Tuesday, 23 June 2020

நம் பாதையில் ஒளியூட்டும் இறைவார்த்தை

திருப்பலியின்போது இறைவார்த்தை நூலை உயர்த்திப் பிடிக்கும் திருத்தந்தை

நமக்கு தண்டனை வழங்கும் நோக்கத்தில் தீர்ப்பிடாமல், நம்மை குணப்படுத்தி நமக்கு மன்னிப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இறைவார்த்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
நம் பாதையில் ஒளியூட்டும் இறைவார்த்தை, நமக்கு வாழ்வுதரும் வார்த்தையாக வழங்கப்பட்டுள்ளது என, ஜூன் 22, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
"இறைவனின் வார்த்தை, வாழ்வின் வார்த்தையாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. அது, நம்மை புதுப்பித்து, மாற்றியமைக்கிறது, மற்றும், நம்மை கண்டனம் செய்வதற்கு தீர்ப்பிடாமல், நம்மை குணமாக்கி, மன்னிப்பு வழங்குவதையே தன் இலக்காகக் கொண்டுள்ளது. நமது காலடிகளுக்கு ஒளியாக விளங்கும் வார்த்தை அது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், இளையோரே, புதிய இதயம் எனும் அருளுக்காக, உங்கள் பாதுகாவலரான புனித ஆலோசியஸ் கொன்சாகாவின் பரிந்துரையை நாடுவோம். மற்றவர்களுக்கு பணிவிடை புரிவதில் எப்போதும் பின்வாங்காத, ஏன், கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டவருக்கு பணிபுரிந்ததில் தன் வாழ்வையே கையளித்த இந்த மனவுறுதியுடைய புனித இளைஞரிடம் கேட்போம். நம் இதயங்களை இறைவன் மாற்றியமைக்கட்டும், என, ஜூன் 21ம் தேதி, இஞ்ஞாயிறன்று நினைவுகூரப்பட்ட புனித ஆலோசியஸ் கொன்சகாவின் திருவிழாவையொட்டி டுவிட்டர் செய்தியை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டரில், நற்செய்தி வாசகத்தை மேற்கோள்காட்டி, நம்மீது அக்கறை கொண்டு நம்மை அன்புகூரும் இறைவனின் கரங்களில் நாம் இருக்கும்போது, எது குறித்தும் அஞ்சத்தேவையில்லை என கூறியுள்ளார்.
மேலும், கோவிட்-19 தொற்று நோய்க்காலத்தில் பல்வேறு சந்திப்புகளும், கருத்தரங்குகளும் வத்திக்கானிலும் தள்ளிபோடப்பட்டுள்ள நிலையில், இத்திங்கள் காலை, திருப்பீடத்தின் மூன்று திருஅவைத்தலைவர்களை தனித்தனியாக சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் சார்பில் உரோம் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றும் கர்தினால் Angelo De Donatis, உரோம் நகர் புனித மேரி மேஜர் பெருங்கோவிலின் தலைமைக்குரு, கர்தினால் Stanisław Riłko, திருப்பீட வாழ்வுக்கழகத்தின் தலைவர், பேராயர் Vincenzo Paglia ஆகியோரை, இத்திங்கள் காலை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...