமர்ப்பித்தார்.
கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும், இயல்பாகவே அவர்களுக்கு இருக்கின்ற மாண்பில் சமம் என்றும், இதில், இனம், மதம், கலாச்சாரம், நாடு, பாலினம் போன்ற எந்த வேறுபாடும் காட்டப்படக்கூடாது என்றும், இக்காரணத்தினால், ஒவ்வொரு மனிதரின் அடிப்படை மனித உரிமைகளை ஏற்று, பாதுகாத்து மற்றும், ஊக்கப்படுத்தவேண்டியது, அனைத்து நாடுகளின் கடமையாகும் என்றும் கூறினார், பேராயர் யுர்க்கோவிச்.
மனித உரிமைகள் மீறப்படமுடியாதவை
2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாடோடி இன மக்களைச் சந்தித்தவேளையில் கூறியவற்றைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், பாகுபாடு, இனவெறி, அந்நியர்மீது வெறுப்பு போன்றவற்றிற்குக் காரணமான, காலம் காலமாக புரையோடிப்போயுள்ள முற்சார்புஎண்ணங்கள், ஒருவர் மீது ஒருவருக்கு நம்பக்கையின்மை போன்றவை, முற்றிலும் களையப்படுவதற்கு காலம் வந்துவிட்டது என்ற திருத்தந்தையின் கூற்றை, மேற்கோளாகக் கூறினார்.
ஒருவர் இயல்பாகவே கொண்டிருக்கின்ற மாண்பை நசுக்குவது, தனது மாண்பையே அவமதிப்பதாகும் என்றும் கூறிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், இனவெறியும், சமுதாயத்தில் ஒதுக்கப்படுதலும், எம்முறையில் இடம்பெற்றாலும், அவற்றைச் சகித்துக்கொள்ளவோ, அல்லது, அவற்றைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கவோ இயலாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் மறைக்கல்வியுரையில் கூறியதையும், ஐ.நா. அவையில் நினைவுபடுத்தினார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...