Thursday, 25 June 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – பெருமளவு மீன்பிடிப்பு 1

இயேசு, படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார் - லூக்கா 5:3

பல்லாயிரம் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய கெனசரேத்து ஏரியை மையப்படுத்தி, நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ள தனித்துவமானப் புதுமையில் நம் தேடலைத் துவங்குகிறோம்.
ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான்

லூக்கா நற்செய்தியில் பதிவாகியுள்ள 20 புதுமைகளில், குணமளிக்கும் புதுமைகள் 13, தீய ஆவிகளை விரட்டும் புதுமைகள் 3, இறந்த ஒருவருக்கு உயிரளிக்கும் புதுமை 1 (லூக்கா 7:11-17) என, தனிப்பட்ட மனிதருக்கு இயேசு உதவும் 17 தருணங்கள், புதுமைகளாக கூறப்பட்டுள்ளன. இவையன்றி, 6000த்திற்கும் அதிகமான மக்களுக்கு உணவு வழங்கிய புதுமையும் (லூக்கா 9:10-17), புயலை அடக்கும் புதுமையும் (8: 22-25), இயற்கை சக்திகளை மீறி, இயேசு ஆற்றும் புதுமைகளாக உள்ளன. இந்தக் கண்ணோட்டத்தில், இன்று நாம் சிந்திக்கவிருக்கும் பெரும் மீன்பிடிப்பு புதுமை (லூக்கா 5:1-11), இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை இயேசு வெளிப்படுத்தும் மூன்றாவது புதுமையாக, லூக்கா நற்செய்தியில் இடம்பெற்றுள்ளது.
பெருமளவு மீன்பிடிப்பு நிகழும் புதுமை, நற்செய்திகளில் இருமுறை பதிவாகியுள்ளது. இயேசு, தன் பணிவாழ்வின் துவக்கத்தில், கெனசரேத்து ஏரியில் இப்புதுமையை நிகழ்த்தியதாக, லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம். இயேசு, தன் உயிர்ப்புக்குப் பின், சீடர்களுக்குத் தோன்றிய ஒரு நிகழ்வில், மீண்டும் ஒருமுறை, வியத்தகு முறையில் மீன்பிடிப்பு நிகழும் புதுமை கூறப்பட்டுள்ளது. யோவான் நற்செய்தியில் (யோவான் 21:1-14) பதிவாகியுள்ள அந்நிகழ்வு, திபேரியக் கடலில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
கெனசரேத்து ஏரியில் நடந்ததாக, லூக்கா நற்செய்தி 5ம் பிரிவின் முதல் 11 இறைவாக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள இப்புதுமையில், மூன்று நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. இயேசு மக்களுக்குப் போதித்தல், பெருந்திரளான மீன்பிடிப்பு நிகழ்தல், சீமோனும், மற்றவர்களும் இயேசுவைப் பின்பற்றுதல் என்ற மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இம்மூன்று நிகழ்வுகளில், இயேசுவை, சீடர்கள் பின்பற்றிய நிகழ்வு, மத்தேயு (4:18-22), மாற்கு (1:16-20) என்ற இரு நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது. 'முதல் சீடர்களை அழைத்தல்' என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள இந்நிகழ்வு, 'கலிலேயக் கடலோரம்' நிகழ்ந்ததாக, மத்தேயு, மாற்கு இருவரும் குறிப்பிட்டுள்ளபோது, லூக்கா, இந்நிகழ்வு, 'கெனசரேத்து ஏரிக்கரையில்' நிகழ்ந்ததாகக் கூறியுள்ளார்.
இயேசுவின் பணிவாழ்வில், 'கலிலேயக் கடல்' வேறு சில இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீர்நிலையை, 'திபேரியக் கடல்' என்றும், நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டுள்ளார் (யோவான் 6:1). மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய மூன்று நற்செய்தியாளர்களும் 'கடல்' என்ற சொல்லால் குறிப்பிடும் நீர்நிலையை, நற்செய்தியாளர் லூக்கா மட்டும், 'ஏரி' என்ற சொல் கொண்டு குறிப்பிட்டுள்ளார். எபிரேய மொழியில், பரந்துவிரிந்ததொரு நீர்ப்பரப்பைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் 'யாம்' (Yam) என்ற சொல், கடல், ஏரி என்ற இருவகை நீர்ப்பரப்பையும் குறிப்பிடுகிறது.
