Tuesday, 23 June 2020

அன்னை மரியாவின் புகழ்மாலையில் மூன்று புதிய பெயர்கள் இணைப்பு

லித்துவேனிய அன்னை மரியா

“இரக்கம் நிறைந்த அன்னையே”, “நம்பிக்கையின் அன்னையே” “புலம்பெயர்ந்தோரின் ஆதரவே” ஆகிய மூன்று புகழ்ச்சிகள், லொரேத்தோ அன்னை மரியா மன்றாட்டு மாலையில் இணைக்கப்படுமாறு கூறப்பட்டுள்ளது
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
அன்னை மரியாவின் மன்றாட்டு புகழ்மாலையில் (Litany of Loreto), அன்னை மரியா பற்றிய மேலும் மூன்று புகழ்ச்சிகளை இணைக்குமாறு, திருப்பீட இறை வழிபாட்டுமுறை பேராயம், ஜூன் 20, இச்சனிக்கிழமையன்று அனைத்து ஆயர் பேரவைகளின் தலைவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளது.
“இரக்கம்நிறை அன்னையே (Mater Misericordiae)”, “நம்பிக்கையின் அன்னையே (Mater Spei)” “புலம்பெயர்ந்தோரின் ஆதரவே (Solacium Migrantium)” ஆகிய மூன்று புகழ்ச்சிகள், லொரேத்தோ அன்னை மரியா மன்றாட்டு மாலையில் இணைக்கப்படுமாறு, அம்மடலில் கூறப்பட்டுள்ளது.
மரியாவின் மாசற்ற திருஇதய விழாவான ஜூன் 20, இச்சனிக்கிழமையன்று, திருவழிபாட்டு பேராயத்தின் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்களும், அதன் செயலர் பேராயர் அர்த்தூர் ரோச் Arthur Roche அவர்களும் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இந்த மடலில், எந்த இடத்தில் இந்த மூன்றையும் இணைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“திருஅவையின் அன்னையே (Mater Ecclesiae)” என்ற புகழ்ச்சிக்குப்பின், “இரக்கம்நிறை அன்னையே” என்ற புகழ்ச்சியும், “இறையருளின் அன்னையே (Mater divinae gratiae)” என்ற புகழ்ச்சிக்குப்பின் “நம்பிக்கையின் அன்னையே” என்ற புகழ்ச்சியும், “பாவிகளின் அடைக்கலமே (Refugium peccatorum)” என்ற புகழ்ச்சிக்குப்பின் “புலம்பெயர்ந்தோரின் ஆதரவே” என்ற புகழ்ச்சியும் இணைக்கப்பட்டு செபிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...