'கலிலேயக் கடல்' என்றழைக்கப்படும் இந்த நீர்நிலை, ஏனைய வரலாற்றுப் பதிவுகளில், 'கினோசார் (Ginosar) கடல்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீர்நிலை, யாழ் என்ற இசைக்கருவியைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால், யாழைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் 'சென்னரெத்' (Cennereth) என்ற சொல், காலப்போக்கில் மருவி, 'கெனசரேத்து' (Gennesareth) என்ற பெயராக, இந்த நீர்ப்பரப்பிற்கு வழங்கப்பட்டது என்பது, ஒரு வரலாற்று கணிப்பு.
உலகிலேயே, கடல் மட்டத்திற்குக் கீழ் அமைந்துள்ள ஏரிகள் இரண்டு. அவை இரண்டும், புனித பூமியில் அமைந்துள்ளன. அவற்றில், கடல் மட்டத்திற்கு ஏறத்தாழ 1,400 அடிக்கும் தாழ்வாக அமைந்துள்ள 'சாக்கடல்' (Dead Sea) உப்புநீர் நிறைந்ததாகவும், அதற்கடுத்த நிலையில், கடல் மட்டத்திற்கு ஏறத்தாழ 700 அடிக்கும் தாழ்வாக அமைந்துள்ள 'கலிலேயக் கடல்' நல்ல குடிநீர் நிறைந்ததாகவும் அமைந்துள்ளன.
‘கெனசரேத்து ஏரி’, ‘கலிலேயக் கடல்’, அல்லது, ‘திபேரியக் கடல்’ என்று பலவாறாக அழைக்கப்படும் இந்த நீர்நிலை, ‘தோட்டங்களின் ஏரி’ என்றும் அழைக்கப்பட்டது. வளமைமிகு தோட்டங்களால் சூழப்பட்ட இந்த ஏரி, தொடக்க நூலில், ஏதெனில் ஆண்டவர் உருவாக்கிய தோட்டத்தை நினைவுறுத்தியது என்று, சில விவிலிய வரலாற்றியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். (காண்க. தொ.நூ. 2:8-9; தொ.நூ. 13:10)
21 கி.மீ. நீளமும், 13 கி.மீ. அகலமும், 53 கி.மீ. சுற்றளவும் கொண்ட இந்த ஏரியில், காற்றின் வேகத்தால் அலைகளும் எழுவதுண்டு. எனவே, இயேசுவின் காலத்தில், வாழ்ந்தவர்கள், இதனை ஒரு கடல் என்று எண்ணியதில் வியப்பில்லை. இந்த ஏரியைச் சுற்றி, பத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் அமைந்திருந்ததென சொல்லப்படுகிறது. அம்மக்களின் முக்கியத் தொழில் மீன்பிடிப்பு. பல்லாயிரம் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய இந்த நீர்நிலையை மையப்படுத்தி, நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ள தனித்துவமானப் புதுமையில் நம் தேடலைத் துவங்குகிறோம். இப்புதுமையின் அறிமுக வரிகளில், நற்செய்தியாளர் லூக்கா அங்கு நிலவிய சூழலை இவ்வாறு விவரித்துள்ளார்:
லூக்கா 5:1-3
ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
இயேசு தன் பணிவாழ்வின் துவக்கத்தில், நாசரேத்து தொழுகைக்கூடத்தில் ஆற்றிய உரை, லூக்கா நற்செய்தியின் 4ம் பிரிவில் பதிவாகியுள்ளது. அதன் பின், இயேசு கப்பர்நாகும் சென்று, போதித்ததையும், மக்களை குணமாக்கியதையும் காண்கிறோம். தன் சொந்த ஊரான நாசரேத்தை தவிர, ஏனைய ஊர்களில் இயேசுவின் போதனைகளைக் கேட்க மக்கள் கூடிவந்தனர் என்பதை, 4ம் பிரிவின் ஒரு சில இடங்களில் நற்செய்தியாளர் லூக்கா அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். (காண்க. லூக்கா 4:36-37,40,42) எனவே, இயேசுவின் போதனைகளாலும் அவர் ஆற்றிய புதுமைகளாலும் ஈர்க்கப்பட்டு, மக்கள் அவரைச் சூழ்ந்து வந்தனர் என்பதை, நற்செய்தியாளர் லூக்கா இப்புதுமையின் அறிமுகப் பகுதியில், 'திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்' என்ற சொற்களால் விவரித்துள்ளார்.
இதை வாசிக்கும்போது, இயேசுவைச் சுற்றி கூடிய மக்கள் கூட்டத்தைக் குறித்து, லூக்கா இன்னும் ஒரு சில இடங்களில் குறிப்பிட்டுள்ளது, நம் நினைவுக்கு வருகிறது.
திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். - லூக்கா 9:11
ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். - லூக்கா 12:1
பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். - லூக்கா 14:25
என்று வெவ்வேறு தருணங்களில் குறிப்பிடும் லூக்கா, இயேசு எருசலேம் வீதிகளில் சிலுவையைச் சுமந்து சென்றபோதும், பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள் - லூக்கா 23:27 என்று, குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கூட்டத்தைக் கண்டதும், இயேசு, சீமோனின் படகில் ஏறியமர்ந்து, அவர்களுக்குப் போதிக்கத் துவங்கினார் என்று வாசிக்கிறோம். சீமோனின் ஒப்புதலுக்காகக் காத்திராமல், இயேசு, அவரது படகில் உரிமையோடு ஏறி அமர்கிறார். இயேசுவின் இச்செயலைப் இருவருடைய கோணங்களிலிருந்து புரிந்துகொள்ள முயல்வோம்.
முதலில் இயேசுவின் பக்கம். சீமோனின் சொந்த ஊரான கப்பர்நாகும் சென்று, தொழுகைக்கூடத்தில் இயேசு போதித்தார் என்பதை லூக்கா, 4ம் பிரிவில் குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்நது, சீமோனின் இல்லத்திற்கு இயேசு சென்று, அவரது மாமியாரைக் குணமாக்கிய புதுமையும் கூறப்பட்டுள்ளது. எனவே, சீமோன், இயேசுவின் போதனைகளைக் கேட்டவர், புதுமை ஆற்றும் அவரது சக்தியையும் உணர்ந்தவர். அந்தப் போதனைகளும், புதுமைகளும், சீமோனிடம் போதிய அளவு தாக்கத்தை உருவாக்காததால், தன் மீன்பிடிக்கும் தொழிலைத் தொடர்வதற்குச் செல்கிறார். ஆனால், இயேசு, அவரை விடுவதாய் இல்லை, அவரைத் தொடர்ந்து, கெனசரேத்து எரிக்கரைக்குச் செல்கிறார். சீமோனின் வாழ்வுக்கு அடித்தளமாக இருந்த அவரது படகில் இயேசு ஏறி அமர்கிறார். இது, இயேசுவின் பக்கம்.
இனி, சீமோனின் பக்கம். முந்திய இரவு முழுவதும் உழைத்தும் ஒரு பயனையும் காணாமல், மனம் நொந்துபோய் அமர்ந்திருந்தார் அவர். மீன் பிடிப்பு இல்லையென்றால், வருமானம் இல்லை, வீட்டில் உணவுக்கு வழியில்லை... இப்படி, தன் சொந்தக் கவலையில் மூழ்கியிருந்த சீமோனின் படகு அசைகிறது. நிமிர்ந்து பார்க்கும் சீமோனுக்கு ஆச்சரியம், தன் சொந்த ஊருக்கும், தன் வீட்டுக்கும் வந்திருந்த இயேசுவை அவர் மீண்டும் சந்திக்கிறார்.
உரிமையோடு சீமோனின் படகில் நுழைந்த இயேசு, சீமோனின் வாழ்விலும் நுழைந்தார். புதுமையை ஆரம்பித்துவைத்தார். தன் படகில் அமர்ந்து இயேசு போதித்தவற்றை, சீமோனும் கேட்டார். இரவு முழுவதும் முயற்சிகள் செய்தும், மீன்பிடிப்பு இல்லையே என்ற தன் கவலைகளில் மூழ்கியிருந்த சீமோனின் உள்ளத்தில், இயேசுவின் வார்த்தைகள், மாற்றங்களை உருவாக்க ஆரம்பித்தன. இது, சீமோனின் பக்கம்.
சீமோனின் படகை தன் பிரச்சார மேடையாகப் பயன்படுத்திவிட்டு, இயேசு தன்வழியே போயிருந்தால், புதுமை எதுவும் நிகழ்ந்திருக்காது. தன் சுயநலனுக்காக மற்றவரைப் பயன்படுத்திவிட்டு, பிறகு மறைந்துபோகும் பழக்கம், இயேசுவுக்குக் கிடையாது.
மக்களுக்கு போதனைகளை வழங்கியபின், இயேசு, தன் கவனத்தை சீமோன் பக்கம் திருப்புகிறார். அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார் (லூக்கா 5:4) என்ற சொற்களில் புதுமையொன்று துவங்குகிறது. இதனை நாம் அடுத்த வாரத் தேடலில் சிந்திப்போம்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...